முரசொலி தலையங்கம்

மணிப்பூர் வன்முறை; வெட்கக்கேடானது என்று கண்டித்தால் போதுமா?.. வார்த்தைப் புனுகு பூச முயற்சிக்கும் அமித்ஷா

‘பிரேன் சிங்கை மாற்ற முடியாது’ என்று உள்துறை அமைச்சர் சொல்வதுதான் அதை விட வெட்கக் கேடானது.

மணிப்பூர் வன்முறை; வெட்கக்கேடானது என்று கண்டித்தால் போதுமா?.. வார்த்தைப் புனுகு பூச முயற்சிக்கும் அமித்ஷா
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (12-08-2023)

ஆமோதித்தார் அமித்ஷா

மணிப்பூர் கலவரம் குறித்து இது வரை எதிர்க்கட்சிகள் என்ன சொல்லி வந்தார்களோ, அதை நாடாளுமன்றத்தில் ‘ஆம்’ என்று ஆமோதித்து விட்டார் உள்துறை அமைச்சர் அமித்ஷா!

உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் சொல்வது இதோ..

* மணிப்பூரில் நிகழும் தொடர்ச்சியான வன்முறை குறித்த எதிர்க்கட்சிகளின் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

* இனமோதல்கள் நடக்கிறது என்ற குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்கிறேன்

* வன்முறையில் நடைபெற்ற சம்பவங்கள் வெட்கக் கேடானவை.

* மே 4 ஆம் தேதி நடைபெற்ற சம்பவம் (அதாவது பெண்களை ஆடை களைந்து ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரம்) தொடர்பான வீடியோ சூலை 19 ஆம் தேதிதான் வெளியானது. அது குறித்து (மணிப்பூர்) அரசு அறிந்திருக்க வில்லை.

* சமூக ஊடகங்களில் பகிரப்படுவதற்குப் பதிலாக அந்த வீடியோ மணிப்பூர் டி.ஜி.பி.க்கு கிடைத்திருந்தால் குற்றவாளிகளை உரிய நேரத்தில் கைது செய்திருக்க முடியும்.

* பிரச்சினைக்குத் தீர்வு காண மத்திய அரசுடன் இரு சமூக மக்களும் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும்.

* அண்டை நாடான மியான்மரில் பயங்கரவாதத்துக்கு எதிராக அந்நாட்டு ராணுவ ஆட்சியாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கையைத் தொடர்ந்து குக்கி சமூக அகதிகள், மணிப்பூர் மாநில பள்ளத்தாக்கில் குடியேறி இருக்கிறார்கள். இது இப்பகுதியின் மக்கள் தொகையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.

* மைத்தி சமூகத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மணிப்பூர் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது.

* மே 3ஆம் தேதி தொடங்கிய வன்முறை இன்று வரை நடைபெற்று வருகிறது.

* வன்முறை குறைந்த போதிலும் இரு சமூகத்தினருக்கு இடையே நிலவும் கோபம் இன்னும் தணியவில்லை.

--– இவை அனைத்தும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் நாடாளுமன்றத்தில் சொன்னவை ஆகும். அதாவது, எதிர்க்கட்சிகள் எதைச் சொல்லி வருகிறார்களோ அதைத்தான் உள்துறை அமைச்சரும் வழிமொழிந்திருக்கிறார்.

மணிப்பூர் வன்முறை; வெட்கக்கேடானது என்று கண்டித்தால் போதுமா?.. வார்த்தைப் புனுகு பூச முயற்சிக்கும் அமித்ஷா

இந்த வன்முறைகளுக்குப் பொறுப்பேற்க வேண்டியது யார்? என்பதுதான் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கூடுதல் கேள்வி ஆகும். மணிப்பூரை ஆளும் பா.ஜ.க. முதலமைச்சர் பிரேன் சிங்கின் செயலற்ற தன்மைதான் இந்த வன்முறைக்குக் காரணம். தனது கட்சியின் ஆளுகைக்கு உட்பட்ட மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை ஒன்றிய பா.ஜ.க. உள்துறை அமைச்சரால் அடக்க முடியவில்லை. அதுதான் இரண்டாவது காரணம். பிரதமர், இந்தப் பிரச்சினையில் கவனமாக இல்லை. அவர் பெரும்பாலும் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்தார். பாதிக்கப்பட்ட மக்களைப் போய் பிரதமர் பார்க்கவில்லை. மணிப்பூரில் இருந்து வந்திருந்த மக்கள் பிரதிநிதிகளையும் பிரதமர் பார்க்கவில்லை. அவர்கள் இரண்டு வாரங்களாக டெல்லியில் தங்கி இருந்து திரும்பிச் சென்றார்கள். அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஒன்றிய அரசு தாமதமாகத்தான் நடத்தியது. அதற்கும் பிரதமர் வரவில்லை. மணிப்பூரில் ஒரு பிரச்சினை அரங்கேறி வருவதை பிரதமர் கவனிக்கவே இல்லை. அக்கறை செலுத்தவில்லை. அதுதான் மூன்று மாதங்களைக் கடந்தும் வன்முறை தொடரக் காரணம்.

