உணர்வோசை

“பெரியாரைவிட தமிழ்த் தேசியவாதி இந்த நாட்டில் இருந்திருக்க முடியுமா?” - ஊடகவியலாளர் ப.திருமாவேலன் உரை!

பெரியாரை தமிழரல்ல என்று சொல்பவர்களும், தமிழ் தேசியத்துக்கு விரோதி என்று சொல்பவர்களும் தான் தமிழுக்கு விரோதி; தமிழருக்கு விரோதி; தமிழ்நாட்டுக்கு விரோதி.

“பெரியாரைவிட தமிழ்த் தேசியவாதி இந்த நாட்டில் இருந்திருக்க முடியுமா?” - ஊடகவியலாளர் ப.திருமாவேலன் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

’பெரியாரும் தமிழ் தேசியமும்’ என்ற தலைப்பில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் மேரிலாந்தில், அமெரிக்க மனிதநேயர் சங்கம் நடத்திய மாநாட்டில் ஊடகவியலாளர் ப.திருமாவேலன் அவர்கள் 22.9.2019 அன்று உரையாற்றினார்.

அவரது உரை பின்வருமாறு:-

தமிழ்நாட்டில் பொருளற்று, இன்னும் சொன்னால், அதனுடைய உண்மையான சித்தாந்தங்களை உணராமல், அதற்கான எந்த அர்ப்பணிப்பு உணர்வும் இல்லாமல், அதற்கான தத்துவார்த்த பின்புலங்கள் எதுவும் தெரியாமல், பல்வேறு சிந்தனையற்ற மனிதர்களின் கையில் சிக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு வார்த்தை இருக்குமானால், அதற்குப் பெயர்தான் தமிழ்த் தேசியம்.

தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை திராவிட இயக்கம் என்கின்ற சொல்லுக்குள் இருக்கிறது.

தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை திராவிட இயக்கம் என்கின்ற சொல்லுக்குள் இருக்கிறது. தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை தந்தை பெரியார் என்கின்ற வார்த்தைக்குள் இருக்கிறது; அவருடைய வாழ்க்கைக்குள் இருக்கிறது.

பெரியார்
பெரியார்

தமிழ்த் தேசியத்தினுடைய பிதாமகர்கள் என்று இன்றைக்குத் தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக் கொண்டிருக்கின்ற பழைய ராஜராஜ சோழன்கள், பழைய பலவேட்டு அறிஞர்கள், தங்களின் இழந்த ஜமீன்களை மீண்டும் மீட்பதற்காக இற்றுப்போன தங்களுடைய ஜரிகைக் குல்லாக்களோடு எத்தனை நாடகங்களைப் போட்டாலும், தமிழ்த் தேசியத்தினுடைய இயக்கம் என்பதை மீட்டெடுக்க முடியாது. ஏனென்றால், ஏற்கெனவே தமிழ்நாட்டில், 1900-த்தின் தொடக்கக் காலத்தில் தமிழ்த் தேசிய இயக்கம் என்பது தொடங்கப்பட்டு விட்டது. அதற்குத் திராவிட இயக்கம் என்பதுதான் பெயர்.

தமிழ் என்பதும், திராவிடம் என்பதும் ஒரே பொருள் தருகின்ற இரு வேறு வார்த்தைகள்.

பெரியாருடைய எழுத்துகளை, பெரியாருடைய பேச்சுக்களை, பெரியார் நடத்திய பத்திரிகைகளை, பெரியாருடைய கட்டுரைகளை உண்மையில் கண் இருந்தவன் படித்திருப்பானேயானால், அவனுக்குத் தெரியும், தமிழ் என்பதும், திராவிடம் என்பதும் ஒரே பொருள் தருகின்ற இரு வேறு வார்த்தைகள் என்பதுதான்.

மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர்:

தமிழ் என்பதும், திராவிடம் என்பதும் ஒரே பொருளில் அவரால் சொல்லப்பட்டது. அவரால் சொல்லப்பட்டது என்றால், தந்தை பெரியார் சொல்வதற்காக நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்த அதிகப்பிரசங்கிகள் சொல்வார்களேயானால், தமிழ்நாட்டு வரலாற்றில் மிகப்பெரிய அறிஞன் என்று நாம் இன்றளவும் கொண்டாடக்கூடிய, இன்னும் நூறாண்டுகள் ஆனாலும், இப்படி ஒரு தமிழறிஞன் பிறந்து வர முடியாது என்கின்ற பெருமை ஒரு தமிழறிஞருக்கு இருக்குமானால், அது மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள்தான். பாவாணாருடைய கருத்தும் அதுதான், தமிழ் என்பதும், திராவிடம் என்பதும் ஒரு பொருள் தரக்கூடிய இரு வேறு சொற்கள் என்பதுதான்.

தேவநேயப்பாவாணர்
தேவநேயப்பாவாணர்

பெரியாரைப் படிக்காதவர்கள், நீங்கள் பெரியாரைக் கூட படிக்கவேண்டாம்; இன்றைக்குத் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் முதலில் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணருடைய ‘திராவிடத்தாய்' என்ற நூலையும், அவருடைய ‘ஒப்பியன் மொழி நூல்' என்ற நூலையும் படித்துவிட்டு, அதற்குப் பிறகு நீங்கள் தமிழ்த் தேசியம் பேசுங்கள். பாவாணர் சொல்வது என்னவென்றால், ‘‘இக்கால மொழியியலும், அரசியலும் பற்றி தமிழும், அதனின்று திரிந்த திராவிடமும் வேறு பிரிந்து நிற்பினும் பழங்காலத்தில் ‘திராவிடம்' என்றதெல்லாம் தமிழே. திராவிடம் என்று திரிந்தது தமிழ் என்னும் சொல்லே.” இதை ஒப்பியன் மொழி நூல் என்ற நூலில், 15ம் பக்கத்தில் எழுதியவர் தந்தை பெரியார் அல்ல, பாவாணர்தான் எழுதியிருக்கிறார்.

‘தமிழ் என்பதுதான் - தமிழம் என்றும் - த்ரமிள என்றும் - திரமிட என்றும்- திரவிட என்றும் - த்ராவிட என்றும் - இறுதியில் திராவிடம்’ என்றும் உச்சரிக்கப்பட்டது’ என்று எழுதியவர் பாவாணர்.

ஆரியம் என்பதற்கு, எது எதிர் என்றால், திராவிடம்! எனவே, பெரியார் ‘திராவிடம்' என்கின்ற சொல்லை இனச் சொல்லாகவோ அல்லது மொழிச் சொல்லாகவோ பயன்படுத்தவில்லை. அதில் முதலில் நமக்கே ஒரு தெளிவு வேண்டும். ‘திராவிட இனம்' என்று பெரியார் தன்னை அழைத்துக் கொள்ளவில்லை. திராவிட மொழிக் கூறுகளைச் சேர்ந்த நாம், திராவிட மொழி பேசுபவர்கள் என்பதற்காகவும் சொல்லவில்லை. திராவிடம் என்பதை நான் ஒரு அரசியல் சொல்லாகப் பயன்படுத்துகிறேன் என்று பெரியார் எழுதியிருக்கிறார்.

“பெரியாரைவிட தமிழ்த் தேசியவாதி இந்த நாட்டில் இருந்திருக்க முடியுமா?” - ஊடகவியலாளர் ப.திருமாவேலன் உரை!
ப.திருமாவேலன்

அவர் திராவிடம் என்கின்ற வார்த்தையைத் தேர்ந்தெடுக்கின்ற காலகட்டத்தில் அவர் சொன்னது, ‘‘ஆரியம் என்பதற்கு எது எதிர் என்றால், திராவிடம். அதனால், நான் திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டுகிறேன்.‘திராவிடர் கழகம்' என்று நான் பெயர் வைக்காமல் போயிருந்தால், வேறு என்ன பெயர் வைத்திருப்பேன் என்று சொன்னால், சூத்திரர் கழகம் என்று வைத்திருப்பேன்'' என்றார். இதுதான் தந்தை பெரியார்.

1956ம் ஆண்டுகளில் மொழிவாரி மாகாணங்கள் பிரிந்த பிறகு, தமிழ்நாடு சென்னை மாகாணமாக உருவான பிறகு, கன்னடமும், தெலுங்கும், மலையாளமும் பிரிந்த பிறகு, இப்போதாவது நீங்கள் தமிழர் கழகம் என்று சொல்லக்கூடாதா? என்று கேட்டபோது, 1955ம் ஆண்டு இறுதிக் காலகட்டத்தில், நவம்பர் அல்லது டிசம்பரில் அவர் எழுதிய தலையங்கத்தில், ‘‘ஆரியனுக்கு, திராவிடன் என்று சொன்னவுடன் எவ்வளவுக் கோபம் வருகிறதோ, அவ்வளவு கோபம் தமிழன் என்ற வார்த்தையைச் சொல்லும்போது எப்போது வருமோ, அப்போது நான் தமிழர் கழகம் என்று வேண்டுமானால் பெயர் சூட்டத் தயாராக இருக்கிறேன்'' என்கிறார்.

அப்படியானால், தன்னுடைய அரசியல் தத்துவத்திற்கு எந்த வார்த்தை சரியான வார்த்தையாக இருக்கும் என்று அவர் நினைத்தாரோ, அந்த வார்த்தையை அவர் தேர்ந்தெடுத்து திராவிடர் கழகம் என்று பயன்படுத்தினார்.

தனித்தமிழ் தந்தை மறைமலையடிகள் :

இன்று தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் தமிழ் அறிஞர்களா? தமிழ் உணர்ச்சி உள்ளவர்களா? மறைமலையடிகளைவிட, இன்று தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் தமிழ் அறிஞர்களா? தமிழ் உணர்ச்சி உள்ளவர்களா? அவரை விட இவர்கள் தமிழ்ப் பற்றாளர்களா?

மறைமலை அடிகளார்
மறைமலை அடிகளார்

அதேபோல, மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் தமிழ்த் தொண்டாற்றிய 27 பேரின் பட்டியலை சொல்லும்போது, தொல்காப்பியர், திருவள்ளுவரில் தொடங்கி, 11வது இடத்தில் தந்தை பெரியாரைக் குறிப்பிடுகிறார், தமிழ்த் தொண்டாற்றியவர்கள் யார், என்பதில், 27 பேரை வரிசைப்படுத்துவதில் 11வது இடத்தை பெரியாருக்குத் தருகிறார் பாவாணர் என்றால், இன்றைக்குத் தமிழ்த் தேசியம் பேசுபவர்களைவிட, பாவணர் என்பவர் தந்தை பெரியாரை அறியாதவரா?

மார்க்ஸுக்கு ஒரு லெனின் கிடைத்ததைப்போல, வள்ளுவருக்குக் கிடைத்தவர்தான் தந்தை பெரியார். அதேபோல், தமிழ்நாட்டில் தமிழ்ப் பாதுகாப்புக் கழகத்தை உருவாக்கி, தமிழ்நாட்டில் திருக்குறளை வீதிதோறும், ஊர்தோறும் திருவள்ளுவர் மன்றங்களை உருவாக்கி வளர்த்தெடுத்தவர் தமிழ் அறிஞர் இலக்குவனார் அவர்கள். மார்க்ஸுக்கு ஒரு லெனின் கிடைத்ததைப்போல, வள்ளுவருக்குக் கிடைத்தவர்தான் தந்தை பெரியார் என்று சொன்னவர் இலக்குவனார். இலக்குவனாரைவிட, இன்றைக்குத் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் தமிழ்ப் பற்றாளர்களா?

பெரியார் தன்னுடைய வாழ்நாளில் பேசிய தமிழ்த் தேசிய கருத்துகளுக்கு இணையாக, நான் பெரியாருடைய ஐந்தாறு வரிகளை மட்டும் சொல்கிறேன். தமிழ்த் தேசியத்தினுடைய பிதாமகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் யாராவது இந்த வார்த்தைகளை உச்சரித்து இருக்கிறார்களா? அல்லது உச்சரிப்பதற்கான முதுகெலும்பாவது அந்தத் தமிழ்த் தேசியவாதிகளுக்கு இருந்திருக்கின்றதா என்பதை வரலாற்றினுடைய பக்கத்தில் இருந்து நாம் யோசித்தாக வேண்டும்.

தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய வாழ்நாளில் ஏராளமான கருத்துகளை, இந்தத் தமிழ் உணர்வுக்கு, தமிழ் இனத்திற்கு, தமிழ்நாட்டினுடைய விடுதலைக்குப் பேசினார்கள் என்று சொன்னால், அதை அடுக்குவதற்கான கால நேரம் என்பது இப்போதைக்கு இல்லை.

பெரியார்
பெரியார்

தந்தை பெரியாரைவிட தமிழ்த் தேசியவாதி இந்த நாட்டில் இருந்திருக்க முடியுமா?ஆனால், ஒரே ஒரு வார்த்தை, 1955ல் பெரியார் எழுதுகிறார்: தமிழ், தமிழ்நாடு என்று பெயர்கூட இந்த நாட்டிற்கு இருக்க இடமில்லாத நிலை ஏற்பட்டுவிடுமானால், என்னுடைய வாழ்வு எதற்காக இருக்கவேண்டும்? என்று எழுதிய தந்தை பெரியாரைவிட தமிழ்த் தேசியவாதி இந்த நாட்டில் இருந்திருக்க முடியுமா?

தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால், தமிழ்நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும், நாகரிகத்தையும் மறந்தான். தமிழன் தன்னை இந்து என்று கருதியதால், தனது மானத்தையும், ஞானத்தையும், பகுத்தறிவையும், உரிமையும் இழந்தான் என்று 1939ல் பேசியவர் தலைவர் தந்தை பெரியார் அவர்கள். இதைவிட தமிழ்த் தேசியத்திற்கான கூற்று வேறு என்ன வேண்டும்?

“திராவிடர் கழகத்திற்குத் திருக்குறள்தான் வழிகாட்டி, வேறு நூல் இல்லை” என்று 1948ல் சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள்.

தந்தை பெரியாரின் மூன்று முக்கிய கொள்கைகள்!

‘‘திராவிடர் கழகம் எனது தலைமைக்கு வந்த பிறகு, மூன்று முக்கிய கொள்கைகளைச் சொல்லி வருகிறேன்.

1.மனிதன் இழிவு நீங்க வேண்டும்.

2. எனது தமிழ்நாடு தனியாக ஆகவேண்டும்.

3. அதுவரை வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டும்.

நமக்கு ஆக வேண்டியதெல்லாம் இந்த மூன்று கொள்கைகள் வெற்றியடைய வேண்டும் என்பதே'' என்று 1951ல் சொன்ன தந்தை பெரியாரே, தமிழ்த் தேசியத்தினுடைய மூலவர்.

‘‘நாம் திராவிடன் அல்லது தமிழன் என்ற பெயரை வைத்துக்கொள்ளாமல், வேறு பெயர் வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், ‘சூத்திரர் கழகம்' என்றுதானே வைத்துக் கொள்ளவேண்டும்'' என்று 1959ல் சொன்னவர் அவரே!

இந்தி மொழியால் தமிழ் கெட்டுவிடும் என்று நான் வருத்தப்படவில்லை. இந்தி மொழியால் மட்டுமல்ல, வேறு எந்த மொழியாலும் நம் மொழி கெட்டுவிடாது. ஆனால், நான் இந்தி மொழியை எதிர்க்கக் காரணம், இந்தியால் நம்முடைய கலாச்சாரம் அடியோடு அழிந்துவிடும். இப்போதே வடமொழி நாட்டில் புகுந்து, நம்முடைய கலாச்சாரம் எவ்வளவோ கெட்டுவிட்டது. அதற்காக நாம் இந்தியை எதிர்த்துப் போராடவேண்டியது இருக்கிறது'' என்று, 1948ல் இந்தித் திணிப்பை தமிழர்களின் மீது நடந்த பண்பாட்டுப் படையெடுப்பாக உருவகப்படுத்தியதைப்போல, ஒரு தமிழ்த் தேசிய சிந்தனை என்பது இருந்திருக்க முடியுமா?

‘‘உண்மையைச் சொல்லவேண்டுமானால், ஆரியம் சமயத் துறையில் ஆதிக்கம் பெற்றதாலும், ஆங்கிலம் அரசியல் முதலிய துறைகளில் ஆதிக்கம் பெற்றதாலேயே, தமிழர்களுக்கு இன உணர்ச்சி பலப்படவில்லை, குறைந்துவிட்டது'' என்று, தனது இறப்புக்கு ஓராண்டிற்கு முன்பு 1972ல் சொன்னவர் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.

தமிழிலிருந்து சைவத்தையும், ஆரியத்தையும் போக்கிவிட்டால்,நமக்குப் பழந்தமிழ் கிடைத்துவிடும். தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது. இன்று அது வடமொழி கலப்பால், இடது கை போல பிற்படுத்தப்பட்டு விட்டது. இந்நோய்க்குக் காரணம், மதச்சார்புடையோரிடம் தமிழ் மொழி சிக்கிக் கொண்டதுதான். தமிழிலிருந்து சைவத்தையும், ஆரியத்தையும் போக்கிவிட்டால், நம்மை அறியாமலேயே நமக்குப் பழந்தமிழ் கிடைத்துவிடும் என்று சொல்லி, தனித்தமிழ் இயக்கத்தினுடைய சிந்தனையை தனது சிந்தனையாக சொன்னவர்தான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.

பெரியார் ஏற்றுக்கொண்ட இரண்டே இரண்டு அறிவாளிகள் திருவள்ளுவரும், அவ்வையாரும்தான். ‘‘நம்முடைய பண்டைய திராவிட மக்களிடையே இரண்டு பெரியார்களைக் குறிப்பிடவேண்டுமானால், ஆண்களில் திருவள்ளுவரையும், பெண்களில் அவ்வையாரையும்தான் நாம் சிறந்த அறிவாளிகளாகச் சொல்ல முடியும்'' என்று, பெரியார் ஏற்றுக்கொண்ட இரண்டே இரண்டு அறிவாளிகள் திருவள்ளுவரும், அவ்வையாரும்தான்.

‘‘மொழி உணர்ச்சியில்லாதவர்களுக்கு நாட்டு உணர்ச்சியோ, நாட்டு நினைப்போ எப்படி வரும்? நம் பிற்கால சந்ததியினருக்காவது சிறிது நாட்டு உணர்ச்சி ஏற்படும்படி செய்யவேண்டுமானால், மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும். அன்றியும், சமுதாய இன உணர்ச்சி சிறிதாவது இருக்கவேண்டுமானாலும், மொழி உணர்ச்சி இருந்தால்தான் முடியும்'' என்று தன்னுடைய மரணத்திற்கு ஓராண்டிற்கு முன்பு சொன்னவர் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.

பெரியார் பொன்மொழிகள்
பெரியார் பொன்மொழிகள்

இப்படி தமிழ்த் தேசியத்தினுடைய அனைத்துக் கூறுகளுக்கும், தன்னுடைய சிந்தனையில் இடம் தந்தவர்தான் தந்தை பெரியார் அவர்கள். தமிழ்த் தேசியத்தினுடைய ஆட்களின் பரப்புரையில், நம்மவர்களுக்கே ஒரு மயக்கம் ஏற்பட்டுவிட்டது; ஒருவேளை பெரியார், தமிழுக்கு எதிராக இருந்தாரோ, தமிழினத்திற்கு எதிராக இருந்தாரோ என்று, சில இளைஞர்களுக்கு அதுபோன்ற மயக்கங்கள் ஏற்படுகின்ற சூழ்நிலையில், பெரியாருடைய தமிழ்த் தேசிய சிந்தனைகளை மீண்டும் நாம் புதுப்பித்து நாடெங்கும் பிரச்சாரம் செய்யவேண்டிய காலகட்டமாக இந்தக் காலகட்டம் அமைந்திருக்கின்றது.

பெரியாரிடம் தமிழ்த் தேசியக் கூறுகள் எத்தனை இருக்கின்றன என்பதை நான் பட்டியலிட்டபோது, கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிந்தனைகளை காண முடிந்தது.

பெரியாரிடம் கண்ட தமிழ்த்தேசியக் கூறுகள்:

1. தமிழர் இனப்பெருமை

2.தமிழ்நாட்டுப் பெருமை

3.தமிழர் கடந்தகாலப் பெருமை

4.தமிழ்ப்பெருமை

5.தமிழுக்கு முதன்மை

6.நாட்டின் பெயர் தமிழ்நாடு

7.தனித்தமிழ்நாடு

8.வடமாநிலத்தவர் எதிர்ப்பு

9.மலையாள ஆந்திரர் கன்னடர் எதிர்ப்பு

10.இந்திய அரசு எதிர்ப்பு

11.தமிழே ஆட்சிமொழி

12. தமிழே பயிற்றுமொழி

13.தமிழே வழிபாட்டுமொழி

14.தமிழ்நாட்டை தமிழனே ஆளவேண்டும்.

15. தமிழ்நாட்டில் தமிழனே வாழவேண்டும்.

16. சமஸ்கிருத எதிர்ப்பு

17. மார்வாடி எதிர்ப்பு

18. ஈழத்தமிழர் நலன்

19.இந்தித்திணிப்பு எதிர்ப்பு

20.மொழிவாரி மாகாண ஆதரவு

21.தட்சிணப்பிரதேச எதிர்ப்பு

22.வடவர் சுரண்டல் எதிர்ப்பு

23.திருக்குறள் பரப்புதல்

24.தமிழ்நாட்டில் தமிழனுக்கே வேலை.

25.தமிழ்நாட்டில் மத்திய அரசு தலையிடாமை.

26.இது வடவருக்கான சுதந்திரம்

27.வட இந்தியத்தலைவர்கள் எதிர்ப்பு

28.தமிழறிஞரைப் போற்றுதல்

29. தமிழர் தலைவர்களை அரவணைத்தல்

30.தமிழிசைக்கு ஆதரவு

31.தமிழர் கலைக்கு ஆதரவு

32.தமிழ் மருத்துவம்

33.தமிழர் பண்பாடு

34.தமிழர் வாழ்க்கைமுறை

35.வடவர் பண்டிகைக்கு எதிர்ப்பு

36.வடவர் பழக்கவழக்கங்களுக்கு எதிர்ப்பு

37.தமிழர் விழாக்களுக்கு ஆதரவு

38.பொங்கல் திருநாளே தமிழர் திருநாள்

39.பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு

40.பார்ப்பனீய கொள்கை எதிர்ப்பு

41ஏகாதிபத்திய எதிர்ப்பு

42.தமிழ்த்தொழிலாளர் நலன்

43. தமிழ் முதலாளிகள் நலன்

44.வெளிநாடு வாழ் தமிழர் நலன்

45.தமிழர்களுக்குள் பிரிவினை இல்லை

46.சாதி எதிர்ப்பு போராட்டங்கள்

47.தமிழர் ஒற்றுமையை வலியுறுத்தல்

48.தமிழர் என்ற சொல்லாடல்

49. தமிழரே பூசகர்.

