உணர்வோசை

உயிர்காக்கும் மருத்துவர்களைப் பாதுகாக்க அரசுக்கு அக்கறையில்லையா? - பாதுகாப்பு கவசம் தராததன் பின்னணி என்ன?

கொரோனாவை எதிர்த்துப் போராடும் மருத்துவர்களுக்கான உயிர் உத்தரவாதம் இன்னும் கிடைக்கவில்லை. இதை யாரோ எவரோ சொல்லவில்லை. மருத்துவர்கள் தரப்பிலிருந்தேதான் இந்தக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

உயிர்காக்கும் மருத்துவர்களைப் பாதுகாக்க அரசுக்கு அக்கறையில்லையா? - பாதுகாப்பு கவசம் தராததன் பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாட்டிலேயே அதி உயர் சிறப்பான மருத்துவமனையாகப் போற்றப்படுவது, எய்ம்ஸ் எனப்படுகிற டெல்லி, அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை. பத்து நாள்களுக்கு முன்னர் அங்குள்ள உள்ளுறை மருத்துவர்கள் சங்கம் அனுப்பிய ஒரு முறையீட்டுக் கடிதத்தில்தான் அந்த அதிர்ச்சிக் குறிப்பு இடம்பெற்றிருந்தது!

“இப்போதைய கோவிட்-19 கொள்ளைநோய் பேரிடர் காலகட்டத்தில், 15 மார்ச் 2020 அன்று இரவு 11 மணியளவில், எங்கள் சங்கத்தின் நிர்வாகிகள், எய்ம்ஸ் மருத்துவமனையின் பல்வேறு வார்டுகளுக்கும் சென்று, நோய்த்தொற்றிலிருந்து தடுப்பதற்கான ’தனிநபர் தற்காப்பு வசதி’ இருக்கிறதா என்று ஆய்வுசெய்தோம். ஆனால், அப்போது, பெரும்பாலான வார்டுகளில் போதுமான எண்ணிக்கையில் உலகளாவிய முன்னெச்சரிக்கை வசதிகள் செய்யப்பட்டிருக்கவில்லை என்கிற வருத்தமான நிலைமையத்தான் கண்டோம். நமது நோயாளிகளுக்கு தன்னலமற்ற சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலிப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக்கூடிய ’தனிநபர் தற்காப்பு வசதி’ தங்குதடையில்லாமல் கிடைக்கும்படி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். கோவிட்-19 கொள்ளைத் தொற்றைச் சமாளிப்பதில், கொரோனா வைரஸ் நடவடிக்கைக் குழுவில் பங்காற்றும் உள்ளுறை மருத்துவர் சங்கத்தையும் கலந்தாலோசிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்...” என இன்னும் நீள்கிறது அந்தக் கடிதம்.

அதன் பிறகு பத்து நாள்கள் போனதே தெரியவில்லை. இதற்கிடையில் இரண்டு முறை நாட்டு மக்களுக்கு கொரோனா சிறப்புரையை பிரதமர் மோடி நிகழ்த்தியிருக்கிறார். மருத்துவர், சிகிச்சைப் பணியாளர்களைப் பாராட்டி அவர் கைதட்ட அறைகூவல் விடுக்க, மத்திய அமைச்சர் வரைக்கும் மணியடித்து பாராட்டை வெளிப்படுத்தினார்கள். ஆனால், சம்பந்தப்பட்டவர்களுக்கான உயிர் உத்தரவாதம் மட்டும் கிடைக்கவில்லை. இதை யாரோ எவரோ சொல்லவில்லை. மருத்துவர்கள் தரப்பிலிருந்தேதான் மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

உயிர்காக்கும் மருத்துவர்களைப் பாதுகாக்க அரசுக்கு அக்கறையில்லையா? - பாதுகாப்பு கவசம் தராததன் பின்னணி என்ன?

