உணர்வோசை

“தமிழின பேரியக்கம் தி.மு.க” : எந்நாளும் தமிழ்நாட்டின் நலனுக்காக உழைக்கும் வெகுமக்களின் இயக்க வரலாறு!

திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கம் 72 ஆண்டுகளை கடந்து தமிழ்மொழி வளர்ச்சி, தமிழர் நலன், தமிழ்நாட்டின் வளம் ஆகியவற்றை உயிர்மூச்சாக காத்து வருகிறது.

“தமிழின பேரியக்கம் தி.மு.க” :  எந்நாளும் தமிழ்நாட்டின் நலனுக்காக உழைக்கும் வெகுமக்களின் இயக்க வரலாறு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

திராவிட இன மக்களின் உரிமையை நிலைநாட்டிட, ஆதிக்கவாதிகளிடம் இருந்து தமிழ்நாட்டை காத்திட பேரறிஞர் அண்ணாவால் உருவான பேரியக்கமாக விளங்கும் தமிழர்களின் காவல் அரண்- திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கம் 72 ஆண்டுகளை கடந்து தமிழ்மொழி வளர்ச்சி, தமிழர் நலன், தமிழ்நாட்டின் வளம் ஆகியவற்றை உயிர்மூச்சாக காத்து வருகிறது.

பேரறிஞர் அண்ணா, 1949 ஆம் ஆண்டு - செப்டம்பர் திங்கள் 17 ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார். தி.மு.கழகத்தின் வரலாறு என்பது தமிழகத்தில் பகுத்தறிவு இயக்கத்தின், சமூகநீதி மறுமலர்ச்சியின் வரலாறு. தமிழ் மொழியையும், தமிழர் தம் பண்பாட்டையும் பாதுகாத்து மேம்படுத்த ஓர் அரசியல் இயக்கம் நடத்திய நூற்றாண்டு போராட்டங்களின் விடியலே திராவிட முன்னேற்றக் கழகம்.

தென்னக மக்களின் அடிமைத்தனத்தை அகற்றி சமுதாயம், பொருளாதாரம், அரசியல் போன்ற துறைகளில் அவர்கள் பரவலாக இடம் பெறவும், அரசு பதவிகளிலும், இயக்கங்களிலும் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்க்கவும், சர்.பி. தியாகராயர், டாக்டர். நடேசன், டாக்டர் டி.எம். நாயர் ஆகியோர் 20.11. 1916 அன்று தொடங்கிய தென்னிந்திய நல உரிமைச் சங்கமே திராவிட இயக்கத்தின் முன்னோடி.

“தமிழின பேரியக்கம் தி.மு.க” :  எந்நாளும் தமிழ்நாட்டின் நலனுக்காக உழைக்கும் வெகுமக்களின் இயக்க வரலாறு!

அந்த காலத்தில் சென்னைக்கு பிழைப்பு தேடி வந்த பார்ப்பனரல்லாத தமிழர்களுக்கு தங்குவதற்கு இடம்கூட அளிக்க மறுத்தனர் ஆதிக்கவாதிகள். தமிழர்கள் இரண்டாம்தர குடிமக்களாக ஆதிக்க சாதியினரால் நடத்தப்பட்டனர். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடுகள் மறுக்கப்பட்டன. மனிதனை மனிதர் சுரண்டும் நிலையில் தாய் தமிழ்நாடு அல்லாடியது. தமிழர்கள் திண்டாடினார்கள்.

தென்னிந்திய நல உரிமைச்சங்கம் இக்கொடுமைகளை எதிர்த்தது. போராடியது. 1917 முதல் இச்சங்கம் ஆங்கிலத்தில் “ஜஸ்டிஸ் பார்ட்டி” என்றும் தமிழில் “நீதிக்கட்சி” என்றும் அழைக்கப்பட்டது. பார்ப்பனர் அல்லாதோரின் சமூக, பொருளாதார, அரசியல் நலன்களைப் பாதுகாப்பதே நீதிக்கட்சியின் முக்கிய நோக்கம்.

காங்கிரஸ் கட்சியில் நிலவிய பிராமண ஆதிக்கத்திலும் அவர்களின் தீவிர இந்து சனாதன கோட்பாடுகளிலும் வெறுப்படைந்த தந்தை பெரியார் 1925-ல் காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை தொடங்கி, நீதிக் கட்சியின் தலைவரானார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க “அண்ணாதுரை தீர்மானத்தின்” மூலம் 1944-ல் நீதிக்கட்சியின் பெயர் “திராவிடர் கழகம்” என்று மாற்றப்பட்டது. அந்த காலகட்டங்களில், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன், பேராசியர் அன்பழகன் போன்ற முன்னணி தலைவர்கள் இயக்கத்தின் குறிக்கோள்களை, கொள்கைகளை அழகு தமிழில் நாடெங்கும் சூறாவளிப் பிரச்சாரம் மூலம் மக்களின் இதயத்திற்கு நெருக்கமாக இயக்கத்தை கொண்டு சென்றனர்.

