உணர்வோசை

’அடிமை அரசின் மூன்றாண்டு’ : ’ஆளுமை’ என்னும் சொல்லும்.. எடப்பாடியின் இலக்கணமும்..! - ஒரு பார்வை

திராவிட இயக்கங்கள் வளர்த்தெடுத்த இடஒதுக்கீடு எனும் சமூக நீதிக் கொள்கையை தன் மூன்றாண்டு ஆட்சியில் முடமாக்கி விட்டார் எடப்பாடி பழனிசாமி.

’அடிமை அரசின் மூன்றாண்டு’ : ’ஆளுமை’ என்னும் சொல்லும்.. எடப்பாடியின் இலக்கணமும்..! - ஒரு பார்வை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கடந்த சில நாட்களாக தமிழக நாளிதழ்களில்களிலும், விளம்பர போஸ்டர்களிலும் எடப்பாடி ஆட்சியின் மூன்றாமாண்டுக்கு மிகப்பெரிய விளம்பரங்களைப் பார்க்க முடிந்தது. அதிலும் பல இடங்களில் சிறந்த நிர்வாகத் திறமை, ஆளுமை என்கிற சொற்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தது.

அதைப் பார்த்த பலருக்கும் உண்மையில் எடப்பாடி பழனிசாமி ஒரு ஆளுமையா? ஆளுமை என்கிற சொல்லுக்குரியவரின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்குமா? என்கிற கேள்விகள் எழுந்தது. அதைக்கொண்டு எடப்பாடியின் சில செயல்பாடுகளை ஆராய்ந்து பார்க்க முடிவு செய்தோம்.

முதலில், ஆளுமை என்ற சொல்லுக்குப் பொருள் தேடியபோது, இதுதான் அதன் சரியான பொருள் என அறுதியிட்டுக் கூற முடியவில்லை என்ற போதும், ஒரு மனிதரின் அக, புறப் பண்புகள் குறித்த சில சித்திரங்களை அது முன்மொழிகிறது. ஆளுமை என்ற தமிழ்ச் சொல் "பர்சனாலிட்டி" (Personality) என்னும் ஆங்கிலச் சொல்லைக் குறிக்க உருவானது.

இதன் மூலம் இலத்தீன் மொழிச் சொல்லான “பர்சனா” (persona) என்ற சொல்லில் இருந்து உருவானதாக கூறப்படுகிறது. “பர்சனா” (persona) என்ற லத்தீன் மொழிச் சொல்லுக்கு “மறைப்பு” என்று பொருள். மிகச் சரியாகச் சொன்னால் ‘முகமூடி’ என்று பொருள். எனவே ஆளுமை என்பது ஒருவர் அணிந்திருக்கும் முகமூடி என்கிறது விக்கிப்பீடியா. ஆளுமைகள் பற்றிய தோராயமான விளக்கம் இதுவே; இனி விஷயத்திற்கு வருவோம்.

“தனக்குப் பின்னரும் நூறு ஆண்டுகள் அ.தி.மு.க இருக்கும்” என்று சட்டமன்றத்தில் முழங்கியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சுயநினைவின்றி அனுமதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

அதாவது அ.தி.மு.கவை ஒற்றைத் தலைவராக வழி நடத்திய தலைமை சுகவீனமுற்று மருத்துவமனையில் சுயநினைவின்றி இருந்திருக்கிறார். அப்போது கட்சியை வழிநடத்தும் பொறுப்பு சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆகியோரின் கைகளுக்கு வருகிறது. ஆளுமை மிக்க தலைவர்களாக இவர்கள் இருந்திருந்தால், ஜெயலலிதா எப்படியான முதல்வராக தொடர்ந்தாரோ எதை எல்லாம் பேசினாரோ அதை அப்படியே காப்பாற்றியிருக்க வேண்டும்.

ஜெயலலிதா எதிர்த்த திட்டங்கள் !

