உணர்வோசை

சாதி - மதத்தின் கோரப்பிடியில் சென்னை ஐ.ஐ.டி - மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் பேராசிரியர்கள்! 

“தமிழ்நாடு அமைதியான மாநிலம் என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினோம்... என் மகளை இப்படி செய்துவிட்டீர்களே...” என அந்த ஐ.ஐ.டி.மாணவி பாத்திமாவின் அம்மா எழுப்பிய ஓலக்குரல் உங்கள் காதுகளில் ஒலிக்கிறதா?

சாதி - மதத்தின் கோரப்பிடியில் சென்னை ஐ.ஐ.டி - மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் பேராசிரியர்கள்! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

சென்னையில் உள்ள ஐ.ஐ.டி. உயர்கல்வி நிறுவனம் சாதி, மதத்தின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் கொலைக்களமாக மாறியிருப்பதை பாத்திமா லத்தீப் மரணம் உறுதி செய்திருக்கிறது.

கடந்த 8ஆம் தேதி கேரள மாநிலம் கொள்ளத்தை சேர்ந்த பாத்திமா என்ற மாணவி சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள மகளிர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மாணவியின் செல்போனை அவரது குடும்பத்தினர் ஆராய்ந்த போது, அதில் தனது தற்கொலைக்கு உதவி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உட்பட 3 பேராசிரியர்கள் தான் காரணம் என மாணவி பதிவிட்டுள்ளார். அவர்கள் மதரீதியாக தவறாக பேசியதாகவும், தரக்குறைவாக பேசியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் இரண்டு பேராசிரியர்களின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்கள் தன்னை துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் செல்போன் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சாதி - மதத்தின் கோரப்பிடியில் சென்னை ஐ.ஐ.டி - மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் பேராசிரியர்கள்! 

மேலும், மாணவியின் இந்த பதிவு, தற்கொலைக்கு முந்தைய நாள் அன்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தை தொடர்ந்து, மாணவியின் தந்தை, தனது மகளின் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என கோரியுள்ளார். அமைதியான பெண், மானுடவியல் படிக்க வேண்டும் என்பதற்காக சென்னை ஐ.ஐ.டி.,க்கு வந்தவர் பாத்திமா.

அவரது பெயர்தான் அவர் சாவுக்கு காரணமா?. தமிழகம் அமைதியான மாநிலம் என்பதால் தானே என் மகளை படிப்பதற்காக சென்னைக்கு அனுப்பினேன் என்று அந்த மாணவியின் தாய் கண்ணீர் வடிக்கும் போது, நம் மனசாட்சி நீதிதேவதையை நோக்கி நியாயக் கேள்விகளை எழுப்புகிறது.

இந்திய உயர்கல்வித் துறையைப் பொறுத்தவரை, பேராசிரியர்கள் சுரண்டுபவர்களாகவும்,மாணவர்கள் அறிவுத்தளத்திலும், பொருளாதாரரீதியாகவும், கலாச்சாரரீதியாகவும் சுரண்டப்பட்டு வருகின்றனர். மத்திய அரசின் தவறான கல்விக் கொள்கைகளை இத்தகைய நிலையை ஏற்படுத்தியுள்ளன.

ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளின் எதிர்காலம் பட்டப்படிப்பின் இறுதியாண்டில் ஆய்வு வழிகாட்டியாக இருக்கும் குறிப்பிட்ட பேராசிரியரை மட்டுமே சார்ந்துள்ளது. அதுபோல ஐஐடி-க்களை பொறுத்தவரை பாடத்திட்டம் பற்றி மையப்படுத்தப்பட்ட விதிமுறைகளில்லை. உதாரணமாக பல துறைகளிலும் கடைசி செமஸ்டரில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வேட்டையும், வாய்மொழித்தேர்வையும் வைத்தே மாணவ, மாணவிகளுக்கு கிரேடு எனும் தகுதி வழங்கப்படுகிறது.

பாத்திமா லத்தீப் குற்றஞ்சாட்டும் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன்!
பாத்திமா லத்தீப் குற்றஞ்சாட்டும் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன்!

ஒரு மாணவன் எடுக்கும் தகுதி மதிப்பெண்ணை வைத்தே அவன் எதிர்காலம் நிச்சயிக்கப்படும். அது, சம்பந்தப்பட்ட பேராசிரியரின் கையில்தான் இருக்கிறது. அதாவது, ஐ.ஐ.டி.,யில் படிக்கும் ஒரு மாணவன் அல்லது மாணவியின் எதிர்காலமே சம்பந்தப்பட்ட பேராசிரியர் வசம் சென்றுவிடும். அவர் நினைத்தால் என்ன வேண்டுமானலும் செய்யலாம் என்பதே மத்திய அரசின் உயர்கல்வி கொள்கையாக உள்ளது.

ஐஐடி போன்றஉயர்கல்வி நிறுவனங்கள் இன்னும் உயர் சாதியினரிடம் சிக்கியிருக்கிறது. படிக்க வரும் உயர் சாதியல்லாத மாணவர்கள், தாழ்த்தப்பட்ட மாணவர்கள், சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கடுமையாக தொல்லைகளுக்கு ஆட்பட வேண்டியிருக்கும் என்ற கேவலமான நிலை உள்ளது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு கூட முழுமையாக வழங்கப்படுவது இல்லை.

