உணர்வோசை

“பெயர் சூட்டி காலில் விழுந்தால் போதாது; அக்கறை வேண்டும்” : தூய்மைப் பணியாளர்கள் துயர் துடைக்கப்படுமா?

துப்புரவுப் பணியாளர்களுக்குத் தூய்மைப் பணியாளர்கள் என்று பெயர் சூட்டினால் மட்டும் போதாது அவர்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.

“பெயர் சூட்டி காலில் விழுந்தால் போதாது; அக்கறை வேண்டும்” : தூய்மைப் பணியாளர்கள் துயர் துடைக்கப்படுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகளவில் கொரோனா எனும் கொடிய வைரஸ் கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் கொரொனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 527 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவிற்கு பலியானோர் என்ணிக்கை 15. இவை வெறும் எண்கள் அல்ல; ஒவ்வொன்றும் உயிர்கள்; குடும்பங்கள்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தங்கள் பணியைத் தொய்வில்லாமல் செய்து வருகின்றனர் தூய்மைப் பணியாளர்கள். முதல்வரும், பிரதமரும் தத்தம் கொற்றத்தவிசில் அமர, அதனை தாங்கியபடி நான்குத் துண்களைப் போல் நிற்கிறார்கள் மருத்துவத்துறையினரும், தூய்மைப் பணியாளர்களும்; காவல்துறையும்; ஊடகத்துறையும்.

மருத்துவர்களுக்கு அடுத்து நோய்க் கிருமிகளுடன் நேரடியாகப் போராடுவது இந்தத் தூய்மைப் பணியாளர்கள்தாம். தரமான முகக்கவசம், கையுறைகள் போன்றவை இல்லாமல் தூய்மைப் பணியாளர்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஊட்டச்சத்துள்ள உணவின்றி அரைப் பட்டினியில் வேலையைத் தொடருகிறார்கள்.

“பெயர் சூட்டி காலில் விழுந்தால் போதாது; அக்கறை வேண்டும்” : தூய்மைப் பணியாளர்கள் துயர் துடைக்கப்படுமா?

சாலைகளில் சாரைசாரையாகச் செல்லும் வாகனங்கள் இல்லாமல்; கூட்டம் கூட்டமாக ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்கள் இல்லாமல் நகரங்கள் சுடுகாடாக மாறாமல் நந்தவனமாகவே இன்னும் இருக்கச் செய்வது தூய்மைப் பணியாளர்களால்தான் என்பதை ஆளும் வர்க்கம் புரிந்துகொள்ள வேண்டும்.

தூய்மைப் பணியாளர்களின் ஒருநாள் வாழ்க்கை நகர்வுகளை உற்றுக் கவனித்தால் அவர்களின் கண்களின் ஓரத்தில் கசியும் கண்ணீர் தெரியும். முதல்வர் தன் மாநிலத்தை சுத்தமாக வைத்திருப்பதாக சாதனையை விளக்குகிறார் என்றார் அதில் பல தூய்மைப் பணியாளர்களின் வேதனை புதைந்து கிடக்கிறது.

ஊரடங்கு காரணமாக ஊரே தாமதமாக எழுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும்போது, கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக நகராட்சி துப்புரவு பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் காலை ஐந்தரை மணிக்கு அலுவலகம் வர வேண்டும். அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் சுமார் மூன்று கிலோ மீட்டர் முதல் பதினைந்து கிலோ மீட்டர் தூரம் வரை இருக்கும். காலை 5.45 மணிக்குள் அனைவரும் கையெழுத்திட வேண்டும். ஆறு மணிக்கு தங்களுக்கான மண்வெட்டி, கடப்பாரை, சாக்கடையை சுத்தம் செய்வதற்கு தேவையான இழுப்பான், பிளீச்சிங் பவுடர் மூட்டை, அதை தெளிக்கும் பாண்டு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அதிகாரிகள் சொல்லும் வார்டுகளுக்கு செல்ல வேண்டும். சுமார் 6.30 மணியிலிருந்து 7.30க்குள் வேலைகளைத் தொடங்கியிருக்க வேண்டும்.

மண்டையைப் பிளக்கும் வெயிலில் வியர்வையும் ஊற்றும். சுண்ணாம்பும் வியர்வையும் சேர்வதால் கைகள் எரியக் கூடும். பிளீச்சிங் பவுடர் அலர்ஜி இருப்பவர்களுக்கு கைகளில் அரிப்பு அதிகமாகி ரத்தம் கசியும். அதிலே வியர்வையும் உப்பும் சேர்ந்து எரிச்சலும் அரிப்பும் என சொல்லொணாத் துயரத்தில் ரத்தத்தையும் கண்ணீரையும் துடைத்துக் கொண்டு வேலையைப் பார்த்தபடி இருக்கிறார்கள்.

“பெயர் சூட்டி காலில் விழுந்தால் போதாது; அக்கறை வேண்டும்” : தூய்மைப் பணியாளர்கள் துயர் துடைக்கப்படுமா?

