உணர்வோசை

‘மாபெரும் புத்தகக் கனவு !’ - ப.திருமாவேலன்

இந்து தமிழ் திசை பேரறிஞர் அண்ணா பற்றி வெளியிட்டுள்ள ‘மாபெரும் தமிழ்க் கனவு’புத்தகம் குறித்து ப.திருமாவேலன் அவர்களின் பார்வை.

 ‘மாபெரும் புத்தகக் கனவு !’ - ப.திருமாவேலன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ப.திருமாவேலன்
Updated on

ந்தை பெரியாருக்கு முன்னால் நின்ற உதவி ஆசிரியர் கேட்டார்: ''விடுதலை நாளிதழுக்கு என்ன மாதிரியான தலையங்கம் தீட்டுவது?''என்று. அய்யா சொன்னாராம், ''இந்து பத்திரிக்கையில் என்ன தலையங்கம் வருகிறதோ, அதற்கு எதிராக எழுது, அது தான் நம்முடைய நிலைப்பாடாக இருக்கும்" என்று!

எத்தனை மாற்றம்? பேரறிஞர் அண்ணாவைப் பற்றி, 800 பக்கங்களுக்கு புத்தகம் கொண்டு வருகிறது இந்து தமிழ். முன்னமே, கலைஞரைப் பற்றி 'தெற்கில் இருந்து சூரியன்' எடுத்து வந்தது. பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் எதிர்பார்த்திராத மாற்றங்கள் இவை.

இவர்கள் எதில் கை வைத்தார்களோ, அவர்களால் அங்கீகரிக்கப்படுகிறார்கள்.
 ‘மாபெரும் புத்தகக் கனவு !’ - ப.திருமாவேலன்

'தி இந்து தமிழ்த் திசை' இதழின் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் பேரறிஞர் அண்ணா குறித்த 'மாபெரும் தமிழ்க் கனவு' என்பது வழக்கமான புத்தகம் அல்ல. இது ஒரு வரலாற்றுத் திருப்பம். இந்த திருப்பத்துக்கு அடித்தளமிட்ட ஆசிரியர் கே.அசோகன், தொகுப்பாசிரியர் சமஸ், துணைத் தொகுப்பாசிரியர்கள் கே.கே.மகேஷ், த.ராஜன் ஆகியோர் வணங்கத் தக்கவர்கள்.

 ‘மாபெரும் புத்தகக் கனவு !’ - ப.திருமாவேலன்

நூல் தயாரிப்புக் குழுவில் அங்கம் வகித்திருக்கும் வ.ரங்காச்சாரி, தே.ஆசைத்தம்பி, ச.சிவசுப்பிரமணியம், செல்வ புவியரசன், ஷங்கர்ராமசுப்பிரமணியன், வெ.சந்திரமோகன், எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கும் நன்றி!

'கழகத்தில் என்னை முழுமையாக அறிந்தவர்கள் நிறையப் பேர் உண்டு, முற்றிலுமாக அறிந்தவர் கலைஞர் மட்டும் தான்' என்று ஒருமுறை அண்ணா சொன்னார். அதேபோல் அண்ணாவை முழுமையாக அறிய பல நூல்கள் உண்டு. முற்றிலுமாக அறிய உதவும் நூல் இது.

 ‘மாபெரும் புத்தகக் கனவு !’ - ப.திருமாவேலன்

அண்ணாவை எழுத்தாளர் வட்டாரத்துள் நிறுத்துவோர் உண்டு. பேச்சாளர் என்று மட்டுமே அங்கீகரிப்போர் உண்டு. அவரும் ஒரு முதலமைச்சர் என்று வரிசைப்படுத்துவோர் உண்டு. சினிமாக்காரர் தானே என்று சிண்டுமுடிவோர் உண்டு. இவை அனைத்தையும் தாண்டி 'அவர் ஒரு காலக்கட்டம்' என்பதை இந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் சொல்லும்.