இதைத்தான் எதிர்க்கட்சிகள் கூடுதலாகப் பேசுகிறார்கள். இதில் என்ன தவறு இருக்க முடியும்?

“வன்முறையில் நடைபெற்ற சம்பவங்கள் வெட்கக் கேடானவை. அவற்றை அரசியலாக்குவது அதை விட வெட்கக் கேடானது” என்கிறார் உள்துறை அமைச்சர். வன்முறைச் சம்பவங்களை ஏன் தடுக்கவில்லை, ஏன் நடவடிக்கை இல்லை என்று கேட்பது எப்படி அரசியலாகும்?

கொலை நடக்கலாம். ஆனால் குற்றவாளியைக் கைது செய் என்று சொல்லக் கூடாதா? கொள்ளை நடக்கலாம். ஆனால் குற்றவாளியைக் கைது செய் என்று சொல்லக் கூடாதா? பாலியல் வன்முறை நடக்கலாம். ஆனால் குற்றவாளியை கைது செய் என்று சொல்லக் கூடாதா? இதில் அரசியல் எங்கே வந்தது?

‘மணிப்பூரில் நிலைமை விரைவில் சீராகும்’ என்று சூன் 1 ஆம் தேதி பேட்டி அளித்தார் உள்துறை அமைச்சர். ஆகஸ்ட் 8 அன்றும் அதையே சொல்கிறார். ஏன் சீராகவில்லை என்று கேட்பதற்குப் பேர் அரசியலா?

மே 29–-30 மணிப்பூர் மாநிலத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இருந்த அன்றும் அந்த மாநிலத்தில் வன்முறை நடந்ததே. அப்போதும் குக்கி சமூகத்தவரது வீடுகள் எரிக்கப்பட்டதே. அதற்குப் பொறுப்பேற்க வேண்டியது பா.ஜ.க. அரசு அல்லவா? “மாநில அரசால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்” என்று குக்கி மாணவர் அமைப்பின் டெல்லி தலைவர் திமோதி சோங்து பேட்டி அளித்தார். ஆனால் பா.ஜ.க. அரசு, பா.ஜ.க.வின் முதலமைச்சரைக் காப்பாற்றுவதில் தான் கவனமாக இருந்ததே தவிர மக்களைக் காப்பதில் அக்கறை செலுத்தவில்லை.

மணிப்பூர் வன்முறை; வெட்கக்கேடானது என்று கண்டித்தால் போதுமா?.. வார்த்தைப் புனுகு பூச முயற்சிக்கும் அமித்ஷா

பள்ளத்தாக்கு மற்றும் மலை மாவட்டங்களில் இருந்த போலீஸ் பட்டாலியன்களிடம் இருந்தும், காவல் நிலையங்களில் இருந்தும் துப்பாக்கிகளை வன்முறையாளர்கள் பறித்துச் சென்றுள்ளார்கள். இப்போது வன்முறையாளர்களிடம் இருப்பது அரசாங்க துப்பாக்கி ஆகும். இது மாநில, ஒன்றிய பா.ஜ.க. அரசாங்கத்தின் கையாலாகாத்தனத்தைத்தானே காட்டுகிறது. இதனை விட உள்துறைக்கு அவமானம் இருக்க முடியுமா?

அமித்ஷா சொல்வதைப் போல, ‘வன்முறையில் நடைபெற்ற சம்பவங்கள் வெட்கக் கேடானவை’தான். அப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெற்ற போது தடுக்காததுதான் அதை விட வெட்கக் கேடானது. நடந்து போன வெட்கக் கேடுகளுக்குத் தீர்வு காணாமல் வார்த்தைப் புனுகு பூச முயற்சிக்கிறார் உள்துறை அமைச்சர். ‘வெட்கக்கேடானது’ என்று கண்டித்தால் போதுமா? ‘இது போல இங்கே நிறைய நடக்கின்றன’ என்று சொன்னாரே மணிப்பூர் முதலமைச்சர். அது வெட்கக் கேடானது இல்லையா? ‘பிரேன் சிங்கை மாற்ற முடியாது’ என்று உள்துறை அமைச்சர் சொல்வதுதான் அதை விட வெட்கக் கேடானது.

banner

Related Stories

Related Stories