முரசொலி தலையங்கம் (26-02-2025)
மொழிப் பகையைத் தூண்டுவது யார்?
இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒரு ஜீவகாருண்ய கருத்தை உதிர்த்து இருக்கிறார். “மொழிகள் இடையே எந்தப் பகையும் கிடையாது' என்று சொல்லி இருக்கிறார். உண்மைதான் மொழிகளுக்கு இடையே எந்தப் பகையும் கிடையாது. ஆனால், மொழிகளுக்கு இடையே பகைமையை உருவாக்குவது நீங்கள்தானே?
இந்திக்கு மகுடத்தை தூக்கி வைத்து இந்தி பேசும் மக்களுக்கும் இந்தி பேசாத மக்களுக்கும் பகைமையை உருவாக்கிக் கொண்டிருப்பது பா.ஜ.க. அரசுதானே? பா.ஜ.க. தலைமை தானே? பா.ஜ.க. அமைச்சர்கள்தானே?
"நீங்கள் இந்தியாவில் வசிக்கிறீர்கள் என்றால் இந்தியை நேசிக்க வேண்டும். இல்லை என்றால் வெளிநாட்டவராகக் கருதப்படுவீர்கள். இந்தி பேச முடியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறி வேறு எங்காவது செல்லுங்கள்” - என்று சொல்பவர் உத்தரப் பிரதேச மாநில பா.ஜ.க. அமைச்சர் சஞ்சய் நிஷாத். இது பகைமையை உருவாக்கும் பேச்சா இல்லையா?
"மும்மொழிக் கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்கும் போது தமிழ்நாடு ஏற்க மறுப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தமிழ்நாட்டுக்கு நிதி நிலுவையில் இருப்பது எனக்குத் தெரியும். ஆனால் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்றுக் கொண்டால்தான் நிதி விடுவிக்கப்படும். மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் நிதி ஒதுக்கச் சட்டத்தில் இடமில்லை” என்று ஆணவமாகச் சொல்லி இருக்கிறார். இது பகைமையை உருவாக்கும் பேச்சு அல்லவா?
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்துக்கு நிதி கொடுப்பதையும், மும்மொழித்திட்டத்தையும் எதற்காக முடிச்சு போட வேண்டும்? இந்தியை எப்படியாவது திணிக்கச் செய்யும் காரியம் அல்லவா? இது சண்டை மூட்டும் காரியம் தானே?
"இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் தமிழ்நாடு நீங்கலாக 27 மாநிலங்களில் மும்மொழித் திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது” என்று பொய் சொல்லிக் கொண்டு அலைகிறார் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி. இது பகைமைக்கான விதை தானே?
2019 ஆம் ஆண்டு, 'இந்தியாவின் ஒரே மொழி இந்தி தான்' என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். உடனே, ‘இக்கருத்தை திரும்பப் பெற வேண்டும், இல்லாவிட்டால் மீண்டும் 1965 போராட்டம் வெடிக்கும்' என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்கள். இதைத் தொடர்ந்து அன்றைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தி.மு.க. தலைவரை அழைத்துப் பேசினார். ‘உள்துறை அமைச்சர் அப்படி பேசவில்லை என்கிறார்' என்று ஆளுநர் விளக்கம் அளித்தார். இந்நிலையில் அறிவிக்கப்பட்ட போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது. அமித்ஷாவின் பேச்சு பகைமையை வளர்க்கும் பேச்சுதானே?
இந்தியாவின் ஒரே மொழி இந்திதான் என்பதை இந்திய நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டு விட்டார்களா? இந்திதான் இந்தியாவின் ஒரே மொழி என்பதை மராட்டிய மக்கள், கர்நாடக மக்கள், வங்காளிகள், பஞ்சாபிகள் ஏற்றுக் கொண்டு விட்டார்களா? இதைச் சொல்லி அந்த மாநிலங்களில் வாக்குக் கேட்க தைரியம் இருக்கிறதா அமித்ஷாவுக்கு?
நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் கூட்டத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கில மொழிக்கு பதிலாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும். அலுவல் மொழியான இந்தியை, நாட்டு ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது” என்று சொல்லி இருந்தார். இந்திய ஒருமைப்பாட்டுக்கும் இந்திக்கும் என்ன தொடர்பு? இந்திய ஒருமைப்பாட்டைச் சிதைப்பதே இந்தி தானே?
"மத்திய அமைச்சரவையின் நிகழ்ச்சி நிரல்களில் 70 சதவிகிதம் இந்தி மொழியிலேயே தயாரிக்கப்படுகின்றன. நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் முக்கியப் பகுதியாக இந்தியை அலுவல் மொழியாக மாற்றவேண்டிய நேரம் வந்துவிட்- டது. வெவ்வேறு மொழி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் போது பேசும் மொழி இந்தியாவின் மொழியாக இருக்கவேண்டும். உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு நெகிழ்வுத்தன்மையாக மாறாத வரையில் இந்தியைப் பரப்ப முடியாது” என்று அமைச்சர் அமித்ஷா சொல்லி இருக்கிறார்.
அதாவது ஆங்கிலத்தை அறவே அகற்றிவிட்டு, அந்த இடத்தில் இந்தியை உட்கார வைக்கப் போகிறார்கள். இது இந்தி பேசும் மக்களுக்கு மட்டுமே முழு நன்மையைச் செய்யப் போகும் மொழிக் கொள்கை ஆகும். இது இந்தி பேசாத மக்களுக்குச் செய்யும் துரோகம் அல்லவா? அவர்களுக்குள் பகைமை மூட்டும் காரியம் அல்லவா?
"மொழிகளுக்கு இடையே பகைமை கிடையாது. ஒருமொழி, மற்றொரு மொழியைச் செழுமைப்படுத்துகிறது. பாரதத்தில் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. மொழி என்பது தாய் போன்றது. ஒரு தாய் தனது குழந்தைகளிடம் பாகுபாடு பார்ப்பது இல்லை. அனைத்து குழந்தைகளையும் சமமாக பார்க்கிறாள். இதேபோல் மொழியும் யாரையும் வேறுபடுத்தி பார்ப்பது இல்லை. மொழியின் பேரால் பிரிவினையைத் தூண்ட முயற்சி மேற்கொள்ளப்படும் போது, நமது மொழிகளுக்கு இடையிலான பிணைப்பு, சரியான பதிலை அளிக்கிறது. பாரதத்தின் அனைத்து மொழிகளையும் முக்கிய மொழிகளாகக் கருதுகிறோம்” என்று பிரதமர் மோடி பேசி இருக்கிறார். அப்படி பேசுவதற்குத் தக்க அவர் நடந்து கொள்கிறாரா? ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்குப் பொறுப்பேற்க வேண்டியது பிரதமர் மோடிதானே?
அனைத்து மொழிகளையும் மண்ணில் போட்டுவிட்டு, ஒரு மொழியை மகுடத்தில் வைத்து பகைமையை உருவாக்குவதே பா.ஜ.க. தான். அதையும் அவரே செய்து விட்டு, ‘மொழிகளுக்கு இடையே பகைமை இல்லை' என்று சொல்வதும் அதே மோடிதான். எத்தனை நாக்குகள்?!