உணர்வோசை

பிக் பாஸ்: கல்வி முக்கியமா? இல்லையா? சமூகத்தின் உண்மையான எதார்த்தத்தை எப்போது இவர்கள் உணரப்போகிறார்கள் !

பிக் பாஸ்: கல்வி முக்கியமா? இல்லையா? சமூகத்தின் உண்மையான எதார்த்தத்தை எப்போது இவர்கள் உணரப்போகிறார்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

பிக் பாஸ் சீசன் இனிதே தொடங்கி இருக்கிறது.

சக போட்டியாளரின் டாட்டூவில் தொடங்கிய விசித்ராவின் பேச்சு, ஜோவிகாவின் கல்விக்கு தாவி, ஜோவிகா படிக்காமல் இருத்தல் தனி நபர் சுதந்திரம் என பேசி, மாயா அதற்கு விசில் அடித்து, பவா செல்லத்துரை 'உலகக் கல்லாதவர்களே ஒன்று சேருங்கள்' என முழங்கி, கமல் எட்டாம் வகுப்புடன் படிப்பை முடித்துக் கொள்வதன் நன்மைகளை விளக்கி, விவாதம் சமூகதளம் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மொத்த விவாதத்திலும் மூன்று விஷயங்கள் உள்ளடங்கி இருக்கிறது.

விசித்ரா மீதான கோபம்:

விசித்ராவின் ஆதிக்க ஆளுமை மீது எல்லாருக்கும் விமர்சனம் இருக்கிறது. பவா செல்லத்துரைக்கு அவர் டீ போட்டு கொடுக்கவில்லை என கோபம். மாயாவுக்கும் அவரை பிடிக்கவில்லை. அனன்யாவுக்கு டாட்டூ கோபம். யுகேந்திரனுக்கும் பிடிக்கவில்லை. ஜோவிகாவுக்கும் கோபம். நிக்சன் முதலிய போட்டியாளர்கள் மீது விசித்ரா காட்டும் கனிவின்மையும் அவர்களை அவருக்கு எதிரியாக்கி இருக்கிறது. முதல் ஐந்து பேருக்கு விசித்ரா மீது ஒரு கல் எறியப்பட வேண்டும். அச்சமயத்துக்காக காத்திருந்தார்கள். ஜோவிகா எறிந்தார். தடதடவென ஜோவிகாவுடன் அவர்கள் அணியமானார்கள்.

பச்சையான அரசியல் இது!

மழுமட்டையான ஒரு சிந்தனை கூட எப்படி பெருமளவில் ஆதரவு பெறுகிறது என நாம் பல நேரங்களில் யோசித்திருப்போமே, அதற்கான சிறந்த உதாரணம் இது.

பிக் பாஸ்: கல்வி முக்கியமா? இல்லையா? சமூகத்தின் உண்மையான எதார்த்தத்தை எப்போது இவர்கள் உணரப்போகிறார்கள் !

விசித்ராவின் புரிதல்:

விசித்ரா பல நேரங்களில் தாய்மையை உதாரணம் காட்டுகிறார். நம் சமூகத்தில் பல இடங்களில் தாய்மை என்பது இத்தகைய அதிகாரத்தின் மீதுதான் நிறுவப்படுகிறது. குழந்தைக்கு செல்லம் கொடுத்து தன் பக்கம் இழுத்து, அப்பாவை தள்ளி வைக்கும் நுட்பம் ஒருவகை தாய்மை என்றால், தான் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டுமென உறவுகளின் அரண் கொண்டு ஒருவரை கட்டம் கட்டுவது இன்னொரு வகை தாய்மை.

அதிகாரம், அடிப்படையில் தன்னை நிலைநிறுத்த கடுமையாக பாடுபடும். அதற்கான நியாயங்களை தொடர்ந்து புனையும். அதனால்தான் தான் பேசும்போது எவரையும் பேசக் கூடாதென சொன்ன விசித்ரா, பிறர் பேசும்போது அமைதி காக்காமல் குறுக்கீடு செய்து கொண்டிருந்தார். அவரின் முக்கியமான அடுத்த குற்றச்சாட்டு 'இன்றைய தலைமுறை' என வைத்தக் குற்றச்சாட்டுகள். அவற்றை இறுதியில் பார்க்கலாம்.

