உணர்வோசை

“பிரபஞ்சனின் கடைசி எழுத்து” - எழுத்தாளரின் நினைவுக்குறிப்புகள்!

மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் கடைசி காலம் குறித்து, அவருடன் பயணித்த எழுத்தாளர் பி.என்.எஸ்.பாண்டியன் எழுதியது.

“பிரபஞ்சனின் கடைசி எழுத்து” - எழுத்தாளரின் நினைவுக்குறிப்புகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

காடு குலுங்கியது. மண், இதுவரை காணாத அனுபவித்தறியாத இந்தப் பேரோசையில் அதிர்ந்து ஸ்தம்பித்தது. மரங்கள், தங்கள் வேர்களைக் காணப் போகிறோமோ என்ற அச்சத்தில் விறைத்து நின்றன. மரங்களின் உச்சிகளில் பேய் வந்து அமர்ந்து, தலைவிரித்து ஆடியது போல ஆட்டம் நிகழ்ந்து முடிந்தது. சில விநாடிகள் தான். என்றாலும் காடு புரண்டது. தன்னை சுதாகரித்துக் கொண்ட மரங்கள் முதலிய தன் சகாக்களைக் கண்டு, அவை நிற்பதைக் கண்டு, சேதம் இல்லை குறைந்தபட்சம் தங்களுக்கேனும் சேதம் இல்லை என்பதை நிம்மதியுடன் உணர்ந்தன. இது அண்மைக் காலமாக நிகழும் அனுபவம்தான்.

இது பறவைகளின் அரசன் அண்ட பேரண்டன், தன் கூட்டை, மனைவி மக்களைக் காணவரும் நேரம். நேரம் தவறாமல் அவனும் வந்து சேர்ந்தான். பேரிரைச்சலைக் கேட்டவுடனே மரத்தின் உச்சி பைத்தியம் பிடித்தாற் போல் ஆடியரைக் கண்டவுடனே, கலியுகமாயின. புரிந்து கொண்டாள். வந்திருப்பது கணவர் என்பதையும், அவன் சிறகசைப்பில் ஞாலமே நடுங்கும் என்பதையும் அவள் அனுபவபூர்வமாக அறிந்தவள். ஒரு புன்னகையோடு தன் வாசலைத் திறந்துவைத்து தலைவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். குழந்தை லோக சுபிட்சன் விழித்துவிடக் கூடாது என்பது ஒன்றுதான் அவள் கவலை.

ஒருவழியாக அண்ட பேரண்டனின் சிறகுகள் சுருங்கி அவன் இயல்பு நிலைக்குத் திரும்பி வரச் சற்று நேரம் பிடிக்கும்…

பிரபஞ்சன் என்ற பேராளுமை எழுதிய கடைசி பக்க எழுத்துக்கள் இவை.

•••••••••

நவம்பர் 3 தேதியன்று புதுச்சேரி புத்தகப் பூங்காவில் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேசை, நாற்காலியில் அமர்ந்து எழுதிய அண்ட பேரண்டனின் சிறகுகள் சுருங்கி இயல்புக்கு வருவதற்குள் டிசம்பர் 21ந் தேதி பிரபஞ்ச பேரொளியை இருள் சூழந்தது. றெக்கைகளை சுருக்கி வைத்துக்கொண்டு வானம் நோக்கி படுத்திருந்த அண்ட பேரண்டன் போல அவர் இறுதியில் படுத்திருந்த கோலத்தை பார்த்ததும் இடிந்து போனேன்.

பிரபஞ்சனா இது?. அந்த கம்பீரம் எங்கே போனது?. இறுதிஊர்வலம் பாரதிவீதியில் இருந்து தொடங்கி புஸ்ஸி வீதி வந்தது. நினைவுகள் சிறகடித்தன.

“புஸ்ஸி என்பவன் ஒரு பிரெஞ்சு தளபதி. சென்னை கோட்டையை முற்றுகையிட்டவன். அவன் ஒரு மாவீரன் சார்..”என்கிறார் பிரபஞ்சன்.

அதேவீதியில் ஒரு ஓட்டல் மாடியில் இந்த உரையாடல்கள் தொடர்கின்றன.

