உணர்வோசை

அடுத்தவரை ஒடுக்குவதுதான் மனித வாழ்க்கையா?.. மனிதன் சுயநலமானவனா?

பிழைக்க தெரியாதவர்', 'நேர்மையானவர்', 'இளிச்சவாயர்' என்ற பட்டங்களை கொடுத்து ஒதுங்கிக் கொள்கிறோம்.

அடுத்தவரை ஒடுக்குவதுதான் மனித வாழ்க்கையா?.. மனிதன் சுயநலமானவனா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

"ஒருத்தனை கொல்லணும்னு வந்துட்டு மனச மாத்திக்கிட்டு மன்னிப்பும் கேட்கற மனசு இருக்கே, அதான் என்னை பொறுத்தவரைக்கும் சாமி!"

'அன்பே சிவம்' பட வசனம்!

காலந்தோறும் மனிதர்கள் பலவித நம்பிக்கைகள் ஊட்டப்பட்டு வார்க்கப்பட்டிருக்கின்றனர். மனிதன் சுயநலமானவன், அதிகாரம் விரும்புபவன், பொது நலம் மறுப்பவன் போன்றவை எல்லாம் அத்தகைய நம்பிக்கைகள்தாம். ஆனால் எல்லா காலங்களிலும் இந்த நம்பிக்கைகளுக்கு எதிராகவே நாம் செயல்பட்டு வந்திருக்கிறோம். ஆனால் அந்த புரிதல் நமக்கு ஏற்பட்டிடாத வண்ணம் முன்னெடுக்கப்படும் பிரசாரங்களில் நாம் மாட்டியிருக்கிறோம்.

சென்னை வெள்ளம் வந்த போது யோசித்து பாருங்கள். யார் யாரென தெரியாமலே மனம் பதறினோம். ஏதேனும் உதவி செய்துவிட முடியாதா என கிடந்து அலைந்தோம். நம்மால் இயன்ற உதவிகள் புரிய ஓடினோம். கிராமத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் பாட்டி ஒருவர், "நம்ம அன்றாடங்காய்ச்சிங்க. நம்ம பொழப்பு எப்பவும் நடுத்தெருதான். ஆனா சென்னைல படிக்கப் போயி நல்லா படிச்சு நல்லா வேலை பார்த்துக்கிட்டு இருக்கற புள்ளைக சோறில்லாம நடுத்தெருல நிற்கறத பார்த்தா மனசு பதறுதுப்பா" என தன் நாட்கூலியைக் கையில் திணித்து விட்டு நகர்ந்த காட்சி இன்னும் பசுமையாக இருக்கிறது.

அடுத்தவரை ஒடுக்குவதுதான் மனித வாழ்க்கையா?.. மனிதன் சுயநலமானவனா?

அடுத்த வேளை உணவுக்கு கூட வழியில்லை என்றபோதும் அடுத்த உயிருக்கு உதவ வேண்டுமென யோசிக்கிற மனம் இருக்கிறதே அதுதான் நாம்.

சென்னை வெள்ளம் மட்டுமல்ல, குஜராத்தில் பூகம்பம் வந்தபோது மனம் பதைபதைத்தோம். நன்கொடை பணங்கள் நிவாரணத்துக்கு போய் சேருமா என்று கூட தெரியாமல் நம் பணங்களை உண்டியலில் போட்டோம். இன்றும் கூட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உட்பட பல அமைப்புகளும் தனி நபர்களும் ரத்த தான முகாம் நடத்தும்போது பலர் வந்து ரத்தம் கொடுக்கிறார்களே ஏன் கொடுக்கிறார்கள்?

ஆனாலும் நாம் சுயநலமானவர்கள் என்றே நம்ப விரும்புகிறோம்.

காரணம் அரசுகள், அதிகார அமைப்புகள்.

அதிகார வடிவங்கள் விரும்பும் வகையில் இல்லாத ஒருவரை பார்த்தால் நாம் அதிர்ந்து போகிறோம். அவர்களுடன் சேர்ந்தால் நாமும் அப்படி ஆகி இச்சமூகத்துக்கு ஒவ்வாதவர்களாகி விடுவோம் என பயம் கொள்கிறோம். 'பிழைக்க தெரியாதவர்', 'நேர்மையானவர்', 'இளிச்சவாயர்' என்ற பட்டங்களை கொடுத்து ஒதுங்கிக் கொள்கிறோம்.

அடுத்தவரை ஒடுக்குவதுதான் மனித வாழ்க்கையா?.. மனிதன் சுயநலமானவனா?

ஓர் அதிகாரம் விரும்பும் வகையில் அடுத்தவரை அவமதித்து ஒடுக்கி சுரண்டி சுயநலத்துடன் வாழும் ஒருவரை பார்க்கும்போது அவர் இயல்பானவர் என நாமும் இயல்பாகிறோம். அவருடன் நட்பு பாராட்டுகிறோம். 'என்னை மிதியுங்கள், ஒடுக்குங்கள், சுயநலமானவனாக ஆக்குங்கள்' என சொல்லி கை குலுக்கி கொள்கிறோம்.

எனவே குழம்பிக் கொள்ளாதீர்கள். பரிவும் தோழமையும்தான் மனித இனம் தழைப்பதற்கான வழிகள். அனைவரும் அதைப் புரிந்து கொள்ள காலம் எடுக்கும். ஆனால் நிச்சயம் புரிந்து கொள்வார்கள். அதுவரை காத்திருப்போம்!

banner

Related Stories

Related Stories