
"மாநில அந்தஸ்து வழங்குவதற்கு முன்பாக ஜம்மு -– காஷ்மீரை தயார்படுத்த வேண்டிய நிலை எழுந்துள்ளது." என்ற ஒன்றிய அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூறப்பட்டது. என்ன தயார் படுத்தப் போகிறார்கள்? ‘மாநிலம் அமைதியாகி விட்டது’ என்கிறார் உள்துறை அமைச்சர். இதற்கு மேல் என்ன தயார் செய்யப் போகிறார்கள்? வன்முறையைக் காரணம் காட்டி மாநிலத் தகுதியை விலக்கினீர்கள். அமைதி ஏற்பட்ட பிறகு ஏன் மாநிலத் தகுதி தர மறுக்கிறீர்கள்? எதற்காக காஷ்மீர் மக்களை பழிவாங்குகிறீர்கள்? என முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முரசொலி வெளியிட்டுள்ள தலையங்கம் பின்வருமாறு!
“ஜம்மு – காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநிலத் தகுதி வழங்கப்படும்” என்று சொல்லி உள்ளார் உள் அமைச்சர் அமித்ஷா.
ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370 –ஆவது பிரிவை ரத்து செய்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ‘உரிய நேரம்’ என்றால், இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதுதான் நமது கேள்வி.
ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி வழங்கிய, அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 ஐ, கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதியன்று ஒன்றிய பா.ஜ.க., அரசு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அம்மாநிலம், ஜம்மு – காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதில், சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு – காஷ்மீர் பிரிக்கப்பட்டது. அது முதல் ‘ஜம்மு- – காஷ்மீருக்கு மாநிலத் தகுதியை விரைவில் தருவோம்’ என்று பா.ஜ.க. சொல்லி வருகிறது. ஆனால் செய்யவில்லை.

ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி ரத்து செய்யப்பட்டதை 2023 டிசம்பரில் உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். ஆனால் ஜம்மு – காஷ்மீருக்கு முடிந்தவரை விரைவில் மாநிலத் தகுதி வழங்கும்படி வலியுறுத்தப்பட்டது. அதன்பிறகும் பா.ஜ.க. அரசு அசைந்து கொடுக்க வில்லை.
2024 ஆம் ஆண்டு ஜம்மு – காஷ்மீர் சட்டசபைத் தேர்தல் நடந்தது. இதில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி வெற்றி பெற்றது. உமர் அப்துல்லா, முதல்வராகப் பதவியேற்றார். அவரும், ஜம்மு – காஷ்மீருக்கு மாநிலத் தகுதி வழங்கும்படி ஒன்றிய பா.ஜ.க. அரசை வலியுறுத்தி வருகிறார்.
“நாங்கள் ஜம்மு – காஷ்மீரை முழுமையான மாநிலமாகப் பார்க்கக் காத்திருக்கிறோம். தாமதங்கள் ஏற்பட்டால், உச்ச நீதிமன்றத்தை அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை. மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்படும்போது, எங்களுக்கு அதிக அதிகாரங்கள் கிடைக்கும் என்று நான் ஒப்புக்கொள்கிறேன்,” என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா கூறினார்.
மாநில திடீரென டெல்லியில் இருந்து, ‘ஜம்மு – காஷ்மீருக்கு அந்தஸ்து கொடுக்கப் போகிறார்கள்’ என்ற செய்திகள் உலவுகின்றன. கடந்த 10 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் ஒரே நாளில் அடுத்தடுத்து சந்தித்துப் பேசினார்கள். ஜம்மு – காஷ்மீருக்கு மாநிலத் தகுதி மீண்டும் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

கடந்த 18 ஆம் தேதியன்று பீகாரில் ஒரு மாநாட்டில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, “ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த அரசியல் சாசனத்தின் பிரிவு 370 ஐ நாங்கள் ரத்து செய்தோம். இதன்பிறகு பயங்கரவாதம் குறைந்து விட்டது. ஜம்மு– காஷ்மீரில் மீண்டும் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டு விட்டது. ஜம்மு – காஷ்மீருக்கு உரிய நேரத்தில் அந்தஸ்து வழங்கப்படும். மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லாவிடம் பேசிய பிறகு தான் இந்த முடிவை எடுப்போம்” என்று சொல்லி இருக்கிறார்.
ஜம்மு – காஷ்மீருக்கான 370 ஆவது சிறப்பு அதிகாரம் பறிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆறு ஆண்டுகளாக அங்கு எந்த வன்முறையும் இல்லை என்கிறார் அமைச்சர். ஜனநாயகம் மலர்ந்து விட்டது, சட்டமன்றத் தேர்தல் நடந்துவிட்டது, நாடாளுமன்றத் தேர்தல் நடந்துவிட்டது, உள்ளாட்சித் தேர்தல் நடந்து விட்டது என்று பெருமைப்படுகிறார் அமைச்சர். இப்படி அமைதியான மாநிலத்துக்கு மாநிலத் தகுதியைத் தருவதற்குத் தயக்கம் ஏன்?
ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்குவது தொடர்பான மனு மீதான விசாரணை கடந்த 10 ஆம் தேதி அன்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது குறித்து ஜம்மு-காஷ்மீர் அரசுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
மாநிலத் தகுதி வழங்க வேண்டும் என்று வாதிட்ட வழக்கறிஞர் ஒருவர், “ஒரு யூனியன் பிரதேசமாக மாற்ற அரசுக்கு அனுமதி அளித்தால், நாளை அவர்கள் உத்தரப் பிரதேசம் அல்லது தமிழ்நாட்டைக் கூட யூனியன் பிரதேசமாக மாற்ற முடியும்” என்று குறிப்பிட்டார்.
இந்த வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்குவது தொடர்பான மனுவுக்கு நான்கு வாரத்தில் பதிலளிக்க ஒன்றியம் அரசுக்கு உத்தரவிட்டனர்.

“ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து எப்போது தரப்படும் என்பதற்கு காலக்கெடு விதிக்க முடியாது” என்று உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது. காலக் கெடு விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் சொல்லி விட்டு, உரிய நேரத்தில் அந்தஸ்து தரப்படும் என்று அமித்ஷா சொல்வது ‘இரட்டை’ நாக்கு வாக்குமூலம்’ ஆகும்.
"மாநில அந்தஸ்து வழங்குவதற்கு முன்பாக ஜம்மு -– காஷ்மீரை தயார்படுத்த வேண்டிய நிலை எழுந்துள்ளது." என்ற ஒன்றிய அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூறப்பட்டது. என்ன தயார் படுத்தப் போகிறார்கள்? ‘மாநிலம் அமைதியாகி விட்டது’ என்கிறார் உள் அமைச்சர். இதற்கு மேல் என்ன தயார் செய்யப் போகிறார்கள்? வன்முறையைக் காரணம் காட்டி மாநிலத் தகுதியை விலக்கினீர்கள். அமைதி ஏற்பட்ட பிறகு ஏன் மாநிலத் தகுதி தர மறுக்கிறீர்கள்? எதற்காக காஷ்மீர் மக்களை பழிவாங்குகிறீர்கள்? எனத் தெரிவித்துள்ளார்.