”இல்ல சார்.. அவன விட பெரிய வீரன் லல்லி தொலாந்தால் தான்” என்கிறேன் நான். “ஓ அப்படியா..” என்று வியக்கிறார். “ஆமாம் சார்.. கடலுக்குள்ள இருந்து ஊருக்கே நுழையாம கடலூர் கோட்டைய அடிச்சான் பாருங்க” என்றேன்.

“ம்ம்ம்.. ஆமாம் சார்.. சரிதான்” என்றவரிடம் லல்லி தொலாந்தாலை மையமாக வைத்துதான் ‘காலத்தின் விளக்கு’ என்ற நாவலை எழுதுகிறேன் என்றேன். வியப்பும், மகிழ்ச்சியும் கலந்த குரலில்.. “ஆஹா… எழுதுங்க சார்.. எழுதுங்க” என்கிறார் அவர்.

இரண்டொரு நாள் கழித்து, இதுவரை எழுதிய நான்கு அத்தியாயங்களை பிரபஞ்சன் சாரிடம் காட்டினேன். “ஆஹா பிரமாதம் சார். இது இன்னொரு வானம் வசப்படும் போல வரும். சீக்கிரமா எழுதி முடிச்சிடுங்க” என்றார்.

இதுபோன்ற வார்த்தைகளை யார் சொல்வார்?. ஊர்வலம் தொடர்கிறது. நினைவுகள் மீண்டெழுந்து விம்முகிறேன். கண்களில் நீர் தேங்குகிறது. புஸ்ஸி வீதியை கடந்து சின்னகடை திருப்பத்தில் ஒரு பூக்கடைக்காரர் உதிரிப்பூக்களை பிரபஞ்சன் மீது தூவுகிறார். அடடா… அடடா… “எனக்கு ஒரு கௌரவம் கிடைக்கும் சார்” என்று பிரபஞ்சன் சொன்னது இதைத்தானா?. அதைவிட பெரிய கௌரவத்தை புதுச்சேரி அரசும், முதல்வர் நாராயணசாமியும் அளித்துவிட்டார்களே. புதுச்சேரி வரலாற்றில் ஒரு எழுத்தாளனுக்கு அரசு மரியாதையுடன் சவ அடக்கம் என்பது புதிய வரலாறாக போனது. இது மெச்சத்தக்க கௌரவம்.

கீரைக்கடை சந்து, இஞ்ஞாசி மேஸ்திரி வீதி, வ.உ.சி,வீதி, ஜீவானந்தம் வீதி, திப்பு சாகிப் வீதி, பாதர்சாகிப் வீதி, ராமராஜா சந்து என கடந்து இருதய ஆண்டவர் கோயில் திருப்பத்தை கடக்கும்போது, ஒவ்வொரு வீதிக்கும் ஒவ்வொரு கதையை சொன்னவர் தானே பிரபஞ்சன். ஒருவீட்டில் ஒரு அறிவாளி. பின்னாளில் அவன் காதலில் தோற்று இருதய ஆண்டவர் கோயில் எதிரில் பைத்தியமாக நின்றான் என்று ஒரு கதை.

காதலையும், அன்பையும் குழைத்து குழைத்து எழுதியவர். சுப்பையா சாலையில் பயணிக்கும் கண்ணீரால் காப்போம் நினைவுக்கு வந்தது. பிரெஞ்சிந்திய போராளி – மக்கள் தலைவர் வ.சுப்பையாவை சுற்றி எழுதப்பட்ட கண்ணீரால் காப்போம் என்ற நாவலில் புதுச்சேரியின் விடுதலை இயக்க வரலாற்றை சித்திரமாக தீட்டியவர்.

சோனாம்பாளையம் மின்துறை தலைமை அலுவலகத்தை நோக்கி ஊர்வலம் திரும்பியது. மின்துறை என்பதை பிரெஞ்சு மொழியில் ‘ரெழி’ என்று அழைப்போம்.

‘‘சார்.. நாம எத்தனை மணிக்கு ‘ஒப்பித்தால்’ போலாம்?” (ஒப்பித்தால்- மருத்துவமனை) என்று நான் கேட்க, “சார்.. இங்க நம்ம ஊருக்கு வந்தா தான் எனக்கு பிரெஞ்சு ஞாபகம் வருது. நிறைய பிரெஞ்சு வார்த்தைகளை இழந்துவிட்டோம் என்று வருத்தப்பட்டது நினைவில் எழுந்தது. துக்கம் தொண்டையை அடைக்கும் என்பார்களே.. அடைத்தது.