ஆனால், கதை அப்படிப் போகவில்லை. அவர் தேறி வரமாட்டார் என்பதைத் தெரிந்துகொண்ட ஓ.பி.எஸ், தன்னையும் தன்னை சார்ந்தோரையும் மகிழ்ச்சிப்படுத்த ஜெயலலிதா கடுமையாக எதிர்த்து வந்த உணவுப் பாதுகாப்பு மசோதா, உதய் மின் திட்டம், நீட் தேர்வு போன்ற தமிழகத்தின் பிரத்யேகமான அடிப்படை கட்டமைப்பைச் சிதைக்கும் இந்த மசோதாக்காளுக்கு அப்போதே ஒப்புதல் அளித்துவிட்டார்.

அதற்கு அடுத்து வந்த எடப்பாடி, இந்தியாவிலேயே மிகச்சிறந்த பொதுவிநியோக அமைப்பை பாழ்படுத்தி முழு நேர ரேஷன் கடை முறையை ஒழித்து பகுதி நேரமாக்கினார். இப்போது பகுதி நேரமும் இல்லையாம். இனி நடமாடும் ரேஷன் கடை என ஏதோ ஒன்றை உருட்டுகிறார்கள்.

’அடிமை அரசின் மூன்றாண்டு’ : ’ஆளுமை’ என்னும் சொல்லும்.. எடப்பாடியின் இலக்கணமும்..! - ஒரு பார்வை

சத்துணவுக்கு ஆபத்து

சத்துணவுத் திட்டத்தின் நோக்கம் அனைவருக்கும் தெரியும். காமராஜர், எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா என நான்கு முதல்வர்கள் மெருகூட்டிக் கொண்டு வந்த திட்டம் அது. அந்தத் திட்டத்தையே ஒழித்துக்கட்டுவதற்கும் சம்மதம் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

அதன் தொடக்கமாக இருப்பது, ஒரு குறிப்பிட்ட சாதி பிரிவினருக்கு விடப்பட்டதாகச் சொல்லும் சாபக்கதை. மண்ணுக்குக் கீழே விளையும் பூண்டு, வெங்காயமாக பிறவி எடுக்க நேரிடும் என ’முனிவர்’ ஒருவர் சாபம் கொடுத்துவிட்டதால் பிராமணர்கள் பூண்டு வெங்காயம் சாப்பிடுவதில்லை. அது அவர்கள் நம்பிக்கை, அவர்களைப் பொறுத்தவரை அவை சபிக்கப்பட்ட உணவுகள்.

ஆனால், ஒரு சிறு குழுவின் நம்பிக்கையின் அடிப்படையில் தனியார் தொண்டு நிறுவனம் பூண்டு, வெங்காயம் இல்லாமல் கொடுக்கும் சத்தில்லாத ஆபத்தான உணவை தமிழக அரசுப்பள்ளிகளில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கு கொண்டு வந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

சிதைக்கப்படும் காவிரி டெல்டா

இதற்கு அடுத்து, காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிப்பை எடுத்துக் கொள்வோம். காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தனியாருக்கு அனுமதியளித்து விட்டது மத்திய அரசு. அது மாநில அரசின் அனுமதியோடுதான் வழங்கவும் பட்டது.

இப்போது தேர்தலை மனதில் வைத்து டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவிக்கிறாராம். மாநில அரசு அறிவித்து விட்டால் போதுமா? அதற்கு அனுமதி அளிக்கவேண்டியது மத்திய அரசு அல்லவா? பழைய திட்டங்கள் தொடரும் என்றும் ஒருபக்கம் அறிவிக்கிறார்கள். மக்களை முட்டாள் என நினைத்து, தங்களின் முட்டாள்தனத்தை ஊரைக்கூட்டி வெளிக்காட்டும் இவர்களை என்ன சொல்ல ?

