முரசொலி தலையங்கம்

“எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை - வாயால் வடை சுடுகிறார் மோடி” : வெளுத்து வாங்கிய ‘முரசொலி’ !

இப்படி கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை மோடி. எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. ஆனால் வாயால் வடை மட்டும் விதவிதமாக சுட்டுக் கொண்டு இருக்கிறார்.

“எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை - வாயால் வடை சுடுகிறார் மோடி” : வெளுத்து வாங்கிய ‘முரசொலி’ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

எந்தத் திட்டத்துக்கு தடை போட்டோம்?- 3

5.ஜி.எஸ்.டி. இழப்பீடு

சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்திய பிறகு மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாய் மிகப்பெரிய அளவில் குறைந்துவிட்டது. மாநிலங்கள் வசூலித்துக் கொள்ள வேண்டிய வரியை ஒன்றிய அரசு எடுத்துச் சென்று விடுகிறது. இதனால் ஏற்படும் இழப்பை ஈடு கட்ட இழப்பீடு பணம் தருவதாகச் சொன்னார்கள். அது ஒரு ஆசை வார்த்தைதான். அந்த இழப்பீடும் 2022 ஆம் ஆண்டோடு நின்று விட்டது. நிறுத்தப்பட்டு விட்டது. சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அமலுக்கு முந்தைய காலகட்டத்தை ஒப்பிடுகையில், ஆண்டொன்றுக்கு 20,000 கோடி ரூபாய் வருவாய்ப் பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு எதிர்கொண்டு வருகிறது.

6. கடன் வாங்குவதில் முட்டுக்கட்டை

மாநிலங்கள் கடன் வாங்குவதில் கூட தடையை ஏற்படுத்துகிறார்கள். மாநிலங்களின் பொதுச் செலவினங்களுக்கு நிதியளிப்பதற்கான பொதுக்கடன் என்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, மாநில சட்டமன்றத்தின் தனிப்பட்ட அதிகார வரம்பிற்கு உட்பட்டது ஆகும். ஆனால் மாநிலங்கள் கடன் வாங்குவதற்கான வாய்ப்புகளைக் கட்டுப்படுத்த, இந்திய அரசமைப்பின் 293--வது பிரிவின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தை ஒன்றிய அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது.

இந்தப் பிரிவின்படி, மாநிலங்கள் கடன் வாங்க ஒன்றிய அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்ற ஷரத்து மாநில சுயாட்சிக்கு எதிரானது ஆகும். மாநில அரசின் நிதிப் பொறுப்பைத் தடுப்பது ஆகும். வரையறுக்கப்பட்ட நிதிப் பற்றாக்குறையை நேர் செய்யும் மாநில அரசின் முனைப்புகளை தடுக்கும் செயல் ஆகும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு தொடர்ந்து 15 விழுக்காடு வளர்ச்சியை அடைந்த போதிலும், 2023--2024 ஆம் ஆண்டில் நிகரக் கடன் உச்சவரம்பைக் கணக்கிடுவதற்கான மாநில மொத்த உற்பத்தி வளர்ச்சியை வெறும் 8 விழுக்காடாக ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது. இதனால், நடப்பாண்டில், 6,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

7. சொன்னதை நிறைவேற்றினாரா?

2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் நாள் ராமநாதபுரத்துக்கு வந்து நரேந்திரமோடி அவர்கள் பேசினார்கள். அவர் அப்போது பிரதமர் ஆகவில்லை. வாக்குக்கேட்டு வந்து பேசும் போது என்ன சொன்னார்? " மிகப்பெரிய புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரம், சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டு உலகத்தினர் அனைவரும் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்படும்"- என்று சொன்னார் நரேந்திர மோடி. இதற்காக என்ன பணிகள் செய்யப்பட்டன? ராமேஸ்வரத்தை உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக மாற்றி விட்டார்களா?

ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள தனுஷ்கோடி, 1964-ல் வீசிய புயல் மற்றும் கடல் கொந்தளிப்பால் அழிந்து போனது. ராமேஸ்வரம் தாண்டி தனுஷ்கோடி வரை ரயில்கள் முன்பு வந்து சென்றன. புயலால் தனுஷ்கோடி அழிந்த போது ரயில் பாதைகளும் காணாமல் போனது. தனுஷ்கோடி வரை மீண்டும் பாதை அமைத்து ரெயில் போக்குவரத்து தொடங்குவதற்காக 2019 மார்ச் 1-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ராமேஸ்வரம் -- தனுஷ்கோடி இடையே 17 கிலோ மீட்டர் தூர புதிய ரயில் பாதை இன்னும் வரவில்லை.

ஜவுளிகளின் சொர்க்கமான ஈரோட்டில் ஜவுளித் தொழிலுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும். ஈரோட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உறுதியான நடவடிக்கை எடுப்போம் -- என்று ஈரோட்டில் பேசினார் மோடி. செய்து தரவில்லை. பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.920 கோடி ஒதுக்கீடு செய்து அடிக்கல் நாட்டு விழா கடந்த 2021 இல் காணொலி வாயிலாக நடைபெற்றது.

பட்டறை உரிமையாளர்கள் அளித்த பங்களிப்புத் தொகையை கொண்டு காவிரி ஆற்றின் வலது புறம் பவானியில் இரண்டு இடத்திலும், ஈரோடு வைராபாளையத்திலும், காவிரி ஆற்றின் இடதுபுறம் உள்ள நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகிய இரண்டு இடம் என ஐந்து இடங்களில் பொது சுத்திகரிப்பு நிலையம் கட்ட இடம் விலைக்கு வாங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டன. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரூ.920 கோடி என்ன ஆனது என்று துணி உற்பத்தியாளர்கள் கேட்கிறார்கள்.

”ஈரோடு மஞ்சளை இந்தியாவே நேசிக்கிறது. ஈரோடு விவசாயிகளுக்கு இந்தியாவே நன்றிக் கடன் பட்டுள்ளது. பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் மஞ்சளை ஆயுர்வேதம் மட்டுமின்றி, அழகு சாதனப் பொருளாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" -- என்று ஈரோட்டில் பேசினார் மோடி. மஞ்சளில் இருந்து தயாரிக்க ஆயுர்வேத ஆலை, அழகு சாதனப் பொருட்களுக்கு பயன்படுத்தும் திட்டம், மருந்து மற்றும் பெயிண்ட் போன்றவை தயார் செய்யும் திட்டம் என இதுவரை எந்த திட்டமும் ஒன்றிய அரசு செய்யவில்லை.

மோடி அவர்கள் கொடுத்த முக்கியமான வாக்குறுதி மீனவர்களைப் பற்றியது ஆகும். “தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் துன்புறுத்தப்படுவதும் -- கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும் தினசரி நடந்து வருகிறது. இதற்கு காங்கிரஸ் அரசின் பலவீனம்தான் காரணம்" -- என்று இதே ராமநாதபுரத்தில் வைத்துத்தான் சொன்னார் மோடி.

மீனவர்கள் பாதுகாப்பாக வாழ வேண்டுமானால் இந்தியாவில் வலுவான அரசு அமைய வேண்டும். மீனவர்கள் வாழ்வு சிறக்க நான் ஒரு சபதம் எடுக்கிறேன் என்று கன்னியாகுமரியில் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி பேசினார் மோடி. அவரது சபதத்தை நிறைவேற்றி விட்டாரா?

““நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர் கூட உயிரிழக்க மாட்டார். தமிழ்நாட்டு மீனவர்க்கு இலங்கையால் பிரச்சினை. குஜராத் மீனவர்க்கு பாகிஸ்தானால் பிரச்சினை. இரண்டு மாநில மீனவர்களையும் இணைத்து பேசி கூட்டு நடவடிக்கை எடுப்போம்" என்று சொன்னார் நரேந்திர மோடி அவர்கள்.

2014 முதல் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது சிங்களக் கடற்படை தாக்குதல் நடத்தவில்லையா? அவர் ஆண்ட பத்தாண்டு காலத்தில் இலங்கைக் கடற்படையினரால் 3 ஆயிரத்து 76 மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்களின் 534 படகுகள் சிங்கள அரசாங்கத்தால் கடத்தப்பட்டுள்ளன.

இப்படி கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை மோடி. எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. ஆனால் வாயால் வடை மட்டும் விதவிதமாக சுட்டுக் கொண்டு இருக்கிறார்.

banner

Related Stories

Related Stories