முரசொலி தலையங்கம்

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு - சமூக நீதி மிகமிக அவசியமாகும்: முரசொலி !

சாதியை அளவுகோலாகக் கொண்ட சமூகத்தில் சமூக நீதி மிகமிக அவசியமாகும்.

மக்கள் தொகைக்  கணக்கெடுப்பு - சமூக நீதி மிகமிக அவசியமாகும்: முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (29 -06- 2024)

சாதியா? நீதியா?

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அந்தத் தீர்மானத்தை உடனடியாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியும் வைத்திருக்கிறார்.

“இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகிய அனைத்திலும் சம உரிமையும், சம வாய்ப்பும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் திட்டங்களைத் தீட்டி, சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ய சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியம் என்று இப்பேரவை கருதுகிறது. எனவே 2021-ஆம் ஆண்டு மேற்கொண்டிருக்க வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டுமென்றும், அத்துடன் இம்முறை சாதிவாரியான கணக்கெடுப்பையும் இணைத்தே நடத்தவேண்டும் என்றும் ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது” – என்பதுதான் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகும்.

இந்தியா என்பது பல்வேறு இன, மொழி, சாதி, பண்பாடு, பழக்கவழக்கங்களைக் கொண்ட மக்கள் வாழும் நாடு. வறுமையும், ஏழ்மையும், வேலையில்லாத் திண்டாட்டமும், மற்றும் பல்வேறு சமூகக் காரணிகளும் மக்களை வதைத்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் இங்குள்ள வளமானது அனைவருக்கும் அவர்களது பங்குக்கு ஏற்ப பிரித்து பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

அதுதான் உண்மையான சமூக நீதியாக அமைய முடியும். கல்வி, வேலைவாய்ப்பில் வழங்கும் இடஒதுக்கீடு உரிமை என்பது சமூகநீதியின் அடிப்படையான கருத்துரு ஆகும். இடஒதுக்கீட்டைத் தாண்டி அனைவர்க்கும் அதிகாரம் என்ற இறுதி இலக்கையும் அடைய வேண்டும். அதற்கு முதலாவதாக யார் யார் எந்த அடிப்படையில் இருக்கிறார்கள், வாழ்கிறார்கள், யார் இந்தச் சமூகத்தில் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள், அவர்களது தேவைகள் என்ன என்பதை அறிய வேண்டும்.

அதற்காகவே சாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியமாகிறது. 1901 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 1,646 சாதிகள் இருப்பதாக வகைப்படுத்தப்பட்டது. 1941 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 4,147 சாதிகள் இருப்பதாக வகைப்படுத்தப்பட்டது.

இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதி விவரங்கள் சேகரிக்கப்படவில்லை. பட்டியல் சாதியினர் விவரங்கள் மட்டுமே சேகரிக்கப்பட்டது. ஆனால் 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சாதிதொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டாலும், அவை வெளியிடப்படவில்லை. 2021–ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடத்தப்படவில்லை.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் என்பது சமூகநீதியை மையக் கருத்தாக நடைபெற்ற தேர்தல் ஆகும். ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்லி வந்தார்கள். ராகுல் காந்தி அனைத்துக் கூட்டங்களிலும் இதனைச் சொல்லி வந்தார்.

“எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும். 70 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு எடுக்கும் மிகமுக்கியமான நடவடிக்கையாக இது இருக்கும். இந்தக் கணக்கெடுப்பின் மூலம் நாட்டின் தற்போதைய நிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும். அதன்பிறகுதான் நாடு அடுத்து எந்தத் திசையில் பயணிக்க வேண்டும் என்பதை மதிப்பீடு செய்ய முடியும். எனக்கு சாதியில் ஆர்வம் இல்லை, நியாயத்தில் ஆர்வம் உள்ளது. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தினால் 90 விழுக்காடு மக்களுக்கு நியாயம் கிடைத்தே தீரும்” என்று சொன்னார் ராகுல்.

சமூகத்தின் அளவுகோலாக சாதி இருக்கும்போது, சமூகக் கோரிக்கைகளின் அளவுகோலாக சாதி இருப்பதில் தவறும் இல்லை.

ஒவ்வொரு சமூகமும் தங்களுக்கு இத்தனை விழுக்காடு இடஒதுக்கீடு வேண்டும் என்கிறது. ‘மொத்த இடஒதுக்கீடு அளவு என்பது 50 விழுக்காடுக்கு அதிகமாக இருக்கக் கூடாது’ என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது. மக்கள் கோரிக்கையாக இருந்தாலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பாக இருந்தாலும் அதற்கு உண்மையான தரவுகள் அவசியம் ஆகும். எனவேதான் சாதிவாரிக் கணக்கெடுப்பு மிகமிக அவசியத் தேவையாகும்.

மக்கள் தொகைக்  கணக்கெடுப்பு - சமூக நீதி மிகமிக அவசியமாகும்: முரசொலி !

பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த அடிப்படையில் 27 விழுக்காடு என கணிக்கப்பட்டது என்றால் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1931 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வைத்துத்தான் 27 என கணிக்கப்பட்டது. ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முந்தைய கணிப்பு இது. புதிதாக எடுத்தால் தானே உண்மையான மக்கள்தொகை தெரியவரும். அதற்காகவும் இந்தக் கணக்கெடுப்பு மிக அவசியமாகும். இதனை ஒன்றிய அரசுதான் எடுக்க வேண்டும்.

இதனை சட்டமன்றத்தில் மிகச் சரியாக விளக்கி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள். மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் சட்டம், அதாவது, Census Act 1948-–ன்கீழ் ஒன்றிய அரசுதான் இந்தப் பணியைச் செய்ய வேண்டும். மாநில அரசால் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த முடியாது. சமூக, பொருளாதார புள்ளிவிவரங்களை மட்டுமே எடுக்க முடியும் என்பதையும் முதலமைச்சர் அவர்கள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். “2008-–ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் சேகரிக்கும் சட்டத்தின்கீழ் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ள இயலாது” என்பதையும் உறுதிபடச் சொல்லி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.

‘Survey’ என்ற பெயரில் புள்ளிவிவரங்களைச் சேகரிப்பது வேறு; மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ‘census’ வேறு. மாநில அரசுகள் ‘Survey’ மட்டும்தான் எடுக்க முடியும். ஒன்றிய அரசு தான் ‘census’ எடுக்க முடியும்.

அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 246-ன்படி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒன்றிய அரசின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ள வேண்டிய அடிப்படையான பணி அது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பினை 2021–ஆம் ஆண்டு மேற்கொண்டிருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை பா.ஜ.க. அரசு. இனியாவது அதனைச் செய்ய வேண்டும். சாதியை அளவுகோலாகக் கொண்ட சமூகத்தில் சமூக நீதி மிகமிக அவசியமாகும்.

banner

Related Stories

Related Stories