’அடிமை அரசின் மூன்றாண்டு’ : ’ஆளுமை’ என்னும் சொல்லும்.. எடப்பாடியின் இலக்கணமும்..! - ஒரு பார்வை

கொலைசெய்யப்படும் கல்வி முறை

தமிழகத்தில் உயர்கல்வி, பள்ளிக்கல்வி கட்டமைப்புகள் முழுக்க சிதைக்கப்படுகிறது. இட ஒதுக்கீட்டின் முன்னோடி மாநிலம் தமிழகம், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்று பனகல் அரசர் காலத்தில் இருந்து அந்த கோஷம் அரசியல்ரீதியாக ஆக்கம் பெற்று வந்தது தியாகம் செறிந்த வரலாறு. அதை தன் மூன்றாண்டு ஆட்சியில் முடமாக்கி விட்டார் எடப்பாடி பழனிசாமி.

நீட் தேர்வுக்கு அனுமதி கொடுத்தது, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிப்பு என மத்திய அரசு கொண்டு வர நினைக்கும் நாசகாரத் திட்டங்களை, முதலாளியின் மனம் கோணாது எப்படியாவது செய்துவிட வேண்டும் என்று நினைக்கும் இந்த அரசை அடிமை அரசு என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல?

கூத்தாகும் குடியுரிமை

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அறிவுள்ள அனைவரும், இது சிறுபான்மை மக்களுக்கும், இந்துக்களுக்கும் கூட எதிரானது எனச் சொல்லிவிட்டார்கள். ஆனால், கோடிக்கணக்கான மக்களை நாடற்றவர்கள் ஆக்கும் சட்டத்தை பிடிவாதமாக ஆதரிக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இப்படி ஒன்றா இரண்டா? சொல்லிக்கொண்டே போகலாம்; எழுதிக்கொண்டே போகலாம்.

தமிழகம் வடிவம் பெற்றது கடந்த நாற்பதாண்டு கால திராவிட இயக்கங்களின் ஆட்சிக்காலத்தில்தான். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.கவுக்கும் பங்குண்டு. தி.மு.கவுக்கு பெரும்பங்குண்டு.

சமூக நினைவோடு அரசியல் ரீதியாக தமிழகத்தைச் சமைத்ததில் தி.மு.க.,வினுடையது பெரும்பங்காகும். இது வரலாறு தெரிந்தவர்களுக்குத் தெரியும். ஆனால், ஒரு மரணத்தின் மூலம் திடீரென ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமியை ஆளுமை என்றோ ஆளுமை மிக்கவர் என்றோ சொல்வது பொருத்தமாகுமா?

’அடிமை அரசின் மூன்றாண்டு’ : ’ஆளுமை’ என்னும் சொல்லும்.. எடப்பாடியின் இலக்கணமும்..! - ஒரு பார்வை

40 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கானவர்களின் தியாகத்தால் உருவான தமிழக கட்டமைப்பை ஒட்டுமொத்தமாகச் சிதைத்த, சிதைத்துக் கொண்டிருக்கும் ஒருவர் ஆளுமையா? என்பது நாம் ஒவ்வொருவரும் கேட்கவேண்டிய கேள்வி. ஜெயலலிதா மரணம், சசிகலாவின் தயவில் முதல்வர் பதவி பின்னர் மோடியுடன் சேர்ந்து சசிகலாவை சிறைக்கு அனுப்பிவிட்டு எடப்பாடி முதல்வரானது ஒரு விபத்து. ஆனால், அது பா.ஜ.க என்னும் கட்சியால் உருவாக்கப்பட்ட செயற்கை விபத்து.