ஜோவிகாவின் புரிதல்:

ஜோவிகா ஒரு typical privileged kid. அவருடைய வாதம் மழுமட்டையிலும் மழுமட்டையான வாதம். ஆனால் அவரின் privilege கொடுக்கும் தன்மையிலிருந்து கிடைக்கும் உடல்மொழி, யாரையும் மதிக்காத தன்மை, கூடுதலாக பெண்ணிய சாயம் போன்றவை அவருக்கு ஒரு rebel தோற்றத்தை கொடுக்கிறது. ஒரு மாஸ் ஹீரோ பஞ்ச் டயலாக் பேசுவது ரசிக்கப்படுவது போல், ரசிக்கப்படுகிறது. மாயா உருண்டு புரண்டு எல்லாம் விசில் அடிக்கிறார். ரவீனா கை தட்டுகிறார். 2K Kids என்னும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்க அவதரித்த மீட்பர் போல பார்க்கப்பட்டார்.

ஆனால் 'எல்லாரும் டாக்டர் ஆனா, யாரு கம்பவுண்டர் ஆகுறது?', 'என்னால் வண்டி சக்கரத்த கழட்டி மாற்ற முடியும். உன்னால முடியுமா?' என்பதெல்லாம் toxic- தனத்தின் உச்சக்கட்டம். கொஞ்சம் விட்டால் விஸ்வகர்மா திட்டத்துக்கு ஆதரவு சேகரித்திருப்பார் ஜோவிகா. TTF Vasan பேசும் மொண்ணைத்தன நியாயங்களுக்கும் ஜோவிகாவின் நியாயங்களுக்கு இடையே குறைந்தபட்ச ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை.

டெக்னாலஜி, செயலிகளை மட்டும் நம்பியே வளர்ந்து, விழுமியங்களை உதறித் தள்ளி Google-ஐ மட்டுமே அற்றங்காக்கும் கருவியென நம்பும் ஒரு முட்டாள் தலைமுறையின் பிரதிநிதிதான் ஜோவிகா.

எவரைக் காட்டிலும் ஜோவிக்காவுக்கு பவா செல்லத்துரை கொடுத்த ஆதரவுதான் பலருக்கு ஆச்சரியமளித்திருக்கிறது. எனக்கு அவர் மீது எந்தக் காலத்திலும் நம்பிக்கை இருந்ததில்லை. இலக்கியத்தை அரசியலற்று தேவைக்கேற்ப புரட்டிப் போட்டு கொள்ளுபவர் இப்படி மட்டும்தான் இருக்க முடியும்.

பிக் பாஸ்: கல்வி முக்கியமா? இல்லையா? சமூகத்தின் உண்மையான எதார்த்தத்தை எப்போது இவர்கள் உணரப்போகிறார்கள் !

கல்வி முக்கியமா?

தமிழ்ச்சூழலில் கல்வி சார்ந்து ஒரு. நெடிய மரபு இருக்கிறது. எழுத்தை மக்களும் பயின்ற சமூகமாக தமிழ் சமூகம் இருந்து வருவதையே கீழடி உள்ளிட்ட பல அகழாய்வுகள் காட்டுகின்றன. எல்லா காலங்களிலும் கல்வியை ஆட்சியதிகாரம் வழங்கியிருக்காது. ஆனால் அதைப் போராடி பெறும் உரிமையாக தமிழ் சமூகம் எப்போதுமே பாவித்து வந்திருக்கிறது. அந்த கல்வியுரிமை மரபின் ஒரு கண்ணிதான் அனிதா.

அனிதா ஒன்றும் படிக்க பயந்து கொண்டெல்லாம் சாகவில்லை. ஒட்டுமொத்த அரசியல் அமைப்புமே தனக்கு எதிராக இருக்கும் விரக்தியில்தான் அவர் உயிர் கொடுத்தார். தற்கொலையை கோழை முடிவென மட்டுமே பார்த்துப் பழகிய லிபரல் சமூகத்துக்கு, வீரச்சாவின் அரசியல் புரிய வாய்ப்பில்லை.

கல்வி கற்றவர்களெல்லாம் ஜெயித்து விட்டார்களா? இல்லை. கல்வி கல்லாதவரெல்லாம்? அதற்கும் இல்லைதான் பதில். ஆனாலும் இந்த பிக் பாஸ் கூட்டம், புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை என ஏன் பாடிக் கொண்டிருக்கிறது?அடிப்படை புரிதலில் பிழை கொண்டிருப்பதால்தான்.

இந்தியச் சமூகத்தில் கல்வி என்பது அறிவுக்கான விஷயம் இல்லை என பெரும்பான்மையானோருக்கு தெரியும். அது அரசுக்கான குமாஸ்தா வேலைகளுக்கான தரத்தை அடிப்படையாக கொண்டு பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்டது. அடுத்தடுத்த அரசுகளும் தங்களுக்கான பணி மற்றும் அரசியல் நிலைகளை கொண்டு கல்வியை தந்து வருகிறது.

