அரசியல்

”ஜெயலலிதாவை பின்பற்றுவதாகக் கூறிவிட்டு மோடியின் பின்னால் போகிறதா அதிமுக அரசு?”

தமிழக அரசு மோடி வழியில் செயல்படுகிறதா என்ற சந்தேகத்தை எழுப்பும் வகையில் தமிழக அரசின் போக்குகள் அமைந்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

”ஜெயலலிதாவை பின்பற்றுவதாகக் கூறிவிட்டு மோடியின் பின்னால் போகிறதா அதிமுக அரசு?”
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இன்று காயிதே மில்லத் 124வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவரது நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

காயிதே மில்லத் அவர்கள் சமூக நல்லிணக்கத்துக்காக பாடுபட்டவர். தமிழை ஆட்சி மொழியாக்க குரல் கொடுத்தவர். அவர் விதைத்த மத நல்லிணக்க மாண்புகளால் தமிழ் மண்ணில் மத வெறி, சாதி வெறி சக்திகளுக்கு இடமில்லை என்கிற நிலையை நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் நினைவுபடுத்தி இருக்கிறது.

தமிழக முதல்வர் பிற மாநிலங்களில் தமிழை 3-வது மொழியாக பாடத் திட்டங்களில் அறிவிக்க வேண்டும் என கூறியிருப்பதன் மூலம் தமிழகத்தில் இந்தியை 3-வது மொழியாக ஏற்றுக்கொள்ள உடன்படுகிறார் என்பதை மறைமுகமாக அறிவிக்கிறார். இது ஏற்புடையதல்ல. மிகக் கடுமையாக இந்தி திணிப்பை தமிழகம் எதிர்க்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். 10ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் அம்பேத்கர், பெரியார் வாழ்க்கை வரலாறு இடம் பெற்று இருந்தது. தற்போது அதனை தமிழக அரசு நீக்கி இருக்கிறது.

அதே நிலையில் 12ம் வகுப்பு பொதுத் தமிழ் பாடப் புத்தகத்தின் அட்டைப் படத்தில் மகாகவி பாரதியார் படத்தை பொறித்துள்ளனர். ஆனாலும் அவரது தலைப்பாகைக்கு ‘காவி’ வண்ணத்தை பூசி இருக்கிறார்கள். இது திட்டமிட்ட உள் நோக்கத்துடன் திணிக்கப்பட்ட ஒன்று. பாரதியார் சாதி வேறுபாடு, தீண்டாமை, பெண் அடிமை போன்றவற்றை மூர்க்கமாக எதிர்த்த ஒரு கவிஞர். சொல்லப் போனால் அவர் ஒரு சனாதன எதிர்ப்பு போராளி. அவரை இழிவு படுத்தும் வகையில் தலைப்பாகைக்கு காவி பூசியது. வன்மையான கண்டனத்துக்குரியது. வெள்ளை உடையில் தலைப்பாகை அமையும் வகையில் அட்டைப் படத்தை திருத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.

அ.தி.மு.க. அரசு எந்த அளவுக்கு பலகீனமாக இருக்கிறது என்றும் பா.ஜனதாவின் ஆதிக்கம் எந்த அளவுக்கு மேலோங்கி இருக்கிறது என்றும் இதில் இருந்து உணர முடிகிறது. தமிழக அரசு மோடி வழியில் செயல்படுகிறதா? ஜெயலலிதா வழியில் சுதந்திரமாக செயல்படுகிறதா? என்ற சந்தேகத்தை எழுப்பும் வகையில் இந்த போக்குகள் அமைந்துள்ளன. இது வேதனைக்குரியதாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

banner

Related Stories

Related Stories