உணர்வோசை

“திராவிடக் கொள்கையின் வாரிசுகள் எப்போதும் dangerous தான்” : ஊடகவியலாளர் ப.திருமாவேலன் சிறப்புக் கட்டுரை !

"stalin is more dangerous than karunanidhi" வார்த்தைகளைக் கேட்கும் போது காதில் தேன் பாய்கிறது! ‘once more' என்று கேட்கத் தோன்றுகிறது!

“திராவிடக் கொள்கையின் வாரிசுகள் எப்போதும் dangerous தான்” : ஊடகவியலாளர் ப.திருமாவேலன் சிறப்புக் கட்டுரை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ப.திருமாவேலன்
Updated on

சேரன்மாதேவி குருகுலம் என்பது காங்கிரசுக் கட்சியின் பணத்தில் நடந்தது. பொதுப் பணத்தில் நடத்தப்படும் குருகுலத்தில் சாதியப் பாகுபாடு காட்டக் கூடாது என்று ஈரோட்டுப் பெரியாரும் சேலம் வரதராஜலுவும் தடுத்து நின்றார்கள். அப்போது வ.வே.சு.அய்யர் சொன்னார்: ‘தமிழ்நாட்டில் ஒரு குருகுலம் எப்படி நடக்க வேண்டும் என்பதில் கன்னடரான பெரியாருக்கும், தெலுங்கரான வரதராஜலுவுக்கும் என்ன கவலை?' என்று கேட்டார்.

5000 ரூபாயை கன்னடரான பெரியார் கொடுத்த போது வாங்கிப் போட்டுக் கொண்டவர்தான் வ.வே.சு.! தங்களுக்கு ஆபத்து வந்ததும் அலறித்துடிப்பது ஆயக்கலைகளுக்குள் வராத 65 ஆவது ஆரியக் கலை! தனது வாழ்நாளில் ஒரே ஒருமுறை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தயவால் சட்டமன்றத்துக்குள் போன - சாரணர் இயக்கத்தில் கூட வெல்ல முடியாத - இனி பா.ஜ.க.வில் கூட எந்தப் பதவிக்கும் வர முடியாத எச்.ராஜா என்ற ஒருவர் சொல்கிறார்: ‘இது மிகமிக மோசமான காலம். கருணாநிதியை விட ஸ்டாலின் பயங்கரமானவர்' என்கிறார்!

அதாவது தங்களுக்கு ஆபத்து வந்தால் உலகத்துக்கு ஆபத்து வந்ததாகவும் - உலகத்துக்கு ஆபத்து வந்தால் அது அவர்களது ‘தலைவிதி' என்றும் சொல்லி வந்த கூட்டம் இன்று அலறத் தொடங்கி இருக்கிறது!

அயோத்திதாசப் பண்டிதரை, மகாத்மா காந்தியை, தந்தை பெரியாரை, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரைப் போற்றும் காலமாக இந்தக் காலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றி விட்டாரே என்ற வயிற்றெரிச்சல்தான் இவர்களது வார்த்தையாகக் கொட்டுகிறது.

“திராவிடக் கொள்கையின் வாரிசுகள் எப்போதும் dangerous தான்” : ஊடகவியலாளர் ப.திருமாவேலன் சிறப்புக் கட்டுரை !

“கலைஞரா - பெரியாரைப் பார்த்து வளர்ந்தவர்! அண்ணாவோடு இருந்து சிறந்தவர்! மு.க.ஸ்டாலினா - அவர்களை படித்துத் தெரிந்து கொண்டவர்தானே! ஈடுபாடு குறைவாகத்தானே இருக்கும்” என்று தப்புக்கணக்குப் போட்டார்கள். அதற்கு மாறாக முதலமைச்சர் எழுந்து நிற்பதைப் பார்த்து தப்புத்தாளம் போடுகிறார்கள்!

“என்ன தம்பி! நான் இதுவரை எதையெல்லாம் பேசிவந்தேனோ, அதை எல்லாம் செய்ய முடியாத நிலைமை இருக்கிறது. இந்த முதலமைச்சர் பதவியில் சூழ்நிலைக் கைதியாக இருக்கிறேன்” என்று முதல்வர் அண்ணா வருந்தினார். “இந்த முதலமைச்சர் பதவியை வைத்து கோட்டையில் உள்ள புல்லைக்கூட வெட்ட முடியவில்லை, இராணுவத் துறையின் அனுமதி தேவைப்படுகிறதே” என்று முதல்முறை வருந்தினார் முதல்வர் கலைஞர்! ஆனால் இதோ நாடாளுமன்றத்துக்கு வழிகாட்டும் சட்டமன்றமாக தமிழ்நாடு சட்டமன்றத்தை மாற்றிக்காட்டி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டமும், மூன்று வேளாண் சட்டங்களும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது தமிழ்நாடு சட்டமன்றத்தால். அவர்கள் கொண்டு வந்த ‘நீட்’ தேர்வு முறை இங்கே நிராகரிக்கப்படுகிறது. ஒன்றிய அரசு கொடுத்ததைவிட அதிகமான தடுப்பூசிகளைப் போட்டுள்ளோம்.

