முரசொலி தலையங்கம்

“மீனவர்கள் துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் துப்பு இல்லாத பாஜக - மலையக மக்களை ஏமாற்றலாமா?” : முரசொலி!

இன்னமும் இந்திய மீனவர்கள், படும் துன்ப துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் துப்பு இல்லாத பா.ஜ.க. - இலங்கைக்குப் போய் மலையக மக்களை ஏமாற்றலாம் என்று நினைப்பது காலக் கொடுமையே ஆகும்.

“மீனவர்கள் துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் துப்பு இல்லாத பாஜக - மலையக மக்களை ஏமாற்றலாமா?” : முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மலையகத் தமிழர் 200

இலங்கையில் மலையகத்தில் தமிழர் குடியேறி -– அந்த மண்ணை வாழ்வித்து 200 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நிலையில் மலையகத் தமிழ் மக்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இதயத்தின் அடியாழத்தில் இருந்து அன்புடனும் அக்கறையுடனும் தெரிவித்த வாழ்த்துகள் ஆகும் இவை.

* மனிதன் வாழ்ந்திராத மலைக்காடுகளை மலையகத் தோட்டங்களாக மாற்றியவர்கள் மலையகத் தமிழர்கள் ஆவார்கள்.

மலையகத் தமிழ்த் தொழிலாளர்களின் வரலாறு இலங்கையில் காப்பி பயிர் செய்யப்பட்ட ஆரம்பகட்டத்தில் இருந்து தொடங்குகிறது.

* இது இலங்கைப் பொருளாதாரத்தில் மகத்தான மாற்றத்தை உருவாக்கியது. பின்னர், ரப்பர், தென்னை என அனைத்துப் பணப் பயிர்களது உற்பத்தியும் மலையகத் தமிழர்களது உழைப்பால் உருவானதுதான்.

* பயிரிடப்படாத நிலத்தை பயிரிட்டும் -– காடுகளாக இருந்த நிலத்தை காசுப் பயிர்களாக விளைவித்தும் பின் தங்கிய பொருளாதாரத்தை முன்னணி பொருளாதாரமாக ஆக்கியவர்கள் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் ஆவார்கள்.

* இலங்கை நாட்டுக்காக தங்களது உழைப்பை வழங்கியவர்கள் மலையகத் தமிழர்கள். இலங்கை நாடு உயர உழைத்தவர்கள். தங்களது ரத்தத்தையும் வியர்வையையும் காலத்தையும் கடமையையும் அந்த நாட்டுக்காகவே ஒப்படைத்தவர்கள்.

- – என்று அந்த மக்களின் மகத்தான உழைப்பைப் பாராட்டி இருந்தார் முதலமைச்சர் அவர்கள்.

“மீனவர்கள் துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் துப்பு இல்லாத பாஜக - மலையக மக்களை ஏமாற்றலாமா?” : முரசொலி!

“இத்தகைய மலையக மக்களின் நீதியும் உரிமையும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கல்வி, சுகாதாரம், வாழிட உரிமைகள், பொருளாதார உதவிகள், சமூக உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும்.” என்பதையும் வலியுறுத்தி இருந்தார் முதலமைச்சர் அவர்கள். ஏனென்றால் அம்மக்களின் நிலைமை என்பது பெரிதாக மாறிவிடவில்லை. இலங்கையை உயர்த்திய, மேம்படுத்திய அவர்களது வாழ்க்கை மேலும் முன்னேற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக முதல்வர் அவர்கள் வலியுறுத்தி இருந்தார்.

முதலமைச்சர் அவர்களின் உரை, இலங்கையில் நடைபெறும் விழாவுக்காக தயாரிக்கப்பட்டது ஆகும். இலங்கையில் குடியமர்த்தப்பட்ட மலையகத் தமிழர்களது 200 ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. “நாம் 200 - – ஒற்றுமை, பன்முகத்தன்மை மற்றும் பாரம்பர்யத்தின் முழக்கம்” என்பது இந்த நிகழ்ச்சியின் பெயர். இந்த நிகழ்ச்சியை இலங்கை மலையகத் தமிழர்களுக்காக இலங்கையின் உள்நாட்டு தோட்டத் தொழில் துறை மற்றும் அரசு தொழில் துறை அமைச்சகம் முன்னெடுத்தது. அந்த விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டதால் தயாரிக்கப்பட்ட உரை இது. ஆனால் அந்த உரை, விழாவில் ஒளிபரப்பப்படவில்லை.

இது குறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், ‘தமிழ்நாடு முதலமைச்சரின் உரையை ஒளிபரப்பக் கூடாது என்று இந்திய பா.ஜ.க. அரசு தடை போட்டுவிட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை விட ஜனநாயக மறுப்பு, தமிழர் விரோதச் செய்கை இருக்க முடியாது.

முதலமைச்சர் உரையைத் தடை செய்வதன் மூலமாக, மலையகத் தமிழர்கள் மீதான தி.மு.க.வின் பற்றுதலை மறைக்கும் சதிச் செயலை ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துள்ளது.

“மீனவர்கள் துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் துப்பு இல்லாத பாஜக - மலையக மக்களை ஏமாற்றலாமா?” : முரசொலி!

இதே நிகழ்வில் இன்னொரு சதியையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துள்ளதை தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் அம்பலப்படுத்தி இருக்கிறார்கள்.

“அந்த விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்றும் முறையான அழைப்பு தமிழ்நாடு அரசிற்கு அனுப்பப்பட்டது. முதலமைச்சர் அவர்கள் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள இயலாத நிலையில், என்னை அந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு அவர்கள் பணித்திருந்தார்கள். இலங்கை பயணம் மேற்கொள்வதற்காக ஒன்றிய அரசின் வெளிவிவகாரத் துறையிலிருந்து உரிய அனுமதியினை பெறுவதற்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி உரிய வழிமுறைப்படி விண்ணப்பம் நம்முடைய பொதுத்துறையால் அனுப்பப்பட்டுவிட்டது. political clearance என்று சொல்லக்கூடிய வெளிவிவகாரத்தின் அனுமதி கிடைப்பதற்காக நான் காத்துக் கொண்டிருந்தேன்,

அக்டோபர் 28ஆம் தேதி அன்று பொதுத் துறையின் வாயிலாக ஒன்றிய அரசிற்கு அனுப்பப்பட்டது. விழா நவம்பர் 2-ஆம் தேதி மதியம். ஆனால் 1-ஆம் தேதி இரவு எட்டரை மணி வரை வரவில்லை. ஒன்றிய அரசிடமிருந்து அனுமதி இதுவரை வராத காரணத்தால் நான் பயணத்தை மேற்கொள்ள இயலாத நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டி, என்னுடைய பயண ஏற்பாடுகளை நான் இரத்து செய்துவிட்டு வீடு திரும்பினேன். அதற்குப்பிறகு ஒன்பதரை மணிக்கு மேல் அனுமதி வந்திருக்கிறது. ஆனால் அதற்கு முன்னதாக நான் பயண ஏற்பாடுகளை எல்லாம் இரத்து செய்துவிட்ட காரணத்தினால், இரவு 8.30 மணிக்கு மேல் அத்தகைய அனுமதி கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று கருதி, முறைப்படி விழா ஏற்பாட்டாளர்களிடம் இதனை தெரிவித்துவிட்டு பயண ஏற்பாடுகளை எல்லாம் இரத்து செய்துவிட்டோம்." என்று சொல்லி இருக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

“மீனவர்கள் துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் துப்பு இல்லாத பாஜக - மலையக மக்களை ஏமாற்றலாமா?” : முரசொலி!

வெளிநாட்டில் நடைபெறும் விழாவுக்கு அனுமதி தருவதில் ஒன்றிய அரசு எப்படி நடந்து கொண்டுள்ளது என்பதன் மூலமாக - – எதனால் இப்படி நடந்து கொண்டது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

குடியுரிமைச் சட்டத்தின் மூலமாக இலங்கைத் தமிழர்களை குடியுரிமை அற்றவர்களாக ஆக்கிய பா.ஜ.க., இப்போது மலையகத் தமிழர்கள் விழாவில் எத்தகைய சதிச்செயல்களில் ஈடுபடுகிறது என்பது புரிகிறது. இந்த நிலையில் மலையகத் தமிழர் மாநாட்டில் கலந்து கொள்ள பா.ஜ.க. அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கை சென்றிருக்கிறார்.

இன்னமும் இந்திய மீனவர்கள், படும் துன்ப துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் துப்பு இல்லாத பா.ஜ.க. - இலங்கைக்குப் போய் மலையக மக்களை ஏமாற்றலாம் என்று நினைப்பது காலக் கொடுமையே ஆகும்.

banner

Related Stories

Related Stories