அரசியல்

“சங்பரிவாரின் பார்ப்பனத்தனத்தை தோலுரிக்க இதுவே சந்தர்ப்பம்: முகத்திரையைக் கிழிப்போம் வாரீர்” - கி.வீரமணி

திருவள்ளுவருக்கு காவி உடை, திருநீறு, ருத்திராட்சம் அணிவித்து காவிமயமாக்கும் பி.ஜே.பி.யை புரிந்துகொள்வீர் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

“சங்பரிவாரின் பார்ப்பனத்தனத்தை தோலுரிக்க இதுவே சந்தர்ப்பம்: முகத்திரையைக் கிழிப்போம் வாரீர்” - கி.வீரமணி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சங் பரிவாரின் பார்ப்பனத்தனத்தைத் தோலுரிக்க இதுவே சந்தர்ப்பம் - முகத்திரையைக் கிழிப்போம் வாரீர்!'' என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறைகூவல் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''புரட்சியாளர் அம்பேத்கருக்குக் காவி வண்ணம் பூசி, ஏதோ அவர்பால் மிகுந்த அன்பும், பாசமும் கொண்டதுபோல் பா.ஜ.க சில காலமாக நாடகமாடி வருகிறது.

அதேபோல, தேசப்பிதா காந்தியாருக்கு 150வது விழாவென அவரையும் கபளீகரம் செய்து, கோட்சே என்ற மராத்தி சித்பவன் பார்ப்பனர் சுட்டுக் கொன்றார் என்ற வரலாற்றுச் சுவடுகளையே அழித்துவிட்டு, காந்தியாரின் அருந்தவப் புதல்வர்கள்போல, ஓநாய் சைவமான கேவலம் போல - நாடகம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.

காந்தியாருக்கு விழா - காந்தியாரை சுட்டுக்கொன்ற வழக்கில் சிக்கிய பிறகு, பிறழ்சாட்சி, மற்ற சில காணாமற்போன ஆவணங்கள் போன்றவையாலோ, வேறு எப்படியோ விடுதலை பெற்ற பிரிட்டிஷ் அரசிடம், பலமுறை மன்னிப்புக் கடிதம் எழுதி, வெளியே வந்த ‘‘வீர’’ சாவர்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது அறிவிப்பு இப்படி பலவிதமான வித்தைகள் மேல் வித்தைகள்.

“சங்பரிவாரின் பார்ப்பனத்தனத்தை தோலுரிக்க இதுவே சந்தர்ப்பம்: முகத்திரையைக் கிழிப்போம் வாரீர்” - கி.வீரமணி

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடித்த கதைபோல இப்போது சங் பரிவார் கும்பல் உலக தத்துவஞானியான திருவள்ளுவரையே காவிக்குள் கொண்டு வர முயற்சிக்கின்றன.

தமிழ்நாட்டை வளைத்திட இப்போது ஒரு புதிய யுக்திதான் திருவள்ளுவரை காவி மயமாக்குவதாகும். திருக்குறளிலிருந்து கடவுள் வாழ்த்து என்பதை எடுத்துக் கூறி, தி.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் சவால் விடுகிறார்கள்.

பி.ஜே.பி.யின் சமூக வலைதளத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து, நெற்றியில் பட்டையும் போட்டு, ருத்திராட்சைத்தையும் அணிவித்து - திருவள்ளுவரை இதற்குமேல் எந்த அளவும் கொச்சைப்படுத்த முடியாது என்னும் அளவுக்குத் தங்களின் பார்ப்பனீய மோசடிக் குணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டனர்.

கவுதமப் புத்தரையே மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று சொன்னவர்கள் அல்லவா!

ஒன்றை ஒழிக்க முடியாவிட்டால், ஆலிங்கனம் செய்து அழிப்பது, ஊடுருவுவது, திரிபுவாதம் செய்வது என்பதெல்லாம் பார்ப்பனீயத்திற்கே உரித்தான ‘கல்யாண திருக்குணங்களாகும்.’ மழித்தலும், நீட்டலும் வேண்டாம் என்று சொன்ன திருவள்ளுவரையே இந்துத்துவா சாயம் தீட்டி தங்களின் அற்பத்தனத்தை வெளிப்படுத்திவிட்டனர்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்ற குறளுக்கு பி.ஜே.பி. கூறும் விளக்கம் என்ன தெரியுமா? எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல, உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்று வியாக்கியானம் செய்துள்ளது பி.ஜே.பி.

“சங்பரிவாரின் பார்ப்பனத்தனத்தை தோலுரிக்க இதுவே சந்தர்ப்பம்: முகத்திரையைக் கிழிப்போம் வாரீர்” - கி.வீரமணி

அட ‘பிரகஸ்பதிகளே!’ திருக்குறளில் ‘கடவுள், மதம், ஜாதி, கோவில், ஆத்மா’ என்ற சொற்களே கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த சொற்கள் எல்லாம் திருவள்ளுவருக்குத் தெரியாது - அதனால்தான் கையாளவில்லை என்று சொல்லப் போகிறீர்களா?

உண்மை என்னவென்றால், இவற்றையெல்லாம் புறந்தள்ளி - ஆரியத்தின் - பிறப்பில் பேதம் விளைவிக்கும் வருணாசிரமத்தின் ஆணிவேரை வெட்டி வீழ்த்தும் வகையில் ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்‘’ என்று கூறி ஆரியத்தின் பிடரியில் பெருந்தாக்குதலைத் தொடுத்தவர் திருவள்ளுவர்.