“தமிழின பேரியக்கம் தி.மு.க” :  எந்நாளும் தமிழ்நாட்டின் நலனுக்காக உழைக்கும் வெகுமக்களின் இயக்க வரலாறு!

நாடு விடுதலை அடைந்த பிறகு, தந்தை பெரியாருக்கும், பேரறிஞர் அண்ணாவுக்கும் ஏனைய கழகத்தின் முன்னணித் தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் முத்தமிழறிஞர் கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்டோர் திராவிடர் கழகத்திலிருந்து விலகி 1949 செப்டம்பர் 16ந் தேதி சென்னை பிராட்வேயில் உள்ள, எண் 7 பவளக்காரத் தெருவில் உள்ள ஒரு வீட்டில், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மக்கள் இயக்கத்தை தொடங்குவது என்று தீர்மானத்து, அதற்கு மறுநாள்… அதாவது 1949 செப்டம்பர் 17ந் தேதி திராவிட முன்னேற்றக் கழகம் சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் தோற்றுவிக்கப்பட்டது. பேரறிஞர் அண்ணா, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திமுக-வைத் தொடங்கிய அன்று பேசிய பேரறிஞர் அண்ணா, “திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது, திராவிடர் கழகத்துக்குப் போட்டியாக அல்ல. அதே கொள்கைப் பாதையில்தான். திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கை மீதேதான் திராவிட முன்னேற்றக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது. அடிப்படைக் கொள்கைகளில், கருத்துகளில் மாறுதல் மோதல் எதுவும் கிடையாது” என்று அறிவித்தார். மேலும்,“நமக்கெல்லாம் அப்போது நல்வழிகாட்டிய தந்தை பெரியார் அமர்ந்த பீடத்தை, தலைவர் பதவி நாற்காலியை காலியாகவே வைத்திருக்கிறோம்” என்றும் கூறினார்.

பேரறிஞர் அண்ணாவின் இலட்சியத்தையும், அவர் ஏற்றிய கொள்கை தீபத்தையும் தொடர்ந்து காத்து வந்த முத்தமிழறிஞர் கலைஞர் கொள்கை பரப்புக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். கருப்பு-சிவப்பு எனும் இருவண்ணம் சரிபாதியாக கொண்ட கழகக் கொடி உருவானது.

பேரறிஞர் அண்ணாவின் `திராவிட நாடு’, முத்தமிழறிஞர் கலைஞரின் `முரசொலி’ ஆகிய ஏடுகள் மக்கள் மத்தியிலும், கட்சி தொண்டர்களிடையேயும் புதிய விழிப்புணர்ச்சியையும், எழுச்சியையும் ஏற்படுத்தி தி.மு.கழகத்தின் வாளாகவும் கேடயமாகவும் வலம் வந்தன. கழக இலட்சியங்களை அடைய நியாயமான, அரசியல் சட்டத்திற்குட்பட்டு போராட வேண்டும் என்ற நோக்கத்துடன், பேரறிஞர் அண்ணா அவர்கள் தனது தம்பியரை ‘‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்ற தாரக மந்திரம் மூலம் கட்டுக்கோப்பான பாதையில் நடத்திச் சென்றார்.

“தமிழின பேரியக்கம் தி.மு.க” :  எந்நாளும் தமிழ்நாட்டின் நலனுக்காக உழைக்கும் வெகுமக்களின் இயக்க வரலாறு!

மக்களிடம் செல்லுங்கள்… மக்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்… மக்களை மேம்படுத்துங்கள் என்று பேரறிஞர் அண்ணா தம் தம்பிகளுக்கு கட்டளையிட்டார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புக்கள் அண்ணாவின் கட்டளையை நிறைவேற்றினார்கள்.

1953-ம் ஆண்டு அன்றைய சென்னை மாகாண முதல்வராக இருந்த ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தை மக்கள் திரள் போராட்டம், சித்தூர் தமிழர்களின் போராட்டத்தை "நான்சென்ஸ்” என்று கூறிய பிரதமர் நேருவை கண்டித்து கருப்புக்கொடி போராட்டம், கல்லக்குடியை 'டால்மியாபுரம்' என்று பெயர் மாற்றியதைக் கண்டித்து ரயில்மறியல் என அடுத்தடுத்த மும்முனைப் போராட்டங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேவையை தமிழ்நாட்டு மக்களுக்கு உணர்த்தின. இந்த போராட்டங்களில் ஈடுபட்ட தன்மானமிக்க கழகத் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். கல்லக்குடியில் ரயிலை மறித்த முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டங்கள் ஆதிக்கவாதிகளிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தின.

தமிழர்களையும், தமிழ்நாட்டையும் காக்க எதையும் செய்யத் துணிந்தவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புக்கள் என்பதை உலகம் உணர்ந்தது. கழகம் ஒரு ஜனநாயக இயக்கமாக வளர்ந்தது.