அடிப்படையில், இந்தியச் சமூகத்தை பொறுத்தவரை கல்வி என்பது வேலைக்கான தகுதி மட்டும்தான். குறைந்தபட்ச படிப்பு இருந்தால் ஏதோவொரு அடிப்படை வேலையையேனும் பெற்றுக் கொண்டு வாழ்க்கையை ஓட்டி விடலாம் என்பது மட்டும்தான் இந்திய சிந்தனை. விசித்ரா திரும்பத் திரும்ப சொல்வது அதைத்தான். "ஒரு டென்த்தாவது படிச்சுடலாமே" என்கிற அவரின் விருப்பம், தமிழ் தாய்மார்களின் அடிப்படையான விருப்பம். பெரும்பாலான தமிழ்நாட்டு அரசுகள் கல்வியை புகட்டுவதை கடமையாக கொண்டிருந்தமையால், 10th-க்கு பதிலாக நாம் கல்லூரி வரையேனும் படிக்கலாமே என குழந்தைகளை திட்டிக் கொண்டிருக்கிறோம். அவ்வளவுதான்.

வாழ்க்கைப்பாடம், உலகமே அறிவை கொடுக்கும், கல்வி என்பது அறிவு கிடையாது என்பவை யாவும் எல்லாருக்கும் தெரியும். நான் வாழ்க்கை பாடத்தை கற்றிருக்கிறேன் என ஓர் ஐடி நிறுவனத்துக்கு சென்று நேர்காணலில் நிற்க முடியாது.

கல்வி என்பது நமக்கு வேலைவாய்ப்பு. வேலை என்பது நமக்கு பொருளாதார வளர்ச்சி.

இன்றும் ஒரு வீட்டுக்கு என்று மகனோ மகளோ எப்படி இருக்கிறாரென நலம் விசாரித்தால் நன்றாக இருக்கிறாரென்பதோடு பதில் நின்றுவிடுவதில்லை. இன்ன படிப்பு படித்து இன்ன நிறுவனத்தில் இத்தனை சம்பளத்தில் பணிபுரிகிறார் என்ற விளக்கத்தோடுதான் பதில் வரும். அந்த விளக்கம், அந்தக் குடும்பம் சமூகத்தில் தலையெடுத்து விட்டதென்ற கர்வத்தின் அடையாளம்.

பிக் பாஸ்: கல்வி முக்கியமா? இல்லையா? சமூகத்தின் உண்மையான எதார்த்தத்தை எப்போது இவர்கள் உணரப்போகிறார்கள் !

எனவேதான் படிக்கச் சொல்லி குடும்பங்கள் அழுத்தம் கொடுக்கின்றன. விரட்டி விரட்டி அடித்துக் கொண்டே மகனை பள்ளிக்கு கொண்டு சென்று விட்ட அப்பாக்களை நான் பார்த்திருக்கிறேன். அங்கெல்லாம் சென்று 'குழந்தைகளை அடிப்பது வன்முறை', 'பள்ளிக்கு செல்லாமல் இருப்பது அவர்களின் உரிமை' என லிபரல்வாத உளறல்களை சொல்லிக் கொண்டிருந்தால் நம் 'செவுல்' பெயர்ந்து போகும்.

கல்விசார் அழுத்தம் குழந்தைகளுக்கு கொடுக்கப்படக் கூடாதா என்றால் ஆம் கொடுக்கப்படக் கூடாதுதான். அதற்கு தீர்வாக சென்று பெற்றோரிடம் கவுன்சலிங் உளறல்களை சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. கல்வி ஏன் இத்தனை அழுத்தம் மிகுந்ததாகவும் செலவு மிகுந்ததாகவும் வணிகமாக்கப்பட்டிருக்கிறது என வணிக நிறுவனங்களையும் அரசுகளையும் கேட்க வேண்டும். அதற்கென சிலி போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெரும் போராட்டங்களை மாணவர்கள் முன்னெடுத்து ஆட்சியை மாற்றியிருக்கிறார்கள்; வென்றிருக்கிறார்கள். காரணம் அவர்களுக்கு அரசியல், சாக்கடை இல்லை!

'It's your life, it's your decision', 'படிக்கலன்னா பரவாயில்ல, ஆக்டிங் கத்துக்கோ!' என்பதெல்லாம் ப்ரிவிலேஜில் வளர்ந்து கொழுப்படைத்துப் போன கூட்டங்களுக்கு மட்டுமே செல்லுபடி ஆகும். அதை பொதுவிதியாக மாற்ற முடியாது.

ஜோவிகா ஒரு வசதியான வீட்டில் பிறந்தவர். யுகேந்திரன் இரண்டாம் தலைமுறை வசதி. பவா செல்லத்துரை குடும்பமுமே சமூகத்தில் ஒரு நிலையில் இருப்பவர்கள். கமலின் குடும்பம், சுதந்திர இந்தியா காலத்திலேயே வழக்கறிஞராக இருந்த குடும்பம். மெய்யப்ப செட்டியாரை சுலபமாக சென்று பார்த்து 'எனக்கு சினிமால நடிக்கணும்' என ஏழு வயதிலேயே சொல்லக் கூடிய ப்ரிவிலேஜில் பிறந்தவர் கமல்.