‘உங்களால் நடத்த முடியவில்லை என்றால் செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை எங்களுக்கு குத்தகைக்கு கொடுங்கள்' என்று இரும்பு மனிதராகக் கேட்டார் முதலமைச்சர். ‘உரிய அளவு தடுப்பூசியை தர மறுப்பாயானால் உலகளாவிய ஒப்பந்தப் புள்ளியை நாங்கள் போடுகிறோம்' என்று போட்டார் முதலமைச்சர். இதனால்தான் அவர்களுக்கு தலைவலிக்கிறது!

இவை அனைத்துக்கும் மேலாக, “தமிழ்நாட்டில் தயாராகும் பெரும்பாலான பொருட்கள் சில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டுமே ஏற்றுமதிகள் செய்யப்படுகின்றது. இந்நாடுகளுக்கு மட்டுமின்றி “உலகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம், Made in Tamil Nadu என்ற குரல் ஒலிக்க வேண்டும் என்பது எங்கள் ஆசை மட்டுமல்ல, இலட்சியமும் கூட” என்று முதலமைச்சர் அறிவித்திருப்பதுதான் அவர்களுக்கு எரிச்சலைத் தருகிறது.

உலகளாவிய அறிஞர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்தார். அது குறித்து எழுதிய ஆங்கிலப் பத்திரிக்கைகள் அனைத்தும், ‘மோடி செய்யாததை மு.க.ஸ்டாலின் செய்துள்ளார்' என்று எழுதியது. அதைவிட முக்கியமாக, ‘இதுபோன்ற குழுவை நாடுகள்தான் போடும், ஆனால் ஒரு மாநிலம் செய்துள்ளது' என்று எழுதினார்கள்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக எழுந்து நிற்கிறார் மு.க.ஸ்டாலின். அதுதான் அவர்களை பயமுறுத்துகிறது. காலம் காலமாக தங்களவராக இல்லாத அல்லது தங்களவர் தயவு இல்லாத, தங்களவர் ஆசீர்வாதம் இல்லாத ஆட்சிகளை எல்லாம் ஆட்சியாக மதிக்காதவர்கள் அவர்கள். தங்களவர்களைப் பற்றி கவலைப்படாத ஆட்சியை பயங்கரமான ஆட்சியாகத்தானே சொல்வார்கள்!

“திராவிடக் கொள்கையின் வாரிசுகள் எப்போதும் dangerous தான்” : ஊடகவியலாளர் ப.திருமாவேலன் சிறப்புக் கட்டுரை !

இவை அனைத்துக்கும் மேலாக - வரலாற்றின் புனைவு ஒன்றுக்கு புனிதம் சேர்த்துக் கொண்டு இருந்தார்கள். கற்பனையான சரஸ்வதி நாகரீகத்தை நிறுவுவதற்கு அவர்கள் வரலாற்றுத் திரிபுகளைச் செய்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் கீழடியைச் சொல்லி உலக சமுதாயத்தை ஈர்க்கிறார் மு.க.ஸ்டாலின் அவர்கள். இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டு கீழடியைப் பார்த்தே அவர்கள் பயந்து கொண்டிருந்தபோது, மூவாயிரத்து இருநூறு ஆண்டு பொருநையை மீட்டெடுத்துக் கொண்டு வந்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சுத்தான் நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்ல; தமிழினத்தின், தமிழ்த்தேசியத்தின் முதல்வராக அவர் எழுந்து நிற்கிறார்.

“திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதெல்லாம் ஆட்சியில் அமர்கிறதோ அப்போதெல்லாம் அது தமிழின் ஆட்சியாக, தமிழினத்தின் ஆட்சியாகத்தான் இருந்துள்ளது” என்பதைப் பட்டியலிட்ட முதல்வர் அவர்கள், “மகாசக்ரவர்த்திகள் எல்லாம் இந்தியாவைத் தன்குடையின் கீழ் கொண்டு வந்து ஆண்டபோதும் - தனிக்குடையின் கீழ் ஆளுகை செலுத்திய மண் இந்த தமிழ் மண்” என்று குறிப்பிட்டார். “கீழடி என்ற ஒற்றைச்சொல் உலகத் தமிழர்களை ஒன்றிணைத்தது என்றே சொல்லவேண்டும். அதே உணர்வைத் தாங்கி தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, கொடுமணல், மயிலாடும் பாறை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் தற்போது அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது” என்றார்.

‘தண் பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் மூவாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறிவியல்பூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளதை அறிவித்தார். “தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி, இந்திய நாடெங்கும், அதேபோல் கடல்கடந்து பயணம் செய்து தமிழர்கள் வெற்றித்தடம் பதித்த வெளிநாடுகளிலும் தமிழ்நாடு தொல்லியல் துறை உரிய அனுமதிகள் பெற்று இனி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும்” என்று அறிவித்தார்.

இவை அனைத்துக்கும் மேலாக “இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்பதைச் சான்றுகளின் அடிப்படையில் அறிவியல் பூர்வமாக நிறுவுவதே நமது அரசின் தலையாயக் கடமை என்பதை இம்மாமன்றத்தின் மூலம் உலகிற்கு அறிவிப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.” என்ற அறிவிப்புத்தான் இதுவரை அவர்கள் கட்டமைத்து வந்த கற்பனை வரலாறுகளுக்கு வைக்கப் போகும் ஆப்பு என்பதால்தான் அலறுகிறார்கள்.

“எதற்காக தொல்லியல் ஆராய்ச்சி செய்கிறீர்கள்? அந்த மண்பானையை வைத்து என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று ‘துக்ளக்' அலறுவதற்குக் காரணம் இதுதான்! அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகி வருகிறார்கள். சட்ட பூர்வமாக, ஆனால் சத்தமில்லாமல். ‘அனைத்துச் சாதியினரும் ஆகலாமே' என்று பா.ஜ.க.வும் சேர்ந்து பல்லக்கு தூக்க வேண்டியதாகிவிட்டது. ஆன்மிகத்தைக் காரணமாகக் காட்டலாம் என்றால், சோழர் காலம் போல் இந்து சமய அறநிலையத் துறை சீரோடும் சிறப்போடும் நடந்து வருகிறது. அரசாங்கமே போற்றிப் பாடல் புத்தகம் போட்டுவிட்டது.

‘ஹிட்லர் வெற்றி பெறப் போகிறார் என்று தெரிந்ததும் ஜெர்மன் படித்ததைப் போல, ஸ்டாலின் வெற்றி பெற்றதும் தமிழ் படிக்கத் தொடங்கிவிட்டார்கள் சிலர்'. இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய போரல்லவா தமிழுக்கும் சமற்கிருதத்துக்கும் நடப்பது! ஆலயங்களில் தமிழில் வழிபாடு. பொறியியல் பாடப் புத்தகங்கள் அனைத்தும் தமிழில் மொழி பெயர்க்கப்படுகிறது. ஆலயங்களில் தேவாரமும் திருக்குறளும் ஒலிக்க ஏற்பாடு. தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அரசே வெளியிடப் போகிறது. தமிழின் சிறந்த படைப்புகள் திராவிட மொழிக்குடும்ப மொழிகளுக்கு மொழி பெயர்க் கப்பட இருக்கிறது. தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தரப்படுகிறது. தமிழ்த் தெரியாத ஒருவர் அரசு வேலைக்கு வர முடியாத சூழல் உருவாக்கப்படுகிறது. சமூகநீதி பாடத்திட்டமாகிறது.

அனைத்து மாணவர் விடுதிகளிலும் நூலகம் உருவாகப் போகிறது. அதன் மூலமாக சமூக விழிப்படையப் போகிறது. தமிழ் எழுத்தாளன் போற்றப்படுகிறான். பாராட்டப் படுகிறான். அவனது எழுத்தை அரசு மதிக்கிறது. பெரும் பரிசு பெற்ற எழுத்தாளனுக்கு வீடு கிடைக்கப் போகிறது. தமிழின் பெருமைக்குரிய படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட இருக்கிறது. தமிழ்நாடு பாட நூல் நிறுவனமானது உருப்படியானதாக மாறப்போகிறது.

