முரசொலி தலையங்கம்

”ஒன்றிய அரசை கண்டு அஞ்சாத அமர்நாத் இராமகிருஷ்ணன்” : முரசொலி தலையங்கம் பாராட்டு!

கடந்த எட்டு ஆண்டுகளாக கீழடிப் பெருமையை நிலைநாட்டப் போராடி வரும் அறிஞர் அமர்நாத் இராமகிருஷ்ணனை வாழ்த்துவோம்! பாராட்டுவோம்!

”ஒன்றிய அரசை கண்டு அஞ்சாத அமர்நாத் இராமகிருஷ்ணன்” : முரசொலி தலையங்கம் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (20-06-2025)

அமர்நாத் இராமகிருஷ்ணனின் அறிவும் அஞ்சாமையும்!

அமர்நாத் இராமகிருஷ்ணன் என்ற தொல்லியல் துறை ஆய்வாளருக்குத் தமிழ்ச் சமுதாயம் என்றென்றும் கடமைப் பட்டிருக்கிறது. அவரது அறிவும், அஞ்சாமையும்தான் தமிழினத்தின் பெருமையை நிலை நிறுத்தி இருக்கிறது. அவரது துறையில் எத்தனையோ அறிஞர்கள் இருப்பார்கள்.

அவர்கள் பல கண்டுபிடிப்புகளைச் செய்திருப்பார்கள். ஆனால், தனது கண்டுபிடிப்புக்காக ஒன்றிய அரசால் இத்தனை முறை பணியிட மாற்ற பழிவாங்கல்களைச் சந்தித்து,தான் கொடுத்த அறிக்கையில் உறுதியாய் இருந்துதனது அஞ்சாமையை நிலைநிறுத்தி வருபவர் அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்கள்.

கீழடி அருகில் 2013 முதல் 2016 ஆம் ஆண்டு வரை ஒன்றிய அரசின் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் இந்த ஆய்வுகளைச் செய்தார். 2017 ஆம் ஆண்டு இவரை அசாம் மாநிலத்துக்கு மாற்றிவிட்டு, ஸ்ரீராமன் என்பவரை கீழடிக்கு பொறுப்பாளராக நியமித்தார்கள். ஆய்வு செய்தவர்தான் ஆய்வு அறிக்கையை எழுத வேண்டும். ஆனால் அமர்நாத் இராமகிருஷ்ணனை ஆய்வு அறிக்கை எழுத விடாமல் ஒன்றிய அரசு தடுத்தது. அதன் பிறகு இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு அவர் தனது அறிக்கையைத் தாக்கல் செய்தார். இந்த அறிக்கையை இரண்டு ஆண்டுகள் கழித்து, ஏற்க முடியாது என்று சொல்லி இருக்கிறது பா.ஜ.க. அரசு.

“நான் அனுப்பியுள்ள அறிக்கை, தகுதி அறிதலுக்கு (vetting) உட்படுத்தப்படும் என நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது. இந்த வழக்கம் இதற்கு முன் இருந்ததில்லை. அறிக்கை குறித்து யாரும் விமர்சனம் செய்யலாம். அதைப் பற்றித் தெரியாத இன்னொருவர் தகுதி அறிதல் செய்ய முடியாது. அயோத்தியா அகழாய்வுகளைப் பார்த்துவரச் சொன்னால் என்னால் செய்ய முடியாது. காரணம், அங்கு நான் ஆய்வு செய்ததில்லை. தென்னிந்தியாவில் ஆய்வு செய்தவர்கள்தான் கீழடி ஆய்வறிக்கையைப் படிக்க முடியும். இல்லையெனில், தவறாகத்தான் முடிவெடுக்கப்படும். என்னுடைய கடமையை முடித்துவிட்டேன். அறிவியல்முறைப்படி அடையப்பட்ட முடிவை மாற்ற யாருக்கும் உரிமை இல்லை” என்று துணிச்சலாகச் சொன்னவர் அமர்நாத்.

அமர்நாத் இராமகிருஷ்ணனை மாற்றிய பிறகு வேறு ஒருவரை வைத்து கீழடி ஆய்வுகளைத் தொடர்ந்ததா பா.ஜ.க. அரசு என்றால் இல்லை. மூன்றாம் கட்ட ஆய்வுப் பணிக்கான உத்தரவை பா.ஜ.க. அரசு கொடுக்கவில்லை. எனவே தமிழ் நாடு அரசின் தொல்லியல் துறைதான் கீழடி ஆய்வைத் தொடர்ந்தது.

கீழடியில் இருந்து அனுப்பப்பட்ட அமர்நாத்தை நிம்மதியாக வேறு ஒரு இடத்தில் பணியாற்றவிட்டார்களா என்றால் அதுவும் இல்லை. கவுகாத்தியில் இருந்த அமர்நாத் இராமகிருஷ்ணன், கோவாவுக்கு மாற்றப்பட்டார். சென்னைக்கு வந்தார். பின்னர் டெல்லிக்கு மாற்றப்பட்டார்.

இப்போது நொய்டாவுக்கு மாற்றி இருக்கிறார்கள். அவர் செய்த குற்றம் என்பது, கீழடியின் பெருமையை நிறுவியதுதான். தமிழர்களின் பண்பாட்டை நிறுவியதுதான் அவர் செய்த ‘பாவம்’.

”ஒன்றிய அரசை கண்டு அஞ்சாத அமர்நாத் இராமகிருஷ்ணன்” : முரசொலி தலையங்கம் பாராட்டு!

கீழடி அகழாய்வு தொடர்பான ஆய்வறிக்கையை 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமர்நாத் இராமகிருஷ்ணன் தாக்கல் செய்தார். கீழடியில் மூன்று பண்பாட்டு காலகட்டங்கள் நிலவியிருக்க வேண்டும் என்பதை அதில் உறுதி செய்தார்.

•முதலாவது காலகட்டம் கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுவரை நிலவியிருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் கட்டுமானங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. கீழடி இரும்புக் காலத்தில் வளரத் தொடங்கியிருக்கலாம் என்ற முடிவுக்கு வர முடியும்.

•இரண்டாவது காலகட்டம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. முதலாம் நூற்றாண்டின் முடிவுவரை இருந்திருக்கலாம். செங்கல் கட்டுமானங்கள் இந்த காலகட்டத்தில் இருந்துள்ளது. கீழடியில் நகரப் பண்பாடு இருந்ததை இதன் மூலம் உணரலாம்.

மூன்றாவது காலகட்டம் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டின் முடிவிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டையும் தாண்டிச் செல்கிறது. இந்தக் காலக்கட்டத்து காசுகள் கிடைத்துள்ளது.

- இவற்றை எல்லாம் வைத்து, கீழடியின் காலகட்டம் என்பது கி.மு. எட்டாம் நூற்றாண்டில் துவங்கி கி.பி. பத்தாம் நூற்றாண்டுவரை நீண்டிருக்கிறது என்று அமர்நாத் இராமகிருஷ்ணன் நிறுவியுள்ளார். கீழடியில் குதிரையின் எலும்புகள் கிடைத்திருக்கிறது. பட்டினப்பாலை பாட்டுக்கான ஆதாரம் இது. இவரது ஆய்வுகளில் மொத்தமாக 2,447 பானை ஓட்டு கிறுக்கல்கள் கிடைத்துள்ளன. பல தமிழ் பிராமி எழுத்துகளும் கிடைத்துள்ளன. இவை அனைத்தையும் வெளியில் எடுத்துக் கொண்டு வந்து நிறுவினார் அமர்நாத் இராமகிருஷ்ணன்.

"நமது தேடலைக் கீழடியோடு மட்டும் நிறுத்திவிடக் கூடாது. வைகை ஆற்றங்கரையில் 293 ஆய்விடங்கள் உள்ளன. ஆய்வை இன்னும் விரிவுபடுத்த வேண்டும். எல்லை வகுக்கும்போது ஹரப்பாவும் மொகஞ்சதாரோவும் பாகிஸ்தானுக்குப் போய்விட்ட காரணத்தால்தான், சிந்துவெளி நாகரிகப் பகுதிகளைத் தேடி இந்தியாவுக்குள் நமது ஆய்வுகள் தொடர்ந்தன. தோலவிரா, காளிபங்கன், ரோபர், லோத்தல் போன்ற இடங்களைக் கண்டறிய முடிந்தது. மொகஞ்சதாரோவையும் குஜராத்தில் உள்ள தோலவிராவையும் ஒப்பிட முடிவதுபோல, கீழடி ஆய்விலும் சாத்தியங்கள் உள்ளன. அவ்வாறு ஒப்பிடும்போதுதான் கீழடியில் கண்டறியப்பட்ட நாகரிகம் எவ்வளவு பரந்து விரிந்திருந்தது எனத் தெரியும்” என்று சொல்கிறார் அமர்நாத். இதேபோல் வைகை நாகரிகத்தையும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் சொல்கிறார்.

கடந்த எட்டு ஆண்டுகளாக கீழடிப் பெருமையை நிலைநாட்டப் போராடி வரும் அறிஞர் அமர்நாத் இராமகிருஷ்ணனை வாழ்த்துவோம்! பாராட்டுவோம்! பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் பணியாற்றி வரும் அவரைப் பாதுகாப்போம்!

banner

Related Stories

Related Stories