முரசொலி தலையங்கம்

“ஆளுநர் என்பவர் மாநில அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர்”: குட்டு வைத்த உச்சநீதிமன்றம் -சுட்டிக்காட்டிய முரசொலி

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்துக்கு குடைச்சல் கொடுக்கும் வேலையை மட்டுமே ஆளுநர்கள் பார்த்து வருகிறார்கள்.

“ஆளுநர் என்பவர் மாநில அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர்”: குட்டு வைத்த உச்சநீதிமன்றம் -சுட்டிக்காட்டிய முரசொலி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஆளுநர் பதவியே அகற்றப்பட வேண்டியதே -2

மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் எழுதும் போது...

''ஆளுநர்கள் நியமனத்தில் புதிய நடைமுறையை கண்டுபிடித்தாக வேண்டும். ஆளுநராக நியமிக்கப்பட உள்ளவர்களை நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு வரவழைத்து அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் முழுமையாக விசாரிக்க வேண்டும். அவர்களது பொருத்தப்பாடும், தகுதியின்மையும் அம்பலப்படுத்தப்பட வேண்டும். அரசமைப்புச் சட்டத்தில் இதற்கான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்" என்றும் குறிப்பிட்டார்.

பா.ஜ.க.வால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதையும் அவர் வரிசைப்படுத்தினார்.

* மேகாலயா ஆளுநராக இருந்த வி.சண்முகநாதன் மீது பாலியல் குற்றச்சாட்டை பத்திரிகைகள் விரிவாக எழுதின.

* அருணாச்சலப் பிரதேச ஆளுநர் ஜோதி பிரகாஷ் சட்டமன்றத்திற்கு ஒரு தலைப்பட்சமான தகவலை அளித்து ஜனவரி 23, 2016 இல் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தினார். பின்னர் பா.ஜ.க. ஒன்றிய அரசின் அரசியல் நோக்கம் நிறை வேறியதும் குடியரசுத் தலைவர் ஆட்சி வசதியாக திரும்பப் பெறப்பட்டது. அருணாச்சலப் பிரதேச முதல்வர் கலிக்கோ புல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார்.

* உத்தரகண்ட் ஆளுநர் கே.கே. பால் உதவியால் முதல்வர் ராவத் மீது சி.பி.ஐ. விசாரணை ஏவப்பட்டு அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி கே. எம். ஜோசப் ஆட்சி தலைமையிலான அமர்வு உத்தரகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி திணிக்கப்பட்டது பா.ஜ.க.வுக்கு சாதகமானது, அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது எனத் தீர்மானித்தார். கடும் உழைப்புடன் கூடிய கவனமிக்க தீர்ப்பை வழங்கக் கூடிய அறிவார்ந்த நீதிபதியான கே.எம்.ஜோசப் இதற்காக பழிவாங்கப்பட்டார். உச்சநீதிமன்ற நீதிபதி ஆவதற்கு தகுதியான அவரது பெயர் பரிந்துரை செய்யப்படாமல் கைவிடப்பட்டது.

“ஆளுநர் என்பவர் மாநில அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர்”: குட்டு வைத்த உச்சநீதிமன்றம் -சுட்டிக்காட்டிய முரசொலி

* 2017-இல் கோவா, மணிப்பூர் சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றாலும் பா.ஜ.க.ஆட்சியை கைப்பற்றுவதற்கு ஆளுநர்கள் உதவி செய்தனர்.

* 2020-இல் மத்தியப் பிரதேசம், 2022 இல் மகாராஷ்டிரம் என ஆளுநர்கள் உதவியுடன், அதிகார பலத்துடன் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியது. தேர்தல்கள்தான் இந்தியாவின் பலமாகும். வாக்காளர்களின் மனநிலை, உணர்வு தேர்தலில் வெளிப்படுகிறது. ஆனால் ஆளுநர்களின் செயல்பாட்டால் தேர்தலின் நோக்கமே அடிபட்டுப் போகிறது.

* சில ஆளுநர்கள் அரசியலமைப்புச் சட்டக் கொள்கைகளை மீறி குற்றம் புரிகின்றனர். தொங்கு சட்டமன்றத்தில் முதல்வரை நியமனம் செய்வது முக்கியமானப் பிரச்சினையாகும். அவர்களுக்கு ஜனநாயக அடிப்படைகள், மக்களின் தீர்ப்பு பற்றி எல்லாம் அக்கறையில்லை. ஏறத்தாழ, அனைத்து ஆளுநர்களுமே பதற்றமும், மிகை உணர்ச்சி கொண்டவர்களாகவும், அரசியல் சார்புடன் செயல்படு பவர்களாகவும் இருக்கின்றனர்.

* கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், மேற்குவங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கர் போன்றவர்கள் தங்களது சொந்த அரசுகளுக்கே சவால் விடும் வகையில் செயல்பட்டனர். ஜெகதீப் தன்கர், தலைமைச் செயலாளரையும், காவல்துறை தலைவரையும் ஆளுநர் மாளிகைக்கு கட்டளையிட்டு வரவழைத்தார்.

* பல்கலைக் கழக வேந்தர் நியமனம் குறித்த சட்டத்தை திருத்தம் செய்ய கேரள மாநில அரசு விரும்பும் போது ஆளுநர் ஆரீப், பல்வேறு பல்கலைக் கழக வேந்தர்களை பதவி நீக்கம் செய்கிறார். இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளை ஆளுநர்கள் உருவாக்கினார்கள். உருவாக்கிக் கொண்டும் வருகிறார்கள்.

ஆளுநர்களின் நடத்தைகள் குறித்து உச்சநீதிமன்றம் பலமுறை கொட்டியும் இருக்கிறது. குட்டியும் இருக்கிறது. திட்டியும் இருக்கிறது. ஆனால் இவர்கள் திருந்துவதாக இல்லை. பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேர் விடுதலையில் மாநில அமைச்சரவை எடுத்த முடிவை ஏற்காமல் ஆளுநர் காலதாமதம் செய்ததை உச்சநீதிமன்றம் கண்டித்து அவர்களை நீதிமன்றமே விடுதலை செய்ததைப் பார்த்தோம். உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு - ஒரே தீர்ப்பை வழங்கியது.

The reference of the recommendation of the Tamil Nadu Cabinet by the Governor to the President of India two and a half years after such recommendation had been made is without any constitutional backing and is inimical to the scheme of our Constitution, whereby "the Governor is but a shorthand expression for the State Government' as observed by this Court'.

- '' கவர்னர் என்பது மாநில அரசின் சுருக்கெழுத்து மட்டுமே'' என்று முன்பொரு தீர்ப்பில் உச்சநீதிமன்றம் சொன்னதையே பேரறிவாளன் வழக்கிலும் நீதிபதிகள் கூறினார்கள்.

“ஆளுநர் என்பவர் மாநில அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர்”: குட்டு வைத்த உச்சநீதிமன்றம் -சுட்டிக்காட்டிய முரசொலி

பஞ்சாப் சட்டமன்ற நிதிநிலை அறிக்கைக்கான கூட்டத் தொடரை கூட்டுவதற்கு அனுமதி தரவில்லை அந்த மாநில ஆளுநரான பன்வாரிலால். கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதி மன்றத்துக்கே போனது பஞ்சாப் மாநில அரசு. '‘ஆளுநர் என்பவர் மாநில அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர். இது உச்சநீதிமன்றத்தின் பல்வேறு வழக்குகளில் தீர்ப்பாகத் தரப்பட்டுள்ளது. எனவே அமைச்சரவைக் குழு ஒரு முடிவெடுத்தால் ஆளுநர் அதனை ஏற்க வேண்டும்" என்று நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள்.

தமிழ்நாடு - கேரளா - மேற்கு வங்கம் - பஞ்சாப் - டெல்லி - தெலுங்கானா என எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்துக்கு குடைச்சல் கொடுக்கும் வேலையை மட்டுமே ஆளுநர்கள் பார்த்து வருகிறார்கள். தமிழ்நாடு - கேரளா - பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்திலே முழுமையான வழக்கை பதிவு செய்துள்ளது.

''நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள்'' என்று பஞ்சாப் மாநில ஆளுநரைப் பார்த்து உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்வி என்பது சாதாரணமானது அல்ல. நெருப்புடன் என்றால் மக்களோடு - சிறுபிள்ளைத்தனமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் ஆளுநர்கள். ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றத்துக்குப் போய் இவர்களைக் கட்டுப்படுத்துங்கள் என்று நிற்க முடியுமா? முடியாது. இதற்கு மொத்தமாக முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

'ஆளுநர் பதவியே அகற்றப்பட வேண்டும்' என்று தமிழ்நாடு முதலமைச்சர் வைக்கும் கோரிக்கையானது இந்தியாவின் கோரிக்கையாக மாற்றப்பட வேண்டும். மாநிலங்களைக் காக்க - மக்களாட்சித் தத்துவத்தைக் காக்க ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டும்.

''ஆட்டுக்குத் தாடி எதற்கு? நாட்டுக்கு ஆளுநர்கள் எதற்கு?" - பேரறிஞர் அண்ணா!

- முரசொலி தலையங்கம்

22.11.2023

banner

Related Stories

Related Stories