''இன்னும் இருபது ஆண்டுகள் உயிரோடு அண்ணா இருந்திருந்தால் திமுக எப்படி இருந்திருக்கும்?" என்று கலைஞரிடம் மருத்துவர் எழிலன் கேட்கிறார். ''திமுக சர்வதேச முன்மாதிரிக் கட்சியாக மாறி இருக்கும்" என்று கலைஞர் பதிலளித்ததாகச் சொல்கிறார் சமஸ். இந்தக் கேள்வியையும் பதிலையும் விரிவுபடுத்திப் பார்த்தால் என்ன பதில் கிடைக்கும் என்பதை கொல்கத்தா ஆய்வாளர் கர்க் சட்டர்ஜியும், அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரெளன் பல்கலைக் கழக ஆய்வறிஞர் பிரேர்ணா சிங்கும் எழுதியுள்ள கட்டுரை சொல்கிறது.

 ‘மாபெரும் புத்தகக் கனவு !’ - ப.திருமாவேலன்

''இந்தி ஆதிக்கத்துக்கு முன் அண்ணாவும் அவருடைய தம்பிகளும் அடிபணியாமல் நின்று, பிற தேசிய இனங்களுக்கு மிகப்பெரிய உதாரணர்களாகி இருக்கிறார்கள். அப்படித் தனித்து நின்றதன் மூலம் தேசியம் என்றால், அதாவது உண்மையான தேசியம் என்றால் என்ன என்று அனைவரையும் சிந்திக்க வைத்திருக்கிறார்கள்.

இப்போது இந்திய ஒன்றியத்துக்கு மிகப் பெரிய பதற்றத்தைத் தருவது இந்த விஷயம் தான். இந்தி பேசாத மக்களுக்கான இடம் எது என்று வரையறுக்க இந்தி பேசும் ஆதிக்க வகுப்பு முற்படுகிறது....'நீங்கள் முதலில் இந்தியரா அல்லது வங்காளியா?' இப்படி குடியுரிமையையும் தேசிய அடையாளத்தையும் வேண்டும் என்றே மோத விடுகிறார்கள். இப்படி நம்முடைய கடந்த காலத்தைச் சிதைத்து நிகழ்காலத்தை அடிமைப்படுத்தி, எதிர்காலத்தை நிர்மூலமாக்கும் சக்திகளுக்கு எதிராகப் போராடத்தான் அண்ணா நமக்கு தேவைப்படுகிறார்." என்கிறார் கொல்கத்தா கர்க் சட்டர்ஜி.

 ‘மாபெரும் புத்தகக் கனவு !’ - ப.திருமாவேலன்

''கல்வி, வேலைவாய்ப்பில் மேல்சாதிக்காரர்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தி பிற்படுத்தப்பட்டோரையும் தாழ்த்தப்பட்டோரையும் அதிகாரப்படுத்தும் பணிக்குப் பிராமணரல்லாதோர் இயக்கமான நீதிக்கட்சி வித்திட்டது.

பெரியாரின் சுயமரியாதை இயக்கம் வளர்ந்து நீதிகட்சியையும் உள்ளடக்கி அது திராவிடர் கழகமானபோது கலாச்சாரரீதியாக தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது" என்ற அமெரிக்க பிரேர்ணா சிங், "இந்திய நாட்டிலேயே துணைத் தேசியவாதத்துக்கு முன்னுதாரணமான மாநிலமாக தமிழகம் ஆக அண்ணாவே காரணம்" என்கிறார்.

ஒரு தேசிய இனம் எடுக்கவேண்டிய முனைப்பையும் தனித்த பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட மொழி எடுக்க வேண்டிய தற்காப்பையும் இந்தியத்துக்கு உணர்த்தியவர், உணர்த்திக் கொண்டு இருந்தவர் அண்ணா. இதைத்தான் இன்று அமெரிக்காவும் கொல்கத்தாவும் சொல்கிறது.

