முரசொலி தலையங்கம் (12-05-2025)
தேசம் காக்கும் களத்திலும்...!
இந்திய ராணுவத்துக்கு துணை நிற்போம் என்ற மகத்தான பேரணியைத் தமிழ்நாட்டில் ஒருங்கிணைத்தும் இந்தியாவுக்கு வழிகாட்டி இருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்.
மாணவ - மாணவியர், இளைஞர்கள், காவலர்கள், முன்னாள் ராணுவத்தினர், அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைவரையும் கடற்கரை சாலையில் அணி வகுக்க வைத்தும், அவர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்றும் முதலமைச்சர் காட்டிய தார்மீக ஆதரவு என்பது இந்தியாவுக்கு வழிகாட்டுவதாக அமைந்துள்ளது.
அரசியல் களத்தில் ஒன்றிய பா..ஜ.க. அரசுக்கு எதிராக சரிக்குச் சரியாக நிற்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். அதேநேரத்தில் இந்தியாவில் தீவிரவாதத்தை ஒழிக்கவும், இந்திய எல்லையைக் காக்கவும் ஒரு போர் தொடுக்கப்படு மானால், அந்த நேரத்தில் பா.ஜ.க.வுக்கு துணையாக நிற்போம் என்பதையம் முதலமைச்சர் அவர்கள் எடுத்துச் சொல்லி விட்டார்கள்.
முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளான செய்தி அறிந்ததும், தன்னுடைய அனைத்துப் பணிகளையம் ஒத்தி வைத்து விட்டு குன்னூர் பறந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதுதான் உண்மையான தேசபக்தி. அப்படித்தான் இந்தப் பிரச்சினையிலும் முதலமைச்சர் அவர்கள் நடந்து கொண்டார்கள்.
தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை மே 7 முதல் இந்திய ராணுவம் தொடங்கியது. “இந்திய ராணுவத்தின் துணிச்சலையும் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் போற்றுவதற்கும், தேச ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் பேரணி நடத்தப்படும்”என்றும் முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள்.
சிலருக்கு இது அதிர்ச்சியாகவும், சிலருக்கு இது ஆச்சரியமாகவும் இருந்தது. இதில் அதிர்ச்சி அடையவும், ஆச்சரியப்படவும் ஏதுமில்லை. தேசம் காக்கும் களத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் உறுதியாக இருந்துள்ளது.
சீனப்படையெடுப்பு நடந்த காலத்தில்தான், நாட்டு நன்மைக்காக 'திராவிட நாடு' கோரிக்கையை பேரறிஞர் அண்ணா அவர்கள் விட்டுக் கொடுத்தார்கள். 1962 விலைவாசி உயர்வு போராட்டத்தில் கலந்து கொண்டு வேலூர் சிறையில் அப்போது இருந்தார் அண்ணா. 1962 ஆகஸ்ட் 3 அன்று டெல்லியில் நடைபெறும் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அண்ணாவுக்கு அழைப்பு அனுப்பினார் பிரதமர் நேரு. வர இயலவில்லை என்று அண்ணா பதில் அனுப்பினார்.சீனப் படையெடுப்பு குறித்து பேசவே நேரு அழைப்பு விடுத்தார். ‘நிலைமைகளை எளிதாக்கத் தகுந்த வழிமுறைகளைக் கையாளும் உங்கள் திறமையில் எனக்குள்ள நம்பிக்கையினைத் தெரிவித்துக் கொள்கிறேன்'என்று அக்கடிதத்- தில் அண்ணா குறிப்பிட்டார். செப்டம்பர் 29,30 சேலத்தில் கூடிய தி.மு.க. பொதுக்குழு சீன ஆக்கிரமிப்பை கண்டித்து தீர்மானம் இயற்றியது. இந்த நேரத்தில் இந்திய அரசுக்கு தனது முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம் என்று கூறியது.
