அரசியல்

டங்க் ஸ்லிப்பாகி முத்தலாக் மசோதாவை தெரியாமல் ஆதரித்துவிட்டார் ரவீந்திரநாத்- அ.தி.மு.க எம்.பி பலே பதில்

முத்தலாக் மசோதா குறித்த அ.தி.மு.க.வின் நிலைப்பாடு தெரியாமல் ரவீந்திரநாத் குமார் தான் மசோதவை ஆதரித்தாக அ.தி.மு.க முன்னாள் எம்.பி அன்வர்ராஜா தெரிவித்துள்ளார்.

டங்க் ஸ்லிப்பாகி முத்தலாக் மசோதாவை தெரியாமல் ஆதரித்துவிட்டார் ரவீந்திரநாத்- அ.தி.மு.க எம்.பி பலே பதில்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

முத்தலாக் தடை மசோதா (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மோடியின் முந்தைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவின் சில அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்படாமல் முடங்கியது.

இதையடுத்து மக்களவையில் அந்த மசோதா கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. முத்தலாக் சட்டத்தை நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பி விவாதிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

ஆனால், முத்தலாக் தடை மசோதா குறித்து மக்களவையில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் மற்றும் எம்.பி. ரவீந்திரநாத் குமார், ”முத்தலாக் தடை சட்டம் இஸ்லாமிய பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. இதுபோன்ற சட்டங்கள் இஸ்லாமிய பெண்கள் மட்டுமல்லாமல் அனைத்து மத பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும். பழங்காலத்தில் இருந்தே மகளிருக்கு சம உரிமை இல்லாத நிலையில், இந்த மசோதா அதனை பெற்றுத் தர வழி வகுக்கும். மகளிருக்கு சமநிலை கிடைக்க உதவும் என்பதால் இந்த மசோதாவை அ.தி.மு.க ஆதரிக்கிறது.” என தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முத்தலாக் தடை மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க-வின் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியனைத் தொடர்ந்து நவநீதகிருஷ்ணன் எம்.பி-யும் முத்தலாக் தடை மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பேசியுள்ளார். அரசியல் சட்டத்திற்கு எதிராக முத்தலாக் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகப் பல ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி நவநீத கிருஷ்ணன் எம்.பி பேசினார்.

ஓரே கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிரும் புதிருமாகப் பேசியிருப்பதன் மூலம் ,முத்தலாக் விவகாரத்தில் அ.தி.மு.க இரட்டை வேடமிட்டு சிறுபான்மையினரை ஏமாற்ற நினைப்பது அம்பலமாகியுள்ளது. மோடியின் முந்தைய ஆட்சியில், முத்தலாக் தடை மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட போது அ.தி.மு.க எம்.பி அன்வர்ராஜா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தனியார் ஊடகத்திற்குப் பேட்டி அளித்த அன்வர் ராஜா, ” முத்தலாக் மசோதா குறித்த அ.தி.மு.க.வின் நிலைப்பாடு ரவீந்திரநாத் குமாருக்குச் சென்றடையவில்லை. அதனால் தான் அவர் மசோதாவை ஆதரித்தார். ரவீந்திரநாத் குமாரிடம் முத்தலாக் மசோதா குறித்து இப்போது கேட்டால் சரியாகப் பேசுவார். அவரது பேச்சு டங்க்-ஸ்லிப் போன்றது. முத்தலாக் மசோதாவை எதிர்ப்பதே அ.தி.மு.க.வின் நிலைப்பாடு.” என்றார்.

முத்தலாக் தடை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல் நாடகமாடிய அ.தி.மு.க எம்.பிக்கள், பா.ஜ.க.வுக்கு உதவும் வகையில், மாநிலங்களைவயில் முத்தலாக் மசோதா வாக்கெடுப்பில் பங்கேற்காமல் அ.தி.மு.கவினர் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

99 ஆதரவு வாக்குகளுடன் முத்தலாக் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 84 எதிர்வாக்குகள் பதிவானது. அ.தி.மு.க மற்றும் சில கட்சி எம்.பிக்கள் எதிர்த்து வாக்களித்திருந்தால், இந்த சட்டம் நிறைவேற்றப்படாமல் செய்திருக்க முடியும்.

banner

Related Stories

Related Stories