உணர்வோசை

”முழுநேரப் பத்திரிக்கையாளர் கலைஞர்”.. தனது அனுபவத்தை பகிர்ந்த பத்திரிகையாளர் ப.திருமாவேலன்!

கலைஞர் உருவாக்கிய எழுது கோல். இறுதி வரையிலும் அவரது எழுத்தாட்சி தொடர்ந்தது.

”முழுநேரப் பத்திரிக்கையாளர் கலைஞர்”.. தனது அனுபவத்தை பகிர்ந்த பத்திரிகையாளர் ப.திருமாவேலன்!
 • Twitter
 • Facebook
 • WhatsApp
Updated on

'' எனது செங்கோலை வேண்டுமானால் யாரும் பறித்துக் கொள்ள முடியும். ஆனால் எழுதுகோலை மட்டும் யாராலும் பறித்துக் கொள்ள முடியாது'' என்று 'சாவி இதழின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவில் பேசும் போது குறிப்பிட்டார் தலைவர் கலைஞர். உண்மை தான். அவரிடம் இருக்கும் எழுதுகோலை யாராலும் பறிக்க முடியவில்லை. ஏனென்றால் அது அவர் உருவாக்கிய எழுதுகோல். அவரை உருவாக்கிய எழுது கோல்.இறுதி வரையிலும் அவரது எழுத்தாட்சி தொடர்ந்தது.

1989 ஆம் ஆண்டு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது நிருபர்கள் சங்கத்துக்கு வந்து பேசும் போது கலைஞர் சொன்னார்...

'' நிருபர்கள் இடத்திலே, என்றைக்கும் எனக்கு ஒரு தணியாத அன்பு உண்டு. நேசம் உண்டு. பாசம் உண்டு. சில நேரங்களில் நிருபர்கள் விரட்டப்பட்டார்கள், அனுமதிக்கப்படவில்லை, நிருபர்கள் ஆத்திரப்பட்டார்கள் என்றெல்லாம் செய்தி வரும் போது அப்படி விரட்டப்பட்டவர்களில் நானும் ஒருவனாக இருப்பது போல எண்ணிக் கொண்டு வேதனைப்படுவது உண்டு" என்றார். உண்மை தான். அவர் மிகத் தேர்ந்த நிருபர். பத்திரிக்கையாளர்!

அவரது தொடக்கமே பத்திரிக்கையாளர் வாழ்க்கை தான். 'மாணவநேசன்' என்ற இதழின் மூலமாகத்தான் அவரது பொதுவாழ்க்கை தொடங்கியது. அரசியல் நேசனாக, இலக்கியநேசனாக ஆவதற்கு முன்னால் பத்திரிக்கை நேசன் கலைஞர். 'என் மூத்த பிள்ளையே முரசொலி' என்ற சொல்லுக்கு மேல் ஆதாரம் தேவையா?

2001 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நடந்தபிறகு ஒரு நாள் 'ஜுனியர் விகட'னுக்காக நான் பேட்டிக்கு சென்றிருக்கிறேன். 'எப்படி உங்களால் இவ்வளவு பணிகளுக்கு மத்தியிலும் இவ்வளவு எழுத முடிகிறது?' என்ற கேள்வியைக் கேட்டேன். 'பேனாவை பிடுங்கிட்டா நான் செத்துருவேன்யா' என்று சிரித்தபடியே சொன்னார்.

அப்போதுதான்...

'குடிசை தான்!

ஒரு புறத்தில் கூரிய வேல்வாள்

வரிசையாய் அமைந்திருக்கும் - வையத்தைப் பிடிப்பதற்கும்

வெம்பகையை முடிப்பதற்கும்

வடித்து வைத்த படைக்கலம் போல் மின்னும் ; மிளிரும்..." என்ற கவிதை அப்படியே ஒப்பித்தார்.

'அந்தக் கிண்டலுக்குப் பேர் போன கிழட்டுத் தமிழச்சி' என்ற வரியை இடையில் நான் சொன்னது அவருக்கு உற்சாகமாக இருந்தது.

''...கருத்தெரியப் பொய்ச் சொன்ன கயவனெங்கே?

