அரசியல்

“மக்களை வேதனையில் ஆழ்த்தும் பா.ஜ.க அரசு” : சோன்பத்ரா படுகொலை குறித்து பிரியங்கா காந்தி ஆவேசம்!

யோகி ஆதித்யநாத் ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச மாநில கிழக்குப்பகுதி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

“மக்களை வேதனையில் ஆழ்த்தும் பா.ஜ.க அரசு” : சோன்பத்ரா படுகொலை குறித்து பிரியங்கா காந்தி ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உத்தர பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள கோராவால் பகுதியில் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக சபாஹி கிராமத் தலைவர் யக்யா தத்துக்கும், மற்றொரு கிராம மக்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக முற்றி கொலையில் முடிந்துள்ளது.

பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய அண்டை மாநிலங்களை எல்லையாக கொண்டுள்ளது உ.பி-யின் சோன்பத்ரா பகுதி. அங்கு, ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்குச் சொந்தமான நிலம் இருந்துள்ளது. அதில், விவசாய பணிகளைச் செய்ய கிராம மக்கள் அனுமதிக்காமல் பல ஆண்டுகளாக தடுத்து வந்ததால் கிராமத் தலைவர் யக்யா தத்துக்கு அந்த இடத்தை விற்றுவிட்டார்.

இதனையடுத்து, யக்யா தத் துப்பாக்கி ஏந்திய தனது ஆட்களுடன் நிலத்திற்கு வந்தபோது கிராம மக்கள் உள்ளே நுழைய அனுமதிக்காததால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, யக்யா தத்தின் ஆதரவாளர்கள் கிராம மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் மூன்று பெண்கள் உட்பட 10 கிராம மக்கள் சம்பவ இடைத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து கிராமத் தலைவர் யக்யா தத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தப்பிச்சென்றனர். இந்நிலையில், குற்றவாளிகளைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற காங். தலைவர் பிரியங்கா காந்தி நேற்று சென்றிருந்தார் . அப்போது அவரைப் பார்க்கவிடாமல் மாவட்ட நிர்வாகமும், போலீஸாரும் தடுத்துள்ளனர். அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து உத்தர பிரதேசத்தின் நாராயண்பூரில் ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் பிரியங்கா. அவரை போலீஸார் கைது செய்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராகுல் காந்தி இந்தக் கைது நடவடிக்கை கண்டித்துள்ளார்.

இதையடுத்து, கலவரத்தில் கொல்லப்பட்ட 10 பேரின் உறவினர்களைச் சந்திக்க பிரியங்கா காந்திக்கு இன்றும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இரண்டாவது நாளாக அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கலவரத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் இருவர் மட்டும் மிர்சாபூரில் பிரியங்காவைச் சந்தித்து குறைகளை தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரியங்கா காந்தி, "உத்தர பிரதேசத்தை ஆட்சி செய்யும் பா.ஜ.கவே துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பொறுப்பேற்கவேண்டும். பா.ஜ.க அரசு மக்களைப் பாதுகாப்பதை விட்டுவிட்டு, அனைத்து தரப்பு மக்களையும் வேதனையில் ஆழ்த்துகிறது.” எனத் தெரிவித்த அவர், யோகி ஆதித்யநாத் ஆட்சியில் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனக் குற்றம்சாட்டினார்.

மேலும், சோன்பத்ரா கலவரத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் சார்பில் தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும்" எனவும் அவர் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories