உணர்வோசை

இந்திய அரசில் உருவாகியுள்ள ஒரு ஆபத்தான பண்பு மாற்றம் : தேர்தல் முடிவுகள் குறித்த ஆய்வு!

மோடியின் ஐந்தாண்டு கால ஆட்சியில் எந்த வளர்ச்சியையும் நல்லகாலத்தையும் மக்கள் அனுபவிக்கவில்லை. பின் எந்த அடிப்படையில் இந்தத் தேர்தலில் இத்தனை பெரிய வெற்றியை அவரால் எட்ட முடிந்தது?- லண்டன் அறிஞரின் ஆய்வு

இந்திய அரசில் உருவாகியுள்ள ஒரு ஆபத்தான பண்பு மாற்றம் : தேர்தல் முடிவுகள் குறித்த ஆய்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2014 நாடாளுமன்ற வெற்றியின்போது “வளர்ச்சி” (விகாஸ்) எனும் பெயரில் மோடி அலை வீசியது என அவ்வெற்றிக்கு விளக்கமளிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் (2019) மோடி தனது ஐந்தாண்டுகளுக்கு முந்திய ‘விகாஸ்’ எனும் முழக்கத்தை எல்லாம் தன் பிரச்சாரக் கூட்டங்களில் முன்வைக்கவில்லை. ஏனெனில் தனது இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் எந்த வளர்ச்சியையும் நல்லகாலத்தையும் மக்கள் அனுபவிக்கவில்லை என்பது அவருக்குத் தெரியும். வேலை வாய்ப்புகள், விவசாயக் கடன்கள் என எல்லா அம்சங்களிலும் அவரது ஆட்சியின் தோல்வியை எழுதாதவர்களும் பேசாதவர்களும் இல்லை. பின் எந்த அடிப்படையில் இந்தத் தேர்தலில் இத்தனை பெரிய வெற்றியை அவரால் எட்ட முடிந்தது?

இந்து தேசியவாதத்திற்கான ஏற்பு வளர்ந்துகொண்டே போவதையும் பாரம்பரியமாக பா.ஜ.க-வை ஆதரித்து வருவோரின் அளவு அதிகரித்துக்கொண்டே போவதையும் நாம் விளக்கியாக வேண்டும். ’லவ் ஜிஹாத்’துக்கு எதிரான பிரச்சாரம், ‘கர் வாபசி’ எனும் இந்து மதத்திற்கு மாற்றும் நடவடிக்கைகள், ‘பசுப்பாதுகாப்பு’ எனும் பெயரில் அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டது என எல்லாவற்றையும் இந்து தேசியவாதம் உள்ளடக்கி ஏற்றுக் கொண்டது. எதையும் அது ஏற்கத்தக்கதல்ல என கண்டிக்கவில்லை. பலரும் கொல்லப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்களுக்குக் காரணமானவர் எனும் சாத்வி பிரக்யா போன்றோரை மைய நீரோட்டத்துக்குக் கொண்டுவருதலையும் இந்து தேசியவாதம் எந்தத் தயக்கமும் இன்றி ஏற்றுக்கொண்டது.

ஆனால், மோடிக்கு வாக்களிக்கும் எல்லோரும் தாங்கள் இந்துத்வாவுக்காகத்தான் மோடிக்கு வாக்களிப்பதாகச் சொல்வதில்லை. ஒரு சிலரே அப்படிச் சொல்லிக்கொள்வார்கள். இப்படி மோடிக்கு வாக்களிப்பவர்களைப் பல்வேறு வகையினராகப் பிரிக்கலாம், ஒரு சிலர் மோடி முன்வைக்கும் இந்துத்துவ மாதிரியை ஆதரிப்பவர்கள். அல்லது குறைந்தபட்சமாக இந்துப் பெரும்பான்மை வாதத்தைப் பெரிய பிரச்னையாகக் கருதாதவர்கள். ஆனால் அதை ஒப்புக் கொள்ளாமல் தாங்கள் மோடிக்கு வாக்களிப்பதற்கு, தேசப்பாதுகாப்பு என்பதுபோல வேறு ஏதாவது ஒரு காரணத்தைக் கண்டுபிடித்துச் சொல்வார்கள். தன்னை ஆதரிப்பதற்கு மோடி முன்வைக்கும் தேர்வுகளில் (choices) ஒன்று இந்தத் தேசப் பாதுகாப்பு. புல்வாமாவுக்குப் பிறகு இப்படி பாகிஸ்தானை மையமாக வைத்துத் தன் பிரச்சாரத்தை மேற்கொள்ள அது அவருக்குத் தோதாக அமைந்தது. இந்தத் தேசத்தைப் பாதுகாப்பவனாக அவர் தன்னை முன்னிறுத்திக் கொள்வது எளிதானது. இந்தியாவைக் காக்க ஒரு வலிமையான மனிதனை இன்றைய சூழல் தேவை ஆக்குகிறது. அந்த இடத்தைத் தான்தான் நிரப்பமுடியும். மற்ற யார் வந்தாலும் அவர்களால் பலவீனமான அரசையே தர முடியும். மாற்றாக அப்படி வரக்கூடிய அரசு கூட்டணி அரசாகத்தானே இருக்கமுடியும். பின் எப்படி அதுவலிமையான அரசாக அமையும்? வலிமையான தலைமை என்பதை முக்கியமான ஒன்றாக எடுத்துக் கொள்ளாதவர்களும்கூட அதையும் தங்களது ஆதரவை நியாயப்படுத்த அதையும் ஒரு அம்சமாக ஏற்றுக் கொள்வார்கள். ராகுல் காந்தி ஒரு அனுபவம்இல்லாத நபர். அவர் ஒரு சிறந்த மாற்றாக இருக்க முடியாது என்கிற கருத்தும் சிலருக்கு உண்டு.

இந்திய அரசில் உருவாகியுள்ள ஒரு ஆபத்தான பண்பு மாற்றம் : தேர்தல் முடிவுகள் குறித்த ஆய்வு!

17-வது இந்தியத் தேர்தல் குறித்த நமது பார்வை ‘லோக்நிதி CSDS’ ‘எக்ஸிட் போல்ஸ்’ ஆய்வின் உதவியோடு மோடியின் இந்த வெற்றிக்கு மூன்று காரணங்களை முன்வைக்கிறது. அவை:

1. முதலாவதாக இந்தியா எதார்த்தமான ஒரு இன அடிப்படையிலான ஜனநாயகத்தைக் கோரும் நிலையை நோக்கி இன்னொரு அடியை எடுத்து வைத்துள்ளது. யூத அரசொன்றிற்கு ஆதரவான கருத்தை உடைய சம்மி ஸ்மூஹா எனும் இஸ்ரேல் அரசியல் விஞ்ஞானி தன்நாட்டு அரசமைப்பை நியாயப்படுத்துவதற்காக முன்வைத்த கோட்பாடு இது. காகிதத்தில் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என எழுதப்பட்டிருந்தாலும் நடைமுறையில் அது ஒரு பெரும்பான்மை மதவாத நாடாகவே இரூக்கும். சிறுபான்மை மக்கள் இரண்டாம்தரக் குடிமக்களாகவே இருப்பர். முஸ்லிம்கள் தங்கள் விகிதத்திற்கு ஏற்ற அளவு நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் பெற இயலாதது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

2. இந்தியா ஒரு தாராளவாத ஜனநாயக நாடு என்பதிலிருந்து ஓரடி பின்னோகி வைத்துள்ளது. தேர்தல் ஆணையமும் ஊடகங்களும் தம் நம்பகத்தன்மையை இழந்திருப்பது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. தேர்தல் பிரச்சாரத்திலும் இது பிரதிபலித்தது. தேசமே ஒரு ஒற்றை மனிதனில் வெளிப்படுகிறது என எல்லாவிதமான அச்சுறுத்தல்களிலிருந்தும் காப்பாற்றுபவனாக அவன் முன்னிறுத்தப்படும்போது அவனது அதிகாரத்தைக் கேள்வி கேட்பதென்பது சட்ட விரோதமாகவும் நியாய விரோதமாகவும்ஆகிவிடுகிறது. எந்த அளவுக்கு அவன் வலிமையானவனாக இருக்கிறானோ அந்த அளவிற்கு அவனை விமர்சிப்பதற்கான வெளி சுருங்குகிறது. தாராளவாத ஜனநாயகத்துக்குரிய பல பண்புகள் இதன்மூலம் இழக்கும் நிலை ஏற்படுகிறது. பத்திரிகையாளர் சந்திப்புகள் முக்கியமில்லை. கடந்துவந்த கொள்கை அணுகல் முறைகள் குறித்த மதிப்பீடுகளுக்கும் விவாதங்களுக்கும் இடமில்லை. எதிரெதிரான முக்கிய இருதரப்பினருக்கும் இடையேயான நேரடி விவாதம் இனி சாத்தியமில்லை.

பதிலாக பொதுவெளி எங்கும் நரேந்திர மோடியால் நிரப்பப்பட்டது. ‘ப்ரைம் டைம்’ எலெக்ட்ரானிக் ஊடக வெளி பெரிய அளவில் மோடி பஜனையால் நிரம்பி வழிந்தது. தேர்தல் செலவுகளுக்கான உச்சவரம்பு கேலிக்குரியதானது. இஸ்ரேல் அல்லது ஹங்கேரி அல்லது பிரேசில் மற்றும் துருக்கி போல உலகிலுள்ள இதர தாராளத்தன்மையற்ற இனவாத தேசிய “பாபுலிச” அரசுகளில் ஒன்றாக இந்தியாவும் ஆனது. ஒரு குறிப்பிட்ட அளவு தற்போதைய அமெரிக்காவையும் இத்துடன் இணைத்துக்கொள்ளலாம்.

இந்த நாடுகளிலும் ஒரு மனிதனே உள்நாட்டு / வெளிநாட்டு ஆபத்துகளிலிருந்து தேசத்தைப் பாதுகாப்பவனாக நிறுத்தப்படுகிறான். இங்கெல்லாம் எந்த அளவிற்கு ஒருசார்பு இனக்குவிப்பும் (Polarisation), ஒரு சார்பான பொதுக்கருத்துருவாக்கமும் நிகழ்கிறதென்றால் அவர்களோடு நிற்காதவர்கள் எல்லாம் அவர்களுக்கு எதிரானவர்கள் எனும் நிலை இன்று அங்கு உருவாகியுள்ளது, சமூகம் மட்டுமல்ல குடும்பங்களும் கூட இன்று அவ்வாறு பிரிக்கப்படுகின்றன. அரசியலில் மாற்றுக்கருத்துள்ளவர்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் எதிரிகள் என நிறுத்தப்படும் நிலை இந்தப் புதிய ஆளுகையின் அடையாளமாக்கப்பட்டுள்ளது. தேசப்பாதுகாப்பு எனும் பெயரில் இது சாத்தியமாக்கப்படுகிறது. இத்தகைய இறுக்கப்பட்ட குடியரசுகள் “உயர் பாதுகாப்பு அரசுகளாகவும்” (security states) ஆகின்றன. சமூகப் பொருளாதாரத் தோல்விகளிலிருந்து திசை திருப்ப அவர்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் அவசியமாகிறது; தேவைப்படுகிறது. கண்டுபிடிக்கப்படுகிறது. தமது ஆதரவாளர்களைக் குவிப்பதற்கு அப்படியான பயங்கரவாத அச்சுறுத்தல் அவசியமாகிறது.