வாளிங்கே? அவன் நாக்கெங்கே?" - என்று இறுதி வரி வரைக்கும் சொல்லி முடித்தார். 1945 ஆம் ஆண்டு எழுதிய கவிதை இது. 2000 ஆம் ஆண்டில் அப்படியே சொன்னார். ' எப்படி இவ்வளவு மனப்பாடமாக இருக்கிறது உங்களுக்கு?' என்று கேட்டேன். 'நாம எழுதினதை நாமே மறந்தால் மற்றவர்கள் எப்படி நினைவில் வைத்திருப்பார்கள்?" என்றார் கலைஞர். அப்போதுதான் தனது வசனங்களை எம்.ஜி.ஆர். பேசினால் எப்படி இருக்கும், சிவாஜி பேசினால் எப்படி இருக்கும், எஸ்.எஸ்.ஆர். பேசினால் எப்படி இருக்கும் என்றும் சொன்னார். ஆண்ட்ராய்டு போன் இல்லாத காலம் அது. அப்படியே எடுத்திருந்தால் கலைஞரின் கலைமொழித் திறமைக்கு எடுத்துக்காட்டாக அந்தக் காட்சிகள் அமைந்திருக்கும்.

”முழுநேரப் பத்திரிக்கையாளர் கலைஞர்”.. தனது அனுபவத்தை பகிர்ந்த பத்திரிகையாளர் ப.திருமாவேலன்!

காபி வந்தது. அதை அருந்த முடியாத அளவுக்கு அவரது வசனத்தில் ரசித்து இருந்தேன். சில நிமிடங்கள் கழித்து கோப்பையை எடுக்கும் போது, 'ஆறியிருக்கும்யா..அப்படியே வையுங்க' என்று வேறொரு காப்பிக்கு அழைப்பு மணியை அழுத்தினார் கலைஞர்.

இன்னொரு முறை பேட்டிக்காக 9.30க்கு வரச்சொல்லி இருந்தார் தலைவர் கலைஞர். மடிப்பாக்கத்தில் இருந்து என்னுடைய இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது பஞ்சர் ஆகிவிட்டது. பஞ்சர் ஒட்டி விட்டுக் கிளம்பினேன். மறுபடியும் காற்று இறங்கிக் கொண்டு இருந்தது. வாகனத்தை நிறுத்திவிட்டு, ஆட்டோ பிடித்து கோபாலபுரம் வரும் போது மணி 9.50.

'தலைவர் உங்களுக்காகத் தான் காத்திருக்கிறார்' என்றார் 'நிழல்' சண்முகநாதன். மாடிக்கு ஓடுகிறேன். உள் அறையில் இருந்து திரையை விலக்கி வந்து ஆசனத்தில் அமர்கிறார் தலைவர். 'கேளுங்க' என்கிறார் இயல்பாக!

என்ன சொல்வாரோ... கோபம் காட்டுவாரோ... பேட்டியை விரைந்து முடித்துக் கொள்வாரோ... எல்லாப் பதட்டமும் 'கேளுங்க' என்பதில் முடிந்தது.தாமதம் பற்றி அவர் கவலை கொள்ளவில்லை.

1999 ஆம் ஆண்டின் இறுதியில் - புத்தாண்டு தொடங்குவதற்கு முன்பாக, நிருபர்கள் அனைவரும் கோட்டையில் முதலமைச்சர் கலைஞரைச் சந்தித்து, புத்தாண்டு வாழ்த்துச் சொல்லச் சென்றோம். ஓஷோ எழுதிய 'ஞானத்தை அடைய ஏழு படிகள்' என்ற நூலை 'ஹிக்கின்பாதம்ஸ்' கடையில் நான் வாங்கிச் சென்றிருந்தேன். முதல்வர் கலைஞருக்கு அந்த நூலை அன்பளிப்பாகக் கொடுத்தேன். 'விகடன் பேப்பர்' மாலை நாளிதழ் நிருபர் நான். மதியம் 2 மணி வாக்கில் முதலமைச்சரின் செயலாளர்களில் ஒருவரான அண்ணன் மருதவிநாயகம் போன் செய்தார். 'இந்த புத்தகத்தை எதற்காக கொடுத்தீர்கள்? என்று தலைவர் கேட்கச் சொன்னார்' என்றார். ' எனக்கு ரஜினீஷ் பிடிக்கும். தலைவரும் யோகா கற்றுக் கொண்டு வருகிறார். அதனால் கொடுத்தேன்' என்றேன். 'அதில் 16 பக்கம் இல்லையாம், தலைவர் சொல்லச் சொன்னார்' என்றார்.

காலையில் புத்தகம் கொடுத்தேன். மதியத்துக்குள் அதனை திருப்பிப் பார்த்துவிட்டார் . அவருக்குள் ஒரு எழுத்தச்சன் வாழ்வதன் அடையாளம் இது.

