உணர்வோசை

ஒரே மொழி, ஒரே ஆட்சி : பா.ஜ.க கொள்கைகளுக்கு அன்றே ‘ஆப்பு’ வைத்த அண்ணாவின் கூட்டாச்சி கொள்கை #HBDAnna111

ஒரே மொழி, ஒரே ஆட்சி : பா.ஜ.க கொள்கைகளுக்கு அன்றே ‘ஆப்பு’ வைத்த அண்ணாவின் கூட்டாச்சி கொள்கை #HBDAnna111
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

இந்தியாவில் ஒரே கட்சி ஆட்சிமுறை ஒத்துவராது என்று அண்ணா தன் சிந்தனையால் உணர்ந்தார். அவர் அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளார். இதுகுறித்து அறிஞர் அண்ணா 20.04.1967 அன்று போஜனா இதழுக்கு அளித்த பேட்டியின் சுருக்கம் வருமாறு -

மூன்று கோரிக்கைகள்:

1. தனித் திராவிடநாடு கோரிக்கையைக் கைவிட்டபோதிலும், தன் மூன்று அடிப்படைக் கோரிக்கைகளைத் திமுக கைவிடவில்லை.

2. எங்களுடைய மொழியும் கலாச்சரமும் காப்பாற்றப்படவேண்டும். இந்தியக் கூட்டாட்சிக்குள் எங்கள் மாநிலத்திற்குரிய அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். எங்களுடைய பொருளாதார முன்னேற்றத்திற்கு உறுதி மொழி தேவை.

3. தனிநாடாகப் பிரிந்தால்தான் இத்தகு பாதுகாப்பு கிடைக்கும் என முதலில் நினைத்தோம். ஆனால், சீனப் படையெடுப்பிற்குப் பின் இந்தியாவின் ஒரு பகுதியாகச் செயல்படுவதன் அவசியத்தை உணர்ந்துகொண்டோம்.

ஒரே மொழி, ஒரே ஆட்சி : பா.ஜ.க கொள்கைகளுக்கு அன்றே ‘ஆப்பு’ வைத்த அண்ணாவின் கூட்டாச்சி கொள்கை #HBDAnna111

ஆதரவுவேர்:

குறிப்பிட்ட தனியொரு கருத்தைப் பரப்பி அதனால் மட்டுமே நாங்கள் பலம் தேடிக்கொண்டதாக நினைப்பது தவறு. எமக்குள்ள ஆதரவு மக்களிடையே ஆழமாக வேர் விட்டிருக்கிறது.

தொடர்புமொழி:

காலப்போக்கில் அனைத்திந்தியாவிற்கும் ஒரு பொதுத் தொடர்பு மொழி உருவாக வேண்டும். அதுவரை ஆங்கிலமே இணைப்பு மொழியாக நீடிக்கவேண்டும். 14 தேசிய மொழிகளுக்கும் சம மதிப்பு அளிக்கப்படவேண்டும். (இன்று 22 தேசிய மொழிகள்)

திட்டக்குழு:

இந்தியத் திட்டக்குழு மாநிலங்களிலும் பணியாற்றலாம். மாநிலத் திட்டங்களுக்கு ஆலோசனை கூறும் விதத்தில் திட்டக்குழு செயல்பட்டால், அதை நான் விரும்பி வரவேற்பேன். மாநிலங்களின் வளர்ச்சிக்குத் திட்டக்குழு பக்கபலமாக நின்று அதிக உதவிகளைச் செய்யவேண்டும். அது ஒரு கூட்டமைப்பாகச் செயல்பட வேண்டும். வெறும் திட்டப் பார்வையோடு மட்டுமின்றி மாநில நலத்திற்கான அக்கறைப் பார்வையோடும் மைய அரசு நிதி ஒதுக்குவதற்குத் திட்டக்குழு வழிவகை செய்யவேண்டும்.

திட்டம் வகுத்தல்:

தேசியத் திட்டங்களை வகுப்பதிலும் மாநில சட்டத்திட்டங்களை உருவாக்குவதிலும் மைய அரசின் பொறுப்புணர்ச்சியே தலைமையானது.

கட்டுப்பாடுகளுக்கு உட்படாத இந்த உணர்ச்சியோடு மாநில அரசுகள் தங்கள் திட்டங்களை உருவாக்கும் சூழ்நிலை அரும்பவேண்டும். அதற்கேற்ற வகையில் திட்டக்குழுவிலும் மைய அரசின் நிர்வாகத்திலும் மைய அரசுவயமாதல் என்னுங் கொள்கை பின்பற்றக் கூடாது.

மக்களின் விருப்பங்களைக் கண்டறிந்து அவற்றின் அடிப்படையில்தான் நாம் திட்டங்களை உருவாக்க வேண்டும். அப்போதுதான் நம் திட்டங்கள் நல்ல பயனை விளைவிக்கும்.

திட்டங்கள் முதலில் சிற்றூர்களில் வகுக்கப்படவேண்டும். பிறகு மாநில அரசு அவைகளைப் பரிசீலிக்க வேண்டும். இறுதியில்தான் மைய அரசு திட்ட அரங்கில் தன் பங்கை ஏற்க வேண்டும். சிற்றூர்களில் தொடங்கப்படும் முன்னேற்ற வேலைகளில் மாநில அரசுகள் ஈடுபட்டு உழைக்க வேண்டும்.

ஒரே மொழி, ஒரே ஆட்சி : பா.ஜ.க கொள்கைகளுக்கு அன்றே ‘ஆப்பு’ வைத்த அண்ணாவின் கூட்டாச்சி கொள்கை #HBDAnna111

மோதலைத் தவிர்க்க:

மைய-மாநில அரசுக்குக்கிடையே நிலவும் கருத்து வேறுபாட்டினால் ஏற்படும் மோதல் தவிர்க்க முடியாததல்ல. மனம் விட்டுப் பேசுவதின் மூலம் கருத்து வேறுபாடுகளைப் போக்கிக் கொள்ள முடியும்.

ஒரே கட்சி ஆட்சி:

இந்தியாவிற்கு ஒரே கட்சி ஆட்சி ஏற்றதல்ல. ஒரு கூட்டாட்சியில் அந்தக் கூட்டாட்சியை வலியுறுத்தும் அரசியல் சட்டத்தின் கீழ் ஒரு கட்சியாட்சியே எப்போதும் நடைபெறும் என்றும் எதிர்பார்க்க முடியாது.

இந்தியக் கூட்டாட்சிக்கு உட்பட்ட பல மாநிலங்களைப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆளும் சூழ்நிலை உருவாகிவிட்டது. பல மாநிலங்களில் கூட்டு அமைச்சரவைகள் ஏற்பட்டிருப்பதை இந்திய அரசியலின் இடைக்காலத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சி என்று நான் கருதுகிறேன்.

தொடர்பு வரை:

மைய மாநில அரசுகளின் தொடர்பு அதிகப்படுவதற்கு நான் எந்த திட்டத்தையும் கூற விரும்பவில்லை. ஆனால் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் பேசித் தீர்க்கப்படவேண்டும். பல முதலமைச்சர்கள் கூடிப் பேசுவதன் மூலம் ஒரு நிறுவனத்தின் ஆற்றலைப் பெறமுடியும். இத்தகைய நேரடித் தொடர்பு வெறும் அமைப்பு முறைகளைவிட சிறப்பானது.

இதெல்லாம் கூட்டாச்சி தத்துவத்திற்கு அண்ணா வகுத்தளித்த கொள்கை முடிவுகள். காலத்திற்கேற்ப இதில் மாற்றங்கள் இருக்கலாம் என்பதையும் அண்ணாவே சொல்லி இருக்கிறார். இன்று பா.ஜ.க மாநில சுயாட்சியையும், மத்திய கூட்டாச்சியையும் சிதைப்பதற்கான தொடர் நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில் அண்ணாவின் இந்த பேட்டி மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

Related Stories

Related Stories