அண்ணா தென்னிந்தியாவுக்குள் முடக்கப்பட்டார் என்று டி.ஜே.எஸ். ஜார்ஜ் கொள்ளும் கவலை உண்மையானதுதான். ஜார்ஜ் கட்டுரையில் குறிப்பிடப்படும் உதாரணம் தவறுதலாக இருக்கிறது. பெரும்பான்மையினர் பேசுவது இந்தி என்று விளக்கம் சொல்லப்பட்டபோது, 'நாட்டில் காக்கைகள் அதிகம், ஆனால் சிறுபான்மையான மயிலை ஏன் தேசியப்பறவை ஆக்கினீர்கள்?' என்று தான் அண்ணா கேட்டார். எலி - புலி என்ற உதாரணம் கட்டுரையாளரின் ஞாபகப் பிசகாக இருக்கலாம்.

 ‘மாபெரும் புத்தகக் கனவு !’ - ப.திருமாவேலன்

இன்றைக்கு மெத்தப்படித்த மேதாவிகள் அனைவரும் இந்தி கற்றுக் கொண்டால் இந்தியா முழுக்க வேலைக்கு போகலாம் என்பார்கள். 'அப்படியானால் நித்தமும் சென்னை மத்திய புகைவண்டி நிலையத்தில் இந்திக்காரர்கள் ஏனப்பா தமிழகத்துக்கு வேலை தேடி வருகிறார்கள்?' என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இருக்காது. இதற்கு விரிவாக செல்வபுவியரசன் கட்டுரை விளக்கம் அளிக்கிறது.

இந்தி மேலாதிக்கத்தில் இருந்து விடுவித்து ஆங்கிலம் தொடர்வதை உறுதிப்படுத்தியதன் மூலமாக இன்றைய அவுட்சோர்ஸிங் சாத்தியங்களுக்கு அண்ணா வித்திட்டார் என்று யதார்த்தமாய் சொல்கிறார் புவியரசன். இது தமிழ்த் தேசிய புலிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம்.

வேலையின் தேவைக்கு திறமையை உருவாக்கியவர் என்று இதைச் சொல்ல முடியுமே தவிர தமிழின் இடத்தை ஆங்கிலத்துக்கு தாரை வார்த்தார் என்று சொல்ல முடியாது. ஆங்கிலத்தை எதிர்த்து சிலர் பேசிய போது, 'அந்த இடத்தில் இந்தி வந்து குந்திக்கும்னேன்' என்றவர் காமராசர். தமிழுக்கான பயிற்றுமொழி விவகாரம் வேறு, இன்றைய வேலை வாய்ப்புகளை தமிழர்கள் கைப்பற்றும் நடவடிக்கைகள் வேறு. ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை அன்றைய ஜனசங்கத் தலைவர்ர்களுக்கு உணர்த்த அண்ணாவின் கருத்துகள் பயன்பட்டதாக அத்வானி சொல்வது அபூர்வமான செய்தி.

கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் ஜனசங்கத்தவரும் சந்தித்துப் பேசும் களமாக நாடாளுமன்ற திமுக அலுவலகம் இருந்ததாக ஜி.விஸ்வநாதன் சொல்லி இருப்பது ஆச்சரியமான தகவல்.

'திராவிடன்' என்ற வார்த்தை சிலருக்கு குமட்டிக் கொண்டு வருகிறது. மொழியல்ல, இனமல்ல அது பிராமணர் நீங்கலான சாதி என்றே அடையாளப்படுத்தினார் பெரியார். 'இது ஒரு மாதிரியான வர்க்கம்' என்று சொல்லிச் சென்றுள்ளார் சிவதம்பி. இங்கே சில கத்துக்குட்டிகள் எதைப் பேசினாலும், இதை ஆந்திராவில் பேசு, கர்நாடகாவில் பேசு என்று சொல்லும்.

பெரியவர் கொடிக்கால் ஷேக் அப்துல்லா சொல்கிறார்: ''தமிழர்கள் மத்தியில் தவிர ஏனைய எந்தப் பிரதேசத்திலுமே பெரிய தாக்கம் ( அண்ணாவின் இயக்கத்துக்கு) இல்லை. காரணம் என்னவென்றால், அன்றைக்கு இந்தத் தென்னக மாநிலங்கள் யாவும் தமிழர்கள் அரசியலதிகாரத்தில் கோலோச்சிய சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தன. தமிழர்களிடமிருந்து தங்கள் பகுதியைப் பிரித்துக் கொண்டு மொழிவழி மாநிலமாக போய்விட வேண்டும் என்று அவர்கள் இருந்தார்கள். .... இப்படிப்பட்ட சூழலில் ஒரு மலையாளிக்கும் தெலுங்கருக்கும் கன்னடருக்கும் திராவிட நாடு கோரிக்கை முன்னுரிமையானதாக இருக்குமா, தங்களுக்கென ஒரு மாநிலம் அமைய வேண்டும் என்பது முன்னுரிமையாக இருக்குமா? மேலும், திராவிட நாட்டை அண்ணா ஒரு கூட்டரசாக ஒன்றியமாகத்தான் முன்மொழிந்தார் என்றாலும் தமிழர்கள் கை ஓங்கிவிடுமோ என்ற அச்சமும் தமிழரல்லாதோரிடம் இருந்தது" என்று விளக்குகிறார் கொடிக்கால் ஷேக் அப்துல்லா.

திராவிட இயக்கம் பேசிய சாதிப் பிரச்னை, அடித்தட்டு மக்களையும் சிறுபான்மை இயக்கத்தையும் ஈர்த்ததையும் கொடிக்கால் சுட்டிக் காட்டுகிறார். தமிழர்களின் திராவிட இயக்கத்தை தெலுங்கர்களும், கன்னடர்களும், அது 'யாருக்கான' இயக்கம் என்று புரிந்து கொண்டார்கள்.

 ‘மாபெரும் புத்தகக் கனவு !’ - ப.திருமாவேலன்
வினோபா

வினோபா கேட்கிறார்: ''உங்கள் கழகத்தில் யார் வேண்டுமானாலும் சேரலாமல்லவா... உதாரணமாக நான் சேர விரும்பினால்?" என்று கேட்கிறார். கேட்பது வினோபா என்பதற்காக தாட்சண்யம் பார்க்கவில்லை அண்ணா, ஒப்புக்குக் கூட ஒப்புக்கொள்ளவில்லை.'' எங்களுடையது அகில இந்தியக் கட்சி அல்லவே, எனவே இயல்பாகவே திராவிட நாட்டிலுள்ளோர் தான் உறுப்பினர்களாகச் சேர விரும்புவர்" என்கிறார் அண்ணா.

திராவிட நாட்டைக் கட்டமைக்க திராவிட நாட்டுக்கு வெளியே அண்ணா மேற்கொண்ட பயணங்கள் குறித்து இரா.வினோத் எழுதி இருக்கிறார். 'வடக்கை எதிர்கொள்ளும் தெற்கின் அடையாளம்' என்று திராவிடம் என்ற சொல்லுக்கு இலக்கணம் சொல்கிறார் கட்டுரையாளர். இதில் அம்பேத்கரையும் ஜின்னாவையும் சந்திக்க பெரியாரும் அண்ணாவும் சென்றதும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

 ‘மாபெரும் புத்தகக் கனவு !’ - ப.திருமாவேலன்

தாழ்த்தப்பட்டோர் நலன் குறித்த அக்கறையை சத்தியவாணி முத்துவும், நில உரிமை மீட்பு குறித்த கிருஷ்ணம்மாள் பதிவும் முக்கியமானது. நிலமீட்பு விவகாரத்தில் முத்தமிழறிஞர் கலைஞரும் தளபதி மு.க.ஸ்டாலினும் செய்த உதவிகள் கவனிக்கத்தக்கது.