10 குறட்பாக்களுக்கு தலைமைத்துவ பண்பு நலன்கள் வகைகளே தவிர, பக்திக்கானது அல்ல என்று ஆராய்ச்சியோடு கூறியதை,புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், இராவண காவியப் புகழ் புலவர் குழந்தை, நாவலர் இரா.நெடுஞ்செழியன் போன்றோரின் திருக்குறள் விளக்கவுரையிலே குறிப்பிட்டுள்ளார்களே!

வ.உ.சி. எழுதிய திருக்குறள் உரையில் கடவுள் வாழ்த்தே திருவள்ளுவர் எழுதியதில்லை; இடைச்செருகல் என்றே கடவுள் நம்பிக்கையாளரான (கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.) எழுதியுள்ளாரே!

திருக்குறள் என்பது அய்யப்பாட்டுக்கு சற்றும் இடமில்லாத ஆரியத்துக்கு எதிரான கோட்பாடுகளைக் கொண்ட சமூக சமத்துவ நூலாகும். அறம் பொருள், இன்பம் பற்றி எழுதிய திருவள்ளுவர் வீடு பற்றி எழுதாததிலிருந்தே அவரின் உள்ளம் எந்த உள்ளம் என்பது வெளிப்படை. தமக்கு எதிரான கருத்தினைக் கூறும் வள்ளுவரை அவமானப்படுத்துவது என்பது ஒன்று - இன்னொரு வகையில் உட்கிரகித்து அழிப்பது என்பது இவர்களின் தந்திரமாகும்.

“சங்பரிவாரின் பார்ப்பனத்தனத்தை தோலுரிக்க இதுவே சந்தர்ப்பம்: முகத்திரையைக் கிழிப்போம் வாரீர்” - கி.வீரமணி

‘சேரன்மாதேவி’ புகழ் வ.வே.சு. அய்யர் திருக்குறளின் முதல் குறளான அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்பதற்கு எழுதிய விளக்கம் என்ன தெரியுமா?

‘‘திருவள்ளுவரின் தந்தையார் பகவன் என்ற பார்ப்பனராவார். இவரது தாயார் ஆதி என்ற பறைச்சி. ஆதியை இன்னொரு பார்ப்பனர் அழைத்து வந்து பகவனுக்கு மணமுடித்து வைத்தார்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பி.ஜே.பி. உள்ளிட்ட இந்த சங் பரிவார்களின் குருநாதரான எம்.எஸ்.கோல்வால்கர் திருவள்ளுவரைப்பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா? ‘‘திருக்குறள் சிறந்த ஹிந்துக் கருத்துக்களை தமிழ் மொழியில் எடுத்துக் கூறும் ஒரு ஹிந்து நூல்’’ என்று எழுதியுள்ளார். (‘ஞானகங்கை’, 2 ஆம் பாகம், பக்கம் 48).

மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்பவர் ஆண்டாளின் ‘தீக்குறளை சென்றோதோம்‘ என்று வரிக்கு ‘‘தீய திருக்குறளை ஓதமாட்டோம்‘’ என்று சொன்னாரே!

மனுதர்மத்தின் சாரம் திருக்குறள் என்று அண்மையில் நாகசாமி என்ற பார்ப்பனர் ஆங்கிலத்தில் நூல் ஒன்றை வெளியிட்டபோது, அதனைக் கண்டித்தும், மறுத்தும் பெரியார் திடலில் சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்தினோமே! பயிர்த் தொழிலைப் பாவத் தொழில் என்று சொன்ன மனுதர்மம் எங்கே. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்று சொன்ன திருவள்ளுவர் எங்கே?

இந்த லட்சணத்தில் தாய்லாந்து மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டு, திருக்குறளைப்பற்றிப் புகழ்ந்து தள்ளியுள்ளார். இரட்டை வேடமும், ஊடுருவி அழிக்கும் தந்திரமும் இந்த சங் பரிவார்க் கும்பலுக்குக் கைவந்த கலையே!

ஆனாலும், தமிழ்நாடு ஏமாந்துவிடாது - வேட்டிக் கட்டினாலும், வீதியிலே சிரசாசனம் போட்டாலும் இந்தப் பெரியார் பூமி ஒருபோதும் ஏமாந்துவிடாது. முன்பு ஒரு எம்.பி.யைக் கொண்டு வந்து முன்னோட்டம் விட்டு மூக்கறுபட்ட பிறகுமா இப்படிப்பட்ட ஏமாற்று யுக்திகள்?

“சங்பரிவாரின் பார்ப்பனத்தனத்தை தோலுரிக்க இதுவே சந்தர்ப்பம்: முகத்திரையைக் கிழிப்போம் வாரீர்” - கி.வீரமணி

இந்த செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் இதே காலகட்டத்தில், தஞ்சை பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையின்மீது குறிப்பாக முகத்தில் சாணியை வீசியுள்ளனர் என்று செய்தி வெளிவந்துள்ளது.

பாரதீய ஜனதா, சங் பரிவார் என்பது தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும் எதிரானது என்று திராவிடர் கழகம் தொடர்ந்து கூறி வந்திருக்கிறது - வருகிறது. இவையெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை - உண்மையிலும் உண்மை என்பதை கண்கூடாகத் தெரிந்துகொள்வதற்கு இவற்றைவிட வேறு ஆதாரங்கள் தேவையா?

மதச்சார்பற்ற சக்திகளும், தமிழ் உணர்வாளர்களும் இந்த சந்தர்ப்பத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு பி.ஜே.பி. - சங் பரிவார்க் கூட்டத்தின் முகத்திரையைக் கிழித்தெறிய முன்வர வேண்டியது புத்திசாலித்தனமாகும். பி.ஜே.பி. - சங் பரிவாரங்களுக்குள் இருக்கும் தமிழர்களே இதற்கு மேலும் இந்த அமைப்புகளில் இருப்பது குறித்து சிந்திப்பீர்களாக!'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories