உணர்வோசை

பெரியார் என்ற பெயரை கேட்டால் ஏன் இந்தியாவே எரிச்சல் அடைகிறது?.. இதற்கு காரணம் இதுதான்!

ஐரோப்பிய மறுமலர்ச்சி காலத்தின் சிந்தனை மரபை கொண்டு பெரியார் வார்த்தெடுத்த நவீன ஓவியம் தமிழகம்!

பெரியார் என்ற பெயரை கேட்டால் ஏன் இந்தியாவே எரிச்சல் அடைகிறது?.. இதற்கு காரணம் இதுதான்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

எப்போதுமே இந்தியாவுக்கு எதிர்துருவமாக தமிழகம் இருப்பதற்கு காரணமென்ன என்ற கேள்வி இந்திய அரசியலில் எந்நாளுக்கும் நீடிக்கும் கேள்வி.

இந்தியாவில் காணப்படும் சாதி தமிழகத்தில் இல்லையா? இருக்கிறது. கோலாகலமாக ஆணவக்கொலைகள் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. கடவுள் நம்பிக்கை இங்கு இல்லையா? இருக்கிறது. நீருக்கு அடியில் இருந்தவரை தொந்தரவு செய்து மேலே கொண்டு வந்து வியாபாரம் செய்யுமளவுக்கு இன்றும் இருக்கிறது. ஆணாதிக்கம்? நாயகிகளுக்கு ‘பெண் எப்படி இருக்க வேண்டும்’ என பாடம் எடுக்கும் நடிகர்கள் கொண்டாடப்படும் அளவுக்கு அதுவும் இருக்கிறது. பெண்ணடிமைத்தனம் இருக்கிறதா? ஒடுக்கப்பட்ட சாதி இளைஞனை காதலித்த காரணத்துக்காகவே மகளை கொலை செய்ய கூலிப்படையை ஏவும் அளவுக்கு ஆணின் புத்தியை தூக்கி சுமக்கும் பெண்ணடிமைத்தனமும் இருக்கிறது. எந்த வகையிலும் இந்தியா கொண்டிருக்கும் பார்ப்பனீய பிற்போக்குக்கு சளைத்ததல்ல தமிழகம். ஆனாலும் ஏன் இந்தியாவுக்கு எதிராகவே தமிழகம் இருக்கிறது?

ஒற்றைக் காரணம், பெரியார்!

பதினான்காம் நூற்றாண்டில் இருந்து பதினேழாம் நூற்றாண்டு வரை ஒரு முக்கியமான மாற்றம் ஐரோப்பாவில் நிகழ்ந்தது. சமூகங்களின் சிந்தனைப் பரப்பில் புது ஒளியை பாய்ச்ச ஐரோப்பாவில் ஒரு சம்பவம் காரணமாக இருந்தது.

ரோமாபுரியின் வணிகத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்த கான்ஸ்டாண்டினோபிள் என்ற பகுதி 1453ம் ஆண்டு ரோமர்களின் கையை விட்டு துருக்கியர்களுக்கு போனது. வேறு வழியின்றி கான்ஸ்டாண்டிநோபிளில் இருந்து வெளியேறிய ரோமர்கள் அங்கு அதுவரை சேமித்து வைத்திருந்த பண்டைய கிரேக்க மற்றும் ரோம நூல்களையும் எடுத்துச் சென்றனர். பல்லாண்டு காலமாக புதையுண்டு கிடந்த ரோம மற்றும் கிரேக்க தத்துவங்கள் மீண்டும் மேலே வந்தன. மீண்டும் மலர்ந்தன.

பெரியார் என்ற பெயரை கேட்டால் ஏன் இந்தியாவே எரிச்சல் அடைகிறது?.. இதற்கு காரணம் இதுதான்!

புதுக்காலச்சூழலிலிருந்து தத்துவங்கள் ஆராயப்படத் தொடங்கின. சமூகத்தில் நிலவிய நடைமுறைகளை ‘ஏன், எதற்கு, எப்படி’ என கேள்விகள் கேட்டு ஆராய்ந்து அறிவு சார் வாழ்க்கையை நோக்கி நகரும் வாழ்க்கை முறை பிறந்தது. அச்சிந்தனை முறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் நேர்ந்த அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பு மறுமலர்ச்சியை பல நாடுகளுக்கு கொண்டு சேர்த்தது. அறிவியல் சார்ந்த சிந்தனையே மனித வளர்ச்சியின் அடையாளமென கொள்ளப்பட்டது. கிறித்துவ மதத்தின் விலங்குகள் உடைத்து நொறுக்கப்பட்டன. பன்னாட்டு அறிவு வேரறிவுடன் தொடர்புபடுத்தி ஆராயப்பட்டது.

