முரசொலி தலையங்கம்

“விஸ்வகுரு, விசுவாசம் இல்லாத குருவாகக் காட்டிக் கொண்டுவிட்டார்” - மோடியை விமர்சித்த முரசொலி தலையங்கம்!

பிரதமர் இரண்டரை ஆண்டுகள் கழித்து மணிப்பூர் செல்கிறார். மனச்சாட்சி உறுத்தாதா? மனச்சாட்சி என்பது தான் இருக்கிறதா? என முரசொலி தலையங்கம் விமர்சித்துள்ளது.

“விஸ்வகுரு, விசுவாசம் இல்லாத குருவாகக் காட்டிக் கொண்டுவிட்டார்” - மோடியை விமர்சித்த முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

முரசொலி தலையங்கம்

15.09.2025

மணிப்பூர் செல்ல இரண்டரை ஆண்டுகளா?

2023ஆம் ஆண்டு மணிப்பூரில் கொடூரமான வன்முறை தொடங்கியது. 2025 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் மணிப்பூர் சென்றுள்ளார் பிரதமர். எத்தகைய சுறுசுறுப்பான ஒருவரை இந்திய நாடு பிரதமராகப் பெற்றுள்ளது பார்த்தீர்களா?

இடைப்பட்ட காலத்தில் உலகத்தின் முக்கியமான பாதி நாடுகளுக்கு பயணம் சென்று வந்துவிட்டார் பிரதமர் மோடி. ஆனால் அவரால் இந்தியாவுக்குள் இருக்கும் மணிப்பூருக்குச் செல்ல முடியவில்லை. மக்களைப் பற்றியும், இந்திய நாட்டின் மீதும் அவருக்கு இருக்கும் அக்கறையின் அளவு தான் இரண்டரை ஆண்டு காலம் ஆகும். மணிப்பூர் சென்ற பிரதமர் மோடிக்கு அந்த மாநிலத்து மக்கள் கொடுத்த வரவேற்பை' அவர் வாழ்நாளில் மறக்க முடியாது. பிரதமர் பதவியை விட்டு இறங்கிய பிறகும் அவருக்கு இந்தக் காட்சிகள் மறக்காது. பல்வேறு இடங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டன. பெண்கள் கறுப்பு உடை அணைந்து மோடிக்கு எதிராக முழக்கமிட்டனர். மணிப்பூர் பல்கலைகழக மாணவர்கள் கருப்பு கோடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் நீண்ட நேரம் போராட்ட காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு நிலவியது.

மணிப்பூரில் பேசிய பிரதமர், “இந்த வன்முறை நமது முன்னோர்களுக்கும் நமது எதிர்கால தலைமுறைக்கும் இழைக்கப்படும் அநீதி. அமைதி மற்றும் வளர்ச்சிப் பாதைக்கு நாம் மணிப்பூரை முன்னோக்கி அழைத்துச் செல்ல வேண்டும்” என்று பேசி இருக்கிறார். இந்தச் செயலை இரண்டரை ஆண்டுகளாக அவர் ஏன் செய்யவில்லை என்பதுதான் கேள்வி.

2023 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி அன்று மணிப்பூர் எரியத் தொடங்கியது. இதுவரை அரசு கணக்குப் படி 260 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். எண்ணிக்கை இன்னும் ஒரு மடங்கு இருக்கும். 3 ஆயிரம் பேர் காயம் பட்டுள்ளார்கள். ஒரு லட்சம் பேருக்கு மேல் மாநிலத்தை விட்டு இடம் பெயர்ந்துள்ளார்கள். இரண்டரை ஆண்டுகளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு விட்டது. ஆனால் இது இந்திய பிரதமருக்கு இப்போதுதான் தெரிகிறது. ஒன்றியத்தை ஆள்வதும் பா.ஜ.க. மணிப்பூரை ஆண்டதும் பா.ஜ.க. ஆனால் இரட்டை இஞ்சின் அரசு, மணிப்பூர் மக்களை காப்பாற்றவில்லை.

“விஸ்வகுரு, விசுவாசம் இல்லாத குருவாகக் காட்டிக் கொண்டுவிட்டார்” - மோடியை விமர்சித்த முரசொலி தலையங்கம்!

