உணர்வோசை

நட்பில் இல்லாத பிரச்சனைகள் ஏன் காதலில் ஏற்படுகிறது? இரண்டுக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன ?

இரு வேறு சிந்தனை கொண்ட, இரு குடும்பப் பின்னணியில் இருந்து வரும் இருவர் காதலிக்கும் போதும் ஒரே கூரையின் கீழ் வாழும்போதும் முரண்கள் ஏற்படுவது மிக மிக இயல்பு. அந்த முரண்களை கடக்கவே காதல் கொள்கிறோம்.

நட்பில் இல்லாத பிரச்சனைகள் ஏன் காதலில் ஏற்படுகிறது? இரண்டுக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

'அழகான முகம் என கருதப்படுகிறவரை அருகே அமர்த்தி அவர் முகத்தை உற்று பார்த்துக் கொண்டே இருங்கள். ஒரு கட்டத்தில் அதன் விகாரம் தெரியத் தொடங்கும்' என்பார் ஓஷோ.

எந்த அழகும் விகாரத்தைத் தாண்டிய அழகு அல்ல. எந்த காதலும் சண்டைகள் அற்றிருக்க முடியாது.

அன்புக்குள் வன்முறைக்கான தேவை சூல் கொண்டிருக்கும். நேயத்துக்குள் வெறுப்புக்கான காரணம் மறைந்திருக்கும். தழலுக்குள் குளுமை படிந்திருக்கும். நீருக்குள் வெப்பம் குடிகொண்டிருக்கும். துகளுக்குள் அலையும் அலைக்குள் துகளுமாக உலகம் மட்டுமல்ல வாழ்க்கையும் அதன் உணர்வுகளும் குவாண்டம் அறிவியலுக்கான நிழல்களைக் கொண்டவையே.

நட்பில் இல்லாத பிரச்சனைகள் ஏன் காதலில் ஏற்படுகிறது?

நட்பில் குறைந்தபட்ச எதிர்பார்ப்புகள் மட்டுமே இருக்கும். அதிகபட்சமாக நீங்கள் நண்பரை அவமதிக்கக் கூடாது, துரோகம் செய்யக் கூடாது, ஏமாற்றக் கூடாது. காயப்படுத்தக் கூடாது. அவ்வளவுதான். ஆனால் இருக்கும் சூழலில் இவை யாவும் நேர்ந்தாலுமே கூட நட்பு பாராட்டும் அவசியம் இருக்கிறது. ஏனெனில் சமூகரீதியிலான உறவுகளில் பண உதவி, வேலைவாய்ப்பு, தனி நபருக்கான support system ஆகிய தேவைகளை நட்புறவு பூர்த்தி செய்கிறது.

நட்பில் இல்லாத பிரச்சனைகள் ஏன் காதலில் ஏற்படுகிறது? இரண்டுக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன ?

தனி நபரை இச்சமூகத்துடன் இணைக்கும் வழிகளில் நட்பும் ஒரு முக்கியமான வழி என்பதால் அதில் அதிக எதிர்பார்ப்புகளை நாம் வைத்துக் கொள்வதில்லை. காரணம், அதிகம் எதிர்பாரத்து பின் ஏமாந்து அந்த உறவை குலைத்து சமூகத்துடனான நம் தொடர்பையும் நமக்கான support system-ஐயும் இழக்க விரும்பவில்லை. இருக்கும் நட்பளிக்கும் வாய்ப்புகளையும் தாண்டிய வாய்ப்புகளை புதிய நட்புறவு ஒன்று அளித்தால் நாம் அதற்கு நகர்ந்து விடுவோம். அவ்வளவுதான்.

ஆனால் காதலில் நிறைய எதிர்பார்ப்பு வைக்கிறோம். ஏனெனில் காதலுக்கு சமூகத்தில் பெரிய பங்கு ஏதும் இல்லை. தனியாக தனி நபர் அளவில் நம் விருப்பத்தில்தான் காதல் நேர்கிறது. காதலிக்க சமூகக் கட்டாயம் ஏதுமில்லை.

உங்களுக்கு நண்பர்களே இல்லையெனில் உங்களின் பெற்றோர் கவலை கொள்வார்கள். நண்பர்களின்றி எப்படி பிழைக்கப் போகிறானோ என வருத்தம் கொள்வார்கள். உங்களுக்கு காதலரே இல்லையெனில் உங்களின் பெற்றோர் கவலைப்பட மாட்டார்கள். ஏனெனில் உங்களுக்கு இணை சேர்க்கவென இங்கு ஏற்கனவே ஒரு வடிவம் இருக்கிறது.

நட்பில் இல்லாத பிரச்சனைகள் ஏன் காதலில் ஏற்படுகிறது? இரண்டுக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன ?

விருப்பமோ இல்லையோ உங்களுக்கு ஓர் இணை சேர்ப்பிக்கப்படுவிடும். அந்த திருமண உறவிலேயே காதல் இல்லையென்றாலும் கூடப் பரவாயில்லை. குழந்தை பெற கட்டாயப்படுத்தி குழந்தை பிறக்க வைத்து பின் அதன் வாழ்க்கைக்கென ஓடக் கட்டாயப்படுத்தி என காதலே இன்றி திருமண உறவு வறண்ட பாலைவனமாக இருந்தாலும் குடும்பம் தொடர்வதற்கான சமூகக் கட்டாயங்கள் இங்கு உண்டு.