அத்தகைய வசதியிலும் ப்ரிவிலேஜிலும் அவர்களுக்கு வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் இல்லை. சம்பாதித்து பொருளாதாரம் ஈட்ட வேண்டிய கட்டாயமும் இல்லை. குடும்பமே அவர்களுக்கு வசதியை கொடுக்கும். வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுக்கும். அங்கு அவர்கள் உட்கார்ந்து கொண்டு, கல்வி அவசியமில்லை என பேசலாம். நாம் பேச முடியாது.

நரிகள் சொல்லும் உபதேசங்கள் ஆடுகளுக்கு நன்மை பயப்பதில்லை.

இன்றுமே எந்த கிராமத்துக்கும் சென்று பாருங்கள். 'ஒழுங்கா படிடே.. படிக்கலன்னா ஆடு, மாடுதான் மேய்க்கணும்!' என்கிற குரலை வெகு சுலபமாக கேட்க முடியும்.

ஏனெனில் இங்கு கல்விதான் வேலை, வளர்ச்சி, அரசியல், பொருளாதாரம், இருப்பு எல்லாமும்.

பிறகு இந்த தலைமுறை இடைவெளி!

'இந்த தலைமுறை அறிவுரையை கேட்பதில்லை', 'யோசனை சொன்னாலும் offend ஆகிறார்கள்', 'உடனே நிராகரிக்கிறார்கள்' என விசித்ரா இந்த தலைமுறை மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் எல்லாமும் அபாயக்கட்ட உண்மைகள்தாம். 'என் வீட்டிலும் இருக்கிறது' என கமலும் ஒப்புக் கொள்ள வேண்டிய நிலையில் வர்க்க, சாதி, மத, பாலின பேதமின்றி நிறைந்திருக்கிறது.

உண்மைதான்.

பிக் பாஸ்: கல்வி முக்கியமா? இல்லையா? சமூகத்தின் உண்மையான எதார்த்தத்தை எப்போது இவர்கள் உணரப்போகிறார்கள் !

கடந்த கால அறிவை அடுத்த தலைமுறை பெற்றுதான் இதுகாறும் மனித குலம் பரிணமித்து வந்திருக்கிறது. ஆனால் இப்போது முதல்முறையாக கடந்த கால அறிவை மறுக்கும் தலைமுறை முற்றாக எழுந்திருக்கிறது.

நீளமாக எழுதினால் பிரச்சினை, அதிகமாக பேசினால் பிரச்சினை, யோசனை சொன்னால் பிரச்சினை, நெகிழ்வுதன்மையுடன் (vulnerability) இருப்பது பிரச்சினை, கூட்டாக செயல்படுவது பிரச்சினை, காது கொடுத்துக் கேட்பதே பிரச்சினை என மனிதப் பரிணாமத்தின் பெரும்பான்மையை பிரச்சினையாக்கி நிராகரித்திருக்கும் தலைமுறை இது.

Toxic தன்மை அதிகம் கொண்டாடப்படுகிறது. தற்குறித்தனம் விதந்தோதப்படுகிறது. உடனடி பிரபலமாகும் ஆசை கொல்கிறது. தானே அறிவாளி, தான் மட்டுமே அறிவாளி என நினைக்கிறது.

எதிர்பாராது எழுந்த தொழில்நுட்ப பேரெழுச்சி, இத்தகைய தக்கையான மனிதர்களை உருவாக்கி வைத்திருக்கிறது. இதற்கு நாமுமே ஒருவகையில் காரணம்.

எதை இழந்ததால் இது வந்ததென தெரியாமல் stress, anxiety, depression, self doubt, suicidal thought எனப் பல நோய்களை பெற்று போலி பிம்பங்களில் தங்களின் வீரத்தை புனைந்து மாத்திரைகளில் வாழ்ந்து வானிலிருந்து வீழும் ஒரு மழைத்துளியின் சுமை தாங்க முடியாமல் 'பொத்'தென புதைந்து போகிறார்கள்.

கஷ்டம்தான். ஆனால் இவர்களை கொண்டுதான் எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். இந்த பிக் பாஸ்தன கயமைகளை, நீளப்பதிவு என்றாலும் உடைத்துக் காட்டும் வேலையை விமர்சனம் எழுந்தாலும் செய்யத்தான் வேண்டியிருக்கிறது.

நாமொன்றும் பவா செல்லத்துரை கிடையாதே!

Related Stories

Related Stories