முரசொலி தலையங்கம்

‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ : பா.ஜ.கவை வீழ்த்த இந்தியாவிற்கு வழிகாட்டிய தமிழ்நாடு!

‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கூட்டங்கள், மண்டல மாநாடுகளைப் போல மிகப் பிரமாண்டமாக நடைபெற்றிருக்கின்றன.

‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ : பா.ஜ.கவை வீழ்த்த இந்தியாவிற்கு வழிகாட்டிய தமிழ்நாடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (19-02-2024)

உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்

‘பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்!’ - என்பது இந்தியாவுக்கே மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காட்டும் வழியாகும். இந்த முழக்கத்தை முன் வைத்து தமிழ்நாடு முழுவதும் கடந்த மூன்று நாட்கள் மாபெரும் கூட்டங்களை திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திக் காட்டி இருக்கிறது.

‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கூட்டங்கள், மண்டல மாநாடுகளைப் போல மிகப் பிரமாண்டமாக நடைபெற்றிருக்கின்றன. பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்த நினைக்கும் பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசியல் இயக்கங்கள், இத்தகைய கூட்டங்களைத் தான் தொடங்க வேண்டும் என்பதையும் உணர்த்தி இருக்கிறார் தி.மு.க. தலைவர் அவர்கள்.

இந்திய நாடு புதிய அரசைத் தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வருகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் - மக்களுக்கு வேதனைகளையும் துன்ப துயரங்களையும் மட்டுமே கொடுத்த பாசிச பா.ஜ.க. கட்சியானது மீண்டும் வாக்குக் கேட்டு வரப் போகிறது.

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை உயர்த்தியும், விலைவாசி அனைத்தையும் விண்ணைத் தொடும் வகையில் அதிகப்படுத்தியும் அப்பாவி ஏழை எளிய சாதாரண சாமான்ய மக்களுக்கு விரோதமான ஆட்சியைத் தான் பத்தாண்டுகளாக பா.ஜ.க. கொடுத்து வருகிறது.

மாநிலங்களைச் சிதைப்பதன் மூலமாக கூட்டாட்சி மாண்புகளையும் சிதைத்துச் சின்னாபின்னம் ஆக்கிவிட்டது பா.ஜ.க. ஆட்சி. மாநிலங்களைச் செயல்பட விடாமல் தடுப்பதன் மூலமாக பல்வேறு இன,மொழி,பண்பாட்டு பாரம்பரியம் கொண்ட மக்களது உணர்வுகளோடு வேட்டையாடிக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. அரசு.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் வளர்ச்சி என்பதைச் சொல்லி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க., 2019 வரை வளர்ச்சியைக் காட்ட முடியாததால் நரேந்திரமோடி என்ற பிம்பத்தைக் காட்டியது. 2019க்குப் பிந்தைய பா.ஜ.க. ஆட்சியானது ரபேல் ஊழல், அதானி முறைகேடுகள், 7 லட்சம் கோடி மதிப்பிலான சி.ஏ.ஜி.அறிக்கை போன்ற பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நிலையில் மோடியின் பிம்பமும் இன்று கிழித்தெறியப்பட்டு விட்டது. எனவே மோடியின் முகம் இன்று செல்லுபடியாகாது. இந்த நிலையில் மக்களின் மத உணர்வுகளைத் தூண்டி, அதனை அரசியல் முதலீடு ஆக்க நினைத்து கோவில் கட்டி இருக்கிறோம், கோவிலுக்கு இலவச ரயில் விடுகிறோம் என்று சொல்லி மக்களை திசை திருப்பப் பார்க்கிறது.

மூன்றாவது முறையும் பா.ஜ.க. ஆட்சி அமைவது என்பது இந்திய நாட்டின் அனைத்து மாண்புக்கும் முற்றுப்புள்ளி வைத்து, நூறு ஆண்டுகளுக்குப் பின்னால் கொண்டு போய் நிறுத்தி விடுவார்கள். இதனைத் தடுக்க வேண்டிய மாபெரும் அரசியல் கடமை அனைவர்க்கும் இருக்கிறது.

இதனை மக்கள் மன்றத்தில் விதைத்து விட்டது ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரை பயணம்.

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அரசின் பத்தாண்டு கால முறையற்ற நிர்வாகம், மக்களின் குறைகள், துன்பங்களை நேரடியாகக் கேட்டறிந்திட 15 கழக முன்னணியினர் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரையில் பங்கேற்று அ.தி.மு.க.வை மக்கள் நிராகரிப்பதற்கான அடித்தளமிட்டனர். அதேபோல் வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க. வீழ்த்தப்பட வேண்டும். பா.ஜ.க.வுடன் ‘மறைமுக கூட்டணி’ வைத்துள்ள பழனிசாமியின் அ.தி.மு.க.வும் வீழ்த்தப்பட வேண்டும்.

இந்த நோக்கத்தை மக்களிடம் சொல்வதற்காக 19 கழக முன்னணியினரை களத்தில் இறக்கி, நாடாளுமன்றத் தொகுதிவாரியாக ‘பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்’ என்ற முழக்கத்தை முழங்க வைத்துள்ளார் தலைவர் அவர்கள்.

இரண்டு கருத்துகள் அழுத்தமாக விதைக்கப்பட வேண்டும்.

* பா.ஜ.க. வீழ்த்த முடியாத சக்தி அல்ல. அது பல்வேறு மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் வீழ்த்தப்பட்ட கட்சி தான். அந்தக் கட்சி நேரடியாக - உண்மையான செல்வாக்குடன் ஆள்வது ஐந்தாறு மாநிலங்களில் மட்டும் தான். மற்றபடி கட்சிகளை உடைத்து - ஆட்களை இழுத்து – மாநிலங்களைக் கையில் வைத்துள்ளது. மிகப்பெரிய மாநிலங்கள், பா.ஜ.க.வின் எதிர்க்கட்சிகள் வசம் உள்ளன. எனவே, பா.ஜ.க.வை வீழ்த்துவது சாத்தியமானது தான் என்பதை மக்கள் மனதில் விதைக்க வேண்டும்.

* தங்களை ஏதோ பரிசுத்தமானவர்கள் என்பதைப் போல பா.ஜ.க. தலைமை காட்டிக் கொள்கிறது. ‘மலைமுழுங்கி ஊழல் கட்சி’ தான் பா.ஜ.க. என்பதை மக்கள் மன்றத்தில் திரும்பத் திரும்பச் சொல்லி ஆக வேண்டும். ஊழலை சட்டபூர்வமாக ஆக்கிய கட்சி தான் பா.ஜ.க. தேர்தல் நன்கொடைப் பத்திரமாக ‘பத்திரப்படுத்தியது’ பா.ஜ.க. 2017 ஆம் ஆண்டு இந்த முறையைக் கொண்டு வந்தது பா.ஜ.க.

2016 முதல் 2022 வரை 28 ஆயிரத்து 30 தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு 16 ஆயிரத்து 438 கோடி ரூபாய். இதில் 10 ஆயிரத்து 122 கோடியை ஈட்டி உள்ள கட்சி பா.ஜ.க. அதாவது, தேர்தல் பத்திரம் மூலமாக பெற்ற மொத்த தொகையில் 60 விழுக்காடு பா.ஜ.க. பெற்றுள்ளது. தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானது என்று சொல்லி உச்சநீதிமன்றம் அதனையே ரத்து செய்து தீர்ப்பு அளித்துள்ளது. பா.ஜ.க.வின் ஊழல் முகத்திரை இதன் மூலமாக கிழிந்துள்ளது.

இவற்றையெல்லாம் மக்கள் மன்றத்தில் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமாகத் தான் பாசிசத்தை வீழ்த்த முடியும். இந்தியாவை வெல்ல முடியும்!

banner

Related Stories

Related Stories