அரசியல்

“இந்த நேரத்திலும் குறுகிய மனப்பான்மையோடு செயல்படும் அமித்ஷா” - குற்றம் சாட்டும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் !

கர்நாடகாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரளாவை திட்டமிட்டு புறக்கணிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

“இந்த நேரத்திலும் குறுகிய மனப்பான்மையோடு செயல்படும் அமித்ஷா” - குற்றம் சாட்டும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பெரும் மழையால் சுமார் 150 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 76 பேர் பலியாகியிருப்பதாகவும் 58 பேர் காணவில்லை என தகவல் வெளிவந்துள்ளது. மலப்புரம், வயநாடு உட்பட 8 மாவட்டங்களில் அதிகளவில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கேரளா முழுவதும் 1,621 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகாம்களில் 74 ஆயிரத்து 400 குடும்பங்களை சேர்ந்த சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் தஞ்சம் புகுந்துள்ளனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது.

இதனிடையே கனமழை முன்னறிவிப்பைக் கருத்தில் கொண்டு கண்ணூர், காசர்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் தங்க இடமில்லாமல், உண்ண உணவில்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இவ்வளவு மோசமான நிலையில் உருக்குலைந்த கேரளாவை மத்திய அரசு கவணிப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமித்ஷா நேற்றைய தினம் தமிழகத்திற்கு வந்து, துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய நூலை வெளியிட்டார். பின்பு கர்நாடக மாநிலத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதியை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.

“இந்த நேரத்திலும் குறுகிய மனப்பான்மையோடு செயல்படும் அமித்ஷா” - குற்றம் சாட்டும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் !

ஆனால் கேரளா முழுவதுமாக சிதைந்துக் கிடக்கிறது. அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்கிறது என்பதால் அந்த மாநிலத்தை புறக்கணித்துவிட்டு கர்நாடக மாநிலத்தை மட்டும் பார்வையிட்டு சென்றுவிட்டார் என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த குற்றச்சாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுவும் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் உண்டான உயிரிழப்பு, கால்நடைகள் இழப்பிற்கு வருந்துகிறோம்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட ஹெலிகாப்டரில் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க ஆளும் மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகாவிற்கு மட்டுமே சென்றார். இதனால் அவர் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலம் செல்வதை வேண்டுமென்றே புறக்கணித்துவிட்டதாக தோன்றுகிறது.

ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க.,வுடன் தொடர்புடைய சில அமைப்புகள் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு பணம் அனுப்ப வேண்டாமென்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றன. இதுபோன்ற துரதிருஷ்டமான பலி, இயற்கை பேரழிவு நேரங்களில் அரசியல் வேறுபாட்டை ஒதுக்கி வைக்க வேண்டும்.

“இந்த நேரத்திலும் குறுகிய மனப்பான்மையோடு செயல்படும் அமித்ஷா” - குற்றம் சாட்டும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் !

கேரளாவில் வெள்ள பாதிப்பு தொடர்பான நிகழ்வுகளில் இதுவரை 76 பேர் உயிரிழந்துள்ளனர். 58 பேர் காணாமல் போயுள்ளனர். 1,654 நிவாராண முகாம்களில் 2.87 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று மகாராஷ்டிராவில் 40, கர்நாடகாவில் 32, குஜராத்தில் 24 பேரும் பலியாயினர். ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் ஓடும் முக்கிய ஆறுகளான துங்கபத்ரா, கிருஷ்ணா மற்றும் அதன் கிளை நதிகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

வெள்ளப் பேரழிவில் சிக்கியுள்ள மாநிலங்களின் மீட்பு நடவடிக்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து கொடுக்க வேண்டும்” என அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கிறது என்பதனாலேயே மத்திய பா.ஜ.க அரசு கேரளாவை புறக்கணிக்கிறது என்கிற குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories