உணர்வோசை

பாரதிதாசனை சிறைக்கம்பிகளுக்கிடையே புகழ்ந்துரைத்த பேரறிஞர் அண்ணா! #Anna111 #திராவிடமாதம்

“புதியதோர் உலகு செய்வோம் கெட்ட போரிடும் உலகினை வேரோடு சாய்ப்போம்” என்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் எண்ணங்கள் பேரறிஞர் அண்ணாவை ஈர்த்தன.

பாவேந்தர் பாரதிதாசன்
பாவேந்தர் பாரதிதாசன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

திராவிட இயக்க கொள்கைகளின் சங்கநாதமாக பாவேந்தரை, பேரறிஞர் பாவித்தார். இதன் காரணமாகத் தான் அறிஞர் அண்ணா, “முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் ஒரு முழுமதி போலத் தமிழ்நாட்டில் தோழர் பாரதிதாசன் கவிதை தோன்றியுள்ளது. புரட்சிக்கருத்துக்கள் அவரது உள்ளத்தில் பொங்கிப் பூரித்துப் புதுமைக் கவிகளாக வெளிவருகின்றன. இயற்கையின் எழில், கலை நுணுக்கம் முதலியவை பற்றி அவர் இயற்றியுள்ள கவிதைகள் படிப்போரைக் களிப்புக் கடலில் ஆழ்த்தும்..” என்று குறிப்பிடுகிறார்.

பாவேந்தரை வியந்து பாராட்டிய அண்ணா, அவருக்கு 55வது பிறந்தநாள் விழா எடுத்து ரூ.25 ஆயிரம் நிதிதிரட்டிக் கொடுத்தார்.

அதுமட்டுமல்லாமல் அமெரிக்காவின் மகாகவியான வால்ட் விட்மன் உடன் பாவேந்தரை ஒப்பிட்டு ‘அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்’என்ற பெயரில் 01.04.1945ல் திராவிட நாடு இதழில், அறிஞர் அண்ணா வெளியிட்ட கட்டுரை ஒன்று தமிழன்னைக்கு முடிசூட்டியது போன்று அமைந்தது.

அத்தகைய சிறப்பு வாய்ந்த கட்டுரையின் சிலவரிகள் அண்ணாவின் மொழியில் இதோ…

வால்ட் விட்மன்
வால்ட் விட்மன்

அமெரிக்க நாட்டிலே, ஒரு பாரதிதாசன்! புதுக்கவி என்றும் புரட்சிக்கவி என்றும் கொண்டாடப்படுபவர். ஆனால் தமிழரின் தன்மானக் கோட்பாடுடையவர் புரட்சிக்கவி பாரதிதாசனைத் துவக்கத்திலேயே பாராட்டினர். அமெரிக்க நாட்டுப் பாரதிதாசனுக்கு, ஆரம்பக் காலத்திலே அஃதும் இல்லை. இன்றும் நமது கவியை இங்குள்ள ஏடுதாங்கிகள், ஏதேனும் கூறிடுவர், இறுமாப்புடன் அன்று, அமெரிக்க நாட்டுக் கவிஞனையும் அவ்விதமே ஏளனம் செய்தனர். பின்னரோ! புகழுரையைப் பொழிந்தனர்.

புரட்சிக் கவிஞர், வால்ட் விட்மன் என்பாரையே, நாம், அமெரிக்க நாட்டுப் பாரதிதாசன் என்கிறோம். அவர், கவி எப்படி இருத்தல் வேண்டும், என்பது பற்றித் தமது கருத்தைப் பல சமயங்களிலே கூறியிருக்கிறார். ஒருகவி, கவியின் இலட்சணத்தை விளக்குவது, அவரை நாம் அறியவும் அவர் மூலம் பொதுவாகவே கவிதாமணிகள் எவ்வண்ணம் இருப்பர் என்று தெரியவும், ஓர் வாய்ப்பளிக்கிறது. இதோ வால்ட் விட்மன்! பாருங்கள், கவியின் உருவம் கவர்ச்சியுடன் காட்சி அளிப்பதை.

வால்ட் விட்மனின் கருத்துக்கள் பல, பாரதிதாசனுடையது போன்றே, பழைய கட்டுகளை உடைத்தெரியும் வெடிகுண்டுகள் போன்றுள்ளன. மக்களின் மேம்பாடே, விட்மனுக்குக் குறிக்கோள், மத தத்துவார்த்தங்களிலே அவர் மயங்கவில்லை. அவருடைய கனிமொழிகளிலே, சில இங்கு தருகிறோம்.

பாரதிதாசனுக்கு நிதி...
பாரதிதாசனுக்கு நிதி...

பழைய கட்டுப்பாடுகளையும் முட்டுப்பாடுகளையும் உடைத்தெறிந்து, கவிதைக்கும் வசனத்திற்கும் புதிய சுதந்தர ஓட்டந்தருகிறேன். ஆசான் எனினும் பாரேன்; அவன் எழுதிய வழக்கமான கருத்துக்களைத் தகர்த்தெறிவேன்.

உள்ளத்தை வெளிப்படையாக, சீர் தளைகளுக்குக் கட்டுப்படாமல், தைரியமாகச் சொல்பவனே கவிஞன். அவன், எதுகை மோனையின் அடிமையல்லன். சொல்லிற்கும், யாப்பிற்கும் இலக்கணத்திற்குங்கூட அவன் அடிமையல்லன்; அவன் அவற்றின் தலைவன்; கருத்தின் முதல்வன்; அவன் ஒரு சிருஷ்டி கர்த்தா!

வால்ட் விட்மன் ஒரு வம்பன் என்றனர், வாதாடவில்லை! அவன் ஓர் அபாயக் குறி என்றனர்! ஆம்! என்றான். அவனை வெறுத்தனர், கண்டித்தனர், ஆனால் அவனைத் தங்கள் உள்ளங்களிலிருந்து மட்டும் பெயர்த்தெடுத்துவிட முடியவில்லை. அவனுடைய கவிதைகள், உள்ளத்திலே, ஊடுருவிச் சென்றுவிட்டன. தம்மையுமறியாமல், அவன் வயத்தாராயினர்.

அத்ததைய வால்ட் விட்மன் அமெரிக்காவில் எளிய குடியில் 1819-ல் பிறந்தார், 1892-ல் இறந்தார், இடையே பல்கலைக்கழகத்திலே படித்தாரில்லை, அவருடைய கவிதைகளை பல்கலைக்கழகங்களுக்கு அளித்தார், செல்வத்தைச் சேர்த்திடவில்லை, செல்வத்தை ஈந்தார், செருக்குற்று அவரிடம் சீறினோரும், பின்னர், அவர் கவிதைகளின் சிறப்பை உணர்ந்தனர், வால்ட் விட்மனின் கவிதை புரட்சிப் பொலிவுடன் இருக்கக் கண்டு போற்றினர்.

அமெரிக்கா, அங்கு தோன்றிய பாரதிதாசனைப் போற்றலாயிற்று, அவனுடைய 120-ம் ஆண்டுவிழாவை ஆனந்தமாகக் கொண்டாடிற்று. நியூயார்க்கில் வால்ட் விட்மனுக்குச் சிலை அமைத்தனர்!

நாம், நமது பாரதிதாசனுக்குச் செய்தது என்ன? ஏதும் செய்ய வகையற்றவரா நாம்? என்னை நான் இக்கேள்வி கேட்டுக்கொள்ளுகிறேன், உங்களையும் கேட்கிறேன். ஒரு கணம் எண்ணிப் பாருங்கள், பாரதிதாசன், அங்கு பிறந்திருந்தால்!?

இவ்வாறு அறிஞர் அண்ணா, பாரதிதாசனை வால்ட் விட்மனோடு ஒப்பிட்டு பாரதிதாசனுக்கு சிலை வைக்கவில்லையே என ஏங்கினார்.

பாரதிதாசனை சிறைக்கம்பிகளுக்கிடையே புகழ்ந்துரைத்த பேரறிஞர் அண்ணா! #Anna111 #திராவிடமாதம்

அண்ணாவின் எண்ணத்திற்கு பிற்காலத்தில் செயல்வடிவம் கொடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். பாரதிதாசனுக்கு சிலை எடுத்தார். பாரதிதாசன் புகழ்பரப்பினார்.

பாரதிதாசன் 22.04.1964ல் காலமானார். அப்போது அண்ணா சிறையில் இருந்தார். அவர் சிறையில் எழுதிய குறிப்புகள் ‘பாரதிதாசன் பிரிவு’ என்ற தலைப்பில் வெளியானது.

அந்தக் குறிப்பில் அண்ணா எழுதுகிறார்…

இன்று என்னைத் திடுக்கிடச் செய்த செய்தித் தாங்கி இதழ்கள் வந்தன! நமது நெஞ்சத்தில் நீங்காத இடம் பெற்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மறைந்தார் என்ற செய்தி. எல்லோருக்கும் தாங்கொணாத வருத்தம். அதிர்ச்சி தரத்தக்க இழப்புகள் பலவற்றை இந்த முறை சிறை வாசத்தின்போது நான் காணவேண்டி நேரிட்டுவிட்டதை எண்ணி மிகவும் வேதனைப் பட்டேன். தமிழகத்தில் தனிப் புகழுடன் விளங்கிய அந்தப் பாவேந்தனுடைய பார்வையே ஒரு கவிதை! பேச்சே காவியம்! அவருடன் உரையாடினாலே போதும், தமிழின் மாண்பினை உணரலாம். அவருடைய மறைவு, தமிழகத்துக்கு ஈடு செய்யவே முடியாத பெரும் இழப்பு.

இந்த வேதனையுடன் நாங்கள் இருந்ததால் நாற்பதாவது வட்டத்தில் நமது கழகத் தோழர் வெற்றிபெற்ற செய்தி மாலையில் அறிந்தபோது, சுவை எழவில்லை. பாரதிதாசனுடைய கவிதைகளைப் பற்றி எண்ணிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தோம். நாங்கள் இருக்கும் பகுதியில், ஒரு அறையில் யாரோ ஒரு நண்பர் முன்பு எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார் புரட்சிக் கவிஞரின் கவிதையினை.

"மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை - எமை
மாட்ட நினைக்கும் சிறைச்சாலை.''

பாவேந்தர் பாரதிதாசனின் இந்த வரிகள்தான் சிறைக்குள் அண்ணாவுக்கு நினைவுக்கு வந்த வரிகள். என்ன ஒரு பொருத்தமான வரிகள்!

banner

Related Stories

Related Stories