மார்ச் 19ஆம் தேதியன்று மத்திய நலவாழ்வுத் துறைச் செயலாளர் பிரீத்தி சுதன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், எய்ம்ஸ் உள்ளுறை மருத்துவர் சங்கத்தின் சார்பில், ”பேராசிரியர்களுக்கும் உள்ளுறை மருத்துவர்களுக்கும் முகக்கவசம் மற்றும் பிற பாதுகாப்பு வசதிகள் அன்றாடம் கிடைப்பதை உறுதிசெய்யவேண்டும். புற நோயாளிகள் பிரிவில் பணியாற்றும் அனைவருக்கும் அன்றாடம் புதுப்புது முகக்கவசம் வழங்காவிட்டால் அதன் மூலம் கூட தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் அதை முறையாக கவனிக்கவேண்டும். புற நோயாளிகள் கொண்டுவரும் தூய்மையற்ற பொருள்கள் மூலம் தொற்று வராமல் தடுக்க, கையுறைகளையும் பயன்படுத்தியபின் தூக்கியெறியக்கூடிய பேனாக்களையும் வழங்கவேண்டும்” என்று 15 அம்ச ஆலோசனைக் குறிப்பு வழங்கப்பட்டது.

அதையடுத்து ஆறு நாள்கள் ஆகியும் அங்கு உள்ளுறை மருத்துவர்களுக்கான அடிப்படை தற்காப்பு வசதிகள் அளிக்கப்படவில்லை என்பதையே அங்கிருந்து வரும் தகவல்கள் காட்டுகின்றன. எய்ம்ஸ் மருத்துவமனையில் மூத்த மருத்துவரான அமரிந்தர் சிங் மாலி என்பவர் இது தொடர்பான கோரிக்கையைக் கையில் பிடித்திருக்கும் ஒரு படம், இணையமெங்கும் பரவலாகி வருகிறது. பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் எனத் தலைப்பிடப்பட்டுள்ள அந்தக் குறிப்பில், “ஒவ்வொரு அரசு மருத்துவமனைப் பணியாளருக்கும் தற்காப்பு வசதியை அளிக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிடவேண்டும். ஏனென்றால் நமது மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம்சார் பணியாளர்கள் ஏன் துப்புரவாளர்களும்கூட நோயாளிகளை கவனிப்பதில் உரிய பாதுகாப்பு இல்லாமல் கதியற்று நிற்கிறார்கள்.” என்று அச்சிடப்பட்டுள்ளது.

அதாவது, எய்ம்ஸ் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் இந்த நிலை காணப்படுகிறது என்பதே டெல்லி மருத்துவ வல்லுநர்கள் சொல்லும் சேதி! தமிழ்நாட்டில் நிலவரம் என்ன?

உயிர்காக்கும் மருத்துவர்களைப் பாதுகாக்க அரசுக்கு அக்கறையில்லையா? - பாதுகாப்பு கவசம் தராததன் பின்னணி என்ன?

அன்றாடம் இரவு நேரங்களில் அதிசயப் பேட்டி கொடுக்கும் நலவாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாட்டில் தேவைக்கு அதிகமாக இலட்சம் கவசங்கள் இருப்பதாக வழக்கம்போல வீச்சு வீசினார். ஆனால் யதார்த்தம் அப்படி இருப்பதாகத் தெரியவில்லை. பெரும்பாலான அரசு மருத்துவக் கல்லூரிகளில் கைகழுவதற்கான கிருமிநாசினியும் தட்டுப்பாடாக இருக்கிறது என மருத்துவர்கள் தரப்பில் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதோடு, கொரோனாவும் சேர்ந்துகொள்ள மிகுந்த சிரமத்துடன் அவர்கள் பணியாற்றவேண்டிய சூழல்!

பொதுவெளியில் தனித்தனியாக மருத்துவர்கள் தங்கள் விசனத்தை, மனக்குமுறலைக் கொட்டினார்கள். அமைச்சர் விஜயபாஸ்கரின் ட்விட்டர் பக்கத்தில் பாதுகாப்பு வசதிகள் பற்றி கேள்வி கேட்டவரை, அந்த கணக்கை இயக்குபவர் பிளாக் (Block) செய்துவிட்டார் எனக் கூறி, மருத்துவர்களிடம் பரவலாக எதிர்ப்பும் கிளம்பியது. சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவர் மாணவர் அமைப்பு ஆகியவற்றின் சார்பில் பொதுவெளி கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அரசியல் தலைவர்களும் இதுகுறித்து கேள்வி எழுப்பினர்.