1957 ல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க. 15 சட்டமன்ற இடங்களிலும், 2 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், பேராசிரியர் அன்பழகன் என திராவிடத் தலைவர்கள் சட்டசபைக்குள் நுழைந்தனர். சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்கவேண்டும் என்று முழங்கினார் அண்ணா. ஆனால், அவர் கொண்டு வந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

ஆனால்.. அப்போது நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேரறிஞர் அண்ணா சபதம் ஒன்றை ஏற்றார்.

பேரறிஞர் அண்ணா
பேரறிஞர் அண்ணா

நாங்கள் இந்தச் சபைக்குள் நுழைந்தது, என்றைக்கும் எதிர் அங்கத்தினர்களாகவே இருப்பதற்காக அல்ல. இன்றைக்கில்லாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் ஆட்சிப்பொறுப்பை ஏற்கத்தான்போகிறோம்!” என்று எதிர்காலத்தில் தி.மு.க ஆட்சிக்கு வரும் என்பதை அறுதியிட்டு கூறினார்.

இதன் தொடர்ச்சியாக 1958-ம் ஆண்டு, மார்ச் 2-ம் நாள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உயர்ந்தது திராவிட முன்னேற்றக் கழகம். உதயசூரியன் எனும் வெற்றிச்சின்னம் கழகத்தின் சின்னமானது.

இதன்பின்னர் 1962-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்ட திமுக., 50 சட்டமன்றத் தொகுதிகளையும், ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றியது. ஆனால் இந்தத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வண்ணம் பேரறிஞர் அண்ணா வெற்றிவாய்ப்பை இழந்தார். ஆனாலும், மாநிலங்களவை உறுப்பினராக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களால் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பாராளுமன்றத்திற்குச் சென்றார்.

“தமிழின பேரியக்கம் தி.மு.க” :  எந்நாளும் தமிழ்நாட்டின் நலனுக்காக உழைக்கும் வெகுமக்களின் இயக்க வரலாறு!

பாராளுமன்றத்தில் திராவிட நாடு கொள்கைக்காக முழங்கினார். 1963-ம் ஆண்டு தனிநாடு கேட்பது குற்றம் என்றும், பிரிவினைவாதம் பேசுவோர் தேர்தலில் போட்டியிட முடியாதபடியும், `பிரிவினைத் தடுப்புச் சட்ட மசோதாவை’ நிறைவேற்றியது அப்போது ஒன்றியத்தை ஆண்ட காங்கிரஸ் அரசு.

தி.மு.க., வை முடக்க போட்டத் திட்டத்தை முறியடிக்க திராவிட நாடு கோரிக்கையை தற்காலிகமாக கைவிட்டார் பேரறிஞர் அண்ணா. இருப்பினும் மாநில சுயாட்சிக் கொள்கையை உயர்த்திப் பிடித்தார்.

1967-ம் ஆண்டு தேர்தல் தமிழக அரசியல் களத்தில் தமிழ்நாட்டில் புதிய எழுச்சியை ஏற்படுத்தியது. ராஜாஜியின் சுதந்திரா கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மா.பொ.சி-யின் தமிழரசு கழகம், சி.பா.ஆதித்தனாரின் நாம் தமிழர் இயக்கம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து வலுவான கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது திராவிட முன்னேற்றக் கழகம்.

173 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக.,138 தொகுதிகளில் அமோக வெற்றிபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 25 இடங்களிலும் வென்றது. தென்சென்னையில் போட்டியிட்ட பேரறிஞர் அண்ணா, நாடாளுமன்ற உறுப்பினரானர்.

ஆனால், திமுக தொண்டர்களின் வேண்டுகோளுக்கிணங்க தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, 1967-ம் ஆண்டு, மார்ச் 6-ம் நாள் பேரறிஞர் அண்ணாத்துரை தமிழக முதல்வரானார். திமுக முதன்முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. கட்சி துவங்கப்பட்ட பதினெட்டே ஆண்டுகளுக்குள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அரியாசனத்தை அளித்தனர் தமிழர்கள்.

தந்தை பெரியாரை நேரில் சென்று, திமுக-வின் வெற்றியை அவருக்கு சமர்ப்பித்தார் பேரறிஞர் அண்ணா. ஆட்சிப் பொறுப்பேற்றது முதற்கொண்டே பல அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தியது திராவிட முன்னேற்றக் கழகம்.

