உணர்வோசை

“காலம் எனது நீதியை எழுதும்”: பேரறிவாளனின் ஒருநாள் விடுதலையை மையமாக வைத்து உருவாகும் புகைப்படத் தொகுப்பு!

அண்ணன் பேரறிவாளனுக்கான நீதியைக் கோருகிற கணக்கிலா குரல்களில் இப்புத்தகமும் ஒன்றாக இருக்கும்.

“காலம் எனது நீதியை எழுதும்”:  பேரறிவாளனின் ஒருநாள் விடுதலையை மையமாக வைத்து உருவாகும் புகைப்படத் தொகுப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

என்னுடைய பதினேழு வயதில் நான் வீட்டைவிட்டு ஓடிவந்து திருப்பூருக்கு வந்தேன். அங்கு 45 ரூபாய் சம்பளத்திற்கு வேலையில் சேர்ந்து எனது வாழ்க்கைய ஆரம்பித்தேன். அடிப்படையில் ஊரில் என் குடும்பம் தலைமுறை தலைமுறையாக விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. திருப்பூர் பனியன் கம்பெனிகளில் எல்லா பிரிவுகளிலும் வெவ்வேறான வேலைகளை கற்றுச்செய்து மெல்லமெல்ல என்னை நிலைபடுத்திக் கொண்டேன். எனக்கு மேகலா அறிமுகமானார். எங்களுக்குள் காதல் உருவானது. நான் இந்நொடியில் இதுவரையிலான என் முழுவாழ்க்கையும் பார்த்தால், நான் கண்டடைந்த கலைவிருப்பத்துக்கும், குறைந்தபட்ச நேர்மையையாவது என் வாழ்வில் கடைபிடித்து நிற்பதற்கும் முக்கியக் காரணமாக இருப்பது மேகலாவின் நிபந்தனையற்ற காதல்தான்.

பி.இ முடித்துவிட்டு எம்.இ முதலாமாண்டு படித்துவந்த மேகலா, பன்னிரண்டாம் வகுப்பு முடிக்காத நிலையிலிருந்த என்னை எவ்வித சிறுதயக்கமும் இல்லாமல் திருமணம் செய்துகொண்டார். எங்களுக்கு இரண்டு குழந்தைகள், ஆதி மற்றும் தமிழினி. தேவைக்கு மீறி எதையும் சேர்த்துகொள்ளாத ஒரு வாழ்க்கையை நாங்கள் குடும்பமாக அமைத்துக்கொண்டோம். வாழ்வுச் சந்தர்ப்பத்தில் ஒருநாள், திருப்பூர் காதுகேளாதோர் பள்ளியில் வைத்து குக்கூ நண்பர்களையும் வினோத் பாலுச்சாமியையும் பார்த்தேன். அதன்பிறகு எனக்கும் புகைப்படக்கலை மீது ஒரு தனித்த விருப்பம் மனதுள் வளர்ந்தது.

வாழ்வின் ஒருகட்டத்தில் சூழல்நெருக்கடி காரணமாக திருப்பூரிலிருந்து காலிசெய்து கிருஷ்ணகிரிக்கு வந்துசேர்ந்தேன். ஒரு கம்பெனியை நிர்வாகம் செய்துகொண்டிருந்த சூழ்நிலையில், அவசரகதியில் ஒரே இரவில் அதை அப்படியே விட்டுவிட்டு இரவோடு இரவாக என் சொந்த ஊரான கிருஷ்ணகிரிக்கு வந்துவிட்டேன். புகைப்படம் எடுப்பது எனது உள்ளார்ந்த விருப்பமாக இருந்த சூழலில், ஒரு தொழிலாக அதை முன்னெடுப்பதற்கான முயற்சியில் இறங்கினேன். அப்படியான காலகட்டத்தில் திராவிட அரசியல் சார்ந்த நண்பர்கள், தமிழ்தேசியம் சார்ந்த தோழமைகள், அண்ணன் சீமானுடைய இயக்கத் தோழமைகள் என வெவ்வேறு வகையான நட்புவட்டம் எனக்கு உண்டானது. அதன்பின் அவர்களோடு இணைந்து வெவ்வேறு ஊர்களுக்கு இயக்க நிகழ்வுகளுக்காக சுற்றியலைந்தேன்.

“காலம் எனது நீதியை எழுதும்”:  பேரறிவாளனின் ஒருநாள் விடுதலையை மையமாக வைத்து உருவாகும் புகைப்படத் தொகுப்பு!