3. முன்னைப்போல இப்போது இந்திய அரசியலில் கொள்கைகள் முக்கியமாக இருக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. தேர்தல் பிரச்சாரம் என்பது ஐந்தாண்டுகள் ஆட்சி செய்த ஒரு பிரதமரின் சாதனைகள் மற்றும் குறைகள் குறித்த ஒருமதிப்பீட்டிற்கான களமாகவே இதுவரை இருந்து வந்துள்ளது. இம்முறை தேர்தல் பிரச்சாரத்தில் வேலை இழப்புகள், விவசாயிகளின் பிரச்சினைகள், இயற்கை அழிவுகள் முதலியனவெல்லாம் விவாதப் பொருளாக்கப்படவில்லை. தேர்தல் அறிக்கைகள் ஒப்பிடப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்படவில்லை. மாறாக உணர்ச்சிப் பெருக்குகள், அச்சுறுத்தல்கள், கோபங்கள் ஆகியவற்றின் கலவையாகவே இந்தத் தேர்தல் பிரச்சாரம் நடந்து முடிந்துள்ளது. காங்கிரசின் தேர்தல் அறிக்கை இந்தியா எதிர்கொண்டுள்ள பல முக்கிய பிரச்னைகளை முன்வைத்தது. சுற்றுச்சூழல் அழிவுகள், அரசியல் சட்ட உரிமைகளைப் பறிக்கும் சட்டங்கள், ஏழ்மை முதலான பல முக்கிய பிரச்னைகளை அது கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தது. எனினும் அவை விவாதிக்கப்படவில்லை.

எனினும் குடிமக்களில் பலர் இப்படியான காரணங்கள் ஏதும் இல்லாமலும் மோடிக்கு (by default) வாக்களித்துள்ளனர். எதிர்க்கட்சிகள் ஒரு சாத்தியமான மாற்றாக இருக்கப் போவதில்லை எனக் கருதியவர்கள் அவர்கள். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆறு மாதங்களுக்கு முன் மோடிக்கு எதிரானவர்களுக்கு வாக்களித்தவர்கள்தான் இம்முறை மோடிக்கு வாக்களித்துள்ளனர். மோடி மீதான அம்மக்களின் இந்தக் காதலில் எந்த ஒரு பாதிப்பையும் எதிர்க்கட்சிகளால்ஏன் ஏற்படுத்த முடியவில்லை?

மோடிக்கும் எதிர்க் கட்சிகளுக்குமான இப்போட்டி இரு சமமான எதிரிகளுக்கு இடையேயான போட்டியாக இல்லாதது என்பது மட்டும் இதற்குக் காரணமல்ல. மோடியிடம் அதிகக் காசு இருந்தது. கார்ப்பரேட் ஆதரவு இருந்தது. ஊடகங்களின் துணை இருந்தது. ட்ரம்ப் சில ஆண்டுகளுக்கு முன்பு கூலிப் படைகளின் மூலம் ஹிலாரி க்ளின்டனின் பிம்பத்தைக் காலி செய்தது போல இன்று மோடியால் ராகுலை ஒரு திறமை அற்றவராகச் சித்திரிக்க முடிந்தது என்பதெல்லாம் உண்மைதான் ஆனால் உண்மையான பிரச்னை அதெல்லாம் இல்லை. எதிர்க்கட்சிகளுக்கு தாங்கள் எம்மாதிரியான அரசை அமைக்கப் போகிறோம் எனக் காட்ட முடியவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மோடிக்கு எதிராக வெற்றி அடைவதற்கு எதிர்க்கட்சிகள் அடுத்த பிரதமர் என ஒரு தலைவரை முன்னிறுத்தி அவர் பின் திரண்டிருக்க வேண்டும். மாயாவதி, அகிலேஷ் யாதவ், அர்விந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, பிரகாஷ் அம்பேத்கர் என மாநில அளவிலான பல தலைவர்களும் பா.ஜ.க-வை ஜனநாயகத்திற்கு ஆபத்து எனக் கருதினாலும் காங்கிரஸை மதித்து அதனுடன் தொகுதி உடன்பாட்டுக்கு அவர்கள் தயாராக இல்லை. ஏன்?