சென்னை மாகாணம் 'தமிழ்நாடு' மாநிலமாகப் பெயர் மாற்றம் பெற்றது. தமிழ்நாடு பெயருக்காக உயிர்நீத்த சங்கரலிங்கனாரின் உயிர்த் தியாகம் மதிக்கப்பட்டது. ‘கவர்மென்ட் ஆஃப் மெட்ராஸ்’ தமிழக அரசு ஆனது. ‘சத்யமேவ ஜெயதே’, 'வாய்மையே வெல்லும்' என்றானது. சம்ஸ்கிருத மணிப்பிரவாள நடை மெல்ல மறையத்தொடங்கி தனித்தமிழ் மேலெழுந்துவந்தது. சுயமரியாதைத் திருமணச் சட்டம், பேருந்துகள் நாட்டுடமையாக்கம், கல்வியில் தமிழுக்கு முதலிடம், இருமொழிக் கொள்கை, உலகத்தமிழ் மாநாடுகள் என அதிகாரத்தைக் கைப்பற்றிய திமுக., பெரியாரின் கனவுகளுக்கு உயிர்கொடுத்தது குடிசையில்லாத தமிழ்நாடு, மக்கள் மேம்பாடு என தி.மு.கவின் கொள்கைகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட நேரத்தில்தான், பேரறிஞர் அண்ணா . புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சைகளை முடித்துவிட்டு தாயகம் திரும்பினார். தொடர்ந்து 1969-ம் ஆண்டு, பிப்ரவரி 3-ம் நாள் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார். ஊருக்காக உழைத்தவரை வங்கக்கடலோரத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் சென்று உறங்க வைத்தனார் கோடிக்கணக்கான தமிழர்கள்.

ஆம். பேரறிஞர் அண்ணாவின் இறுதி ஊர்வலம் கின்னஸ் சாதனையில் இடம்பெற்றது. தமிழ்நாடு தத்தளித்தது. தமிழர்கள் துயரப்பட்டனர். கழகத்தினர் கலக்கமடைந்தனர்.

“தமிழின பேரியக்கம் தி.மு.க” :  எந்நாளும் தமிழ்நாட்டின் நலனுக்காக உழைக்கும் வெகுமக்களின் இயக்க வரலாறு!

அண்ணனை இழந்த தம்பிகள் தலைமைக்கு காத்திருந்தனர். ஜூன் மாத காலத்தில் கழகத்தின் தலைவராக முத்தமிழறிஞர் கலைஞரும், பொதுச்செயலாளராக நாவலர் இரா.நெடுஞ்செழியனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முத்தமிழறிஞர் கலைஞர், பேரறிஞர் அண்ணா விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்பினார். தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.

இதன்பின்னர், 1971-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகம்,முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையில் தேர்தலைச் சந்தித்தது. 203 தொகுதிகளில் போட்டியிட்டு 184 தொகுதிகளில் வரலாறு காணாத வெற்றிபெற்றது. இதுவரையில் எந்தக்கட்சியாலும் முறியடிக்க முடியாத சாதனையை நிகழ்த்தி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது திமுக.

முத்தமிழறிஞர் கலைஞர் இரண்டாவது முறையாக முதல்வரானார். மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் 25 இடங்களிலும் வென்றது. 1974-ம் ஆண்டு 'மாநில சுயாட்சி' பெறும் தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றியது திமுக. 1975-ம் ஆண்டு இந்திராவின் காங்கிரஸ் அரசு அவசரநிலைப் பிரகடனத்தை அறிவித்தது. இதை எதிர்த்து முதல் ஆளாக தீர்மானம் நிறைவேற்றியது திமுக அரசு.

இதனைத் தொடர்ந்து பொய்க்குற்றங்கள் சாட்டப்பட்டு, நெருக்கடி நிலைக்கு எதிராக செயல்பட்டதால் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கலைக்கப்பட்டது. கழகத்தின் கொள்கைகளை பரப்பிவந்த தளபதி மு.க.ஸ்டாலினை முதலமைச்சரின் மகன் என்றும் பாராமல் மிசாவில் கைது செய்தது இந்திராவின் அரசு. சிறைக் கொடுமைகளுக்கு ஆளானார் அவர். மிசா சிறையில் அவர் பட்ட அடிகள் அத்தனையும் அவரை பட்டை தீட்டின.

கழகத்தின் கொள்கை குன்றுகள் மிசா கொடுமைகளை தாங்கிக்கொண்டு நெஞ்சுரம் கொண்ட ஆளுமைகளாக உருவெடுத்தன. நடிகர் எம்.ஜி.ஆரின் பிரிவு, மிசா காலத்திற்கு பிறகான தேர்தல் தோல்விகள் என 13 ஆண்டுகாலம் திராவிட முன்னேற்றக் கழகம் நெருப்பாற்றில் நீந்திய போது, கழகத்தை கட்டுக்கோப்புடன் வழிநடத்திச் சென்றார் முத்தமிழறிஞர் கலைஞர்.

1989-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தது திமுக. ஆனால், 1991-ம் ஆண்டு ஈழத்தமிழர் உரிமைக்கு உதவியாக இருந்ததாகச் சொல்லி அப்போதைய சந்திரசேகர் அரசால், இரண்டாவது முறையாகக் கலைக்கப்பட்டது திமுக ஆட்சி. அதன்பிறகும் ஜெயலலிதாவின் அடக்குமுறை ஆட்சியில் கழகத்தைப் பேணிக் காத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

“தமிழின பேரியக்கம் தி.மு.க” :  எந்நாளும் தமிழ்நாட்டின் நலனுக்காக உழைக்கும் வெகுமக்களின் இயக்க வரலாறு!

1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களை வகுத்தார் முத்தமிழறிஞர் கலைஞர்.

2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்த திமுக, போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றிபெற்றது. இதனால், தமிழகத்தைச் சேர்ந்த 12 நாடாளுமன்றஉறுப்பினர்கள் ஒன்றிய அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

தொடர்ந்து, 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 163 இடங்களில் வெற்றி பெற்றது. முத்தமிழறிஞர் கலைஞர் மீண்டும் முதல்வரானார். இது தமிழ்நாட்டின் பொற்கால ஆட்சியாக உருவானது.

2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வலுவான எதிர்கட்சியாக அமர்ந்தது. தளபதி மு.க.ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராக சிறப்பாக செயலாற்றினார்.

1967 முதல் இன்று வரை நவீன தமிழகத்தின வளர்ச்சிக்காகவும், சமூக நீதி சமத்துவத்திற்காகவும், அனைத்து துறைகளிலும் கழகம் ஆற்றிய பணிகள், இன்று தமிழகத்தை இந்தியாவின் மிகவும் முன்னேறிய மாநிலங்களில் முதன்மையான மாநிலமாக மாற்றி இருக்கிறது. சுருங்கச் சொன்னால், கழகத்தின் ஆட்சியே, தமிழ்நாட்டின் பொற்காலம்!

1969ல் அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைத் தலைவராகவும், பேராசிரியர் க.அன்பழகன் பொதுச் செயலாளராகவும், கொண்ட மாபெரும் இயக்கமாக விளங்கி வந்தது. தி.மு.க.விற்கு ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 60,000-க்கும் அதிகமான கிளைக் கழகங்கள் உள்ள ஒரே கட்சி தி.மு.க மட்டுமே.

பேரறிஞர் அண்ணா தொடங்கி வைத்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றது. முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான நல்லாட்சி ஆயிரக்கணக்கான சாதனைகளை புரிந்தது.

மனிதனை மனிதனே மாடு போல இழுத்துச்செல்வது சுயமரியாதைக்கு இழுக்கு என்பதால் கழக ஆட்சியில் கை ரிக்ஷாக்கள் ஒழிக்கப்பட்டன. அவற்றிற்குப் பதிலாக சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கப்பட்டன. இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்த தமிழகத் திட்டங்களில் இது.

குடிசைகளில் வாழ்வோருக்கு நிரந்தர வீடுகள் கட்டித் தருவதற்காக குடிசை மாற்று வாரியம் என்ற அமைப்பை கலைஞர் தொடங்கினார். இதன் மூலம் பெருநகரங்களில் குடிசைகள் அகற்றப்பட்டு, அங்கு வாழும் மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்பட்டன. இத்திட்டமும் இந்திய அளவில் முன்னோடித் திட்டம்தான்.

சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் மாநில ஆளுநர்களே தேசியக் கொடியை ஏற்றும் உரிமையுடையவர்களாக இருந்தனர். தேசிய அளவில், சுதந்திர தினத்தில் பிரதமரும், குடியரசு தினத்தில் ஜனாதிபதியும் கொடியேற்றும் உரிமையுடையவர்களாக இருக்கும்போது, மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத் தலைமை வகிக்கும் முதல்வர்களுக்கு கொடி ஏற்றும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். இதனால், 1972ம் ஆண்டு சுதந்திரத்தின் வெள்ளி விழாவையொட்டி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சுதந்திர தினத்தில் அந்தந்த மாநில முதல்வர்கள், தலைமைச் செயலகத்தில் கொடியேற்றுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த உரிமையைப் பெற்றுத் தந்தது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.

“தமிழின பேரியக்கம் தி.மு.க” :  எந்நாளும் தமிழ்நாட்டின் நலனுக்காக உழைக்கும் வெகுமக்களின் இயக்க வரலாறு!
Gopi

அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, பார்வையற்றோருக்கு அறுவை சிகிச்சை செய்து கண்ணாடிகள் வழங்கும் கண்ணொளி திட்டம், பிச்சைக் காரர்கள் மற்றும் தொழுநோயாளிகளின் மறுவாழ்வுக்காக இரவலர் இல்லங்கள் அமைத்தது, இந்தியாவிலேயே முதன்முறையாக கோவையில் வேளாண் பல்கலைக்கழகம், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கென தனி அமைச்சரவை, நில உச்சவரம்பு சட்டம், விவசாயத் தொழிலாளர்களுக்கான கூலி நிர்ணயம் , உயர் படிப்பு வரை மாணவர்களுக்கு இலவசக் கல்வி, விதவைகள் மறுமணத்திற்கு நிதியுதவி, கலப்பு மணத் தம்பதிகளுக்கு ஊக்கத் தொகை ஆகியவை 1969 முதல் 1976 வரையிலான முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான திமுக அரசின் முற்போக்குத் தன்மை கொண்ட முத்தான, சத்தான மக்கள் நலத்திட்டங்கள்.

இதன் பின்னர், 1989முதல் 1991 வரையிலான இரண்டு ஆண்டுகாலம் மட்டுமே நீடித்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், சிறு மற்றும் குறு விவசாயிகளின் பாசன வசதிக்காக மின்மோட்டார்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை நாட்டு மக்களுக்கு அற்பணித்தார் முத்தமிழறிஞர் கலைஞர்.

1989ல் பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு சட்டம், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் கல்வி, வேலைவாய்ப்புகளைப் பெற்று உயர்வதற்காக தமிழகத்தில் நிலவி வந்த இடஒதுக்கீட்டு அளவை 69 சதவீதமாக உயர்த்தியது முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான தி.மு.க.அரசு.

1989ம் ஆண்டு தர்மபுரியில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் முதன்முறையாகத் தொடங்கி வைக்கப்பட்டன. பெண்கள் ஒருங்கிணைந்து சுயதொழில் வாய்ப்பைப் பெருக்கும் இத்திட்டம் இன்று மாநிலம் முழுவதும் பெரும் வளர்ச்சி கண்டு பெண்களை தற்சார்பு கொண்டவர்களாக மாற்றியுள்ளது.

சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டம், ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவி வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகைத் திட்டம், அரசு நிறுவனங்களின் பணியிடங்களில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு ஆகியவை இந்த 2 ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றப் பட்ட முக்கிய திட்டங்களாகும்.

தமிழ்நாட்டு முதல்வராக 1996ம் ஆண்டில் நான்காம் முறையாகப் பொறுப்பேற்ற முத்தமிழறிஞர் கலைஞர், மற்றொரு புரட்சிகர திட்டத்தையும் அமல்படுத்தினார். மெட்ராஸ் என்று ஆங்கிலத்திலும் ஏனைய அன்னிய மொழிகளிலும் அழைக்கப்பட்டு வந்ததை மாற்றி சென்னை என அனைத்து மொழிகளிலும் அழைக்கும்படி பெயர் மாற்றம் செய்தார். விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருளை அவர்களே சந்தையில் விற்று நேரடியாகப் பலன் பெறும் வகையில் உழவர் சந்தைகளை தமிழகத்தின் பல பகுதிகளிலும் திறந்து வைத்தார்.

தமிழர்கள் என்ற உணர்வை மறந்து சாதிவாரியாக மக்கள் பிரிந்திருப்பதை போக்க வேண்டும் என்பதற்காக, தமிழ்நாட்டில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சமத்துவபுர குடியிருப்புகளைத் திறந்து வைத்தார்.

பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டுடன் தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. குக்கிராம மக்கள் எளிதில் சுற்றியுள்ள நகரப் பகுதிகளை அடைவதற்கு வசதியாக தனியார் மூலம் சிற்றுந்துகள்/மினி பஸ்கள் இயக்கும் திட்டத்தை திமு.க அரசு நடைமுறைப்படுத்தியது.

“தமிழின பேரியக்கம் தி.மு.க” :  எந்நாளும் தமிழ்நாட்டின் நலனுக்காக உழைக்கும் வெகுமக்களின் இயக்க வரலாறு!

பள்ளி மாணவர்கள் தங்கள் கல்விக்காகப் பயணம் செய்வது சுமையாக இருக்கக்கூடாது என இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. தமிழகத்தில்தான் இப்படி முதல் முறையாக இலவச பஸ் பாஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. பல கிராமப்புற ஏழை மாணவர்கள் இதனால் கல்வி பயின்று இன்று, நல்ல நிலைக்கு வந்துள்ளனர்.

2006ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலிலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக ஐந்தாவது முறையாகப் பொறுப்பேற்றார் முத்தமிழறிஞர் கலைஞர்.

2006 மே 13ம் நாள் பதவியேற்பு விழா நடந்த மேடையில் வைத்தே, தனது தேர்தல் வாக்குறுதிப்படி 1 கிலோ அரிசி 2 ரூபாய், விவசாயிகளின் கூட்டுறவுக்கடன் 7000 கோடி ரூபாய் தள்ளுபடி, சத்துணவுத் திட்டத்தில் வாரம் இரண்டு முட்டைகள் ஆகிய திட்டங்களை நிறைவேற்றக் கையெழுத் திட்டு நடைமுறைப்படுத்தினார்.

தேர்தல் வாக்குறுதியின்படி , ரேஷன் கார்டுகள் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவசமாக கலர் டிவிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது. விறகு அடுப்பு-மண்ணெண்ணெய் அடுப்பு இவற்றைப் பயன்படுத்தும் ஏழைப் பெண்கள் படும் அவதியைத் தவிர்க்கும் விதத்தில் அவர்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்பு வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப் படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு அரசாங்கம் என்ன செய்யவேண்டும் என ஐ.நா.மன்றம் வழிகாட்டியிருப்பதை இந்தியாவிலேயே முதன்முறையாகச் செயல் படுத்தியிருக்கும் மாநிலம் தமிழகம்தான். அண்ணா நூற்றாண்டு தொடக்க தினமான 2008ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி முதல் 1 கிலோ அரிசி 1ரூபாய் என்ற விலையில் மாதம் 20 கிலோ அரிசி நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக, பட்டினிச்சாவு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியது தி.மு.கழக அரசு.

தமிழ்நாட்டில் உள்ள சிறு-குறு நகரங்களில் கட்டுமானப்பணிகளும், சாலைகளும், மேம்பாலங்களும், அணைகளும் கட்டப்பட்டன கழக ஆட்சியில்.

டைடல் பார்க் உள்ளிட்ட தொழிற்நுட்ப பூங்காக்கள், அண்ணா நூற்றாண்டு நூலகம், தமிழறிஞர்களின் படைப்புகளுக்கு விருதுகள், செம்மொழி மாநாடு உள்ளிட்ட அற்புத பணிகள் நடைபெற்று தமிழ்நாட்டை எந்நாட்டவரும் உயர்ந்து பார்க்கும் நிலையை உருவாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

5 முறை தமிழ்நாட்டை ஆட்சி செய்த முதலமைச்சரும், இந்திய அளவில் அசைக்க முடியாத அரசியல் ஆளுமையாக விளங்கிய முத்தமிழறிஞர் கலைஞர், 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 07 ஆம் தேதி சிந்திப்பதை நிறுத்திக் கொண்ட பிறகு நடைபெற்ற கழக பொதுக்குழுவில் அவரால் அடையாளங்காட்டப்பட்டவரும், “உழைப்பு” “உழைப்பு” “உழைப்பு” என்று தலைவர் கலைஞரால் பாராட்டப்பட்டவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், துரைமுருகன் பொருளாளராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த தேர்வை பேராசிரியர் க.அன்பழகன் அறிவித்தார்.

“தமிழின பேரியக்கம் தி.மு.க” :  எந்நாளும் தமிழ்நாட்டின் நலனுக்காக உழைக்கும் வெகுமக்களின் இயக்க வரலாறு!

தமிழக அரசியலில் மட்டுமின்றி, அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்கள் காப்பாற்றப்பட தேசிய அளவிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் பணிகளையும், முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது திராவிட முன்னேற்றக் கழகம். மிக முக்கியமாக மக்களாட்சியின் அடிப்படையில் உட்கட்சி தேர்தல்களை முறைப்படி தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே!

தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தது திராவிட முன்னேற்றக் கழகம். 38 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் தனது வலிமையை நிரூபித்தது திமுக.

தற்போது 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில், திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராகப் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வெற்றிபெற்றது மட்டுமல்லாமல் திமுக கூட்டணியே மகத்தான வெற்றியை பெற்றது. மே மாதம், 7 -ம் தேதி தமிழகத்தில் முதல்வராகப் பதவியேற்றார் தளபதி மு.க. ஸ்டாலின்.

ஏற்கனவே, சென்னை மாநகரின் மேயராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்து, மெட்ரோ ரயில் திட்டத்தையும், சிங்கார சென்னை திட்டத்தையும் செயல்படுத்தியவர், நகராட்சி பள்ளிகளின் தரத்தை உயர்த்தியவர் என்ற பெருமைகளுக்கெல்லாம் சொந்தக்காரரான தளபதி மு.க.ஸ்டாலின், நிகழ்த்தவிருக்கும் சாதனையை உலகமே எதிர்பார்த்திருந்த நேரத்தில் கொரோனா பெருந்தொற்றில் இருந்து மக்களை காக்க அவர் வகுத்த திட்டங்கள் மக்களை கவர்ந்துள்ளன.

தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் 100 நாட்களை கடந்த கழக ஆட்சியில், 100 ஆண்டுகள் பேசும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன

* மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்.

* பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு.

* பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு.

* கொரோனா நிவாரண நிதியாக 2 கோடியே 10 லட்சம் குடும்பங்களுக்கு 4 ஆயிரம் ரூபாய்.

* இந்தியாவின் வேறு எந்த மாநில அரசும் வழங்காத 9 ஆயிரம் கோடி மதிப்பிலான 14 மளிகைப் பொருட்கள்.

* குடும்பத்தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வு.

* நமக்கு நாமே, அண்ணா மறுமலர்ச்சித் திட்டங்களுக்கு புத்துயிர்ப்பு.

* கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களோடு,

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டி, தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுத்து அண்ணாவின் கட்டுப்பாடான ஆட்சியை, கலைஞரின் கண்ணியமான ஆட்சியை நம் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார் தமிழ்நாட்டின் முதல்வரும், தி.மு.கழகத்தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின்.

எதிர்கட்சி உறுப்பினர்களே… இப்படி ஒரு கண்ணியமான ஆட்சியை இதுவரை நாங்கள் கண்டதில்லை என்று சட்டப்பேரவையில் வெளிப்படையாக பாராட்டும் நிலையில் பார்போற்றும் ஆட்சியை செய்து வருகிறார் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்.

“தமிழின பேரியக்கம் தி.மு.க” :  எந்நாளும் தமிழ்நாட்டின் நலனுக்காக உழைக்கும் வெகுமக்களின் இயக்க வரலாறு!

பேரறிஞர் அண்ணா 1967 ஆம் ஆண்டு ஆட்சிக் கட்டிலில் அமரும் தருணத்தில் சொன்ன வார்த்தைகளுக்கு கலைஞரின் வழியில் உயிர் கொடுத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு நல்ல குடும்பம். நல்ல பிள்ளைகள் குடும்பம். நம்பினவர்களை மோசம் செய்யாதவர்களின் நல்ல குடும்பம் என்றார் பேரறிஞர் அண்ணா.

இன்றைய தினம் நூறு நாட்களை கடந்துள்ள கழக ஆட்சி குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின்,

நாம் கடக்க வேண்டிய தூரம் அதிகம். 100 நாட்கள் அளித்த உற்சாகத்தால் நூற்றாண்டுக்குப் பெயர் நிலைக்கும் சாதனைகளைச் செய்வோம். சாதனைகளால் சொல்வோம். இது என் அரசல்ல, உங்களில் ஒருவனின் அரசு, உங்களின் அரசு என்றுச் சொல்லி பேரறிஞர் அண்ணாவை நினைவு படுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டு மக்களின் அரசியல், பொருளாதார, சமுதாய வாழ்வில் உள்ள இருண்ட நிலையை நீக்கும் வல்லமையும், தமிழர்கள் வாழ்வில் ஒளிஏற்றும் செயல்பாடும் கொண்டதாக அமைந்துள்ளது தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் கழக அரசு.

இந்திய வரலாறு தமிழ்நாட்டில் இருந்து எழுதப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருப்பதன் மூலம் தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் நீட்சியாக, திராவிட முன்னேற்றக்கழகத்தின் ஆட்சியை நடத்திவரும் மு.க.ஸ்டாலின், பேரறிஞர் அண்ணாவின் சிந்தனையையும், முத்தமிழறிஞர் கலைஞரின் செயல் திறமையையும் ஒருங்கே சேர்ந்த லட்சிய குறியீடாக திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாய்த்திருக்கிறார்.

நான்கு மாதங்களே ஆன கழக ஆட்சியில் நாள்தோறும் சாதனைகள். சட்டமன்றக்கூட்டத் தொடரில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம், வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவதற்கான சட்டமுன்வரைவு என்று மாநில அரசின் உரிமைகளை நிலைநாட்டும் நடவடிக்கைகள் ஒருபுறமும், அனைத்துக் கடை ஊழியர்களுக்கும் இருக்கை அளிக்க வேண்டும் என்ற அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்திற்கான அறிவிப்புகள் மக்களாட்சிக்கான எடுத்துக்காட்டாக தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான கழக ஆட்சி திகழ்கிறது.

அரசுப்பணியில் பெண்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிப்பு, தந்தை பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதிநாள் என்ற அறிவிப்பு, சமூக நீதிப் போராளிகளுக்கான மணிமண்டபம், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் 150 வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு 14 அறிவிப்புகள், பண்டித அயோத்தி தாசருக்கு மணிமண்டபம், பாரதி ஆய்வாளர்களுக்கான விருதுகள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 சிறை கைதிகள் விடுவிப்பு, வேலைவாய்ப்பின்றி தவிக்கும் பொம்மை தயாரிக்கும் கைவினைஞர்கள் குடும்பத்திற்கு நிவாரண நிதி தினந்தோறும் செயலாற்றும் அரசாக செயல்பட்டு வருகிறது கழக அரசு.

தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெருமையை, பகுத்தறிவு சிந்தாந்தத்தை, மக்கள் நலத் திட்டப் பணிகளை இன்னும் பல நூறு ஆண்டுகள் கடந்தும் பேச வைக்கும்.

தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தொடரட்டும் தி.மு.கழகத்தின் லட்சிய ஆட்சி. சிறக்கட்டும் தமிழர்களின் நல்வாழ்வு!

- பி.என்.எஸ்.பாண்டியன்.

Related Stories

Related Stories