 ‘மாபெரும் புத்தகக் கனவு !’ - ப.திருமாவேலன்

தமிழிலக்கியவாதிகளுக்குள் இருந்த பிராமணப் பார்வையை கி.ரா.உறித்து தொங்கவிட்டுள்ளார். வழக்கம் போல் அது ஜெயமோகன்களின் மனதில் குற்றவுணர்ச்சியை உருவாக்கியதையும் பார்க்கிறோம். இலக்கியத்துக்குள் அன்று முதல் இன்று வரை இருக்கும் விமர்சனங்கள் கலை சார்ந்தவை அல்ல, நூல் சார்ந்தவை என்பதை உணராதவர் யாருமில்லை. அது கி.ரா.வாயில் இருந்து வருவது தான் முக்கியம். பிரமிள் பக்கம் பக்கமாக எழுதியதை ஒற்றை வார்த்தையில் சொல்லி விட்டார் கி.ரா. இப்படியே தொ.ப., ஆ.சிவசுப்பிரமணியம், தமிழவன் என்று சொல்லிக் கொண்டே போகலாம். 800 பக்க புத்தகம் அது. ஒவ்வொரு கட்டுரை குறித்தும் சொல்லப் போனால் அதுவே அதைவிட பெரிய புத்தகம் ஆகிவிடும்.

அண்ணாவுக்கு அடுத்து பொதுச்செயலாளர் ஆனார் நாவலர். அவரை மேடைக்கு அழைத்தார் அண்ணா. இருவர் உயரமும் உங்களுக்குத் தெரியும். 'திமுக வளர்ந்து வருகிறது என்பதற்கு உதாரணம் தான் என் இடத்தில் நாவலர் வருவது' என்று சொன்னார் அண்ணா. அது மாதிரி ஆகிவிடக்கூடாது இந்த விமர்சனம்.

இந்த உதாரணத்தை நான் சொல்ல இன்னொரு காரணமும் இருக்கிறது. எத்தகைய மனிதராக இருந்தால் இத்தகைய சொல்லைப் பயன்படுத்தி இருப்பார் அண்ணா? தன்னை விடத் தன் தம்பிமார்கள் புத்திசாலிகள் என்று நினைத்தவர். அப்படி வர வேண்டும் என்று ஆசைப்பட்டவர். அப்படி வளர்த்துவிட்டவர்.

தானும் வளர்ந்து தன்னோடு இருப்பவர்களையும் வளர்த்தவர். மொழியும் இனமும் அவரது இரண்டு கண்கள். கொள்கையும் குணமும் ஒரு சேர இருந்தது அவர் உயிர். மேலும் கீழும் சிந்தித்த மூளை அது. இதுதான் அண்ணா. அவரை இன்றைய சமூகத்துக்குச் சொல்லும் காரியத்தை தமிழ் இந்து செவ்வனே செய்துள்ளது.

 ‘மாபெரும் புத்தகக் கனவு !’ - ப.திருமாவேலன்

இந்த மாபெரும் புத்தகக் கனவு அனைவர் கைக்கும் வந்து சேரும் வரை உழைத்த அனைவருக்கும் நன்றிகள்!

ஆசிரியர் குழுவுக்குச் சொல்வதற்கு ஒரு கருத்து இருக்கிறது: நடுநிலை என்று காட்டிக் கொள்ள முயற்சிக்க வேண்டியது இல்லை என்பது தான். அண்ணா குறித்து எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் சொன்னதை முன்னோட்டமாகக் குறிப்பிடுவது அல்ல நடுநிலை. அண்ணாவின் சிந்தனைக்கு புறம்பானவர்களாக இருந்தால் அவரது வாரிசுகளைக்கூட ஒதுக்கி வைத்துத்தான் பார்க்க வேண்டும். அதுவே தமிழகத்துக்குக் காட்டவேண்டிய உண்மையான தமிழ்த்திசை!

- ப.திருமாவேலன்

Related Stories

Related Stories