இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஏற்காத – இந்திய தேசியக் கொடியை ஏற்காத – ஜனநாயகம் என்ற சொல்லை ஏற்காத – அரசமைப்புச் சட்ட விழுமியங்களை ஏற்காத – மூன்று முறை இந்திய நாட்டில் தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி இருக்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
ஆர்.எஸ்.எஸ்., எனப்படும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம், 1925ஆம் ஆண்டு மஹாராஷ்டிராவின் நாக்பூரில் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தின் நூற்றாண்டு விழா, டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, சிறப்பு நாணயம் மற்றும் அஞ்சல் தலையை வெளியிட்டார்.
ரூ.100 மதிப்பு கொண்ட நாணயத்தின் ஒரு பக்கத்தில் தேசியச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில், சிம்ம வாகனத்தில் வரத முத்திரையுடன் பாரத மாதா இருக்கும் படமும், அதனை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வணங்குவது போன்ற உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த நாணயத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா என்ற வாசகம் ஆங்கிலத்திலும், இந்தியிலும் இருக்கிறது. ‘அனைத்தும் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கே அனைத்தும் சொந்தம். என்னுடைய எதுவும் இல்லை’ எனப் பொருள்படும் வாசகமும் பொறிக்கப்பட்டு உள்ளது.
சிறப்பு நாணயத்துடன் வெளியிடப்பட்ட அஞ்சல் தலையில் ‘1963ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின் போது நடந்த அணிவகுப்பில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பங்கேற்ற புகைப்படம்’ இடம்பெற்றுள்ளது.
அது என்ன 1963 படம்? இந்தியா குடியரசு ஆன 1950 ஆம் ஆண்டு அவர்கள் அமைப்பு தேசியக் கொடியை வணங்கும் படத்தை வெளியிட்டிருக்க வேண்டியதுதானே? உண்மையான தேச பக்த அமைப்பாக இருக்குமானால் 1925 ஆம் ஆண்டு தேசத்துக்காகப் போராடிய புகைப்படத்தை வெளியிட்டு இருக்கலாமே? இந்தியா விடுதலை அடைந்த 1947 ஆகஸ்ட் 15 அன்று தேசியக் கொடியை வணங்கி இருந்தால் அதனை வெளியிட்டு இருக்கலாமே? ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ என்பதைப் போல வரலாற்றை 1963 ஆம் ஆண்டில் இருந்து எதற்காகத் தொடங்குகிறீர்கள்?
ஏனென்றால் இந்திய விடுதலைப் போராட்டத்தை ஏற்காத அமைப்பு அது. விடுதலைக்குப் போராடாத அமைப்பு அது. ‘பிரிட்டிஷ் எதிர்ப்பு என்பது மட்டுமே தேசப்பற்று ஆகாது’ என்றும், ‘தேசியவாதம் ஆகாது’ என்றும் சொன்னவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் கோல்வார்க்கர். ஒத்துழையாமை இயக்கத்தையும், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தையும் “சட்டத்தை மதிக்க வேண்டியது இல்லை என்ற நினைப்பை உருவாக்கிய இயக்கம்” என்று சொன்னவரும் அவர்தான்.
‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதிய மேதாவிகளுக்கு மனுஸ்மிருதி தெரியவில்லை’ என்று எழுதியவர் கோல்வார்க்கர். “மனு தர்ம சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியலமைப்புச் சட்டம் வகுக்கப்பட வேண்டும்” என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான சுதர்சன் சொன்னார். இந்தியாவின் அரசியல் நிர்ணய சபையானது மூவர்ணக்கொடியை இந்தியாவின் தேசியக் கொடியாக அறிவித்த போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அதனை ஏற்கவில்லை.
•இந்துக்களும் இசுலாமியர்களும் இணைந்து பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடுவதை – இது போன்ற கூட்டு தேசிய நடவடிக்கைகளை எதிர்த்தவர்கள் இவர்கள். ‘வேர் வரை செல்லும் வேறுபாடுகள் கொண்ட இனங்களும் கலாச்சாரங்களும் ஒன்றுபட்ட முழுமையாக ஒன்றிணைக்கப்படுவது முற்றிலும் இயலாத ஒன்று என்பதை ஜெர்மனி நமக்குக் காட்டியுள்ளது” என்று கோல்வார்க்கர் சொன்னது இதனைத்தான்.
•ஜனநாயகம் என்பதையே மேலை நாட்டுக் கருத்தாக்கம் என்று நினைக்கக் கூடியவர்கள் இவர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி, நாடாளுமன்ற உறுப்பினர்களது சிந்தனையில் உருவாக்கப்படும் சட்டங்கள் ஆகியவற்றுக்கு மரியாதை தராமல் ‘ஏகசாலக் அனுவர்தித்வா’ என்று சொல்லப்படும் ஒற்றைத் தலைவரின் அதிகாரத்துக்கு கேள்விக்கு இடமின்றி அடிபணியும் கொள்கையை அரசியல் – ஆட்சியல் கோட்பாடாக மாற்றுவதுதான் இவர்களது நடைமுறையாகும்.
சாதிப் பாகுபாட்டை முழுக்க முழுக்க நியாயப்படுத்தும் அமைப்பு இது. சாதிப் பிரிவு என்பதையே ‘வர்ண வியாவஸ்தா’ என்று சொல்லிக் கொள்வார்கள். சாதி அமைப்பு முறைதான் இந்தியாவைக் காப்பாற்றுவது என்ற கொள்கை கொண்டவர்கள் இவர்கள். ‘சாதி அமைப்பு முறையானது சமூகத்தில் ஒற்றுமையைக் காப்பதற்கே உதவி செய்திருக்கிறது’ என்று சொன்னவர் கோல்வார்க்கர்.
இன்றைக்கு இருக்கும் மாநிலங்கள் என்ற அமைப்பையே ஏற்காதவர்கள் இவர்கள். சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக ஆக்க நினைப்பவர்கள். சமஸ்கிருதம் ஆட்சிமொழி ஆகும் வரை இந்தியை ஆட்சி மொழி ஆக்க நினைப்பவர்கள் இவர்கள். இந்த அமைப்பின் நூற்றாண்டு விழாவை, இந்தியப் பிரதமர் கொண்டாடுவது இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கே எதிரானது ஆகும்.
“நம் தேசப்பிதாவைக் கொன்றொழித்த மதவாதியின் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும் நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும்!” என்று மிகச் சரியாகச் சொல்லி இருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
“ஆர்.எஸ்.எஸ். இயக்க நினைவு நாணயத்தை வெளியிட்டது அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிப்பதாகும்”என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மோடியின் இந்த ஆக்டிங்க்கு பின்னணி என்ன?
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பிரதமர் மோடியை மிரட்டி வருகிறது என்றே டெல்லி தகவல்கள் சொல்கின்றன. மோடி நினைக்கும் ஆளை பா.ஜ.க. தலைவராக நியமிக்க முடியவில்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சொல்லும் நபரை, மோடி நியமிக்க மறுக்கிறார்.
இந்த நிலையில் இரண்டு துணை பிரதமர்களை நியமிக்கச் சொல்லி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கட்டாயப்படுத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. பா.ஜ.க. எம்.பி.க்களே மூன்றாகப் பிரிந்து கிடக்கிறார்கள் என்கிறார்கள். ‘75 வயதானவர் மோடி அவர் பதவி விலக வேண்டும்’ என்றும் சிலர் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். இத்தகைய அரசியல் நெருக்கடிகளில் இருந்து தப்பவே நாணயம் வெளியிட்டார், அஞ்சல் தலை வெளியிட்டார்.
தனக்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை சமாளிக்க அரசமைப்புச் சட்டத்தை கேலிக்கூத்து ஆக்கக் கூடாது.