சுடுகாட்டில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க.. வானத்தை நோக்கி வெடித்து சிதற.. அந்த பேண்ட் வாத்தியம் இசைக்கும்போது, அவர் முகத்தை நான் பார்க்க.. பார்க்க..அந்த கௌரவம் அவருக்கு கிடைத்து விட்டதாக உணர்ந்த போது கரைந்து போனேன். இந்த இசை குறித்து எதுவும் பேசமாட்டாரா?. இறுதியாக அவர் என்னிடம் என்ன பேசினார்?

••••••••

“பிரபஞ்சனின் கடைசி எழுத்து” - எழுத்தாளரின் நினைவுக்குறிப்புகள்!

இறப்பதற்கு முதல்நாள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து, சிறப்பு வார்டிற்கு மாற்றுவதற்காக முயற்சிகள் நடந்து கொண்டிருந்தன. நான் அவரது முகத்தை பார்த்தேன். தலையாட்டி சிரித்தார்.

“சார்.. நாம இப்போ புறப்படலாம். நம்ம பழைய வார்டுக்கு போகலாம்” என்றேன்.

“ஆமா.. சார். புறப்பட்டுடுவோம். ஓகே. எல்லாம் முடிஞ்சிடுச்சி. நாம இப்பவே புறப்பட்டு போயிடுவோம். இந்த டாக்டருங்க நல்லா கவனிச்சிகிட்டாங்க. அவங்களுக்கு ஒரு ஐயாயிரம் ரூபா கொடுத்திடுங்க” என்றார்.

இது அவரின் இறுதிப்பேச்சு என அப்போது எனக்குத் தெரியாது. நானும் தலையாட்டினேன். மணக்குள விநாயகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் சிறப்பு வார்டு. ஏ-1. எங்களுக்கு சொந்த வீடு மாதிரி. அங்குள்ள செவிலியர்கள் எங்கள் சொந்தக்காரர்கள். ஒவ்வொருவரின் பெயரையும் அவர் பெயர் சொல்லி அழைப்பது பேரழகு. நித்யா, பிரேமா, இலக்கியா, பவித்ரா, சரண்யா.. என எல்லோரையும் அவர் சில நாட்கள் நினைவில் வைத்தும், சில நாட்கள் நினைவிழந்து பெயர் மாற்றிய தருணங்களும் உண்டு. சிறப்பு வார்டில் அனுமதித்து விட்டு நாளை வருகிறேன் என்று கூறி வந்தேன்.

அந்த ‘நாளை’ என்ற ஒரு நாளின் பகல் 11.58 மணிக்கு மருத்துவர் போன் செய்து பிரபஞ்சன் காலமாகிவிட்டார் என தெரிவித்தார். அவர் விடுதலை அடைந்தாரா? அல்லது இடைவெளி நாவலில் சம்பத் சொல்லியது போல் சாவு என்பது ஒரு இடைவெளியா? பிரபஞ்சனை இனி காண்போமா? தனி அறையில் அழுதேன்.

பிரபஞ்சன் என்ற எழுத்தாளனின் இறுதிநாட்களில் தான் நான் அவருடன் நெருக்கமாக இருந்தேனா? அவரது குடும்பத்தின் விலகல் என்னை அவரோடு பிணைத்ததா? அல்லது இறுதிநாளினை உறுதிப்படுத்திக் கொண்டு என்னை அவரோடு இணைத்துக் கொண்டாரா?

••••••••

“பிரபஞ்சனின் கடைசி எழுத்து” - எழுத்தாளரின் நினைவுக்குறிப்புகள்!

ஒரு விடியற்காலைப் பொழுது. இரண்டு முறை அலைபேசி அடித்து ஓய்ந்தது. மூன்றாம் முறை அடித்து ஓய்ந்த போதுதான் பார்த்தேன். பிரபஞ்சன். பதிலுக்கு அழைத்தேன்.

“சார்.. நான் வந்துட்டேன் சார். எப்போ வர்றீங்க”.

“ஒரு பத்து பத்தரைக்கா வர்றேன் சார்”.