அறிவியல் தைரியமாக மதத்துக்கு எதிராக வளர்ந்தது. ‘பூமி தட்டையல்ல’ என்ற உண்மை முன் வைக்கப்பட்டது. கெலிலியோ உலகுக்கு தெரிய வந்தார். டாவின்சி, மைக்கெல் ஏஞ்சலோ போன்றோரின் ஓவியங்கள் முதலான கலைப்படைப்புகளும் மனிதத்தை தரிக்க தொடங்கின. வோல்ட்டெர், ரூசோ போன்ற தத்துவவாதிகள் மனிதனை இருத்தலின் மையமாக்கி தத்துவங்கள் படைத்தனர். ஷேக்ஸ்பியர் உலகை தன் எழுதுகோலுக்குள் புகுத்தினார். மத்திய கால சிந்தனை மற்றும் அரசியல் முறைகளிலிருந்து மக்களும் சமூகங்களும் விடுபட்டு வெளியேற மறுமலர்ச்சி காலம் முக்கிய பங்காற்றியது.

ஐரோப்பாவில் நிகழ்ந்த அப்பெருமாற்றத்தை வரலாறு Renaissance என அழைக்கிறது. கல்வி, அறிவு, கலாசாரம் போன்றவற்றில் தாராளமய அரசியல் அறிமுகமானது. வேறு வழியில்லாமல் கிறித்துவ பீடமும் அம்மாற்றத்தை ஏற்றது. நிலப்பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவத்துக்கு மேலைச்சமூகங்கள் பெயர்வதற்கான முக்கியமான பங்கை அக்காலம் உருவாக்கியது.

பெரியார் என்ற பெயரை கேட்டால் ஏன் இந்தியாவே எரிச்சல் அடைகிறது?.. இதற்கு காரணம் இதுதான்!

பெரும்பாலான ஆசியச் சமூகங்களை பெருமளவுக்கு அண்டாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே பேசப்பட்டு வந்த இந்த மறுமலர்ச்சி சிந்தனை மரபு இந்தியாவை வெகுதாமதமாக வந்து சேர்ந்தது. சேர்ந்த இடம் தமிழகம்! கொண்டு வந்து சேர்த்தவர் பெரியார்!

பழையச் சமூகத்துக்கு எதிராக நம் சமூகம் கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச நவீன சிந்தனை அனைத்தையும் எடுத்து தொகுத்து இன்னும் முன்னெடுத்து சென்று நமக்கு கொடுத்தார். ஒரு பெரும் மலை மீது ஒற்றை ஆளாக ஏறி நின்று உரத்த குரலெடுத்து கூவி மக்களை சேர்த்தார்.

ஆரியத்தை போட்டு காலால் மிதித்தார். அறிவு சார்ந்த நவீன சிந்தனை மரபை தோற்றுவித்தார். இச்சமூகத்தின் எதுவாகினும் பகுத்தறிவு என்ற பார்வைக்குட்படுத்தி பார்க்கும் அணுகுமுறையை அறிமுகம் செய்தார். பண்டைய இலக்கியங்கள் அனைத்தையும் துருவி துழாவி அவற்றின் பிற்போக்கு அனைத்தையும் தோலுரித்து காட்டினார்.

பெரியார் தலைமை தாங்கிய முதல் இயக்கமான சுயமரியாதை இயக்கத்தின் கொள்கையாக அவர் கூறியது என்ன தெரியுமா?

‘மனிதனுக்கு எல்லாவற்றையும்விட முக்கியமான உணர்ச்சியான மான – அவமானம் என்னும் தன்மானமாகிய சுயமரியாதையைத் தான் பிறப்புரிமையாகக் கொள்ள வேண்டியிருக்கின்றது. ஏனெனில், “மனிதன்”, “மானுடன்” என்ற பதங்களே மானத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட மொழிகள். ஆதலின் மனிதன் என்பவன் மானமுடையோன். எனவே, மனிதனுக்கு மனிதத் தன்மையைக் காட்டும் உரிமையுடையது மானம்தான். அத் தன்மானமாகிய சுயமறியாதையைதான் மனிதன் பிறப்புரிமையாகக் கொண்டிருக்கின்றான். சீர்திருத்தமும், சுயமரியாதையும் சட்டம் கொண்டு வந்து, வாக்கு வாங்கி நிறைவேற்றப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது ஒரு நாளும் முடியாத காரியம். தற்போது நம் மக்களுக்கு வேண்டியது படிப்புமட்டும் அல்ல, அறிவும் வேண்டும், சுயமரியாதையும் வேண்டும், தன்மான உணர்ச்சியும்,எதையும் பகுத்துணரும் திறனும், ஆராய்ந்து அறியும் அறிவும் தான் மிகவும் தேவை. மனிதன் உலகில் தன் சுயமரியாதையை தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ள வேண்டும்.’

பெரியார் என்ற பெயரை கேட்டால் ஏன் இந்தியாவே எரிச்சல் அடைகிறது?.. இதற்கு காரணம் இதுதான்!