இதற்கான விளக்கம்: (1) மாநிலங்களில் தாங்கள் செல்வாக்காக இருக்கும் வரை டெல்லியில் அமையும் பா.ஜ.க அரசுடன் தாங்கள் வாழ்ந்துவிட முடியும் என அவர்கள் நினைத்திருக்கலாம்.

(2) ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றின் மீதான அவர்களின் பற்று ரொம்பவும் போலியானது என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இவர்களில் பலரும் கடந்த காலங்களில் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்தவர்கள்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஏன் இன்னொரு முறையும் அப்படி ஒரு கூட்டணி அமைக்கக்கூடாது என அவர்கள்நினைத்திருக்கலாம்.

(3) எதிர்க்கட்சிகள் பலவும் ஒரு கனவுலகில் அல்லது ஒரு கடந்த காலத்தில் வாழ்ந்து வருகின்றன. பெரும்பான்மைத் தேசியவாதத்துடன் இன்று உருவாகியுள்ள புதிய சூழலை எதிர்கொள்வதற்குத் தகுந்தவாறு தம்மை மாற்றிக் கொள்ள இயலாதவர்களாக இவர்கள் உள்ளனர். அல்லது அவர்களில் சிலர் ஒரு புதிய லட்சிய அமைப்பை உருவாக்கும் கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கலாம், காங்கிரசை தற்கொலை செய்து கொள்ளுமாறு கூட இவர்கள் கேட்கலாம். ஒன்றும் இல்லாததிலிருந்து ஒரு கட்சியை உருவாக்குவது அத்தனை எளிதல்ல என்பதை அவர்கள் உணர்வதில்லை. இதனால் ஏற்படும் கால விரயம் ஜனநாயகத்தை மேலும் பாதிக்கும் என்பது பற்றியும் அவர்கள் கவலை கொள்வதில்லை.

பிற பகுதிகளிலும் தாராளவாதிகள் இப்படியான பிரச்னைகளுடன் இருக்கத்தான் செய்கிறார்கள். எதிரிகளிடம் இருக்கும் கவனமும் கரிசனமும் அவர்களிடம் இருப்பதில்லை. ஆபத்தை உணர்ந்து அவர்கள் அணிசேர்வதற்கு முன் எதிரி அவனுக்குச் சாதகமாக விளையாட்டின் விதிகளை மாற்றிவிடுகிறான் என்பதையும் அவர்கள் யோசிப்பதில்லை.

கட்டுரையாளர் :

கிறிஸ்டோஃப் ஜேஃப்ரிலோ

(லண்டனில் உள்ள King's India Institute ல் இந்தியவியல் பேராசிரியராக உள்ளார். இந்தியா குறித்த மிகக் கூர்மையான பார்வைகளைப் பல ஆண்டுகளாக முன்வைத்து வருபவர். இந்துத்துவம் குறித்த கோட்பாட்டாய்வு மற்றும் அம்பேத்கரியம் குறித்த சில முக்கியமான நூல்களின் ஆசிரியர். இந்தத் தேர்தல் குறித்த அவரது இந்த அவதானிப்பு முக்கியமானது.)

Christophe Jaffrelot
Christophe Jaffrelot

* தனிப்பெரும்பான்மையுடன் மோடி அரசு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தமிழகத்தின் முக்கியமான அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் அ.மார்க்ஸ் இந்த வெற்றி தொடர்பாக உலக அளவிலான அறிஞர்களின் பார்வை எப்படி இருக்கிறது என்பதை தொகுத்து வெளியிட்டு வருகிறார். அவரது பக்கத்திலிருந்து இக்கட்டுரை எடுத்தாளப்பட்டுள்ளது.

Related Stories

Related Stories