முரசொலி தலையங்கம்

ஒன்றிய அரசின் ஊழல் நாடறிந்தது.. பா.ஜ.க.வின் முகத்திரையை கிழித்தெறிந்த சி.ஏ.ஜி. அறிக்கை - முரசொலி !

ஒன்றிய அரசின் ஊழல் நாடறிந்தது.. பா.ஜ.க.வின் முகத்திரையை கிழித்தெறிந்த சி.ஏ.ஜி. அறிக்கை - முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (31.8.2023)

பா.ஜ.க.வின் முகத்திரையை கிழிக்கும் சி.ஏ.ஜி. - 1

‘இந்தியா’ கூட்டணி பேசும் மக்கள் அரசியலுக்குப் பதில் சொல்ல முடியாத நரேந்திரமோடியும், அமித்ஷாவும், ‘அது ஊழல் கூட்டணி’ என்று சொல்லி திசை திருப்பி வருகிறார்கள். ஆனால் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஊழல் என்பது நாடறிந்தது ஆகும். அந்த நாடறிந்த செய்திக்கு ஆதாரங்கள் வேண்டுமா? இதோ மத்திய தணிக்கைத் துறை அறிக்கை வந்திருக்கிறது. பா.ஜ.க.வின் முகத்திரையை கிழிக்கிறது சி.ஏ.ஜி. அறிக்கை. இந்த அறிக்கையில் ஏழு விதமான திட்டங்களில் நடந்திருக்கக் கூடிய முறைகேடுகள் மட்டுமே அம்பலமாகி இருக்கிறது. ஒவ்வொன்றாக - சுருக்கமாகக் காண்போம்.

அயோத்தியா மேம்பாட்டுத் திட்டம்:

உத்தரப்பிரதேச மாநிலத்தில், அயோத்தியா மேம்பாட்டுத் திட்டத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்படுத்துவதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதை சி.ஏ.ஜி. அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. ஒன்றிய பா.ஜ.க. அரசு, கடந்த 2015-ஆம் ஆண்டு ஸ்வதேஷ் தர்ஷன் (Swadesh Darshan) திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், இமாச்சலப்பிரதேசம், சிக்கிம், கோவா, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களில் 6 திட்டங்களை அறிவித்தது ஒன்றிய அரசு. 2015 ஜனவரி முதல் 2022 மார்ச் மாதம் வரையிலான இத்திட்டத்தின் செயல்பாடு குறித்து, இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் ஆய்வு நடத்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இராமாயண நிகழ்வுகள் தொடர்புடைய இடங்களை ஒருங்கிணைத்து சுற்றுலா வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டதுதான் அயோத்தியா மேம்பாட்டுத் திட்டம். இத்திட்டத்தைச் செயல்படுத்தியதில் 8 கோடியே 22 லட்சம் ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது சி.ஏ.ஜி. அயோத்தியா மேம்பாட்டுத் திட்டத்தில் ஒப்பந்ததாரர்களுக்குப் பணி கொடுக்கப்படும் போது, குறிப்பிட்ட அளவு உத்தரவாதத் தொகையை செலுத்தி இருக்க வேண்டும். ஆனால் நிர்ணயிக்கப்பட்டதை விட குறைவான அளவிற்கு இந்த உத்தரவாதத் தொகை கொடுக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, 62 கோடியே 17 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் எடுத்த ஒரு ஒப்பந்ததாரர், உத்தரவாதத் தொகையாக 3 கோடியே 11 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டிய நிலையில் வெறும் ஒரு கோடியே 86 லட்சம் ரூபாய் மட்டுமே செலுத்தியுள்ளார். ஆனால் அவருக்கு ஒப்பந்தம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒப்பந்ததாரர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்ட பணிகள் ஒரே செலவினத்தை கொண்டவை என்பதையும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது சி.ஏ.ஜி. அறிக்கை.

ஒப்பந்ததாரர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்ட பணிகளுக்கு 19 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் கூடுதலான செலவு காண்பிக்கப்பட்டுள்ளது. அயோத்தி மேம்பாட்டுத் திட்டப் பணிகளைப் பெற்ற பின்னரே 3 ஒப்பந்ததாரர்களுக்கு ஜி.எஸ்.டி. பதிவு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் ஒரு ஒப்பந்ததாரருக்கு முறைகேடாக 19 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அயோத்தியா மேம்பாட்டுத் திட்டத்தில், பல பணிகளுக்கு, அடிப்படை பணிகள் கூட செய்யப்படாமல் ஒப்பந்ததாரர்களின் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளதையும், பல பணிகளுக்குக் கூடுதல் தொகை வழங்கப் பட்டிருப்பதையும் சி.ஏ.ஜி. அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. இப்படி, அயோத்தியா மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தியதில் 8 கோடியே 22 லட்சம் ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணாக்கப்பட்டிருக்கிறது.

ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் உத்தரப்பிரதேசத்தில் அயோத்தியா மேம்பாட்டுத் திட்டம்போல, கோவாவில் சின்குவேரிம்- – அகுவாடா சிறை மேம்பாடு, இமாச்சலப் பிரதேசத்தில் இமாலயன் சர்க்யூட், தெலுங்கானாவில் ஹெரிட்டேஜ் சர்க்யூட், சிக்கிம் மாநிலத்தில் ரங்போ–-சிங்டம், மத்தியப் பிரதேசத்தில் புத்த சர்க்யூட் ஆகிய திட்டங்களிலும் முறைகேடு நடந்திருப்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது சி.ஏ.ஜி. அறிக்கை. அதன்படி, மத்தியப் பிரதேசம், இமாச்சலப்பிரதேசம், சிக்கிம், தெலுங்கானா, கோவா ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் கீழ் ஒப்பந்ததாரர்கள் 19 கோடியே 73 லட்சம் ரூபாய் அளவில் முறைகேடாக கணக்குக் காண்பித்து ஆதாயம் அடைந்துள்ளனர் என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது சி.ஏ.ஜி. அறிக்கை. எந்தத் திட்டத்தின் பேரும் புரியவில்லை. புரியாமல் பேர் வைப்பதே சுருட்டுவதற்குத் தானா?

ஒன்றிய அரசின் ஊழல் நாடறிந்தது.. பா.ஜ.க.வின் முகத்திரையை கிழித்தெறிந்த சி.ஏ.ஜி. அறிக்கை - முரசொலி !

உதான் திட்டம்:

ஒன்றிய அரசின் “உதான்” திட்டம் தோல்வியில் முடிந்து விட்டது என்பதை சி.ஏ.ஜி. அறிக்கை சொல்கிறது.

நாட்டின் சிறு நகரங்களுக்கும் விமான சேவையை விரிவுபடுத்துவதாகக் கூறி ஒன்றிய அரசு கடந்த 2016 அக்டோபர் 21–-ம் தேதி உதான் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஏழைகளும் விமானங்களில் பயணிக்கலாம் –- நடுத்தர நகரங்களுக்கும் குறைந்த கட்டணத்தில் விமான சேவை என்று கூறி ஒன்றிய பா.ஜ.க. அரசால் பெரும் விளம்பரத்துடன் தொடங்கப்பட்டது “உதான்” என்ற விமான சேவைத் திட்டம். இத்திட்டத்தின் மூலம், செருப்பு அணிந்த சாமானியர்களும், விமானத்தில் பயணிக்கலாம் என்று பெருமையுடன் கூறியது பா.ஜ.க. அரசு.

உதான் திட்டத்திற்காக ஒன்றிய அரசு 1,089 கோடி ரூபாயை ஒதுக்கியது. நாடு முழுவதும் உதான் திட்டம் 3 கட்டங்களாக செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திட்டமிடப்பட்ட 774 வழித்தடங்களில் 403 தடங்களில் விமான சேவை கடைசி வரை தொடங்கப்படவே இல்லை என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது சி.ஏ.ஜி. அறிக்கை. மொத்தத்தில் உதான் திட்டத்தில் 774 தடங்களில் விமான சேவை வழங்க முடிவு செய்ததில் 7 சதவிகித தடங்களில் மட்டுமே விமானங்கள் இயக்கப்படுகின்றன. 93 சதவிகித தடங்களில் விமானங்கள் இயக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் சேலம், தஞ்சாவூர், ராமநாதபுரம், வேலூர் நகரங்களுக்கு உதான் திட்டத்தில் விமான சேவை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால், திட்ட மிடப்பட்ட 4 நகரங்களில் சேலத்துக்கு மட்டுமே உதான் திட்டத்தில் விமானம் இயக்கப்பட்டது. 2018 முதல் 2021 வரைக்கும் தான் விமானம் வந்தது. அதுவும் சென்னைக்கும் சேலத்துக்குமான ஒரே ஒரு விமானம் மட்டுமே வந்தது. இரண்டு ஆண்டுகளாக சேலத்துக்கு விமானம் இல்லை. அந்த விமானநிலையம் செயல்படவே இல்லை.

ராமநாதபுரம், தஞ்சாவூர், வேலூருக்கு உதான் திட்டத்தில் விமானங்கள் இயக்கப்படவே இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். உதான் திட்டத்தில் ஆயிரத்து 89 கோடி ரூபாய் செலவிட்டும் 83 வழித்தடங்களில் விமான சேவை தொடங்கப்படவில்லை என சி.ஏ.ஜி. அறிக்கை கூறியுள்ளது.

சிறு நகரங்கள் என்று அடையாளம் காணப்பட்ட வழித்தடங்களில் எந்த நிறுவனம் விமானங்களை இயக்குகிறதோ அந்நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மானியம் வழங்கியது ஒன்றிய அரசு. இப்படியாக 112 நகரங்களில் இயக்கப்பட்ட விமானங்களுக்கு மானியம் கொடுக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு மானியம் கொடுத்தார்கள். அதனை நிறுத்தினார்கள். அதன்பிறகு விமானமும் நிறுத்தப்பட்டு விட்டது. 112 நகரங்களுக்கு இயக்கப்பட்ட விமான சேவை வெறும் 54 வழித்தடங்களாக அதன்பின்னர் சுருங்கியது.

மொத்தமாக அறிவிக்கப்பட 774 வழித்தடங்களில் 720 வழித்தடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படவில்லை என்று கூறியுள்ளது சி.ஏ.ஜி. அறிக்கை... இதன்மூலம், ஒன்றிய பா.ஜ.க. அரசால் பெரும் விளம்பரத்துடன் தொடங்கப்பட்ட உதான் திட்டம் படுதோல்வியடைந்திருப்பது அம்பலமாகியுள்ளது.

அது உதான் திட்டமல்ல, உடான்ஸ் திட்டம்!

– தொடரும்

banner

Related Stories

Related Stories