லாசுபேட்டை அரசு குடியிருப்பு. எல்-4. முதல்தளம். கதவு திறந்துகிடந்தது. எட்டிப்பார்த்தேன். பச்சைநிற ஜிப்பா, வேட்டி சகிதமாக ஜன்னலை பார்த்தவாறு அவர். சத்தம் கேட்டதும் திரும்பி பார்த்து எழுந்து கைகளை விரித்து…

“வாங்க.. சார்… வாங்க..” என அழைத்தார். அன்று பிப்ரவரி4 – 2018.

ஸ்கூட்டரில் இரண்டுபேரும், நேருவீதி இண்டியன் காபி அவுஸ் சென்றோம். இரண்டு பேருக்குமே பிடித்த இடம்.

‘உங்கள எப்ப சார் பார்க்கலாம்‘ என யாராவது கேட்டால்… இண்டியன் காபி அவுஸ் வந்துடுங்கேளேன். அது அவருடைய இடம். அவருக்கான இடமாக அது மாறி இருந்தது.

‘சின்ன பையன் (கடைசி மகன் சதீஷ்) ஏற்கனவே கல்யாணம் பண்ணிக்கிட்டான். காதல் கல்யாணம். பிரான்சிலேயே ரெஜிஸ்டர் பண்ணிட்டான். இப்போ நாம ஊர் அறிய ஒரு வரவேற்பு நிகழ்ச்சி வைக்கணும். இந்த ஊர்ல உங்கள விட்டா எனக்கு யார சார் தெரியும்?. காபியை உறிஞ்சி குடித்து முடிக்கும் போது, பையில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்துக்காட்டி யார் யாருக்கு பத்திரிகை வைக்கலாமுன்னு ஒரு லிஸ்ட் போடுங்க என்றார். அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், அவருடைய ரசிகர்கள் என ஒரு பட்டியல் தயாரானது. காபி அவுசை விட்டு வெளியே வந்தபோது எதிரே இருந்த துணிக்கடைக்குள் நுழைந்தோம். அவருக்கு ஒரு பட்டு சட்டை, வேட்டி, இன்னும் சில துணிமணிகள், எனக்கு ஒரு நீல நிற பட்டுச்சட்டையும், ஒரு பேண்ட்டும் எடுத்து கொடுத்து போதுமா? இன்னும் ரெண்டு செட் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். இதுவே போதும் என்று கூறிவிட்டு டைலர் கடைக்குச் சென்று அளவு கொடுத்தோம்.

அன்று முதல் பத்திரிகை வைக்க ஒரு வாரகாலம் சுற்றினோம். வேல் சொக்கநாதன் மண்டபத்தில் பிப்ரவரி 14ந் தேதி சதீஷ்- கிளாடிஸ் வரவேற்பு நிகழ்ச்சி நடந்து முடிந்து ஒருசில நாட்களில் மகன்கள் குடும்பத்துடன் பிரான்ஸ் சென்றுவிட்டனர். பத்து நாள் கழித்து அவர் சென்னை சென்றார். பிறகு ஒரு வாரம் கழித்து மீண்டும் புதுவை வந்தார்.

தமிழ் இந்து நாளிதழில் ‘எமதுள்ளம் சுடர்விடுக’ எனும் தலைப்பில் தொடர் கட்டுரை எழுதி வந்தார். வாரந்தோறும் புதன்கிழமை அது வெளிவந்தது. ஒவ்வொரு வாரமும் எதாவது ஒரு புத்தகத்தை ஆய்வு செய்து செவ்வாய் கிழமை மதியம் எழுதி கொடுப்பார். அதை மாலைக்குள் நான் தட்டச்சு செய்து, மானா பாஸ்கரனின் ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவிடுவேன். இது ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து. தினந்தோறும் காலை, மாலை என காபி அவுஸ், வளையப்பட்டியார் மெஸ் என காபியும், சாப்பாடும் தொடர்ந்து கொண்டிருந்தது. சில மதியவேளைகளில் என் வீட்டில் இருந்தும் சாப்பாடு எடுத்துச் சென்றேன். மீனும், மீன் குழம்பும் அவருக்கு பிடித்த உணவு.

2018 ஏப்ரல் மாதத்தின் இறுதியில் ஒருநாள் புதுச்சேரியில் பிரபஞ்சனின் 55 ஆண்டு எழுத்துப்பணியை பாராட்டி அரசு சார்பில் விழா எடுக்கப்பட்டு, நிதி அளித்து மிகப்பெரிய சிறப்பு செய்யப்பட்டது. இந்த விழா முடிந்ததும் சில நாட்கள் கழிந்தது. அந்த விழா அவர் வாழ்வின் உச்சம்.