புத்தகம் கொடுத்தல் - பெறுதல் என்பது மாபெரும் அறிவுப்புரட்சியாக மாறிவிட்டது. இதை எல்லாம் பார்த்து தமிழ்த் தேசிய தகர டப்பாக்கள் அடுத்து என்ன பேசுவது எனத் தெரியாமல், துருப்பிடித்த டப்பாக்களில் ‘தமிழ் இந்து' என்ற காவி வண்ணம் பூசப் போய்விட்டார்கள். வளர்ச்சி என்பது சும்மா பொருளாதாரப் புள்ளி விபரம் அல்ல, கிராமத்தையும் கிராமத்து மக்களையும் முன்னேற்றுவதான சமச்சீர் வளர்ச்சியை முதலமைச்சர் முன்மொழிந்துள்ளார். ‘கல்வி - வேலைவாய்ப்பு - பொருளாதாரம் - சமூகம்' ஆகிய நான்கையும் சீராக வளர்ப்பதே ‘திராவிட வடிவமைப்பு ஆட்சி' என்ற வரையறையை மு.க.ஸ்டாலின் முன்மொழிந்துள்ளார். இந்தக் குரலை இதோ இந்தியா திரும்பிப்பார்க்கிறது. ஒரு வடிவமைப்பை போட்டுக் காண்பித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதனை இந்தியா விரும்பிப் பார்க்கிறது.

“திராவிடக் கொள்கையின் வாரிசுகள் எப்போதும் dangerous தான்” : ஊடகவியலாளர் ப.திருமாவேலன் சிறப்புக் கட்டுரை !

பெரியாருக்கு சமூகநீதிநாளை அறிவித்துவிட்டு - பட்டாச்சாரியார்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதும் - உலகப் பொருளாதார மேதைகளோடு அளவலாவி விட்டு - அதியமான் கோட்டை காவல் நிலையத்தின் சப்இன்ஸ்பெக்டர் நாற்காலியில் உட்காருவதும் - பல்லாயிரம் கோடிக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போட்டு விட்டு - ஆதிதிராவிடர் விடுதி மாணவன் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதும் - ஒரு ஜனனி என்ற குழந்தைக்காக ஸ்டேன்லி என்ற மருத்துவமனையை நோக்கிப் போய்விட்டு - பாப்பாப்பட்டி கிராமசபையில் உட்கார்ந்து இருப்பதுமான காட்சிகள் இந்திய வரைபடம் முழுக்கவே அலை அலையாக போய்க்கொண்டு இருக்கின்றன.

இதனால்தான் அவர்கள் அலறுகிறார்கள். திராவிட இயக்கம் பேசிய அரசியலை இதுவரை அவர்கள் நாத்திக அரசியல், ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு எதிரானவர்கள் என்று திசை திருப்பி வந்தார்கள். ‘1967க்குப் பிறகே எல்லாம் நாசமாகி விட்டது' என்று நஞ்சைப்பரப்பி வந்தார்கள். இதோ, முகத்திரை கிழிகிறது. மு.க.ஸ்டாலினை இந்தியா பார்க்கிறது. இதோ, தமிழகத்தில் ‘மனிதனை நினை' என்ற ஆட்சிதானே நடக்கிறது என்பதை அனைவரும் உணருகிறார்கள். திராவிட இயக்கம் என்றால் இதுதானா என்று படிக்கத்தொடங்கி விட்டார்கள். ஒரு காலத்தில் இந்தியா முழுமைக்கும் திராவிட மக்கள் பரவி இருந்தார்கள் என்று மானுடவியல் ஆய்வாளர்கள் எழுதுகிறார்கள்.

இதோ இப்போது திராவிடச் சிந்தனையை பரப்பிவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்! அதனால்தான் திராவிட இயக்கச் சிந்தனை மரபுக்கு எதிரானவர்களால் அவர் விமர்சிக்கப்படுகிறார். அனைவரும் பாராட்டுவது அல்ல நல்லாட்சி. நல்லவர்களிடம் இருந்து பாராட்டும், கெடுமதியாளரிடம் இருந்து பழிச்சொல்லும் பெறும் ஆட்சியே நல்லாட்சி! அந்த வகையில் இது முதல்வருக்கு கிடைத்த பாராட்டுப் பத்திரம். "stalin is more dangerous than karunanidhi" வார்த்தைகளைக் கேட்கும் போது காதில் தேன் பாய்கிறது! ‘once more' என்று கேட்கத் தோன்றுகிறது! திராவிடக் கொள்கையின் வாரிசுகள் எல்லாம் எப்போதும் dangerous தான்

Related Stories

Related Stories