ஆனால் காதலுக்கு?

காதல் மிக சமீபமாக சில பத்தாயிரம் வருடங்களாகத்தான் மனிதனுக்கு பரிச்சயம். ஆனால் அக்காதலை பெரும்பாலான சமூகச் சூழல்கள் எதிர்த்தே வந்திருக்கின்றன. எனவே அதற்கான சமூகக் கட்டாயங்கள் இல்லை. ஆகவே நாமாக காதலுறவுக்கு சில எதிர்பார்ப்புகளையும் நிபந்தனைகளையும் வரையறுக்கிறோம்.

திட்டக் கூடாது, கோபம் கொள்ளக் கூடாது, இன்னொரு ஆணை/பெண்ணை ஏறெடுத்துப் பார்க்கக் கூடாது, நேரம் செலவழிக்க வேண்டும், அவச்சொல் வரக் கூடாது, முக்கியத்துவம் பாதுகாக்க வேண்டும், எல்லா நேரமும் நாம் தான் பிரதானமாக இருக்க வேண்டும், நாம் என்ன சொன்னாலும் அதை நடத்தித் தர வேண்டும், என்னுடைய காதலர் எனக்கு முழுமையாக தன்னை அர்ப்பணிக்க வேண்டும் எனப் பற்பல unrealistic எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கொள்கிறோம். அதை சரிபார்க்க என எந்த சமூக நிறுவனமும் இல்லை, அரசும் இல்லை. ஏனெனில் காதலுக்கு சமூக அவசியம் என ஏதும் இல்லை.

நட்பில் இல்லாத பிரச்சனைகள் ஏன் காதலில் ஏற்படுகிறது? இரண்டுக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன ?

நட்பின் சந்தோஷம் காதலில் இயல்பாகவே கிடைக்காது. ஏனெனில் நட்பில் பொதிந்துள்ள சமூகப் பொருளாதார ஆதாயம் காதலில் இல்லை. சமூகப் பொருளாதார ஆதாயமற்ற ஓர் உறவின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை பாதுகாக்க நாம் விரும்புவதில்லை. பதிலுக்கு என்ன செய்கிறோம் தெரியுமா? சமூகப் பொருளாதார ஆதாயம் இல்லையெனில் அந்த உறவில் இருப்பவரை அடிமையாக பாவிக்க முனைகிறோம்.

எனவேதான் unrealistic-கான, 'முன் இருந்ததைப் போல் இப்போது இல்லை.. மாறிவிட்டாய்' என்ற சண்டைகள் போடுகிறோம். யோசித்துப் பாரங்கள். உங்களின் பெற்றோர் எப்போதும் ஒரே மாதிரி இருந்திருக்கிறார்களா? நண்பர்கள்? அலுவலக மேலாளர்கள்? அவர்களிடமெல்லாம் நமக்கு சண்டை போடத் தோன்றுவதில்லை.

காதலை எளிமையாக புரிந்து கொள்வோம். இரு வேறு வீடுகளிலிருந்து வரும் இரு வேறு சிந்தனை கொண்டோர் இணை சேரும் விருப்பம் கொள்வதாக புரிந்து கொள்வோம். அவ்வளவுதான் காதல். அதற்கு மேல் அதில் ஏற்றி வைக்கும் ஒவ்வொரு சுமையும் நாம் சுமக்க வேண்டிய சுமைகள்தாம்.

நட்பில் இல்லாத பிரச்சனைகள் ஏன் காதலில் ஏற்படுகிறது? இரண்டுக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன ?

இரு வேறு சிந்தனை கொண்ட, இரு குடும்பப் பின்னணியில் இருந்து வரும் இருவர் காதலிக்கும் போதும் ஒரே கூரையின் கீழ் வாழும்போதும் முரண்கள் ஏற்படுவது மிக மிக இயல்பு. அந்த முரண்களை கடக்கவே காதல் கொள்கிறோம். மாறாக அந்த முரண்களைப் பிடித்துக் கொண்டு காதலை அழிக்க அல்ல.

எதிர்பார்ப்புகள் பொய்க்கும். சண்டைகள் மிகும். வார்த்தைகள் தாக்கும். உறவின் சுமை அதிகரிக்கும். ஈகோக்கள் கட்டி உருளும். வெறுப்பு மூளும். வன்மம் அதிகரிக்கும். பேச்சுகள் அர்த்தமிழக்கும். எல்லாமுமே இயல்புதான். இவை எல்லாமுமே காதல் மட்டுமின்றி நட்பு உள்ளிட்ட எல்லா உறவுகளிலும் நேர்பவையே. பிற உறவுகளில் அமைதி காக்கும் நாம் காதலில் மட்டும் ஏன் அமைதி காப்பதில்லை என உங்களையே கேள்வி கேட்டுப் பாருங்கள். பதில் கிடைக்கும்

banner

Related Stories

Related Stories