ஒருநாள் காலை வேளையில் என்னை அழைத்தார். இருவரும் காபி குடித்தோம். “சார் நெஞ்சு எரிவது போல் இருக்கிறது. முதுகுத்தண்டு நோகிறது. தூக்கம் சுத்தமா இல்ல..”என்றார்.

சரி மருத்துவரிடம் செல்வோம் என்றுகூறி டாக்டர் துய்மோனிடம் சென்றோம். சிறந்த பொது மருத்துவர். அவர் சளிக்கு மருந்து கொடுத்தார். நெஞ்சை தொட்டுப்பார்த்து வீங்கி இருப்பதை ஒரு ஸ்கேன் எடுத்துவரும் படி சொன்னார். ஸ்கேன் எடுத்தோம். ஆனால், மறுநாள் தொடர் இருமலினால் வேதனைப்பட்டார்.

சார்.. என் பேண்ட் இடுப்பில் நிற்கவில்லை. பெல்ட் வாங்கவேண்டும் என்றவரை ஆரோவில் அழைத்துச் சென்று லெதர் பெல்ட் வாங்கி கொடுத்தேன். 3 இஞ்ச் சுற்றளவு குறைந்துள்ளதாக கூறினார். அவரை வீட்டில் விடும்போது மாலை 6 மணி.

“சார் இன்னைக்கு பொழுது ரொம்ப திருப்தியா போச்சு சார். நீங்க சாயங்காலம் ஒரு 6 மணிக்கு வந்தீங்கங்ன்னா… நாம காபி அவுஸ் போகலாம்” என்றார். திடுக்கிட்டு போனேன்.

“சார் இப்ப மாலை 6 மணி ஆகிறது” என்றேன்.

“ஓ… 6 மணி ஆகிறதா..!. இப்பவெல்லாம் அடிக்கடி ஞாபக மறதி வருதுசார். என்ன பண்றது?”

மறுநாள் இதுபோன்ற குறியீடுகள் எந்த வியாதியை சொல்கின்றன என்று இணையத்தில் தேடினேன். நெஞ்சு வெடித்துவிடும் போல் இருந்தது.

புற்றுநோய்க்கான அறிகுறி. ஆசிரியர் அமரநாதன் மூலமாக ஈரோடு டாக்டர் ஜீவானந்தத்தை தொடர்பு கொண்டு விவரத்தை சொன்னேன். பின்னர், பிரபஞ்சனிடம் அவர் பேசினார். எதற்கும் புதுச்சேரி புற்றுநோய் மருத்துவமனையில் ஒரு பரிசோதனை செய்துகொள்ளுங்கள் நான், அந்த மருத்துவமனையின் தலைவர் டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியனிடம் சொல்கிறேன் என்றார்.

மறுநாளே, அங்கு சென்றோம். சில பரிசோதனைகள் எடுக்கச் சொன்னார்கள். 4 நாட்கள் சிலசோதனைகளை முடித்துக் கொண்டு, அங்குள்ள டாக்டரின் ஆலோசனைப்படி, மேம்பட்ட சோதனைக்காக மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்.

புதுச்சேரியில் இருந்து 28 கிலோ மீட்டர் காரில் பயணம். நான் கார் ஓட்ட அவர் முன்சீட்டில் அமைதியாக உட்கார்ந்துக் கொண்டு வந்தார். அடர்த்தியான மவுனம். ஊசுட்டேரி வரும்போது அவர் சொன்னார்.

“ ஒரு தமிழறிஞர் கேன்சர் நோய் இருந்தும் 8 ஆண்டுகள் உயிருடன் இருந்தாராம்” என்றார்.

அவர் முகத்தை ஒரு கணம் பார்த்தேன். “சார் நீங்க தேவையில்லாம கலவரமடையாதிங்க. நாம இப்ப டெஸ்டுக்குத் தான் போறோம்” பதட்டத்தோடு சொன்னேன்.

