முரசொலி தலையங்கம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் : “பா.ஜ.க. உறுப்பினர்களும் பீதியில் இருக்கிறார்கள்” - முரசொலி !

உள்துறை அமைச்சர் அவருக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைக்கு எல்லாம் - பிரதமருக்குப் பதிலாக பக்கம் பக்கமாக உரையாற்றி இருக்கிறாரே. இப்போது அவர் பதில் சொல்லியாக வேண்டியதற்கு ஏன் பதில் அளிக்க மறுக்கிறார்?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் : “பா.ஜ.க. உறுப்பினர்களும் பீதியில் இருக்கிறார்கள்” - முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

விளக்கம் அளிப்பதில் என்ன பிரச்சினை?

இந்திய நாடாளுமன்றத்தில் இருந்து 92 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். பா.ஜ.க.வின் ஜனநாயகச் சாதனைகளில் இதுவும் ஒன்று.

நாடாளுமன்றத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வது அவர்களுக்குப் புதிதல்ல. நாடாளுமன்றத்தில் நாட்டின் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்த அனுமதி கோரி குரல் எழுப்பியதற்காக கடந்த 5 ஆண்டுகளில் 57 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 71 முறை இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் கடந்த 2819 ஆம் ஆண்டு முதல் விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி வரி உயர்வு, மகாராஷ்டிரா குதிரை பேரம், மணிப்பூர் கலவரம், ரஃபேல் விவகாரம், டெலிபோன் ஒட்டுக் கேட்பு, அதானி விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பியதற்கு 57 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 71 முறை இடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

அதிகபட்சமாக 2022 ஆம் ஆண்டு மழைக்கால கூட்டத்தொடரின் போது ஜி.எஸ்.டி வரி உயர்வுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் விவாதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. அப்போது நாடாளுமன்றத்தில் முழக்கமிட்ட 23 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். தி.மு.க. எம்.பி.க்கள் ஐந்து பேர் உட்பட அப்போது 19 எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதே பிரச்சினையில் மக்களவையில் நான்கு எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் : “பா.ஜ.க. உறுப்பினர்களும் பீதியில் இருக்கிறார்கள்” - முரசொலி !

2021 ஆம் ஆண்டு குளிர்கால கூட்டத் தொடரின் போது விவசாயிகள் பிரச்சினை, விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தியதற்காக மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இப்படி பல பிரச்சினைகளில் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 57 எம்.பி.க்கள் 71 முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இடைநீக்கம் செய்வதுதான் பா.ஜ.க. தலைமையின் அரசியல் பாணியாகும்.

ராகுல்காந்தியை பதவி நீக்கம் செய்ததைப் போலவோ - மஹூவா மொய்த்ரா பதவியைப் பறித்ததைப் போலவோ செய்ய முடியாத நிலையில், 'இடைநீக்கம்' என்ற அஸ்திரத்தை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். இதைத்தான் இப்போதும் செய்துள்ளார்கள். கடந்த 13 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் புகைக்குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று சொன்ன கனிமொழி கருணாநிதி உள்ளிட்ட 13 மக்களவை உறுப்பினர்களும், ஒரு மாநிலங்களவை உறுப்பினரும் இடைநீக்கம் செய்யப்பட்டார்கள். அதன் பிறகு நேற்றைய தினம் மக்களவை உறுப்பினர்கள் 33 பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 45 பேர் என 78 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டார்கள். ஆக மொத்தம் 92 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். நாடாளுமன்ற தி.மு.க. குழுத்தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட 18 தி.மு.க. உறுப்பினர்கள் இதில் அடக்கம்.

இந்தியாவின் பிரதமர் நரேந்திரமோடி சபைக்கு வருகை தந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூடச் சொல்லவில்லையே? உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்றத்துக்குள் வந்து விளக்கம் கூட அளிக்கவில்லையே? விளக்கம் அளிப்பதில் என்ன பிரச்சினை இருக்கிறது?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் : “பா.ஜ.க. உறுப்பினர்களும் பீதியில் இருக்கிறார்கள்” - முரசொலி !

ஆனால் இந்தி நாளிதழ் ஒன்றுக்கு பிரதமர் பேட்டி அளித்திருப்பதாகச் செய்தி வெளியாகி உள்ளது. "நாடாளுமன்றப் பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் வேதனை அளிக்கிறது. கவலைக்குரியது. இது தொடர்பாக புலனாய்வு அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தின் பின்னணியில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் நோக்கம் குறித்து ஆழமாக விசாரிப்பது அவசியம். நாடாளுமன்றச் சம்பவத்தின் தீவிரத்தை குறைத்து மதிப்பிட முடியாது. அதே தீவிரத்துடன் மக்களவைத் தலைவர் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். கூட்டு மனப்பான்மையுடன் தீர்வு காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இது போன்ற விவகாரத்தின் வீண் சர்ச்சைகளை அனைவரும் தவிர்க்க வேண்டும்” என்று பிரதமர் சொன்னதாகச் செய்தி வெளியாகி உள்ளது.

இதையே நாடாளுமன்றத்தில் சொன்னால் என்ன குறைந்து விடப் போகிறது? ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்க்கு எங்கோ ஒரு இடத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால், அது தொடர்பாக "உரிமை மீறல்" என்ற பொருளில் நாடாளுமன்றத்தில் பிரச்சினை கிளப்பப்பட்டு விவாதங்கள் நடக்கும். ஆனால் இங்கே அனைத்து உறுப்பினர்களும் அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள். பா.ஜ.க. உறுப்பினர்களும் சேர்ந்து பீதியில் இருக்கிறார்கள். இது மிகப்பெரிய அச்சுறுத்தல் அல்லவா? அது விவாதிக்க வேண்டாமா?

இதனை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்கவில்லை. 'உள்துறை அமைச்சர் பதில் சொல்ல வேண்டும்' என்றுதான் சொல்கிறார்கள். உள்துறை அமைச்சர் அவருக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைக்கு எல்லாம் - பிரதமருக்குப் பதிலாக பக்கம் பக்கமாக உரையாற்றி இருக்கிறாரே. இப்போது அவர் பதில் சொல்லியாக வேண்டியதற்கு ஏன் பதில் அளிக்க மறுக்கிறார்? "நாடாளுமன்றத்துக்குள் வரும் எங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?" என்று கேட்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிமை இல்லையா?

banner

Related Stories

Related Stories