எல்லா இயக்க நண்பர்களிடமும் சிறுசிறு முரண்களும், வெவ்வேறு வகையான மனக்கசப்புகளும் இருப்பதை அறிந்துகொண்ட சூழ்நிலையில், நான் பழகிய தோழமைகள் கூட்டத்திலேயே எனக்கு எப்போதும் நம்பிக்கையான ஒரு ஆறுதல் உறவென்பது, அண்ணன் பேரறிவாளின் அப்பா குயில்தாசனும், அம்மா அற்புதம்மாளும் தான். எந்தக் காலத்திலும் நன்றிமாறாத உறவு என்பது எனக்கு பேரறிவாளனின் குடும்பம் தான். அவர்களோடு அறிமுகமாகி அவர்கள் குடும்பத்தில் ஒருவனைப்போல என்னைக் கருதுகிற ஒரு அன்பையும் அக்கறையையும் நாங்கள் அவர்களிடம் அடைந்தேன்.

ஒருசமயம், பேரறிவாளனின் அப்பா குயில்தாசன் பேரறிவாளனைப் பார்ப்பதற்காக மனுபோட்டு சிறைச்சாலைக்கு என்னையும் கூட்டிக்கொண்டு போனார். முதல் சந்திப்பு... இரண்டாம் சந்திப்பு... மூன்றாம் சந்திப்பு... என சந்திப்புகள் நீண்டுகொண்டே போனது. ஒவ்வொருமுறை சிறைச்சாலைக்குப் போகும்போதும் அண்ணன் பேரறிவாளனும் அவருடைய அப்பாவும் பேசிக்கொண்டு இருப்பார்கள். சின்னதான ஒரு சிரிப்பும், சிறு நலம்விசாரிப்பு மட்டுமே அந்த ஏழு சந்திப்புவரை எனக்கும் அண்ணன் பேரறிவாளனுக்கும். ஆனால், எட்டாவது சந்திப்பில் அண்ணன் என் இருகைகளையும் இறுகப்பிடித்தபடி பேசினார். கிட்டத்தட்ட அரைமணி நேரம் கடந்தும் என்னென்வோ விசயங்கள்குறித்தும் இருவரும் பேசிக்கொண்டோம்.

அப்போது, ஒரு சிறைக் கண்காணிப்பாளர் பேரறிவாளனிடம் வந்து, ‘பட்டாம்பூச்சி’ எனும் நாவலில் வருகிற ஒரு சிறைக்கைதி எப்படி தந்திரமாக சிறையிலிருந்து வெளியேறுகிறான் என்பதைப்பற்றிச் சொல்லி வெடித்துச் சிரித்தார். அதுமட்டுமில்லாமல், குறைந்த வயதில் குற்றம் செய்துவிட்டு சிறைக்கு வருகிற ஆட்களுடன் வாழ்வுசார்ந்த புரிதல்கள் உருவாவதற்கான உரையாடல் வைத்துக்கொள்வது, வகுப்புகள் எடுப்பது, கல்விசார்ந்த உறவுகளை கைதிகளுக்கு உருவாக்குவது, கணிப்பொறி வகுப்புகள் தொடங்குவது போன்ற நிறைய பணிகளை செய்வதுகுறித்து அந்த சிறைக்கண்காணிப்பாளர் மனம் விரியவிரிய அண்ணன் செய்துவரும் பணிகளைக் குறித்து பேசினார்.

அந்தச் சந்திப்புக்குப் பிறகு என் மனது முழுதும் நிலைகொள்ளாமலேயே இருந்தது. அண்ணனும் அந்த சிறைக்கண்காணிப்பாளரும் பேசிய உரையாடல்கள் என் மனதுக்குள் திரும்பத்திரும்ப ஒலித்தது. நான்கைந்து மாதங்கள் கழித்து, குயில்தாசன் அப்பா எனக்கு தொலைபேசியில் அழைத்தார். ‘மருத்துவமனை போகவேண்டும். கொஞ்சம் கூட வரமுடியுமா?’ என்றார். இருவரும் கிளம்பி மருத்துவமனைக்குப் போய்விட்டு வீடுதிரும்பிக் கொண்டிருந்தோம். வரும்வழியில் நான் அப்பாவிடம், ‘அப்பா... என் பையன் ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டுப் போயிடலாமாப்பா? கொஞ்ச நேரம் காத்திருக்கீங்களா?’ என்று சொல்லிவிட்டு நான் ஆதியை அழைத்துவர பள்ளிக்குள் போனேன். அப்பா வெளியே காத்திருந்தார்.