'தென் திசைப் பதிப்பகம்' நடத்தி வந்த காலம் ( 2007) அது. 'தடை செய்யப்பட்ட தமிழ் எழுத்தும் காலமும்' என்ற எனது நூலின் மூன்று தொகுதிகள் வெளியாகி இருந்தது. அன்றைய காலை நாளிதழில் அது குறித்த விமர்சனம் வெளியாகி இருந்தது. காலையில் பதிப்பக அலுவலகத்துக்கு 9 மணிக்கு செல்கிறேன். ஒரு காவலர் நின்று கொண்டு இருந்தார். 'காலையில 7 மணியில இருந்து நிற்கிறேன் சார்... அந்த மூன்று புத்தகமும் வேண்டும். சி.எம்.வாங்கிட்டு வரச் சொன்னாங்க' என்று சொன்னார் அந்த காவலர். கலைஞருக்கு இருந்த அறிவின் ஆர்வத்தின் வெளிப்பாடு இது.

”முழுநேரப் பத்திரிக்கையாளர் கலைஞர்”.. தனது அனுபவத்தை பகிர்ந்த பத்திரிகையாளர் ப.திருமாவேலன்!

அது ஒன்றிய பாஜக அரசில் இருந்து வெளியேறிய நேரத்தில் எடுக்கப்பட்ட பேட்டி. அதனால், பேட்டி, அச்சுக்கு போவதற்கு முன்னால் எடுத்து வந்து காண்பிக்கச் சொன்னார் தலைவர் கலைஞர். மதிய வேளை. 1.45 மணிக்குத் தான் ஆலிவர் சாலை இல்லத்துக்கு வந்தார். முன் அறையில் அமர்ந்திருக்கிறேன். 'தயார் ஆகிவிட்டதா?' என்றவர் கையில் இருந்த காகிதத்தை வாங்கி, அப்படியே அந்த இடத்தில் கிடந்த நாற்காலியில் அமர்ந்தார். அவர் வழக்கமாக உட்காரும் இருக்கை அல்ல அது. காத்திருப்பவர்களுக்காக போடப்பட்ட இருக்கை அது. எந்தளவுக்கு ஆர்வமாக இருந்தார் என்பதற்கு உதாரணம் இந்தக் காட்சி.

படித்துக் கொண்டே வந்தவர், திடீரென தலையை உயர்த்தி என்னைப் பார்த்தார். நான் சிரித்தேன். எதுவும் என்னிடம் கேட்கவில்லை.

அதன்பிறகு திடீரென தலையை உயர்த்தி மீண்டும் என்னைப் பார்த்தார். எதுவும் கேட்கவில்லை.

'நல்லா கோர்வையா எழுதி இருக்கய்யா' என்று சொல்லி விட்டு முதுகைத் தட்டிக் கொடுத்தார்.

இரண்டு இடத்தில் என்னைப் பார்த்ததற்குக் காரணம்... பேட்டியின் போது அவர் சொன்ன ஒரு வார்த்தையை தவிர்த்திருந்தேன். ஒரு இடத்தில் அவர் சொல்லாத ஒரு வாக்கியத்தை எழுதி அதற்கு அழுத்தம் கொடுத்திருந்தேன். இரண்டையும் அவர் ஏற்றுக் கொண்டார். அதற்கான அங்கீகாரம் தான் அந்தப் பார்வை.

தலைவர் கலைஞரையோ அவரது நிலைப்பாடுகளையோ விமர்சித்து எழுதிய காலக்கட்டத்தில் அழைத்து, 'ஏன் இப்படி எழுதுகிறீர்கள்?' என்று அவர் கேட்டது இல்லை. அவதூறு வழக்குகள் போடவில்லை. ( ஜெயலலிதா ஆட்சியில் தான் என் மீது 16க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டது!) 'முரசொலி'யில் விமர்சித்து எழுதவில்லை. எனது ஆசான் சின்னக்குத்தூசி அவர்கள் எனக்கு பதில் எழுதி இருக்கிறார். கலைஞர் அவர்கள் எழுதியது இல்லை. ' உங்களுக்கு பூணூல் கல்யாணம் எப்ப சார்?' என்று கூட குத்தூசி கிண்டலடிப்பார். 'உங்கள் தலைமையில் தான்' என்று நான் சொல்வேன். ஆனாலும் தலைவர் கலைஞர் விமர்சித்து எழுதியது இல்லை.

