அரசியல்

"ராஜேந்திர பாலாஜி அமைச்சரா? ஜோதிடரா?” - முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கேள்வி!

ராஜேந்திர பாலாஜி அமைச்சரா இல்லை ஜோதிடரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார் தி.மு.க முன்னாள் அமைச்சரும் அருப்புக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்.

"ராஜேந்திர பாலாஜி அமைச்சரா? ஜோதிடரா?” - முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளரும், அருப்புக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக இரண்டு நல்ல விஷயங்கள் நடந்துள்ளன. ஒன்று விருதுநகரில் மருத்துவக் கல்லூரி அமையவிருப்பது. இதற்கு தற்போதைய அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தாலும் மூலகர்த்தா அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்களே.

அதேபோல் அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர் ஆகிய பகுதிகளுக்கு சீவலப்பேரியில் இருந்து தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டமே. இப்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்கு முழுமுயற்சி எடுத்தது நானும், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவும் தான்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தி.மு.க-வினரின் சட்டையைப் பிடிப்பேன், வீட்டுக் கதவைத் தட்டுவேன், தேர்தலில் சித்து விளையாட்டைக் காட்டுவேன் என்றெல்லாம் பேசுகிறார். 6 கோடி பேரில் 32 பேருக்குத்தான் அமைச்சர் பதவி கிடைக்கிறது. அப்படிப்பட்டவர்கள் பொறுப்புடன் பேச வேண்டும். அரசியல் விமர்சனம் வேறு இப்படி தரக்குறைவாகப் பேசுவது வேறு.

தி.மு.கவை அழிப்பது என்பது அ.தி.மு.க-வாலோ அதன் அமைச்சர்களாலோ முடியாது. தியாகப் பரம்பரையில் இருந்து எங்களுக்கு ஒரு தலைமை கிடைத்திருகிறது. ராஜேந்திர பாலாஜியின் பேச்சுகளுக்கு சக்தி என்னவென்று உள்ளாட்சித் தேர்தலில் காட்டுவோம்.

உள்ளாட்சித் தேர்தலில் எந்தெந்தப் பகுதியில் யாரை நிறுத்தினால் வெற்றி கிட்டும் என்று நாங்கள் திட்டமிட்டு பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ தி.மு.கவுக்கு ஆள் கிடைக்கவில்லை எனக் கூறிக்கொண்டு இருக்கிறார். எங்களின் பலம் என்னவென்பது எங்களுக்குத்தானே தெரியும். ஜனநாயக ரீதியாக அமைதியான முறையில் நாங்கள் அரசியல் செய்கிறோம். எங்களுக்கு ஆர்ப்பாட்ட அரசியலில் நம்பிக்கையில்லை.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராவது மக்களின் கைகளில் இருக்கிறது. ஆனால், ராஜேந்திர பாலாஜி அடிக்கடி மு.க.ஸ்டாலின் அவர்களின் ஜாதகத்தில் முதல்வராவதற்கான அமைப்பு இல்லை எனக் கூறுவதாகச் சொல்கிறீர்கள். இதுநாள் வரை ராஜேந்திர பாலாஜியை நான் அமைச்சர் என்றுதான் நினைத்திருந்தேன். அவர் எப்போது ஜோதிடர் ஆனார் என்று எனக்குத் தெரியவில்லை" எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories