முரசொலி தலையங்கம்

பிளவுவாத அரசியல் செய்வது யார்? : ஆதாரங்களுடன் மோடிக்கு கேள்வி எழுப்பும் முரசொலி!

2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த படுகொலைகளை மறக்க முடியுமா?

பிளவுவாத அரசியல் செய்வது யார்? : ஆதாரங்களுடன் மோடிக்கு கேள்வி எழுப்பும் முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (12-04-2024)

பிளவுவாத அரசியல் செய்வது யார்?

பிளவுவாத அரசியலின் பிதாமகரான பிரதமர் நரேந்திர மோடி சொல்கிறார், ‘தி.மு.க. பிரிவினைவாத அரசியல் செய்கிறது’ என்று!வாழ்நாள் முழுக்க வெறுப்பரசியல் செய்தே தனது பெயரை நிலைநிறுத்திக் கொண்டவர் இப்படிச் சொல்வதுதான் வேடிக்கையானது!

2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த படுகொலைகளை மறக்க முடியுமா? ‘கார் ஓட்டிச் செல்லும் போது குறுக்கே நாய் வந்துவிட்டது, என்னால் என்ன செய்ய முடியும்?’ என்று அப்போது விளக்கம் அளித்தவர் யார்? இந்த ரத்தக் கறையை மறைக்கத்தான் ‘குஜராத் மாடல்’ என்ற பொய்ப் பிம்பத்தைக் கிளப்பினார்கள்!

‘இந்திய அரசியலமைப்புச் சட்டம்தான் எனது வேதம்’ என்று சொல்லி பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிரதமர் மோடி, மூன்று செயல்களில்தான் உறுதியாக இருந்தார். அந்த மூன்றைச் செய்வதற்காகத்தான் பிரதமராக வருவதைப் போலக் காட்டிக் கொண்டார். பாபர் மசூதியை சங்பரிவார் இடித்த இடத்தில் கோவில் கட்டுவது, காஷ்மீருக்குத் தரப்பட்ட 370 சிறப்புத் தகுதியை விலக்குவது, குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்துவது ஆகிய மூன்றையும் செயல்படுத்துவதில் அவர் காட்டிய உறுதியை வேறு எதற்கும் காட்டியது இல்லை. பிறப்பெடுத்து பிரதமர் ஆனதே இதற்காகத்தான் என்று காட்டிக் கொண்டார். அனைவருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டிய இந்திய நாட்டின் பிரதமர் தனது நோக்கமாக எடுத்துக் கொண்ட மூன்றுமே உள்நோக்கம் கொண்டது. பிளவுவாத உள்நோக்கம் கொண்டது.

கோவில் கட்டியது மட்டுமல்ல, அதற்கான பூசாரிகள் இல்லாமல் இவரே தலைமைப் பூசாரியாக இருந்து நடத்திக் காட்டிய காட்சியை இந்தியாவே பார்த்தது. காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் உட்பட அரசியல் தலைவர்கள் அனைவரையும் வீட்டுக் காவலில் வைத்துவிட்டு 370 பறிக்கப்பட்டது. ஒரு மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆக்கப்பட்டது. ஒரு யூனியன் பிரதேசத்துக்கு சட்டமன்றமே கிடையாது.

சட்டமன்றம் இருக்கும் இன்னொரு யூனியன் பிரதேசத்துக்கு ஐந்து ஆண்டுகளாக தேர்தலே நடக்கவில்லை. இப்போதும் நடக்கவில்லை. எப்போதும் நடத்த விருப்பமும் இல்லை. இதுதான் காஷ்மீர் மக்களுக்கு வழங்கப்பட்ட ஜனநாயகமாக இருக்குமானால் இது காஷ்மீர் மக்கள் மீதான வெறுப்பல்லவா? அவர்கள் மீதான காழ்ப்பு அல்லவா? எந்த நாட்டையும் சேர்ந்த மற்ற மதத்தினர் இங்கு வரலாம் குடியுரிமை பெறலாம், ஆனால் இசுலாமியர் வரக்கூடாது என்பதை விட மதப்பிளவுவாதம் இருக்குமா?