கல்லப்பாடி எனும் ஊரில் சமுதாய சுகாதார நிலையத்தில் தொற்றுத் தடுப்பு முகாமில், முகக்கவசம் வழங்கப்படாததால், ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு மருத்துவர் ஒருவர் பரிசோதனை செய்த காட்சி  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உரிய முகக்கவசம் இல்லாததால், ஒவ்வொருவரும் அவரவவே கவசம் வாங்கிக்கொள்ள வேண்டும் என டீன் பெயரில் வெளியிட்ட அறிவிப்பு இன்னுமொரு அதிர்ச்சியை அளித்தது. சென்னை, எழும்பூரில் உள்ள மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் வெளியிட்ட சுற்றறிக்கை ஒன்றிலும், மருத்துவர்களே தனிநபர் பாதுகாப்பு வசதிகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

உயிர்காக்கும் மருத்துவர்களைப் பாதுகாக்க அரசுக்கு அக்கறையில்லையா? - பாதுகாப்பு கவசம் தராததன் பின்னணி என்ன?

இந்த விவகாரம் குறித்து ஊடக விவாதங்களும் அரசியல் தலைவர்களின் கவனமும் எழத் தொடங்கியதை அடுத்து, போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாகவும் இது குறித்து நேர்மாறாக தகவல் பரப்பினால் நடவடிக்கை பாயும் என அமைச்சர் விஜயபாஸ்கர் மிரட்டும் தொனியில் சொல்லிப்பார்த்தார். உயிர் அச்சத்திலும் இயல்பான உரிமைக் கோபத்திலும் உள்ள அரசு மருத்துவர்களோ அடுத்தடுத்து யதார்த்தமான நிலைமையை ஆதாரங்களோடு முன்வைத்துவருகிறார்கள்.

இதற்கிடையில் கொரோனா தொற்றைக் கண்டுபிடிப்பதற்கான சோதனைக்கருவியை அரசுக்கு வழங்கும் உரிமத்தை குஜராத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்கே ஏகபோகமாகத் தரப்படுவதாக பிரச்னை எழுந்துள்ளது. அந்த அனுமதி தாமதத்தைப் போலவே இந்த பாதுகாப்புக் கருவி/ வசதிகளில் தாமதமும் மற்றுமொரு விவகாரத்துக்குள் சிக்கியுள்ளது என்கிறார்கள். எச்.எல்.எல். லைஃப்கேர் எனும் மத்திய அரசின் நிறுவனம்தான், இந்த தற்பாதுகாப்பு சாதனங்களைக் கொள்முதல் செய்யக்கூடிய ஒரே நிறுவனம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நலவாழ்வுத் துறையின் இயக்குநர் ஜிதேந்திர அரோரா என்பவர், எட்டு எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கும் இது குறித்து இரண்டு வாரங்களுக்கு முன்னர் தனியாக சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் பிப்ரவரி 20 முதல் மூன்று மாதங்கள் வரை கொரோனா தடுப்பு கவச உடை உள்பட தற்பாதுகாப்பு சாதனங்கள் கொள்முதல் செய்யக்கூடிய அதிகாரம் எச்.எல்.எல். லைஃப்கேர் நிறுவனத்துக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் ஏதாவது ஒரு நிறுவனத்தின் அல்லது சில நிறுவனங்களின் பாதுகாப்பு சாதனங்களை வாங்கி, பிறகுதான் அதை ஆங்காங்கே உள்ள மத்திய அரசின் மருத்துவமனைகளுக்கும் அனைத்து மாநில மருத்துவமனைகளுக்கும் அனுப்பமுடியும்.

