முரசொலி தலையங்கம்

சண்டிகர் தேர்தல் விவகாரம் : “முறைகேடு செய்யத் தூண்டியவர்களுக்கு என்ன தண்டனை?” - முரசொலி கேள்வி !

சண்டிகர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மகத்தான தீர்ப்பை அளித்தது. முறைகேடு செய்த தேர்தல் அதிகாரி தண்டனைக்கு உள்ளாவார்.

சண்டிகர் தேர்தல் விவகாரம் : “முறைகேடு செய்யத் தூண்டியவர்களுக்கு என்ன தண்டனை?” - முரசொலி கேள்வி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சண்டிகர் - தீர்ப்பு மகத்தானது!

கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி வெளியான தலையங்கத்துக்கு ‘குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்..’ என்று தலைப்பு சூட்டப்பட்டு இருந்தது. அந்தத் தலையங்கத்தின் நோக்கத்தை அப்படியே எதிரொலித்து இருக்கிறது உச்சநீதிமன்றம்!

ஆம் ஆத்மி - காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு விழுந்த வாக்குகளை, செல்லாது என்று ஆக்கி - பா.ஜ.க. வேட்பாளரை, செல்லும் என்று கடைந்தெடுத்த மோசடித்தனத்தை அரங்கேற்றினார் தேர்தல் அதிகாரி. பா.ஜ.க. வேட்பாளர் தேர்வை ரத்து செய்து, ஆம் ஆத்மி –- காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற்றவராக அறிவித்து விட்டது உச்சநீதிமன்றம். இதனைவிட மகத்தான தீர்ப்பும் இருக்க முடியாது. இதனைவிட பா.ஜ.க.வுக்குப் பின்னடைவும் இருக்க முடியாது. இதற்கெல்லாம் வெட்கம், ரோஷம் இருக்கும் கட்சி அல்ல பா.ஜ.க.

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மியும், காங்கிரஸும் கூட்டணி அமைத்து ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை களத்தில் இறக்கியது. தேர்தல் முறையாக நடந்தால் ‘இந்தியா’ கூட்டணிதான் வெற்றி பெறும். எனவே, தேர்தலையே தள்ளி வைத்தார்கள். சனவரி 26ஆம் தேதியன்று திருச்சியில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதனைச் சுட்டிக் காட்டினார்கள்.

“நாம் ஒற்றுமையாக நின்றுவிட்டாலே, அது பா.ஜ.க.வை மனரீதியாக பலவீனப்படுத்தி விடும். ஒரே ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன்.

சண்டிகர் தேர்தல் விவகாரம் : “முறைகேடு செய்யத் தூண்டியவர்களுக்கு என்ன தண்டனை?” - முரசொலி கேள்வி !

சண்டிகர் மாநகர மேயரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடக்க இருந்தது. ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. பா.ஜ.க.வுக்கு 14 கவுன்சிலர்கள் ஆதரவு இருந்தது. ஆம் ஆத்மி கட்சிக்கு 13 உறுப்பினர்கள் ஆதரவு இருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு 7 உறுப்பினர்கள் இருந்தார்கள். ஆம் ஆத்மியும், காங்கிரசும் இணைந்து போட்டியிட்டதால் மேயர் பதவியை ‘இந்தியா’ கூட்டணி கைப்பற்றும் நிலைமை உருவானது. ‘இந்தியா’ கூட்டணியின் முதல் வெற்றியாக இது அமையப் போகிறது என்று வட மாநில ஊடகங்கள் எழுதினார்கள். உடனே என்ன செய்தார்கள் தெரியுமா? தேர்தலையே ரத்து செய்ய வைத்து விட்டார்கள். தேர்தல் நடந்திருந்தால் ‘இந்தியா’ கூட்டணிதான் வென்றிருக்கும். ஒரு மேயர் தேர்தலையே கேன்சல் செய்கிறார்கள் என்றால், பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டுள்ள பயத்தை இந்தியக் கூட்டணித் தலைவர்கள் உணர்ந்தாக வேண்டும்.” என்று முதலமைச்சர் அவர்கள் எச்சரிக்கையுடன் சொன்னார்கள்.

இதற்கு மாறாக சண்டிகர் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதனைத்தான் ‘முரசொலி’யின் முந்தைய தலையங்கத்தில் நடந்து விட்ட மோசடியைக் கடுமையாகக் கண்டித்திருந்தோம்.

“பா.ஜ.க.வுக்குத் தெரிந்தது நேரிய வழியல்ல, குறுக்கு வழி மட்டும்தான். அவர்கள் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் இருப்பது அப்படித்தான். இதுதான் பா.ஜ.க.வுக்கு தெரிந்த ஒரே வழியாகும். அதைத்தான் மெய்ப்பித்திருக்கிறது சண்டிகர் மேயர் தேர்தல். பெரும்பான்மை பெற்று மேயராக ஆகி இருக்க வேண்டிய கட்சி ஆம் ஆத்மி ஆகும். ஆனால் கோல்மால் வேலைகளைப் பார்த்து மேயர் பதவியைக் கைப்பற்றி இருக்கிறது பா.ஜ.க.

பா.ஜ.க. எப்படி வென்றது? ஆம் ஆத்மியைச் சேர்ந்தவர்கள், காங்கிரசைச் சேர்ந்தவர்கள் பா.ஜ.க.வுக்கு கட்சி மாறி விட்டார்களா? இல்லை. மாறாக, அவர்கள் அளித்த வாக்குகளைச் செல்லாது என்று ஆக்கிவிட்டு, பா.ஜ.க. வென்றதாக அறிவித்துவிட்டார்கள். இதை விட மகா கேவலம் இருந்திருக்க முடியுமா? சண்டிகர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 35 இடங்களில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி 20 இடங்களைப் பெற்றுள்ளது. பா.ஜ.க 14 கவுன்சிலர்களையும், சிரோன்மணி அகாலிதளம் ஒரு கவுன்சிலரையும் பெற்றுள்ளது.

சண்டிகர் தேர்தல் விவகாரம் : “முறைகேடு செய்யத் தூண்டியவர்களுக்கு என்ன தண்டனை?” - முரசொலி கேள்வி !

மேயர் பதவியை ஆம் ஆத்மி கட்சியும், இரண்டு துணை மேயர் பதவிகளை காங்கிரஸ் கட்சியும் பிரித்துக் கொண்டு கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. ‘இந்தியா’ கூட்டணி வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் இது. தேர்தலில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி 20 வாக்குகளையும், பா.ஜ.க. 16 வாக்குகளையும் பெற்றது. ஆனால் 8 வாக்குகளை செல்லாது என அறிவித்து பா.ஜ.க. குறுக்கு வழியில் வெற்றி பெற்றது. பா.ஜ.க.வின் மகா திருட்டுத்தனம் அல்லவா இது? மோடி தேர்தலா, மோசடித் தேர்தலா என்று எதிர்க்கட்சிகள் கேட்பது உண்மைதானே?

ஒரே ஒரு மேயர் தேர்தலிலேயே இத்தனை மோசடிகள் – முறைகேடுகள் – - தில்லுமுல்லுகள் என்றால், நாடாளுமன்ற, சட்டமன்றப் பொதுத் தேர்தல்களில் பா.ஜ.க.வின் செயல், எந்த அளவிற்கு இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஒற்றுமையின் மூலம் மட்டுமே இத்தகைய மோசடித்தனங்களை வீழ்த்த முடியும்” - என்று நாம் அந்தத் தலையங்கத்தில் குறிப்பிட்டு இருந்தோம்.

ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணியின் மேயர் வேட்பாளர் குல்தீப் குமார், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். தேர்தல் அதிகாரி அனில் மாஷி, வாக்குச் சீட்டில் குறியீடு செய்து செல்லாததாக ஆக்கியது உண்மைதான் என்று நீதிபதிகள் முன் ஒப்புக் கொண்டார். ‘குறியீடு மட்டும் செய்யவில்லை, அந்த வாக்குச் சீட்டில் வரி வரியாக எழுதி இருக்கிறார் தேர்தல் அதிகாரி’ என்று நீதிபதிகள் சொல்லி இருக்கிறார்கள். ‘ஆம் ஆத்மிக்கு வாக்களிக்கப்பட்ட வாக்குச் சீட்டில் மட்டுமே இதனை தேர்தல் அதிகாரி எழுதி உள்ளதால் அதனை குற்றச் செயலாகக் கருதவேண்டும்’ என்று தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு கூறியது. சண்டிகர் தேர்தலில் பா.ஜ.க. அடைந்த வெற்றியையே ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.

சிதைக்கப்பட்ட எட்டு வாக்குச் சீட்டுகளின் வாக்குகளையும் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளருக்கு வழங்கி அவரை வெற்றி பெற்றவராக நீதிபதிகள் அறிவித்தார்கள். சண்டிகர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மகத்தான தீர்ப்பை அளித்தது. முறைகேடு செய்த தேர்தல் அதிகாரி தண்டனைக்கு உள்ளாவார். அவரை முறைகேடு செய்யத் தூண்டியவர்களுக்கு என்ன தண்டனை?

banner

Related Stories

Related Stories