1962 அக்டோபர் 2 இந்தியாவின் வடமேற்கு லடாக், வடகிழக்கு நேபாள பகுதிக்குள் சீன ராணுவம் நுழைந்தது. சிறையில் இருந்து விடுதலையான அண்ணா அவர்கள், "சீனாவின் ஆக்கிரமிப்பை ஏற்க முடியாது, சீனா பின் வாங்கும் வரை பிரதமர் நேருவின் கரத்தை வலுப்படுத்துவோம்”என்று அறிவித்தார்.
நாடு காக்கும் பணி நமதென்றே நாமிருப்போம் என்று பேசினார். “சீனர்களின் ஆக்கிரமிப்பை நாம் ஒரு போதும் சகித்துக் கொண்டிருக்க மாட்டோம். ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள சீனர்களின் காலடி திருப்பி எடுக்கப்படும் வரை திராவிட முன்னேற்றக் கழகம் நேருவின் கரத்தை பலப்படுத்தும். டெல்லியில் இருப்பவனையே நமக்குப் பிடிக்கவில்லை என்றால் எங்கோ பீகிங்கில் இருப்பவனையா நமக்குப் பிடிக்கும்? எதிரிகளிடம் இருந்து முதலில் நாட்டை மீட்ட பிறகு தான் நாட்டுப் பிரிவினையே தவிர எல்லையில் எதிரிகளை நுழைய விட்டா பிரிவினை என்று பேசிக் கொண்டிருக்க முடியும்?”என்றார் அண்ணா. சென்னை கடற்கரையில் பேசிய அண்ணா, "வீடு இருந்தால் தான் ஓடு மாற்ற முடியும். இப்போது வீட்டுக்கே அல்லவா ஆபத்து வந்திருக்கிறது?”என்று கேட்டார்.
தி.மு.க. பொருளாளர் கலைஞர் முன்னிலையில் சீன ஆக்கிரமிப்புக்கு எதிரான போர் நிதி திரட்டப்பட்டது. ஒரே நாளில் 35 ஆயிரம் ரூபாய் திரண்டது. அதனை முதல்வர் காமராசரிடம் நாவலர் நெடுஞ்செழியன் வழங்கினார். இவை எல்லாம் அழிக்க முடியாத வரலாறு ஆகும்.
இதே வழித்தடத்தில்தான் தலைவர் கலைஞர் அவர்களும் செயல்பட்டார்கள்.1971 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போர் நடந்த போதும் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிதான் நடந்து கொண்டு இருந்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக கலைஞர் அவர்கள் இருந்தார்கள். போர் தொடங்கிய போது அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகள் பங்கெடுப்பதற்காக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சென்றிருந்தார்கள். போர் தொடங்கியது என்பதைக் கேள்விப்பட்டதும் உடனடி- யாக தமிழ்நாடு திரும்பினார்கள். கலைவாணர் அரங்கில் அவருக்கு வரவேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வரவேற்பு விழா என்ற பெயரை மாற்றி, 'பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்புக் கண்டனக் கூட்டம்' என்று போட்டு நடத்தச் சொன்னார்கள். பாகிஸ்தான் படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களிடம் நாட்டுப் பாதுகாப்புக்காக ஆறுகோடி ரூபாய் நிதி வழங்கியவர் முதல்வர் கலைஞர்அவர்கள். அன்றைய தினம் அனைத்து மாநிலங்களும் வழங்கிய தொகை மொத்தம் ரூ.25 கோடி. அதில் ரூ.6 கோடியை வழங்கியது தி.மு.க. அரசு. அந்தப் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு நிதியும் நிலமும் வழங்கிய அரசு கலைஞரின் அரசு.
1999 ஆம் ஆண்டு கார்கில் போரின் போது அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் மூன்று தவணைகளாக மொத்தம் 58 கோடி ரூபாய் வழங்கிய அரசு முதல்வர் கலைஞரின் அரசு. பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் வழியில் தேசம் காக்கும் களத்திலும் முன்னணித் தளபதியாக நிற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.