
முரசொலி தலையங்கம் (28-11-2025)
ஆளுநர் ஆற்றும் சேவை என்ன?
‘‘தமிழக மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று சொல்லி இருக்கிறார் ஆளுநர் ரவி. அவர் இதுவரை தமிழ்நாட்டுக்கு ஆற்றிய சேவை என்ன? ஏதுமில்லை.
ஆளுநராக வந்தது முதல் தமிழ்நாட்டை அவமானப்படுத்திக் கொண்டு இருக்கிறார். இதுதான் அவர் செய்யும் சேவை ஆகும். பா.ஜ.க. கணக்கில் இதுதானே சேவை என்பது!?
தனியார் தொலைக்காட்சிக்கு ஆளுநர் ரவி ஒரு பேட்டியைக் கொடுத்துள்ளார். வாயில் இருந்து வருவது அனைத்துமே அவதூறுதான். இவ்வளவு கெட்ட எண்ணம் கொண்ட ஒருவரை இதுவரை தமிழ்நாடு பார்த்தது இல்லை. தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வாய்த்ததும் இல்லை.
ஆளுநர்களுக்கும் மாநில அரசுக்கும் முரண்பாடுகள் அதிகம் இருந்த காலம் உண்டு. அப்போது எல்லாம் அது ஆளும் கட்சிக்கும், அல்லது முதலமைச்சருக்கும் ஆளுநருக்குமான மோதலாக இருக்கும். அந்த மோதல் சில நேரங்களில் இருக்கும். பல நேரங்களில் இருக்காது. சந்திப்புகளைத் தவிர்ப்பார்கள் என்பதைத் தவிர வெளிப்படையாக இருக்காது.
ஆனால் ஆளுநராக வந்தது முதல் தமிழ்நாட்டின் மீது தாக்குதல் நடத்திக் கொண்டு இருக்கிறார் ரவி. அவருக்கு தமிழை, தமிழ்ப் பண்பாட்டை, தமிழர் தம் வாழ்க்கையை, இதனுடைய இலக்கியங்களை, தமிழ் முன்னோர்களை, தமிழ்நாட்டை,
தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பிடிக்கவில்லை. ‘அய்யோ இவ்வளவு வளம் கொண்டதாக தமிழ் இருக்கிறதே?’, ‘அய்யகோ தமிழர்கள் இவ்வளவு வளர்ந்து விட்டார்களே’, ‘அடக் கொடுமையே தமிழ்நாடு இவ்வளவு வளர்ச்சி அடைந்து விட்டதே’ என்ற வயிற்றெரிச்சல் மட்டும்தான் அவர் வாயில் இருந்து வருகிறதே தவிர வேறு ஏதுமில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்னால் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலும் அதே விஷத்தைத்தான் கக்கி இருக்கிறார் ஆளுநர் ரவி.
தமிழ்நாட்டில் பாதுகாப்பு பிரச்சினைகள் இருக்கிறது, இங்கு தேச விரோத சிந்தனைகள்தான் இருக்கிறது, பயங்கரவாத போக்குகள்தான் நிலவுகிறது, மற்றபகுதியோடு தமிழ்நாடு தன்னை விலக்கிக் கொள்கிறது, பீகார் தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது, அவர்கள் வரத் தயங்குவதால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது, இந்தி எதிர்ப்பு என்ற மலிவான அரசியல் நடத்தப்படுகிறது, திராவிட இனம் என்று சொல்லிக் கொள்கிறார்கள், ஐரோப்பிய சிந்தனையோடு இருக்கிறார்கள், ஜெர்மன் நாஜிக்களின் சிந்தனையோடு இருக்கிறார்கள், மொழிச் சிறுபான்மையினரின் மொழியைக் கற்றுத் தருவது இல்லை, அனைத்து மொழிகளையும் வெறுக்கிறார்கள், தமிழை மேம்படுத்தவில்லை, ஆங்கிலம்தான் அனைவரும் படிக்கிறார்கள், உயர் கல்வியை யாரும் தமிழில் படிக்கவில்லை, பேச்சுரிமையையும் எழுத்துரிமையை யும் தவறாகப் பயன் படுத்துகிறார்கள், வெளிநாட்டுச் சக்திகளின் தூண்டுதலில் இதெல்லாம் நடக்கிறது, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் – இதுதான் ஆளுநர் ரவி கொடுத்த பேட்டியின் உள்ளடக்கம் ஆகும்.
இதில் ஏதாவது சேவை மனப்பான்மை இருக்கிறதா? நல்லெண்ணம் தெரிகிறதா? மொத்தமும் அவதூறு. வன்மம். விஷம். விஷமம் மட்டும்தான்.
இவ்வளவு ‘மோசமான’ மாநிலத்தில் ஆளுநராக இருப்பது கேவலமில்லையா? எதற்காக இருக்கிறார் அவர்? போகவேண்டியது தானே? அவர் சொல்லியதில் ஒரு துளியாவது உண்மை இருந்தால், அவர் இந்த மாநிலத்தை விட்டே போயிருப்பார். போகாமல் இங்கு இருப்பதற்கு உண்மையான காரணம், இவை ஏதும் இல்லை என்பதுதான்.
அவர் இங்கே இந்தப் பொறுப்பில் இருந்து கொண்டு இருப்பது, உள்ளே இருந்து கெடுப்பதற்காகத்தான். கெட்ட பெயர் ஏற்படுத்துவதற்காகத்தான். ‘தமிழ்நாடு அமைதியான மாநிலம் அல்ல, இங்கு தொழில் தொடங்க வராதீர்கள்’ என்பதைச் சொல்வதற்காகத்தான் இங்கே குடியிருக்கிறார். நன்றாகக் கவனித்தால் வெளிநாடு முதலீடுகளை ஈர்ப்பதற்காக மாண்புமிகு முதலமைச்சர் எப்போதெல்லாம் வெளிநாட்டுக்குச் செல்கிறாரோ அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று ஆளுநர் ரவி பேசி இருப்பார். வெளிநாட்டு நிறுவனங்களின் மனதைக் கலைக்கும் கெட்ட எண்ணத்தின் வெளிப்பாடு ஆகும்.

அதே போன்ற கருத்தைத்தான் வட மாநிலங்களிலும் ஏற்படுத்தப் பார்க்கிறார். வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பணியாற்றுகிறார்கள். அமைதியாக பணியாற்றுகிறார்கள். பீகார் மாநிலத் தேர்தலில் வாக்கு அரசியலுக்காக, ‘பீகார் மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுகிறார்கள்’ என்று பிரதமர் மோடியே சொன்னார்.
‘இந்தியா’ கூட்டணியில் தி.மு.க.வுடன் இடம் பெற்று வரும் கட்சி தேஜஸ்வீ கட்சி. தி.மு.க.வை குற்றம் சாட்டுவதன் மூலமாக தேஜஸ்வீக்கு நெருக்கடி ஏற்படுத்தப் பார்த்தார் பிரதமர் மோடி. ஆனால் தமிழ்நாட்டில் வாழும் பீகார் மாநிலத் தொழிலாளர்கள் இதை மறுத்து ‘தினத்தந்தி’ நாளிதழில் பேட்டி அளித்தார்கள்.
தமிழ்நாட்டில்தான் நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம், ஊதியம் அதிகம் கிடைக்கிறது என்று இங்கு வேலை பார்க்கும் பீகார் மக்கள் சொன்னார்கள். தமிழ் படிக்கத் தொடங்கி இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் ஆளுநர் ரவி, இதைப் படிக்க வேண்டும். ‘யார் தாக்கப்பட்டார்கள்’ என்பதை ஆதாரத்துடன் சொல்ல அவரால் முடியுமா? பொத்தாம் பொதுவாக பேசலாமா ஒரு ஆளுநர்? இப்படிச் சொல்வதற்கு என்ன காரணம்? வட மாநில மக்கள் மத்தியில் தி.மு.க. மீதும், தமிழ்நாட்டின் மீதும் களங்கம் ஏற்படுத்துவது தான் அவரது நோக்கம்.
தமிழ்நாடு முதலமைச்சர் குறித்தும், திட்டங்கள் குறித்தும் மிகப்பெரிய நல்லெண்ணம் மற்ற மாநிலங்களிலும் பரவி இருக்கிறது. வளர்ச்சிக் குறியீடுகளில் தமிழ்நாடு முன்னேறி வருவதை மற்ற மாநிலங்கள் ஆராய்ந்து வருகிறது. இங்கு வந்து நமது புதிய திட்டங்களை பார்வையிட்டுச் செல்கிறார்கள் மற்ற மாநில அமைச்சர்களும், அதிகாரிகளும். இவை எல்லாம் ஆளுநருக்குப் பொறுக்கவில்லை. பொருமுகிறார். தூக்கம் வராமல் துடிக்கிறார். அதனால் பேட்டி என்ற பெயரால் வாய்க்கு வந்ததைச் சொல்கிறார்.
மொழிச் சிறுபான்மையினர் மிக அமைதியாக வாழ்கிறார்கள். அவர்கள் மீது எந்தத் தாக்குதலும் நடந்தது இல்லை. அவர்களது மொழி, அதற்கான பள்ளிகளில் கற்றுத் தரப்படுகிறது. மொழிச் சிறுபான்மையினர் விழாக்களுக்கு விடுமுறைகள் விடப்படுகின்றன. அவர்களுக்கான பாட நூல்கள் எளிதில் கிடைக்கின்றன.
பள்ளி, கல்லூரிகள் தமிழ் வழியிலும் இருக்கின்றன. ஆங்கில வழியிலும் கிடைக்கின்றன. இதில் என்ன தவறு கண்டார் ஆளுநர்? தமிழைத் தவிர அனைத்து மொழிகளையும் வெறுக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டே, அனைவரும் தமிழில் படிக்கவில்லை என்றும் சொல்கிறார். இரண்டுமே எவ்வளவு முரணான வாக்குமூலங்கள்?
முரண்பாடுகளின் மொத்த உருவத்தால் என்ன சேவை ஆற்ற முடியும்?