எந்த நாட்டையும் சேர்ந்தவர்கள் வரலாம், இங்கு வந்து குடியுரிமை பெறலாம், ஆனால் இலங்கைத் தமிழர்கள் வரக்கூடாது என்பதை விட தமிழின வெறுப்புவாதம் இருக்க முடியுமா? – இவை இரண்டையும் அப்பட்டமாகச் செய்தவர்தான், தி.மு.க.வை, பிளவுவாத அரசியல் செய்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்.

வெறுப்புப் பேச்சுகள் அதிகம் பேசப்படும் மாநிலங்களாக பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும் மாநிலங்கள்தான் இருக்கின்றன. இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் வரும் போதெல்லாம் நீதிபதிகள் மண்டையில் பலமுறை கொட்டி இருக்கிறார்கள்.

பிளவுவாத அரசியல் செய்வது யார்? : ஆதாரங்களுடன் மோடிக்கு கேள்வி எழுப்பும் முரசொலி!

‘நாட்டின் அரசியலமைப்புச் சட்டமே பலிபீடத்தில் வைக்கப்பட்டுள்ளதுபோல் உள்ளது. அதிகரித்து வரும் வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்டுங்கள்’ என்று பிரதமர் மோடி அவர்களுக்கு 108 பேர் கையெழுத்திட்டு கடந்த 2022 மே மாதம் கடிதம் அனுப்பி இருந்தார்கள். முன்னாள் நீதியரசர்கள், முன்னாள் துணை நிலை ஆளுநர்கள், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள், முன்னாள் வெளியுறவுச் செயலாளர்கள் - இக்கடிதத்தில் கையெழுத்துப் போட்டு இருந்தார்கள். இது போன்ற கடிதங்களை பிரதமர் படித்துள்ளாரா?

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆண்டு நான்கே மாதங்களில் மட்டும் நடந்த 50 பொதுக்கூட்டங்களில் வெறுப்புப் பேச்சு அதிகம் பேசப்பட்டது குறித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி, உ.பி., உத்தரகாண்ட் மாநிலங்களில் வெறுப்புப் பேச்சு குறித்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த வழக்குகள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சொன்னது பிரதமர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதா?

“வெறுப்புப் பேச்சுகள் பேசாமல் ஒவ்வொருவரும் கட்டுப்படுத்திக் ­கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் அரசியலை மதத்துடன் கலக்கும் போது பெரிய பிரச்சினை எழுகிறது. அரசியலையும் மதத்தையும் பிரிக்கும் தருணத்தில் இது முடிவுக்கு வரும். அரசியல்வாதிகள் மதத்தைப் பயன் படுத்துவதை நிறுத்தினால் இதெல்லாம் நின்றுவிடும். மதத்துடன் அரசியலைக் கலப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. டிவி மற்றும் பொது இடங்களில்கூட வெறுப்புப் பேச்சுகள் அதிகரித்து விட்டன. பேச்சுக்களில் கட்டுப்பாடு இல்லையெனில் நாம் விரும்பும் இந்தியாவாக உருவாக்க முடியாது. இந்தப் பேச்சுகளால் நாம் என்ன வகையான இன்பங்களைப் பெறுகிறோம்” என்று தங்களது கவலைகளைக் கடுமையான வார்த்தைகளால் நீதிபதிகள் எச்சரிக்கை உணர்வோடு சொல்லி இருந்தார்கள்.

“பிற மதத்தவரை அவமதித்து நாட்டின் சட்டத்தை மீற உங்களுக்கு உரிமை இருக்கிறதா? நாட்டின் சட்டத்தை மீறினால், அது செங்கற்கள் போல உங்கள் தலையில் விழும்” என்றும் நீதிபதிகள் பகிரங்க எச்சரிக்கை விடுத்தது யாருக்கு? பா.ஜ.க.வினருக்கும், பா.ஜ.க.வின் தொங்கு சதைகளுக்கும் தான். அனைத்தையும் மறைத்து தி.மு.க. மீது பழிபோட்டுக் கொண்டு இருக்கிறார் பிரதமர். தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வைக்கும் கேள்விகள் எதற்கும் பதில் சொல்லத் தெரியாமல், பதில் சொல்ல ஏதுமில்லாததால் இப்படி பழிபோட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார் பிரதமர். ஆனால் இந்தத் தேர்தலில் அவர் ஓடவும் முடியாது, பதுங்கவும் முடியாது. பொறுப்பேற்கத்தான் வேண்டும்.

banner

Related Stories

Related Stories