தலைவர் கலைஞரின் 90 ஆவது பிறந்த நாளையொட்டி 'ஆனந்த விகடன்' இதழில் 'வரலாறும் தகராறும்' என்ற எனது கட்டுரை 2013 ஆம் ஆண்டு வெளியானது. ' திருவாரூர் தியாகராயர் கோவில் தெப்பக் குளத்தின் அருகில் இரண்டு சிறுவர்கள்...' என்று அந்தக் கட்டுரை தொடங்கும். இறுதியாக ...

''மத்தியில் ஆட்சிக் கூட்டணியில் இல்லை. மாநிலத்தில் ஆட்சியிலும் இல்லை, எதிர்க் கட்சித் தலைவர் அந்தஸ்திலும் இல்லை. வரப் போகும் மாநிலங்களவைத் தேர்தலில் ஒரே ஓர் இடம் பெறும் வலிமையில்கூட இல்லை. எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கலைஞரோடு யார் கூட்டு சேருவார்கள் என்றும் தெரியவில்லை. ஆனாலும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த வாரம் தனது ஆட்சியின் இரண்டாம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சிகளுக்குப் பதில் அளித்துப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, தனது உரை முழுவதையுமே கலைஞருக்கு விளக்கம் சொல்வதற்கே செலவு செய்தார்.

சட்டசபைக்கே செல்லாவிட்டாலும் அதன் இயக்கங்களைத் தீர்மானிப்பதில் தான் ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்பதை நிரூபிக்கும் அளவுக்கு கலைஞரின் நிழலாட்சி என்றும் நிலைத்திருக்கும்!"

- என்று அந்தக் கட்டுரை முடியும். மிகமிக மகிழ்ச்சியில் தலைவர் கலைஞரை ஆழ்த்திய கட்டுரை என்பதை அறிந்தேன். அதனை 'முரசொலி'யில் வெளியிட்டார். முன்னணியினர் கூடியிருந்த கூட்டத்தில் வாசிக்கச் சொன்னார். 'கலைஞர் செய்திகள்' தொலைக்காட்சியில் அதனை வெளியிடச் செய்தார்.

”முழுநேரப் பத்திரிக்கையாளர் கலைஞர்”.. தனது அனுபவத்தை பகிர்ந்த பத்திரிகையாளர் ப.திருமாவேலன்!

'ஆனந்த விகடன்' நிறுவனத் தலைவராக அப்போது இருந்தார் பெரியவர் பாலசுப்பிரமணியம். கண்ணகி சிலையை ஜெயலலிதா அகற்றியது தொடர்பான கட்டுரையை நான் எழுதி இருந்தேன். 'பத்திரிக்கை வெளியானதும் காலங்காத்தால முதல் போன் கலைஞரிடம் இருந்து வரும். அஞ்சு மணிக்கெல்லாம் போன் பண்ணினார் ஒரு தடவை ' என்றார்.

உள்துறைச் செயலாளர் அறைக்கு மாலை 4 மணிக்கு நான் செல்கிறேன். 'விகடன் பேப்பர்' மாலை நாளிதழை விரித்து வைத்து உன்னிப்பாக படித்துக் கொண்டு இருந்தார். என்னைப் பார்த்ததும் சொன்னார், ' 4.30க்கு சி.எம்.இடம் இருந்து போன் வருவதற்கு முன்னால் நான் படித்து முடித்துவிடுகிறேன். பத்து நிமிடம் வெயிட் பண்ணுங்க' என்றார். தலைவர் கலைஞராக இருந்தாலும், முதல்வர் கலைஞராக இருந்தாலும் செய்தித்தாள்களை ஆளுக்கு முன்னால் படித்துவிடுவார். அனைவரையும் எழுப்புவது செய்தித்தாள் அல்ல. அவர் தான். ஏனென்றால் அவர் தான் தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தி!சுடச்சுடச் செய்திகளை முந்தித்தருகிறோம் என்று விளம்பரம் செய்வார்கள். சுடச்சுடப் படித்து விட வேண்டும் என்று நினைப்பவர் கலைஞர்.செய்திக்கு எப்படி நேரகாலம் கிடையாதோ, அது போலத் தான்... கலைஞரும் முழுநேரப் பத்திரிக்கையாளர்!

- ப.திருமாவேலன் (தலைமை செய்தியாசிரியர் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி) முரசொலியில் இன்று வெளிவந்த தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு சிறப்பிதழ் (3)

Related Stories

Related Stories