அதிகாலையில் எழுந்தது முதல் வேலை; பசி வயிற்றைக் கிள்ளும். ஆனால் நினைத்த நேரத்தில் உணவு உண்ண முடியாது. மீண்டும் அலுவலகத்திற்கு சென்றுதான் சாப்பிட முடியும் . இல்லையெனில் மேஸ்திரி திட்டித் தீர்த்துவிடுவார். இன்ஸ்பெக்டர் மிரட்டுவார். அதிகாரி பேனாவை எடுப்பார். வேலைக்கே சிக்கலாகிவிடும், முதலுக்கே மோசம் வந்துவிடும் என்பதால் அதிகாரிகள் கட்டளைகளுக்குப் பணிந்துதான் ஆக வேண்டும்.

இது மட்டுமின்றி ‘மாண்புமிகு’ முதல்வர் இவர்கள் நலனுக்காக செய்திருப்பது என்ன என்பதையும் பார்க்கலாம். தூய்மைப் பணியாள்ர்களின் சுகாதாரம் பற்றியும் தூய்மை பற்றியும் கொஞ்சமும் அக்கறை இல்லாத அரசுதான் எடப்பாடி அரசு. துப்புரவுப் பணியாளர்களுக்குத் தூய்மைப் பணியாளர்கள் என்று பெயர் சூட்டினால் மட்டும் போதாது; அவர்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.

இதை விட பெரிய லூட்டி, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அடித்ததுதான். தூய்மைப் பணியாளர்கள் சேவையைப் பாராட்டி அவர்கள் காலில் விழுந்து மரியாதை செய்தாராம். காலில் விழுவது என்பது அ.தி.மு.க அமைச்சர்களுக்கு புதிதல்ல; ஆனால் அவர்கள் காலை வாரி விடாமல் இருந்தால் சரிதான். காலில் விழுவதோ, பெயர் வைத்து கவுரவிப்பதாலோ அவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை.

சமூக இடைவெளி பற்றி வலியுறுத்தும் அரசு தூய்மைப் பணியாளர்களை குப்பை வண்டிகளிலும்; 52 பேர் செல்லக் கூடிய பேருந்துகளில் 150 தூய்மைப் பணியாளர்களையும் அடைத்துச் சென்றால் அங்கு சமூக இடைவெளி காற்றில் பறக்காதா? இது அதிகாரிகளின் கண்களுக்குதெரிய வில்லையா? அரசின் காதுகளுக்கு கேட்கவில்லையா?

“பெயர் சூட்டி காலில் விழுந்தால் போதாது; அக்கறை வேண்டும்” : தூய்மைப் பணியாளர்கள் துயர் துடைக்கப்படுமா?

தூய்மைப் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டதா? இல்லை. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட முகக் கவசங்கள் இரண்டே நாட்களில் கிழிந்துபோயின; அதை மாற்றி புதியதாகத் தரச் சொல்லிக் கேட்டால் அதையே ஓரம் அடித்து பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்ற உத்தரவு மட்டுமே வந்தது. கையுறையெல்லாம் கிழிந்த பிறகு இதுவரை புதிதாக எதுவும் வழங்கப்படவில்லை. வெறும் கைகளால்தான் சுத்தம் செய்துவருகிறார்கள்.

இவை மட்டுமா? காலையில் பணிமுடித்து வந்தவர்களுக்கு சரியான உணவு கூட வழங்கப்படாத நிலையில் மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள், நீதிபதிகள் வீடுகள் என அங்கு போயும் மருந்து அடித்து சுத்தம் செய்ய வேண்டும்.

மாநில அரசு இப்படி இருக்க மத்திய அரசோ தூய்மை இந்தியா என்று ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி சகட்டுமேனிக்கு பொய்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. அதற்கு மதுரையில் உள்ள விராலிப்பட்டி கிராமமே சத்திய சாட்சி.

பெத்தாலு
பெத்தாலு

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிய தூய்மை இந்தியா திட்டத்தின்படி, மதுரை உள்ளிட்ட இந்தியாவின் 187 மாவட்டங்கள் தூய்மை மாவட்டங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. 2017ல் தூய்மை இந்தியா திட்டம் மூன்றாவது ஆண்டில் அடியெடுத்துவைக்கும் சமயத்தில் மதுரையில் பொது இடங்களில் மலம் கழிக்கும் பழக்கம் ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்படி ஒருபுறம் இருக்க, மதுரையில், மற்ற தாலுகாக்களை விட வாடிப்பட்டி தாலுகா, விராலிப்பட்டி கிராமத்தில் துப்புரவு பணி செய்துவரும் பெத்தலு, தினமும் தெருக்களை கூட்டி, சாக்கடை அடைப்புகளை நீக்குவதுடன், பொது வெளியில் கிடக்கும் மலத்தை அள்ளியெடுத்து ஒரு சட்டியில் நிரப்பி தலையில் சுமந்துசென்று கொட்டுகிறார்.

விராலிப்பட்டியில் உள்ள பெத்தாலுவைப் போல பல தொழிலாளர்களின் நிலை வெளிச்சத்திற்கு வருவதில்லை என்பதுதான் பல கிராமங்களில் உள்ள தூய்மைப் பணியாளர்களின் அவல நிலை.

- அஜெய் வேலு

banner

Related Stories

Related Stories