
குடியுரிமையற்றவர்களாக ஆக்க ‘குடியுரிமைச் சட்டம்’. வாக்குரிமைகளைப் பறிக்க ‘சிறப்பு வாக்காளர் திருத்தம்’. அந்த வரிசையில் மக்களைக் கண்காணிக்கும் சந்தேக செயலிகள். சொந்த நாட்டு மக்களை வேட்டையாடுவதில் தான் பா.ஜ.க.வுக்கு எத்தனை சுகம்?! என முரசொலி தலையங்கம் விமர்சித்துள்ளது.
இதுகுறித்து முரசொலி வெளியிட்டுள்ள தலையங்கத்தில், “பா.ஜ.க. எதைச் செய்தாலும் சந்தேகத்துக்கு உரியதுதான். அந்த வரிசையில் ‘சஞ்சார் சாத்தி’ செயலி வந்துள்ளது. சொந்த நாட்டு மக்களை உளவு பார்க்க இதனை நுழைக்க உள்ளனர்.
புதிதாக விற்பனைக்கு வரும் ஸ்மார்ட் செல்பேசிகள் அனைத்திலும் ‘சஞ்சார் சாத்தி’ செயலியைப் பொருத்த வேண்டுமா. அதனை அந்த செல்போன் நிறுவனங்களே பொருத்த வேண்டுமா. ஒன்றிய பா.ஜ.க. அரசின் உத்தரவு இது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து புதிய செல்போன்களிலும் 90 நாட்களுக்குள் இந்தச் செயலியைத் தயாரிக்கும் நிறுவனங்களே நிறுவி இருக்க வேண்டும் வேண்டும் என்று சொல்லி 2026 பிப்ரவரி மாதம் வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு செயலி, ஒவ்வொரு செல்போனிலும் கட்டாயம் இருக்க வேண்டும் என்று சொல்வது இதுவே முதல் முறையாகும்.
“தொலைத்தொடர்புத் துறை, நிதி மோசடி அபாயம் குறித்த தகவல் வழங்கும் நடவடிக்கையையும் செயல்படுத்தியுள்ளது. தொடர்பின் அடிப்படையில் மொபைல் எண்களை மதிப்பிட்டு வகைப்படுத்துகிறது. இந்தக் கருவி – வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள், யு.பி.ஐ. சேவை வழங்குநர்கள் போன்றோர், நுகர்வோரைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உதவுகிறது” என்று அரசு சொல்கிறது.

“2023 மே 16, 2023 அன்று தொடங்கப்பட்ட இணையதளத்தின் வெற்றியை அடுத்து 2025 ஜனவரி 17 அன்று சஞ்சார் சாத்தி (சஞ்சார் சத்தி) மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இது தொலைத்தொடர்பு பாதுகாப்புச் சேவைகளை நேரடியாகவும் வசதியாகவும் அணுகவும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் கிடைக்கும். இந்தச் செயலி, பயனர்கள் தங்கள் தொலைத்தொடர்பு அடையாளத்தைப் பாதுகாக்கவும், மோசடிகளுக்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் அளிக்கிறது." என்றும் சொல்கிறது ஒன்றிய அரசு.
செல்போன் வைத்திருப்பவர்கள் இதனை நீக்க முடியாத அளவுக்கு இதைப் பொருத்தச் சொல்லி இருக்கிறார்கள். இந்த விதிமுறைகளைப் பின்பற்றாத செல்போன் நிறுவனங்கள் மீது தொலைத்தொடர்பு சட்டம் பாயும்.
செல்போன்கள் தொலைந்து போனால் கண்டுபிடிக்க இது உதவும் என்கிறார்கள். தொலைந்து போன செல்போனைக் கண்டுபிடிக்கவும், 16 இலக்க ஐ.எம்.ஐ.ஐ. அடையாள எண்களில் நடைபெறும் மோசடிகளைத் தடுக்கவும் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
‘திருடு போன போனைக் கண்டுபிடிப்பதற்காக அல்ல, தகவல்களைத் திருடவும் கண்காணிக்க வேண்டும்’ என்று சமூகச் செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சாட்டுகிறார்கள். ‘இந்தச் செயலிதான் அரசாங்கத்தின் கண்காணிப்பாளர்’ என்று அவர்கள் சொல்கிறார்கள். பெகாசஸ் போன்ற உளவு பார்க்கும் கருவியாக இதனை அவர்கள் பார்க்கிறார்கள். ‘அதிகாரப் பூர்வ பெகாசஸ்’ ஆக இதனை மாற்ற ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சிப்பதாகவே இதனை அவர்கள் பார்க்கிறார்கள்.
செல்போன் நிறுவனங்களும் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆப்பிள் நிறுவனம், “இது போன்ற செயலியைப் பொருத்தமாட்டோம்” என்று சொல்லி விட்டதாம். ‘சாம்சங்’ போன்ற நிறுவனங்கள், ஒன்றிய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யச் சொல்லி இருப்பதாகச் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவுக்காக மட்டும் இது போன்று தனித்துச் செயல்பட முடியாது என்று அவை முடிவெடுத்துள்ளன.

“இது மக்களின் குரலை நெரிக்க பா.ஜ.க.வின் மற்றொரு முயற்சி. இது சர்வாதிகாரத்தைப் போன்றது. பா.ஜ.க.வின் கொடுங்கோல் ஆட்சியின் அடையாளம் இது” சொல்லி இருக்கிறார் காங்கிரஸ் தலைவர் கார்கே. “மோடி அரசின் இந்த உத்தரவு, மக்களின் தனியுரிமை மீதான வெட்கக்கேடான தாக்குதல். உடனடியாக இதனைத் திரும்பப் பெற வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார் ஆம் ஆத்மி தலைவரும் டெல்லியின் முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால்.
“சைபர் மோசடிகளைத் தடுக்க வேண்டும். ஆனால் இந்தச் செயலி அனைவரும் தனியுரிமையையும் பறிக்கிறது” என்று சொல்லி இருக்கிறார் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி. “ஒன்றிய அரசின் நடவடிக்கை மற்றொரு ‘பிக் பாஸ்’ கண்காணிப்புத் தருணம்” என்று உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி.யான பிரியங்கா சதுர்வேதி சொல்லி இருக்கிறார்.
எதிர்ப்புகள் அதிகம் ஆனது, ‘தேவையானால் வைத்துக்கொள்ளலாம், வேண்டாம் என்பவர்கள் நீக்கிக் கொள்ளலாம்’ என்று ஒன்றிய அரசு பின்வாங்கி உள்ளது. “சஞ்சார் சாத்தி செயலியை நீக்கிக் கொள்ள சுதந்திரம் உள்ளது. செயலி மூலம் உளவு பார்க்கும் அல்லது அழைப்பு கண்காணிப்பு எதுவும் இல்லை” என்று ஒன்றிய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சொல்லி இருக்கிறார்.
“சஞ்சர் சாத்தி செயலியை முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்று செல்போன் தயாரிப்பாளர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு திரும்ப பெறப்பட்டு விட்டது” என்று தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
குடியுரிமையற்றவர்களாக ஆக்க ‘குடியுரிமைச் சட்டம்’. வாக்குரிமைகளைப் பறிக்க ‘சிறப்பு வாக்காளர் திருத்தம்’. அந்த வரிசையில் மக்களைக் கண்காணிக்கும் சந்தேக செயலிகள். சொந்த நாட்டு மக்களை வேட்டையாடுவதில் தான் பா.ஜ.க.வுக்கு எத்தனை சுகம்?!” என தெரிவித்துள்ளது.