“நான் ஏற்கனவே ஒரு வீடியோவுல புற்றுநோய் அறிகுறிகள் பற்றி பார்த்து இருக்கேன் சார்” என்றுச் சொல்லி புன்முறுவல் பூத்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கச் சொன்னார்கள். “சார்.. ஜன்னல் உள்ள அறையாக பாருங்க. அப்பத்தான் வெளியே வேடிக்கை பார்க்க முடியும்” என்றார். 4வது மாடியில் அவர் கேட்ட சிறப்பு அறை கிடைத்தது. முதல்நாள் ரத்தபரிசோதனை மட்டுமே நடந்து. அடுத்தநாள் ‘பயாப்சி’ எனப்படும் சோதனை நடத்தினார்கள். சோதனை முடிவுகளுக்காக காத்திருந்தோம்.

அந்த மூன்றாது நாளில் நான் ஏதோ புத்தகத்தை படிக்க.. அவர் ஜன்னலை பார்த்துக் கொண்டிருந்தார். மரம் ஆடியது. உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார்.

“பிரபஞ்சனின் கடைசி எழுத்து” - எழுத்தாளரின் நினைவுக்குறிப்புகள்!

நான் அவரைப் பார்த்தேன். ஒரு கொடும் புயலில் ஆலமரம் ஒன்று வேரோடு சாய்வதைப் போல் இருந்தது. அன்று இரவு அவர் கவிதையொன்றை எழுதினார்.

என் ஜன்னலுக்கு வெளியே ஒரு மரம்.

ஏதோ ஒரு மரம். ஆனால் மரம்.

என்னைவிட மூத்ததுதான் நிச்சயமாக,

பத்து வயதாவது.

மதியப் போதுகளில்

நான்கு வண்ணப்பறவை ஒன்று

கிளையில் வந்து அமரும்.

படுத்திருந்தபடியே பறவையை

என்னால் பார்க்க முடியும்

ராஜவர்ணம் என்கிற சிவப்பும்

சமாதான வர்ணம் வெள்ளையும்

அழகெனச் சொல்லும் கருப்பும்

வனத்தின் பேர் சொல்லும் பச்சையுமாக

பறவை இருந்தது.

பறவைகளின் சிறகுகள் பேரழகுகள்

என்பதைப் பறவை அறியுமா?.

துணைப்பறவை அந்த அழகைச்

சீராட்டி இருக்குமா,

தெரியவில்லை.

நான்கு வண்ணப்பறவை

என் ஜன்னல் பக்கம் திரும்புவதில்லை,

அன்னார்ந்து வானத்தைப் பார்க்கும்

பார்த்தபடியே இருக்கும்…

பார்த்துக் கொண்டே இருக்கும்

சட்ஜ ரிஷப காந்தார தொனியில்

கீழ் மேலாக இரண்டு முறை

அவ்வப்போது கூவும், அல்லது பேசும்

எனக்குப் பறவை பாஷை தெரியாது.

மனித பாஷை இப்போதெல்லாம்

புரியும்படி இல்லை

வார்த்தைகள் ஒரு பக்கம் பகலையும்

ஒருபக்கம் இரவையும்

(இரவல்ல இருட்டையும்)

பூசிக் கொண்டு வருகின்றன.

நான்கு வண்ணப் பறவையைக்

காக்கைகள் கவனித்ததாகத் தெரியவில்லை

கிளிகள் கூட.

மரங்கொத்திகள், மீன் கொத்திகள் கூட.

கொக்குகள், குருவிகள், வண்டுகள் கூட.

நான்கு வண்ணப் பறவையும்

வானம் பார்த்ததே அன்றி

வானத்துப் பறவைகளைப் பார்ப்பதில்லை.

ஒரு கிளையில் இதுவும்

பிற கிளையில் மற்றவையும்.

நான்கு வண்ணப்பறவை

வந்து அமரும்போது மட்டும்

மரக்கிளை நெகிழ்ந்து

ஊஞ்சலாகத் தன்னை மாற்றிக் கொள்கிறது.

சற்று நேரம்

சற்றே வந்தமர்ந்த

நான்கு வண்ணப்பறவை

சற்றைக் கொரு தடவை

வானத்தை வெறிக்கும்

நீலத்தைக் குடிக்கும்

நர்ஸ் வந்து

மருந்து கொடுத்து அகன்ற

சற்றைப் பொழுதில்

நான்கு வண்ணப்பறவை

இல்லாமல் போனது

ஆனாலும்

இருந்து கொண்டிருக்கிறது.

( பயணம் தொடரும்)

Related Stories

Related Stories