எடப்பாடி முதல்வர் ஆன கதை

ஜெயலலிதா மறைந்த அன்று இரவோடு இரவாக அவசர அவசரமாக அப்போதைய தற்காலிக கவர்னர் வித்யாசாகர் ராவால் முதல்வராக்கப்பட்டார் ஓ.பன்னீர்செல்வம். அவரிடமிருந்து சசிகலா பதவியை எடுத்துக்கொள்ள தீர்மானித்தபோது, அதுவரை கிடப்பில் போட்டிருந்த வழக்கில் தீர்ப்பைச் சொல்லி அவரை சிறைக்கு அனுப்பினார்கள். அந்தச் சூழலை பயன்படுத்திய எடப்பாடி பழனிசாமி அவரிடம் இருந்து பதவியைப் பெற்று தன்னை பதவியில் அமர்த்திக் கொண்டார்.

வித்யாசாகர் ராவ் உள்ளிட்ட பா.ஜ.க மீடியேட்டர்கள் ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் இருவரையும் இணைத்தார்கள். ஓ.பி.எஸ் என்ன நிபந்தனையுடன் அ.தி.மு.கவில் இணைந்தார் தெரியுமா? ஜெயலலிதா சந்தேக மரணத்தில் உள்ள உண்மைகளை வெளியுலகிற்குச் சொல்லவேண்டும் என்பதுதான் அவர் போட்ட நிபந்தனை. அந்த நிபந்தனையின் பேரில்தான் சில ஓய்வு பெற்ற நீதியரசர்கள் இன்னும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

’அடிமை அரசின் மூன்றாண்டு’ : ’ஆளுமை’ என்னும் சொல்லும்.. எடப்பாடியின் இலக்கணமும்..! - ஒரு பார்வை

நீதிமன்றங்களின் பாரபட்சமான தீர்ப்புகளே இந்த சட்டவிரோத ஆட்சி நீடிக்கக் காரணமானது. மோடி கொண்டு வரும் அத்தனை பேரழிவு மசோதாக்களையும் ஆதரித்து அ.தி.மு.கவில் உள்ள சிறுபான்மை, மதச்சார்பற்ற சக்திகளுக்கும் துரோகம் செய்து அ.தி.மு.கவை பா.ஜ.கவின் கிளைக்கட்சி போல நடத்திக் கொண்டிருக்கிறார்கள் ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் இருவரும். ஆளுமை என்றால் தனிப்பட்ட தோற்றம் என்று பொருள் கொண்டால் எடப்பாடியை வைத்து விவாதிக்க ஏதும் இல்லை.

ஆனால், அதன் லத்தீன் மூலச் சொல் ஆளுமையை முகமூடி என்கிறது. எடப்பாடி பழனிசாமி மோடியின் முகமூடி. மத்தியில் ஆளும் பா.ஜ.க ஆட்டிவைக்கும் பொம்மை. தான் பதவியில் இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தமிழகத்தை சிதைத்துக் கொண்டிருக்கும் ஒரு பொம்மை. ஜெயலலிதாவே கொல்லப்பட்டு விட்டார் என்று ஆளுமைகள் சொல்லும்போது அவருக்கு எதிரான ஒரு ஆட்சியைச் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி.

அ.தி.மு.க ஆளும் கட்சி என்பதால் அதனால் அடையும் லாபங்களுக்காக அ.தி.மு.க சிதறாமல் இருக்கிறது. ஆட்சியால் அனுகூலம் அடையாதவர்கள் சிதறிச் சென்று விட்டார்கள். இப்போது அ.தி.மு.கவில் இருப்பவர்கள் அனைவருமே ஆளும் கட்சி என்பதால் இருக்கிறார்கள். நாளை இந்த நிலை மாறிவிடும்; அ.தி.மு.க சிதறும். அக்கட்சியை பா.ஜ.கவே சிதறடிக்கும். பா.ஜ.க தன் வலுவான தலைமை ஒன்றை அ.தி.மு.கவுக்குள் உருவாக்கி விட்டது. மிக மிக வலுவாக பா.ஜ.க அ.தி.மு.கவுக்குள் காலூன்றிவிட்டது. இதுதான் ஆளுமையின் லட்சணம்.

Related Stories

Related Stories