50. தமிழர் திருமண முறை

51.பெண் விடுதலை

52. கற்பு அனைவர்க்கும் பொது

53.விதவையர் மறுமணம்

54.காதல் மணம்

55. கூட்டுறவு வாழ்வியல்

56. தனியுடமை எதிர்ப்பு

57.பொதுவுடமை

58.இதழ்களுக்கு தமிழில் பெயர்

59.மனு சாஸ்திர எதிர்ப்பு

60.பிராமணாள் சொல் எதிர்ப்பு

61.இது ஒரு நேஷன் அல்ல

62.இந்து முஸ்லீம் ஒற்றுமை

63. வகுப்புவாதம் எதிர்ப்பு

64.ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு

65.சுதந்திர நாள் எதிர்ப்பு

66.ஜனநாயகத்தின் போலித்தன்மை

67. நாடாளுமன்ற எதிர்ப்பு

68. தேர்தல் எதிர்ப்பு

69. தேர்தலில் பங்கெடுக்காமை

70.இது பணநாயகம் எனல்

71.பார்ப்பன பத்திரிகைகள் எதிர்ப்பு

72. நீதிமன்றங்கள் எதிர்ப்பு

73.மதச்சார்புள்ள அரசு எதிர்ப்பு

74.கிராம சீர்திருத்தம்

75. நாயக்கர் ஆட்சி எதிர்ப்பு

76. தமிழரல்லாத ஆட்சி எதிர்ப்பு

77. மலையாளிகளை வெளியேற்ற ஆதரவு

77. ஆந்திரர்களை வெளியேற்ற போராட்டம்

78.தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்

79. இந்து பண்பாட்டு எதிர்ப்பு

80.சிறுபான்மையரையும் தமிழர் ஆக்கிக்கொள்ளல்

81.நிலப்பரப்புக்காக போராடுதல்

82.தனித்தமிழ்

83.தமிழில் கலப்பு மொழிகள் தடுப்பு

84.இந்து அடையாளங்களை அழித்தல்

85.தமிழ் இலக்கியங்களில் ஆரியச்சார்பு நீக்குதல்

86.தமிழ் இலக்கியங்களில் சமஸ்கிருதச் சார்பு நீக்குதல்

87.இந்தி மொழி எதிர்ப்பு

88. இந்தி மொழித் திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள்

89.இயக்கங்களை ஒருகிணைத்தல்

90.தீண்டாமை எதிர்ப்பு

91. ஒடுக்கப்பட்டோர் நலன்

92,.வகுப்புவாரி பிரதிநிதித்துவம் எனப்படும் சமூகநீதி

93.இந்திய அரசியலமைப்பு எதிர்ப்பு

94. இந்தியக் கொடி எதிர்ப்பு

95.இந்திய எல்லை எதிர்ப்பு

96. தமிழகம் நீங்கலான இந்திய எதிர்ப்பு

97.தமிழர் அல்லாதாரைப் பிரிப்பது

98. தமிழர் இனஇழிவு நீக்கம்

99. தமிழ்நாடு தமிழருக்கே

100. நான் தமிழன் தான்.

எனவே, இன்றைக்குத் தமிழ்த் தேசியம் பேசுபவர்களை நீங்கள் நன்றாக அடையாளம் காணுங்கள். இப்படிப்பட்ட பெரியாரை தமிழரல்ல என்று சொல்பவர்களும், தமிழ் தேசியத்துக்கு விரோதி என்று சொல்பவர்களும் தான் தமிழுக்கு விரோதி, தமிழருக்கு விரோதி தமிழ்நாட்டுக்கு விரோதி.

- ப.திருமாவேலன், ஊடகவியலாளர்.

Related Stories

Related Stories