பள்ளிக்குள் ஆசிரியர்கள் சிலரோடு பேசிவிட்டு, ஆதியை அழைத்துக் கிளம்ப கொஞ்சம் நேரமாகிவிட்டது. வேகவேகமாக வந்து அப்பாவிடம், ‘அப்பா... மன்னிச்சுக்கோங்கப்பா காலதாமதம் ஆய்டுச்சு’ என்றேன். அதற்கு அப்பா, ‘இதேமாதிரிதாம்ப்பா... பேரறிவாளனும் ஏதோ காலேஜ்க்குப் போய்ட்டு திரும்பி வருவான்னு காத்துக்கிட்டே இருக்கேன்” என்ற வார்த்தைகளைச் சொன்னார். அந்த வார்தைகள் என்னை சுக்குநூறாக்கியது. ஏனென்றே தெரியவில்லை குரலும் உடம்பும் அன்று நடுங்கிக்கொண்டே இருந்தது. ஒரு தந்தையாக குயில்தாசன் அப்பா சொன்னதை என்னால் கடக்கவே முடியவில்லை.

ஒரு மகன் இருந்தும் அருகில் இல்லாமல் இருப்பது, அதுவும் சிறையிலிருப்பது என்பது எத்தகைய துயர் என்று என்னால் ஓரளவு உணரமுடிந்தது. உண்மையில் அன்று இரவு நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானேன். அடுத்தடுத்து அப்பாவையும், அம்மாவையும் அவர்கள் வீட்டுக்குப்போய் அடிக்கடி சந்திப்பதும் அவர்களோடு பேசுவதும் தொடர்ந்தது. அதில் எனக்கொரு நிம்மதி இருந்தது. ஆனாலும் அப்பாவின் அந்த தவிப்பு வார்த்தைகள் எனக்குள் எப்பவுமே கேட்கும். அதிலிருந்து என்னால் இப்பவும் மீளமுடிவதில்லை.

“காலம் எனது நீதியை எழுதும்”:  பேரறிவாளனின் ஒருநாள் விடுதலையை மையமாக வைத்து உருவாகும் புகைப்படத் தொகுப்பு!

தன் அக்காவுடைய மகள் திருமணத்தில் பங்கேற்பதற்கு அண்ணன் பேரறிவாளனுக்கு ஒரே ஒருநாள் பரோல் விடுதலை கிடைத்தது. அந்த திருமண நிகழ்வுக்கு அண்ணன் வந்தது, அவ்வளவு மனிதர்கள் அவரைப் பார்க்கக் காத்திருப்பது, தமிழ்நாட்டின் எல்லா மூலைகளிலிருந்தும் மக்கள் வந்திருந்தது, அந்த திருமண அரங்கமே வேறொரு மனஉணர்ச்சியில் நிறைவதை நான் எல்லோர் கண்களிலும் பார்த்தேன். மண்டபத்திற்குள் அவர் நுழையும்போது அவரை ஏராளமான காவல்துறையினர் அழைத்து வந்தனர். அவர்கள் எல்லோரையும் அண்ணன் நேராக உணவுக்கூடத்திற்குள் அழைத்துப்போய், எல்லோரையும் அமரவைத்து அவர்களுக்கான உணவுபரிமாறல் தொடங்கி, எல்லா காவலாளிகளும் சாப்பிட்ட பிறகுதான் அண்ணன் நிகழ்வுப்பகுதிக்கே வந்தார்.

அவருடைய பால்யகால நண்பர்கள் நான்கைந்து பேர் கூடிநின்று அண்ணனுடன் பேசுகிற ஒரு காட்சியைப் பார்த்தேன். அவரைத்தவிர எல்லோரின் கைகளிலும் குழந்தை இருந்தது. வாழ்கையை மகிழ வாழ்வதின் அடையாளம் தெரிந்தது. அதில் ஒரு நண்பர் மட்டும் அண்ணனுடைய நெஞ்சில் கைவைத்து விசும்பி விசும்பி அழுதகாட்சியை இப்போது நினைத்துப் பார்த்தாலும் எனக்கு உடல் நடுங்குகிறது.