இத்தனைக்கும் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதியன்றே, உலக சுகாதார அமைப்பின் சார்பில், அனைத்து உறுப்பு நாடுகளுக்குமாக மருத்துவர், மருத்துவப் பணியாளர்களுக்கான தற்பாதுகாப்புக் கருவிகள் தொடர்பான அறிவுறுத்தல் வெளியிடப்பட்டது. உலகத்திலேயே அதிக உயிரிழப்புகளை எதிர்நோக்கிவரும் இத்தாலி நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பத்தில் ஒரு பகுதியினர், மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பிற பணியாளர்கள் என ஆதாரங்களுடன் தகவல்கள் வெளியாகியுள்ள. எளிதில் புறந்தள்ளிவிடக்கூடிய சங்கதியா இது?

ஆனால் டெல்லி சாம்ராஜ்யத்தில் இது பற்றி பெரிதாக யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. மத்திய அரசின் நலவாழ்வுத் துறை இணைச்செயலாளர் இலாவ் அகர்வால், உலக சுகாதார அமைப்பு இப்படியொரு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறதா என செய்தியாளர்களிடமே எதிர்க்கேள்வி கேட்பதில்தான் திறமையை வெளிப்படுத்தினார்.

உயிர்காக்கும் மருத்துவர்களைப் பாதுகாக்க அரசுக்கு அக்கறையில்லையா? - பாதுகாப்பு கவசம் தராததன் பின்னணி என்ன?

இந்த நிலையில்தான், தமிழக சட்டமன்றத்தில் இது குறித்து எதிர்க்கட்சி தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது, இலட்சக்கணக்கானவற்றை வாங்குவதற்கு ஆணை தரப்பட்டுள்ளதாகவும் அவை வந்துகொண்டிருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் எந்தக் கூச்சமும் இல்லாமல் சர்வசாதாரணமாகச் சொன்னார்.

உண்மையில் அரசாங்கத் தரப்புக்கு இதில் நிதிப் பற்றாக்குறைதான் பிரச்னை என்றால், அதை வெளிப்படையாக அறிவிக்கலாம்; அது ஒன்றும் கையாலாகாத்தனமாக யாரும் எடுத்துக்கொள்ளப்போவதில்லை. கடந்த காலங்களில் பேரிடர் சமயங்களில் பெரிய தொழில்நிறுவனங்கள், பெரும் தொழிலதிபர்கள், வசதிபடைத்த உயர் வருவாய்ப் புள்ளிகள், திரையுலகப் புள்ளிகள் போன்றவர்கள் கோடிகோடியாக, அரசிடம் நிதியுதவிக்காக வழங்கியிருக்கிறார்கள். இப்போதும் பெரிய நிறுவனங்கள் சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைக்காக ஒதுக்கும் நிதியை கூடுதலாக இதற்கு வழங்கச் சொன்னால் யார் மறுக்கப்போகிறார்கள்? சிக்கல், அதைச் செய்கிறோமா இல்லையா என்பதே!

இந்தச் செயல்பாடுகளை முடுக்கிவிட்டாலே, நிதி என்பது பெரிய தடங்கலாக இருக்காது. கவசம் போன்றவற்றை குறைந்த விலையில் அதிக தரத்துடன் உற்பத்தி செய்வதற்கான வழிகாட்டலை அதிகம் பாதிக்கப்பட்ட சீனா, தென்கொரியா உள்பட்ட நாடுகளும் தரத் தயாராக இருக்கின்றன. அந்த வேலையை பின்னலாடைக்குப் பெயர்பெற்ற திருப்பூர் போன்ற ஊர்களுக்கு வழங்கினால், அங்குள்ள மக்களுக்கு ஒரு தொழில்வாய்ப்பாகவும் பொருளாதாரப் புத்துயிர்ப்பாகவும் அமையும். உயிரைக் காக்கவேண்டியவர்களின் உயிர்களைப் பாதுகாக்கும் பணியை அரசாங்கம் தாமதமாகவாவது கையில் எடுக்குமா?  

banner

Related Stories

Related Stories