இன்று வந்து நாம் நின்று கொண்டிருக்கும் எல்லாவற்றுக்கும் காரணம் இந்த சுயமரியாதை உணர்வுதான். ‘என்னை என் புராணமும் வரலாறும் சமூகமும் என்னவாக வைத்திருக்கிறது’ என பண்டைய சமுகத்தையும் தமிழையும் தோண்டி பார்த்ததில் பெரியார் வந்து சேர்ந்த இடமே சுயமரியாதை உணர்ச்சி. பெரியாரை அங்கு இட்டுச் சென்றது அவரின் பகுத்தறிவு பார்வை. அப்பார்வையை இங்கிருந்து மட்டும் எடுத்திடும் கிணற்றுத்தவளையாக இருக்கவில்லை.

சுயமரியாதை இயக்கத்துக்கான மகாநாட்டை பற்றி 1929ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் எழுதுகையில் இந்த வரிகளை எழுதி செல்கிறார் பெரியார்.

‘லண்டனில் RPA என்னும் பகுத்தறிவாளர்கள் சங்கமும் அமெரிக்காவில் ஃப்ரீ திங்கர்ஸ் அசோசியேஷன் என்னும் தாராள எண்ணக்காரர்கள் (அறிவு எவ்வளவு தூரம் செல்லுமோ அவ்வளவு தூரம் செலுத்துவது” என்கிற சங்கமும், ருஷியாவில் ஆண்ட்டி காட் சொசைட்டி (கடவுள் உற்சவம் வணக்கம் ஆகியவைகள் அவசியமில்லை) என்கின்ற (ருஷிய கவர்ன்மெண்டாராலும் ஆதரிக்கப்பட்ட) சங்கமும் சைனாவில் யங் சைனீஸ் அதாவது வாலிப சைனாக்காரர்கள் என்கின்ற சங்கமும் மற்றும் ஆப்கானிஸ்தானம் துருக்கி முதலிய சர்க்காரால் அநேக இடங்களில் குருட்டு நம்பிக்கைகளையும் மூடப்பழக்க வழக்கங்களையும் ஒழிக்கும் வேலைகளும் நடைபெற்று வருகின்றன. அதுபோலவே நமக்கும் நமது அரசாங்கம் அடியோடு நமது இயக்கத்தின் சுவாதீனத்திற்கு வருமளவும் அதாவது சுயமரியாதை அரசாங்கம் ஏற்படும்வரை நமக்கு தக்க ஆஸ்பதம் வேண்டியிருக்கின்றது’

பெரியாரின் காலத்தைய உலகப்போக்கை தமிழ்நாட்டின் போக்குடன் ஒப்பிட்டு ஆராய்ந்து சிந்தித்து முன்னேறும் அறிவியல் பார்வையை முதன்முதலாக தமிழ் மக்களுக்கு அளித்தார். அதனாலேயே சோவியத்துக்கு பெரியார் சென்றார். கம்யூனிசம் தமிழ் பயின்றது. போல்ஷிவிக்குகளிடமிருந்து பெரியாருக்கு பணம் வருவதாகவெல்லாம் ஒரு கும்பல் அரசுக்கு புகார் கொடுத்தது. எதை பற்றியும் அவர் கவலைப்படவில்லை.

இந்தியாவுக்கு எப்போதும் தமிழகம் எதிராக இருப்பதற்கு காரணம் பெரியார் நமக்கு கொடுத்து சென்ற இந்த அறிவியல் சார்ந்த சிந்தனை மரபே. பழையச்சமூகத்துக்கும் அதன் பிற்போக்குகளுக்கும் பெரியார் எப்போதுமே உவப்பானவர் கிடையாது. அறிவியலுக்கும் அறிவுக்கும் எப்போதும் பழையச்சமூகம் உவப்பு கிடையாது.

பெரியார் என்ற பெயரை கேட்டால் ஏன் இந்தியாவே எரிச்சல் அடைகிறது?.. இதற்கு காரணம் இதுதான்!

பெரியார் கொடுத்த மறுமலர்ச்சி சிந்தனை, தமிழகத்தில் அதிகாரத்தையும் வென்ற வரலாறும் கொண்டிருப்பதால், இந்திய அரசில் புரையோடி இன்று ஆட்சிக்கட்டிலில் நேரடியாக அமர்ந்திருக்கும் பழைய சமூகத்தின் பிரதிநிதிகளுக்கு நம் சிந்தனையும் புரிதலும் அரசியலும் எப்போதும் புரியாது.

மறுமலர்ச்சி நேராத இந்தியாவுக்கு எதிராகவே தமிழகம் இருக்கும்.

பெரியார் கொடுத்த பகுத்தறிவும் சுயமரியாதையும் தழைக்கும் வரை, குயுக்திகளால் தமிழகத்தில் வளர்த்தெடுக்கப்படும் சாதியும் மதமும் குட்டப்பட்டுக் கொண்டே இருக்கும்.

ஏனெனில் ஐரோப்பிய மறுமலர்ச்சி காலத்தின் சிந்தனை மரபை கொண்டு பெரியார் வார்த்தெடுத்த நவீன ஓவியம் தமிழகம்!

Related Stories

Related Stories