எத்தனை எத்தனை அரசியல் தலைவர்கள், எவ்வளவு அதிகார ஆட்கள், நீதியரசர்கள் என எல்லாவிதமான அரசியல் அதிகார மட்டத்தினரும், பல்வேறு இயக்கத் தோழர்களும் குழுமி அண்ணனோடு உரையாடிக்கொண்டிருந்த அந்தச் சூழலிலும்கூட, அண்ணன் திடீரென இரண்டு மூன்று நண்பர்களை அழைத்துக்கொண்டு, அந்தத் திருமண அரங்கில் வேலைசெய்கிற சமையல்காரர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் எல்லாவிதமான கடைநிலைப் பணியாளர்களோடும் சேர்ந்து அவ்வளவு நேரம் மனம்விட்டுப் பேசிக்கொண்டிருந்தார்... அப்பொழுது நான் ஒன்றை அறிந்துகொண்டேன். அண்ணன் எங்கே எந்த நிலையில் இருந்தாலும் அவர் தன்னுடைய செயல்களை செய்துகொண்டேதான் இருக்கிறார். சிறிதும் அவர் அதைத் தவறவிடுவதில்லை.

“காலம் எனது நீதியை எழுதும்”:  பேரறிவாளனின் ஒருநாள் விடுதலையை மையமாக வைத்து உருவாகும் புகைப்படத் தொகுப்பு!

அண்ணன் பேரறிவாளன் சிறைசென்று இன்றுடன் 30 வருடங்கள் ஆகிறது. இந்த முப்பதாண்டு காலமும் அவருடைய வாழ்வு ஒரு கேள்வியைக் கேட்டுக்கொண்டே இருக்கிறது, ‘இந்த உலகத்தில் தனக்கான நீதியை எது எழுதும்?’. அந்த ஒருநாள் விடுதலை நிகழ்வில் அண்ணன் பேரறிவாளனின் இருப்பையும் அதுதந்த நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் புகைப்படங்களாக ஆவணப்படுத்த நினைத்து, அதைச் செய்தும் முடித்தேன். மனதுக்கு நெருக்கமானதொரு புகைப்படத்தொகுப்பாக அமைந்திருக்கும் இந்த படைப்பை ஒரு புத்தகமாக மாற்ற இருக்கிறோம். உலகம் முழுக்க அதிகாரத்தாலும் குரல்வளை நெரிக்கும் சட்டங்களாலும் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்ட போராளித் தலைவர்கள் பலரின் வாசகங்களை ஏந்தி இப்புத்தகம் உருப்பெறுகிறது.

அண்ணன் பேரறிவாளனுக்கான நீதியைக் கோருகிற கணக்கிலா குரல்களில் இப்புத்தகமும் ஒன்றாக இருக்கும். இப்புத்தகத்தின் நோக்கம் பரவலாக்கமே அன்றி விற்பனையல்ல, ஆகவே இதை அடக்கவிலை புத்தகமாக உருவாக்குகிறோம். இருவார காலத்திற்குள் புத்தகம் அச்சுமுடிந்து வெளிவருகிறது. புத்தக உருவாக்கத்தில் தோழமைகள் அவரவர் பங்களிப்பைச் செலுத்தியதால் இந்த புத்தகம் இந்த நல்லுருவில் சாத்தியமானது.

ஒருநாள்... உம் கைவிலங்குகள் கழன்றுவிழும் அண்ணா. அப்பா குயில்தாசனும் அம்மா அற்புதம்மாளும் உனது தோளில் கண்ணீர்சிந்தி அரவணைக்கிற என் மனக்காட்சி ஒருநாள் நிஜமாகும் அண்ணா. ‘சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து எழுந்து வரும்’ ஒரு புரட்சியின் வரியை உன்னோடு சேர்ந்து உச்சரிக்கும் நாள் விரைவில் வரும் அண்ணா!

வடிவமைப்புக்கு உதவிய தியாகராஜன், படத்திருத்தம் செய்துகொடுத்த வினோத் பாலுச்சாமி, சங்கர் அண்ணன், சீனு, கோவை முத்து, இராகுல் நகுலன், முத்துராசா குமார், மாசிலன், ராஜாராம் கோமதிநாயகம், பழனியப்பன் ஆகியோர்களுக்கு என் மனதின் நன்றிகள்!

- பாலா

banner

Related Stories

Related Stories