அரசியல்

“சர்வாதிகாரத்தை நிலைநாட்டவே தேசத்துரோக வழக்கு போட்டு வருகிறது பா.ஜ.க அரசு” - நாராயணசாமி சாடல்!

“ரங்கசாமிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது” என விமர்சித்துள்ளார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.

“சர்வாதிகாரத்தை நிலைநாட்டவே தேசத்துரோக வழக்கு போட்டு வருகிறது பா.ஜ.க அரசு” - நாராயணசாமி சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சூரியகாந்தி நகர் பகுதியில் முதலமைச்சர் நாராயணசாமி, எம்.பி வைத்தியலிங்கம் ஆகியோர் வீடு வீடாகச் சென்று காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமாருக்காக வாக்கு சேகரித்தனர்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணசாமி, “புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ரங்கசாமிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. சொற்ப எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் வரும் என கூக்குரலிட்டு வருகிறார் ரங்கசாமி.

நெல்லித்தொப்பு, தட்டாஞ்சாவடி ஆகிய பகுதிகளில் வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்டும் மக்கள் வாக்களிக்காததால் மரண அடி பெற்றார் ரங்கசாமி. தனது கட்சிக்காரர்கள் ஓடிவிடக் கூடாது என்பதற்காகவே ஆட்சி மாற்றம் என நாக்கில் தேன் தடவி பேசுகிறார்” என விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசியல் தலைவர்களை சிபிஐ மூலம் மிரட்டுவது, தேசத் துரோக வழக்கு போடுவது உள்ளிட்ட தகாத செயல்களில் ஈடுபட்டுவரும் பா.ஜ.க அரசை நீதிமன்றமும் கண்மூடி பார்த்து வருகிறது.

இது போன்று வழக்குகளை போட்டு இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றுவதற்கான நடவடிக்கையில் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. மேலும், இயக்குநர்கள் மணிரத்னம், அனுராக் காஷ்யப், அடூர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு போட்டுள்ள மத்திய மோடி அரசுக்கு நாராயணசாமி கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், மேகதாது அணைக்கட்டினால் தமிழகத்துக்கு கிடைக்கவேண்டிய 224 டி.எம்.சி நீரும், புதுச்சேரிக்கு கிடைக்க வேண்டிய 7 டி.எம்.சி நீரும் கிடைக்காமல் போகும் என்பதற்காகவே கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது.

இரு மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடி எதிர்ப்பு தெரிவிப்போம்” என நாராயணசாமி கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories