உணர்வோசை

சுதந்திரம் 75 : “விடுதலைப்போரில் வீரத் தமிழர்கள்” - சிறப்பு கட்டுரை !

விடுதலைப் போரில் வீர தீரத்துடன் பங்கேற்ற வீரமறவர்களின் தியாகத்தின் காரணமாக பேரின்ப சுதந்திரத்தை இந்திய தேசம் அடைந்தது. இந்திய சுதந்திர வரலாற்றில் தமிழர் தம் பங்களிப்பு போற்றத்தக்கது.

சுதந்திரம் 75 : “விடுதலைப்போரில் வீரத் தமிழர்கள்” - சிறப்பு கட்டுரை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

இந்திய விடுதலைப்போர் ஒரு சகாப்தம். இந்த சகாப்தத்தை உருவாக்க தங்கள் இன்னுயிரை ஈந்து, சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்த விடுதலைப் போராட்ட ஈகியரில் முதன்மையானவர்கள் தமிழர்கள்.

விடுதலைப் போரில் வீர தீரத்துடன் பங்கேற்ற வீரமறவர்களின் தியாகத்தின் காரணமாக பேரின்ப சுதந்திரத்தை இந்திய தேசம் அடைந்தது. இந்திய சுதந்திர வரலாற்றில் தமிழர் தம் பங்களிப்பு போற்றத்தக்கது.

ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய மைசூர் புலி திப்பு சுல்தானின் விடுதலைப் போராட்டத்தை விடுதலைப் போராட்டத்தின் தொடக்கம் என்கிறார்கள். 1857இல் ஜான்சி ராணியின் போராட்டத்திற்கு போராட்டத்திற்கு முன்னரே 1824இல் கிட்டூர் ராணி சென்னம்மாள் ஆங்கிலேயர் ஆதிக்கத்திற்கு எதிராக ஆயுதமேந்திப் போராடினார். அவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே அதாவது 1806 ஆம் ஆண்டில் திருவிதாங்கூரைச் சேர்ந்த வேலுத்தம்பி, கொச்சியைச் சேர்ந்த பாலியத்தச்சன், மலபாரைச் சேர்ந்த பழசி ராஜா ஆகியோரின் போராட்டங்கள் விடுதலை போராடத்திற்கு வித்திட்டன என்று வரலாறுகள் கூறுகின்றன.

ஆனால், அதற்கும் முன்னதாக, 1792இல் தொடங்கி ஒன்பதாண்டு காலம் நடைபெற்ற பாஞ்சாலங்குறிச்சிப் போர்தான் இந்திய விடுதலைப்போரின் முதல் போராட்ட நிகழ்வா அல்லது, நெற்கட்டும் சேவல் பகுதியை ஆண்டுவந்த பூலித்தேவனின் போராட்டம்தான் முதல் விடுதலைப் போராட்டமா என்று என்பது குறித்த விவாதங்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால், ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட விடுதலை போராட்ட வரலாற்றுக் குழு, 1857ல் நடைபெற்ற சிப்பாய் புரட்சியை கொண்டே இந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கம் எழுதப்படும் எனக்கூறியது.

எனினும், வரி கேட்டு தொல்லைச் செய்த ஆங்கிலேயர்களை எதிர்த்து தமிழ்நாட்டில் தீரத்துடன் முதன் முதலாக புலியாக மாறிப் பாய்ந்தது பூலித்தேவன்தான் என்பது வரலாற்றில் மறுக்க முடியாத உண்மை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

1755ல் நெல்லையின் நெற்கட்டும் சேவல் கோட்டையை முற்றுகையிட்டு வரி வசூல் செய்த கர்னல் ஹெரோனையும், அவனது படைகளையும் விரட்டியடித்து தென்னகத்தின் சுதந்திர தாகத்துக்கு வித்திட்ட முதல் மாவீரன் பூலித்தேவனே. 1767ல் கைது செய்யப்பட்ட பூலித்தேவன் சங்கர நயினார் கோவிலில் வழிபட வேண்டும் என பிரிட்டிஷாரிடம் கேட்டு பூலித்தேவன் கருவறைக்குள் சென்றார். போனவர் மீண்டும் திரும்பி வரவேயில்லை. விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு வேறெந்த மாநிலங்களின் பங்கைக் காட்டிலும் அதிகமானதாகவே உள்ளது. இந்த போராட்டக்களமே தமிழ்நாடு வீரம் விளைந்த மண் என்பதை பறைசாற்றியது.

சுதந்திரம் 75 : “விடுதலைப்போரில் வீரத் தமிழர்கள்” - சிறப்பு கட்டுரை !

பாஞ்சாலங்குறிச்சியில் தன்னிடம் வரிகேட்ட, ஆங்கிலேயே அதிகாரியிடம், யாருக்கு, யார் வரி செலுத்துவது? நாடோடிகளாக வந்தவர்களுக்கு நாடாளும் மன்னன் வரிசெலுத்துவதா? , வானம் பொழிகிறது, பூரி விளைகிறது. மன்னவன் காணிக்கு நேற்று வந்தவன் வரி கேட்பதா? என்று விரட்டினான் வீரபாண்டிய கட்டபொம்மன்.

பெரும் போர் மூண்டது. 1792 ல் தொடங்கிய இந்த போர் 1798 வரை நீடித்தது. வீரபாண்டிய கட்டபொம்மன் தனித்திருந்த நேரம், சக பாளையக்காரரால் காட்டிக்கொடுக்கப்பட்ட கட்டபொம்மன் வெள்ளையர்களால் கைது செய்யப்பட்டு, கயத்தாறில் புளிய மரமொன்றில் தூக்கிலிடப்பட்டான். கட்டபொம்மனின் விடுதலை வேட்கைக்கு துணைபுரிந்தவர்கள் அவன் தம்பி ஊமைத்துரையும், தளபதி வெள்ளையத்தேவனும், அமைச்சர் தானப்பரும்.

இவர்கள் இந்திய சுதந்திர வரலாற்றில் களமாடிய வீரத்தமிழர்கள்.

சிவகங்கைச் சீமையில் வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் கொடி உயர்த்தியதும், தமிழகத்தில் சுதந்திர வேட்கையை வளர்த்தது. இதன்பின்னர், 1806 ஆம் ஆண்டு வேலூர் கோட்டையில் நடந்த சிப்பாய் புரட்சி விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. விடுதலை போராட்ட வீரர்களால் ஆங்கிலேயே சிப்பாய்கள் 200 பேருக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த சில வீரர்களில் தீரன் சின்னமலை குறிப்பிடத்தக்கவர். இன்றைய கேரளா பகுதியிலும், கொங்கு மண்டல பகுதியில் கிழக்கிந்திய கம்பெனியின் படை ஒன்று சேராதவாறு, பெரும் தடையாகச் சின்னமலை விளங்கி வந்தார். இதனால் ஆங்கிலேயர் தீரன் சின்னமலை மீது பகைக் கொண்டனர். தீரன் சின்னமலை ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டார்.

எட்டயபுரம் அரசருக்கு தளபதியாக இருந்தவர் வீரன் அழகுமுத்துக் கோன். கப்பம் கட்ட மறுத்து ஆங்கிலேயர்களை எதிர்த்ததால், மருதநாயகம் யூசுப்கான் சாகிப்பை எதிர்த்து பெத்தநாயக்கனூர் கோட்டையில் போரிட்டு அதில் வீரன் அழகுமுத்து கோன் மற்றும் 5 படைத்தளபதிகளும் மற்றும் 247 போர் வீரர்களும் பீரங்கி வாயில் வைத்து சுடப்பட்டு இறந்தனர்.

சுதந்திரம் 75 : “விடுதலைப்போரில் வீரத் தமிழர்கள்” - சிறப்பு கட்டுரை !

1857ல் வடக்கில் பெஷாவரில் இருந்து, கொல்கத்தா வரையிலும் நடந்த சிப்பாய் கலகத்தில், தமிழர்கள் பங்கேற்காவிட்டாலும், சிப்பாய் புரட்சியில் தீரத்துடன் போராடிய ஜான்சிராணியின் பெயரை தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சூட்டினர். சிப்பாய் புரட்சியின் போது, போராட்டத்தினை அடக்க கொடுமைகளை புரிந்த நீல் என்னும் ஆங்கிலேய தளபதியின் வெண்கலத்தில் ஆன சிலையை சென்னையில் நிறுவியது ஆங்கிலேய அரசு. இந்த சிலையை அகற்றுவதற்கு சென்னையில் தேசபக்தர்கள் கூடி போராட்டங்களை நடத்தினர். இந்த சத்யாகிரக போராட்டத்தில் தமிழர்கள் பலருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. கடலூர் அஞ்சலை அம்மாள் உள்ளிட்ட விடுதலை மறவர்கள் சிறைக் கொடுமைகளை அனுபவித்தனர்.

தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே முதல் உள்நாட்டு கப்பல் சேவை அமைத்த மாமனிதர் என எல்லோராலும் நினைவு கூறப்படும் வ.உ.சி, அவர்கள் புரட்சி மனப்பான்மையும், ஆங்கிலேயருக்கு எதிராக தைரியமாக செயல்படும் திறனும் இருந்ததால், அவரது ‘பாரிஸ்டர் பட்டம்’ பறிக்கப்பட்டது. அவரது துணிச்சலான தன்மையே அவருக்கு ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று தமிழ்நாட்டில் பெயரெடுக்க வைத்தது. அவர், நாட்டில் சுதேசி இயக்கத்தை விரிவாக்கவும், ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசாங்கத்தைப் பற்றி இந்திய மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நோக்கத்துடன் இருந்தார். அவருக்கு வெள்ளையர்கள் அளித்த சிறை தண்டனை மிகக் கொடுமையானது. சிறையில் செக்கிழுத்த வ.உ.சி., நாம் போற்றப்பட வேண்டிய விடுதலை போராட்ட வீரர்களில் முதன்மையான தமிழர்.

சுப்ரமணியபாரதி சிறந்த முற்போக்குவாதியாகவும், பழமைவாதத்தை சாடுபவராகவும், புரட்சிகரமான அரசியல் சமூக சிந்தனைகளைக் கொண்டவராகவும் விளங்கினார். அவர் 'இந்தியா' என்ற தமிழ் வார இதழின் ஆசிரியராகவும் இருந்தார். 'சுதேச கீதங்கள்' என்றழைக்கப்படும் தேசிய பாடல்களை அவர் எழுதினார்.

வ.உ.சிதம்பரனார், பாரதி, சுப்ரமணிய சிவா ஆகியோர் மும்மூர்த்திகள். தம்முடைய இளம்வயதிலேயே அரசியல் பிரவேசம் செய்தவர் சுப்ரமணிய சிவா. தேச விடுதலைப் போராட்டத்திற்கு தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்டவர். காங்கிரசில் பிளவு ஏற்பட்ட போது, திலகரின் தீவிரவாதத்தை ஏற்றுக் கொண்டவர். முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். ஆங்கிலேயரின் அடக்கு முறைகளுக்கு ஆளானாலும் கடைசிவரை அவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். இவரையை பின்தொடர்ந்த வாஞ்சிநாதன் ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடிய தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு புரட்சியாளர்.

சுதந்திரம் 75 : “விடுதலைப்போரில் வீரத் தமிழர்கள்” - சிறப்பு கட்டுரை !

வ. உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோரின் மேடைப் பேச்சுக்களால் வாஞ்சியும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமானார். வ.உ.சி.க்கு சிறை தண்டனை வழங்கிய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியார் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்று பின்னர் தன்னையும் சுட்டுக் கொண்டு வீரமரணம் எய்தினார் வாஞ்சிநாதன்.

1916 ஆம் ஆண்டு இந்திய அரசியலில் ஒரு புதிய அமைப்பு உதயமானது. ஹோம்ரூல் லீக் எனப்படும் தன்னாட்சி இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தை தொடங்கியவர் அன்னிபெசண்ட் அம்மையார். தொடங்கப்பட்ட இடம் தமிழ்நாடு. ஆம். சென்னையில் தான் ஹோம்ரூல் இயக்கம் தொடங்கப்பட்டது. 1884ல் சென்னையில் தியோசாபிகல் சொசைட்டியின் வருடாந்திர மாநாடு நடந்தபோது அதில் கலந்துகொண்ட 17 பிரமுகர்களால்தான் இந்திய தேசிய காங்கிரஸ் என்ற விதை விழுந்தது. அதுபோல், சென்னையில் ஹோம்ரூல் இயக்கம் வெள்ளைக்கார பெண்மணி அன்னிபெசண்ட் அம்மையாரால் தோற்றுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய சுதந்திர போராட்டத்தை அகிம்சை வழியில் கொண்டு சென்றவர் மகாத்மா காந்தி. சட்டமறுப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக உப்பு சத்தியாகிரகத்தை காந்தி தொடங்கினார். 1930ல் அவர் தண்டி யாத்திரையை மேற்கொண்டார். 1930 ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக ராஜாஜிக்கு தமிழ்நாட்டில் உப்பு சத்தியாக்கிரகத்தை மேற்கொள்ளும் பொறுப்பு வழங்கப்பட்டது.

வரலாற்றுப் புகழ்பெற்ற வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக நடைப்பயணத்தை அவர் மேற்கொண்டார். திருச்சியிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்த வேதாரண்யம் கடற்கரைக்கு நடைப்பயணம் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டு தமிழ்ப் புத்தாண்டு அன்று பயணம் தொடங்கப்பட்டது.

1930 ஏப்ரல் 26 ஆம் நாள் இப்பயணம் வேதாரண்யத்தில் முடிவடைந்தது. இரண்டு நாட்கள் கழித்து உப்புச் சட்டங்களை மீறியதற்காக ராஜகோபாலாச்சாரி கைது செய்யப்பட்டார். வி.எஸ்.எஸ். ராஜன், சர்தார் வேதரத்தினம் பிள்ளை, சி. சுவாமிநாத செட்டி மற்றும் கே. சந்தானம் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் வேதாரண்யம் உப்பு சத்தியக்கிரகத்தில் பங்குபெற்றனர். இந்த உப்பு சத்தியாகிரக போரில் ஆணுக்கு பெண் சளைத்தவர்கள் இல்லை என்பதை காட்டும்விதமாக ருக்மணி லட்சுமிபதி எனும் வீரப்பெண்மணியும் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சுதந்திரம் 75 : “விடுதலைப்போரில் வீரத் தமிழர்கள்” - சிறப்பு கட்டுரை !

சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு ஆங்கிலேய அரசு அனைத்து விதமான அடக்குமுறைகளையும் பயன்படுத்தியது. ஆயுதம் இன்றி அகிம்சை வழியில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக்கூட கண்மூடித்தனமாகத் தாக்கியது. “தடிகள் கொடுத்திருப்பதன் நோக்கம் அடிப்பதற்காகத்தான், அச்சுறுத்துவதற்காக அல்ல. தலைமை அதிகாரியின் ஆணை இல்லாமலே தடியடி நடத்தும் சக்தியும் தைரியமும் காவலர்களுக்கு இருக்க வேண்டும்” என்பது ஆங்கிலேய அரசு காவல் துறையினருக்கு அளித்த அறிவுரை.

திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, கையில் தேசியக் கொடியினை ஏந்தி தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்ற திருப்பூர் குமரன் காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் தன் இன்னுயிர் துறந்தவர் திருப்பூர் குமரன். இதனால் கொடிகாத்த குமரன் என்று அழைக்கப்படுகிறார்.

வெள்ளையரின் கொடுமைகளை வெள்ளையரே கண்டிக்கும் அளவுக்கு அடக்குமுறைகள் நிகழ்ந்தன. அதையும் மீறித்தான் நமது முன்னோர்கள் சுதந்திரத்திற்காகப் போராடினார்கள், இரத்தம் சிந்தினார்கள், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியபோது அப்படையின் அனைத்து நிலைகளிலும் முன்னிலை வகித்தவர்கள் தமிழர்கள். நேதாஜியின் அழைப்பை ஏற்று படையில் சேர ஆயிரமாயிரம் தமிழர்கள் முன்வந்தார்கள். நேதாஜி படையில் பல தமிழர்கள் இணைந்தார்கள்.

நாடக நடிகர்களிலேயே தலைசிறந்த தேசியவாதியாகத் திகழ்ந்தவர் விஸ்வநாததாஸ். இளம் வயதிலேயே நாட்டின் விடுதலைக்காகப் போராடும் தலைவர்களுடன் நட்பு கொண்டிருந்தார். இவரது உணர்ச்சி மிகுந்த தேசபக்தி நாடகத்தினால் அண்ணல் காந்தியடிகளே இவரை பாராட்டினார். 1919 இல் பஞ்சாப் படுகொலை நடந்தபோது “பஞ்சாப் படுகொலை பாரீர் கொடியது பரிதாபமிக்கது” என்று பாடி தேசப்பற்றை மக்களுக்கு ஊட்டியவர். ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு சிறைவாசம் சென்றவர். இவருக்கிருந்த தேசபக்தியைக் கண்டு ஆங்கிலேய அரசு அஞ்சியது. இவர் திருமங்கலம் வட்ட காங்கிரஸ் கமிட்டியிலும், மதுரை ஜில்லா போர்டிலும், காங்கிரஸின் உறுப்பினராக இருந்தவர். வேடம் தரிப்பதற்கான உடைகளையும், கதர்த் துணியிலேயே தயாரித்து அணிந்து நடத்தவர். இவரது “கொக்கு பறக்குதடி பாப்பா” என்ற பாடல் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் மகாத்மா காந்தியின் மகத்தான பங்கிற்கு தமிழ்நாடு தோள் கொடுத்தது. 1896 முதல் 1946 வரை இருபது முறை தமிழ்நாட்டில் காந்தி தடம் பதித்துள்ளார். அவர் ‘மகாத்மா’ எனக் கொண்டாடப்படுவதற்கு முன்னதாகவே தமிழ் மக்கள் அவரை மகானாக தரிசித்தார்கள். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம். வாழ்த்து மடல்கள் குவிந்தன. கதருக்காகவா, தீண்டாமைக்கு எதிராகவா... எதற்கு நிதி கேட்டாலும் மறுக்காமல் அள்ளிக் கொடுத்தார்கள் தமிழர்கள்.

சுதந்திரம் 75 : “விடுதலைப்போரில் வீரத் தமிழர்கள்” - சிறப்பு கட்டுரை !

அவர் சென்னை வந்தபோது, மாணவர்கள் அளித்த பெரும் திரளான வரவேற்பில் கலந்துகொண்டு, அவர்களிடம் “வெறும் பேச்சில் முழுகிவிடாமல், செயலிலும் ஈடுபடுங்கள், தீண்டாமை ஒழிப்புப் பணியில் ஈடுபடுங்கள்”என்று கேட்டுக்கொண்டார்.

அந்தக் கூட்டத்தில் அவர் தொடர்ந்து பேசுகையில். “தீண்டாமை ஒழிப்பை எதிர்க்கும் வைதீகர்கள், சாஸ்திரங்களின் உண்மைக் கருத்தை உணர்ந்தவர்கள் அல்லர். பொதுமக்களின் சார்பாகப் பேசவும் அவர்களுக்கு உரிமை கிடையாது” என்று அழுத்தமாகக் கூறினார்.

மைலாப்பூர் அருகேயுள்ள பல்லாக்கு மணியம், பூந்தோட்டம், தேனாம்பேட்டை, கண்ணப்பர் வாசகசாலை, செம்பியம், வரதராஜபுரம் என்கிற நரியங்காடு, ஜார்ஜ்டவுன், பெரியமேடு, அருந்தவபுரம் என்று பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அரிசன சேவா நிதியை பெற்று வந்தார். பெண்களிடம் தங்க வளையல்களை கேட்டுப் பெற்றார்.

ரெங்கையா நாயுடு என்பவர் ஒரு வைர மோதிரத்தை அளித்தார். பணம், தங்க வளையல்கள், வைர மோதிரங்கள் - இவைகள் எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டார். ரெங்கையா நாயுடு வைர மோதிரம் கொடுத்தபிறகு, அவருடைய சிறிய பெண், மகாத்மா காந்தியிடம் தன்னுடைய தங்க வளையல்களைக் கழட்டிக் கொடுத்தார்.

உடனே காந்தி, “உன்னுடைய தங்க சங்கிலியையும் தருவாயா?”என்று கேட்டு அதனையும் பெற்றுக் கொண்டார். இவ்வாறு பெற்ற அத்தனை நகைகளையும் அங்கேயே ஏலத்தில் விட்டு அவற்றைப் பணமாகவும் மாற்றிக் கொண்டார்.

1921-ல் மதுரைக்கு ரயிலில் வந்தபோது சோழவந்தான் அருகே வயலில் வேலை செய்துகொண்டிருந்த ஒரு விவசாயியை ஜன்னல் வழியாகப் பார்த்தார் காந்தி. நாட்டின் சாதாரண மக்கள் முழு உடை அணிய வசதியில்லாதபோது, தான் மட்டும் எப்படி முழு உடை அணியலாம் என்ற கேள்வி காந்திக்கு எழுந்தது.

அதன் காரணமாக இனி சாதாரண மக்களைப் போலவே உடை அணிவது என்ற முடிவை காந்தி எடுத்தார். மதுரையில் தங்கியிருந்த காலத்திலேயே இந்த முடிவை நடைமுறைப்படுத்தவும் செய்தார். அப்படி மாறிய அவருடைய உடை அணியும் வழக்கம் அவருடைய வாழ்நாளின் இறுதிவரை தொடர்ந்தது. இது காந்திஜி தமிழ்நாட்டில் இருந்து பெற்றுக் கொண்ட பெரிய பாடம்.

சுதந்திரம் 75 : “விடுதலைப்போரில் வீரத் தமிழர்கள்” - சிறப்பு கட்டுரை !

இரண்டாம் உலகப் போரின்போது, கிரிப்ஸ் தூதுக்குழு பரிந்துரைகள் தோல்வியடையவே, காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்கினார். தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் ஆலைத் தொழிலாளர்கள், மாணவர்கள், பொது மக்கள் ஏராளமாக கலந்து கொண்டனர். இது நாடுதழுவிய போராட்டமாக அமைந்தது.

பக்கிங்ஹாம் கர்னாடிக் ஆலை, துறைமுகப் பொறுப்புக் கழகம், டிராம்வே ஆகியவற்றின் தொழிலாளர்கள் என உழைக்கும் வர்க்கத்தினர் ஏராளமானோர் இதில் பங்கேற்றனர். வடஆர்க்காடு, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் பரவியது. ராஜபாளையம், காரைக்குடி, தேவகோட்டை ஆகிய இடங்களில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியது. சுபாஷ் சந்திர போசின் இந்திய தேசிய ராணுவத்திலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆண், பெண் வீரர்கள் சேர்ந்து விடுதலைக்காக போராடினர்.

1921 முதல் 1923 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கமும் தீவிரமாக நடைபெற்றது. அந்நியரின் விதிமுறைக்களுக்கு எதிரான போராட்டங்கள் 1921 மார்ச்சில் தொடங்கின.

தமிழ்நாடு முழுவதும் ஒத்துழையாமை இயக்கம் பரவலாக நடைபெற்றது. இதன் முக்கிய தலைவர்களாக சி. ராஜகோபாலாச்சாரி, எஸ். சத்தியமூர்த்தி, தந்தை பெரியார், ஒ.பி. ராமசாமி ரெட்டியார் போன்றோர் செயல்பட்டனர்.

தமிழர்களிடையே அறியாமை இருள் அகலவும், மக்களிடையே ஏற்றத் தாழ்வுகள் நீங்கவும் பாடுபட்ட தந்தை பெரியார். 1924ல் கேரளத்தில் வைக்கம் மகா தேவர் கோவில் போராட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு சத்தியாகிரகம் நடத்தி வெற்றி பெற்றார். இதனால் வைக்கம் வீரர் என்றும் அழைக்கப்பட்டார் தந்தை பெரியார். கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு சிறை சென்றார். கதர்த்துணிகளை மூட்டையாகக் கட்டி தலையில் சுமந்துசென்று விற்றார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் தந்தை பெரியாரின் பங்கு மகத்தானது.

தந்தை பெரியாரால் பச்சைத் தமிழர் என்று அழைக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் தன்னுடைய குருவான தீரர் சத்தியமூர்த்தியின் வழியில் நாட்டின் விடுதலை போராட்டத்தில் பங்கெடுத்தார்.

ஆடுவோமே... பள்ளு பாடுவோமே என்ற மகாகவி பாரதியாராலும், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் எழுச்சிமிக்க பாடல்களாலும் தேசிய இயக்கம் மேலும் வலிமை பெற்றது. விடுதலை இயக்கத்தில் காந்திய நெறிகள் பின்பற்றப்பட வேண்டிய அவசியத்தை அவரது பாடல்கள் எடுத்துக் கூறின. "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது " என்று அவர் பாடினார்.

சுதந்திரம் 75 : “விடுதலைப்போரில் வீரத் தமிழர்கள்” - சிறப்பு கட்டுரை !

தமிழ்நாடு வீரத்திற்கும், தியாகத்திற்கும் முன்னோடி என்பதை சுதந்திர போராட்டத்தில் நிரூபித்துக் காட்டியிருக்கிறது. நெல்லை சதி வழக்கில் எட்டடி உயர கொட்டடிச் சிறையில் எட்டாண்டுகள் தண்டனை அனுபவித்த பொதுவுடமைப் போராளி ஆர். நல்லகண்ணு, விடுதலை கால கொடுமைகளை அனுபவித்தவர். அமெரிக்கன் கல்லூரியில் மாணவர் சங்கம் அமைத்து, சுதந்திரத்திற்காக போராடி சிறை சென்ற தகைசால் தமிழர், நூற்றாண்டு கண்ட போராளி என்.சங்கரய்யா போன்றோர் தமிழ்நாட்டின் பெருமைமிகு தியாக சீலர்களாக, விடுதலைப் போரின் நேரடி சாட்சியங்களாக உள்ளனர்.

இந்திய விடுதலை இயக்கத்தில் முன்னணியில் இருந்தவர்கள் தமிழர்கள். தங்கள் இன்னுயிரை ஈந்து நம் முன்னோர்கள் பெற்றுத்தந்த சுதந்திரத்தை பேணி காப்பதே இப்போது நம்முன் உள்ள கடமை.

வாழிய செந்தமிழ்... வாழ்க நற்றமிழர்... வாழிய நம் பாரததாய் திருநாடு.

- பி.என்.எஸ்.பாண்டியன்.

Related Stories

Related Stories