சாதி - மதத்தின் கோரப்பிடியில் சென்னை ஐ.ஐ.டி - மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் பேராசிரியர்கள்! 

ஒரு மாணவனோ, மாணவியோ பேராசிரியரால் பாதிக்கப்பட்டால் யாரிடமும் முறையிட முடியாது.

கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மாணவர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டதால், இரு தரப்பு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தாக்குதலில் சூரஜ் என்ற மாணவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு, ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள ஓர் அறையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. சமீபத்தில் ஐ.ஐ.டி சைவம் மற்றும் அசைவ உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு எனத் தனித் தனி வழி ஒதுக்கப்பட்டதாகப் பிரச்னை எழுந்தது.

இப்படி நவீன தீண்டாமைகள் சென்னை ஐ.ஐ.டி.,யில் தொடர்ச்சியாக நிலவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சென்னை ஐ.ஐ.டி.,யில் 14 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு மேமாதம் சந்திப் என்ற வட இந்திய மாணவர் தற்கொலை, 2011ம் ஆண்டு பிப்ரவரியில் அனூப் வலாப்ரியா என்ற மாணவர் தற்கொலை, 2011 ஆம் ஆண்டு மே மாதம் நிதின்குமார் ரெட்டி என்ற மாணவர் தற்கொலை, 2012 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நெருகு மானசா என்ற மாணவி தற்கொலை, கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கேரளாவைச் சேர்ந்த மாணவன் ஷஹல் கொர்மத் தூக்கிட்டுத் தற்கொலை, கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி வடமாநிலத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி ரஞ்சனா குமாரி என்பவர் தூக்கிட்டுத் தற்கொலை, கடந்த ஜனவரி மாதம் 28ந் தேதி உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் கோபால்பாபு தற்கொலை, இப்போது பாத்திமா லத்தீப் என்ற கேரள மாணவியின் தற்கொலை என ஐ.ஐ.டி கல்விக்கூடம், கொலைக்கூடமாக உள்ளது. இதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு ஒரு பெண் பேராசிரியரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஐ.ஐ.டி.,யில் நிகழும் ஒவ்வொரு தற்கொலைக்கு பின்னரும் ஒவ்வொரு கதை ஜோடிக்கப்படும். பத்திரிகையாளர்கள் கூட ஐ.ஐ.டி.,க்குச் சென்று செய்தி சேகரிக்க முடியாது. காவலாளிகளை ஏவி பேராசிரியர்கள் தாக்குதலில் ஈடுபடுவார்கள். இதெல்லாம் கடந்த கால நிகழ்வுகள். தற்போது பாத்திமா லத்தீப் முக்கியமான தடயத்தை விட்டுச் சென்றுள்ளார்.

சாதி, மத ஆதிக்க அரக்கனான அந்த பேராசிரியர் சுதர்சன பத்மநாபனையும், மற்ற சாதி வெறியர்களையும் அடையாளம் காட்டிவிட்டுச் சென்றுள்ளார். இந்தியா முழுவதிலிருந்து பாத்திமா மரணத்திற்கு நீதிகேட்டும், சாதி- மத வெறியர்களுக்கு தண்டனை அளிக்கக்கோரியும் போராட்டக்குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. மாணவர்கள் அணி, அணியாக திரள்கிறார்கள். சென்னை ஐ.ஐ.டி., போராட்டக்களமாக மாறி உள்ளது.

படித்தவன் சூதும், வாதும் பண்ணினால்... போவான்.. போவான் அய்யோ எனப் போவான் என்ற பாரதியின் கவிதை வரிகள் சுதர்சன பத்மநாபன்களை நினைவுப்படுத்துகின்றது. கல்வி நிலையங்களில் இந்துத்துவகும்பல்களின் அத்துமீறல் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவதை சுதர்சன பத்மநாபன்களை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.

சாதி - மதத்தின் கோரப்பிடியில் சென்னை ஐ.ஐ.டி - மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் பேராசிரியர்கள்! 

தமிழ்நாடு அமைதியான மாநிலம் என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினோம்... என் மகளை இப்படி செய்துவிட்டீர்களே...” என அந்த மாணவியின் தாய் கேட்டபோது தமிழர்களாகிய நாம் வெட்கித் தலைகுனிய வேண்டுமா? அநீதிக்கு எதிராக கொதிக்க வேண்டுமா?

கல்வி நிலையங்களை காவிமயமாக்கும் போக்கை தவிர்க்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் குரலெழுப்பி வருகின்றனர்.

தமிழர்கள் மதசார்பற்றவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய காலம் இது. உயர்கல்வியில் மதம் கோலோச்சுவதை எதிர்த்து, சிறுபான்மையினருக்கும், பாதிக்கப்பட்டோருக்கும் ஆதரவாக நம் குரலை உயர்த்த வேண்டிய நேரமும் இதுதான்!

Related Stories

Related Stories