மணிப்பூர் முதலமைச்சர் பிரேன்சிங் வீட்டின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினார்கள். பா.ஜ.க. அமைச்சர்களின் வீடுகள் தாக்கப்பட்டன. எம்.எல்.ஏ.க்கள் வீடுகளும் தாக்கப்பட்டன. முதலமைச்சர் பிரேன்சிங்கின் மருமகன் ராஜ்குமார் இமோசிங் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அவர் வீடும் தாக்கப்பட்டுள்ளது. 6 எம்.எல்.ஏ.க்களின் வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன. அப்போதும் மணிப்பூரை ஆண்ட பா.ஜ.க. அரசு அசைந்து கொடுக்கவில்லை. பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் டெல்லிக்கு வந்து பா.ஜ.க. தலைமையிடம் முறையிட்டார்கள். உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் முறையிட்டார்கள். ஆனாலும் மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரான சபம் ரஞ்சன் லாம்பெல் வீடு தாக்கப்பட்டது. அப்போது அவர் வீட்டுக்குள் தான் இருந்தார். 'இந்த பிரச்சினையை தீர்த்து வைப்பேன், இல்லாவிட்டால் பதவி விலகி விடுவேன்' என்று போராட்டக்காரர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டுள்ளார் அமைச்சர். இதுதான் அங்குள்ள நிலைமையாக இருந்தது. வெட்கமாக இல்லை பா.ஜ.க. ஆட்சியாளர்களுக்கு.

“மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்புச் சூழல் பலவீனமாகவே உள்ளது. இரண்டு சமூகத்தினைச் சேர்ந்த ஆயுதம் ஏந்திய குற்றவாளிகள் வன்முறையில் ஈடுபடுவது தேவையில்லாத உயிரிழப்புகளுக்கும், பொது அமைதி சீர்குலைவுக்கும் வழிவகுக்கிறது. சட்டம் - ஒழுங்கு மற்றும் அமைதியை நிலைநாட்டுவதர்க்கு தேவையான நடவடிக்கை களை எடுக்கும்படி பாதுகாப்பு படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வன்முறை மற்றும் அமைதியைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிக்கை கொடுத்ததோடு தனது கடமை முடிந்ததாக மவுனம் ஆனது.

குக்கி - மைத்ரி இன மக்களின் மோதலாக இது தொடங்கினா லும் பா.ஜ.க. அரசின் கையாலாகாத்தனமே இரண்டரை ஆண்டுகளாக நீடிக்கக் காரணம். இதற்கு பொறுப்பேற்க வேண்டியது பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அல்லவா?

பிரதமர் பேசுவது உண்மையானால், எதிர்காலத் தலைமுறைக்கு துரோகம் செய்தது அவர் தானே?

இந்தக் கலவரங்களுக்கு காரணமான முதலமைச்சர் பிரேன்சிங்கைக் கூட பதவி நீக்கம் செய்யும் துணிச்சல் முதலில் பா.ஜ.க. தலைமைக்கு இல்லை.

“விஸ்வகுரு, விசுவாசம் இல்லாத குருவாகக் காட்டிக் கொண்டுவிட்டார்” - மோடியை விமர்சித்த முரசொலி தலையங்கம்!

அங்கு நடந்த வன்முறைகள் அனைத்தையும் மணிப்பூர் காவல் துறை வேடிக்கை பார்த்தது. மணிப்பூரில் துப்பாக்கிகள் சர்வசாதாரணமாகக் கிடைக்கும். மேலும், காவல் நிலையங்களில் புகுந்து போராட்டக் காரர்கள் துப்பாக்கிகளைத் தூக்கிச் சென்றார்கள். அதையும் பிரேன் சிங் அரசால் தடுக்க முடியவில்லை.

இதன் உச்சமாக இரண்டு பெண்கள் ஆடை களையப்பட்டு நிர்வாணமாக அழைத்துச் செல்லப்படுவதும் - அதனை பெரும் கூட்டமானது வேடிக்கை பார்த்தபடி நடந்து செல்வதுமான காட்சிகள் வெளியானது.

‘தினத்தந்தி’ நாளிதழ் பிரேன் சிங்கின் பேட்டியை தலைப்புச் செய்தியாக 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்டது. பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டது பற்றி அந்த நிருபர் கேட்டபோது, 'இது போல நிறைய நடந்துள்ளதே' என்று பதற்றமே இல்லாமல் சொன்னவர் தான் பிரேன் சிங்.

2023 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் தேதி இந்த கொடூர சம்பவம் நடந்தது. இந்த வீடியோ ஜூலை மாதம் வெளியானது. வெளியான பிறகு, ஜூலை 18 ஆம் தேதிதான் கொடூரத்துக்கு காரணமான சிலரை கணக்குக் காட்டுவதற்காக கைது செய்தார் பிரேன் சிங். அவர்கள் மீதே ஒன்றரை ஆண்டுகள் கழித்து தான் நடவடிக்கை எடுத்தார்கள்.

பிரதமர் இரண்டரை ஆண்டுகள் கழித்து மணிப்பூர் செல்கிறார். மனச்சாட்சி உறுத்தாதா? மனச்சாட்சி என்பது தான் இருக்கிறதா?

விஸ்வகுருவாக அவரை அவரது அடிப்பொடிகள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்திய நாட்டு மக்கள் மீது விசுவாசம் இல்லாத குருவாகக் காட்டிக் கொண்டுவிட்டார்.

banner

Related Stories

Related Stories