முரசொலி தலையங்கம்

குழந்தைத் திருமண சனாதன காலத்தை நியாயப்படுத்தும் கூட்டம்.. வரலாற்று பாடம் எடுத்த முரசொலி தலையங்கம்!

குழந்தைத் திருமணங்களை ஆதரித்து குரல் கொடுப்பவர்களை என்ன சொல்வது?

குழந்தைத் திருமண சனாதன காலத்தை நியாயப்படுத்தும் கூட்டம்.. வரலாற்று பாடம் எடுத்த முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (15.05.2023)

எந்தக் காலத்தில் இருக்கிறார்கள்?

குழந்தைத் திருமணத்துக்கு ஆதரவாகக் கருத்துக் கூறி இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள். நானும் குழந்தைத் திருமணம்தான் செய்து கொண்டேன் என்று சொல்லி இருப்பதெல்லாம் அவர் வகிக்கும் பதவிக்குப் பெருமை சேர்க்காது. சிலநாட்களுக்கு முன்னால் சிதம்பரம் தீட்சிதர்கள் மீது எதற்காக நடவடிக்கை எடுத்தார்கள் என்று கேட்டதும் அவர்தான்.

குற்றத்தை ஏன் தடுக்கவில்லை என்று கேட்கலாம். ஆனால் குற்றத்தை ஏன் தடுத்தீர்கள் என்று கேட்கும் கூட்டமும் இன்னமும் இந்தக் காலத்தில் இருக்கத்தான் செய்கிறது.

ஆணுக்குத் திருமண வயது என்பது 21. பெண்ணுக்கு திருமண வயது 18. இது சட்டம். இதற்குக் குறைவான வயதில் திருமணத்தை யார், எந்த நோக்கத்துக்காகச் செய்தாலும் தவறுதான். சட்டமீறல்தான்.

குழந்தைத் திருமணத்தை தடை செய்யும் சட்டம் 1929ஆம் ஆண்டே நிறைவேற்றப்பட்டு விட்டது. இதன் படி பதினெட்டு வயதுக்கு உட்பட்ட பாலினத்தவர் ‘மைனர்’ என பொருள் படும். இந்த சட்டத்தின் படி 21 வயதுக்கு உட்பட்ட ஆண் திருமணம் செய்தாலும் தவறு. 21 வயதுக்கு மேற்பட்ட ஆண், 18 வயதுக்கு குறைவான பெண்ணைத் திருமணம் செய்தாலும் சட்டப்படி தவறு ஆகும்.

திருமணம் செய்து கொண்டவர் மட்டுமல்ல, திருமணத்தை நடத்துபவர், அதனை செய்து வைத்தவரும் சிறைத் தண்டனைக்கு உரியவர் ஆவார். இது குழந்தைத் திருமணம் அல்ல என்பதை அதை நடத்துபவர் நிரூபிக்க வேண்டும். இத்தகைய திருமணத்தை நீதிமன்றமே தடை விதிக்கலாம். இப்படி எல்லாம் சட்டம் இருக்கிறது.

குழந்தைத் திருமண சனாதன காலத்தை நியாயப்படுத்தும் கூட்டம்.. வரலாற்று பாடம் எடுத்த முரசொலி தலையங்கம்!

குழந்தைகளை வேலைக்கு வைப்பது சட்டப்படி குற்றம். இப்படி வேலைக்கு வைத்திருப்பவர் தண்டிக்கப்படுகிறார். அது போலத்தான் இதுவும். சிதம்பரத்தில் 13 வயது சிறுமியை 15 வயது சிறுவனுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இதனை மிகப்பெரிய குற்றமாக சமூகத்தில் விவாதப் பொருளாக ஆக்கினார் ஆளுநர். விவகாரத்தின் தொடர்புடைய குழந்தைகளுக்கு இரட்டை விரல் சோதனை நடத்தப்பட்டதாகவும் சொல்லி இருந்தார். இது தொடர்பாக அரசுக்கு அவர் ஒரு கடிதம் அனுப்பி, அரசு சார்பிலும் ஒரு பதில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு விட்டது.

‘’குழந்தைத் திருமணம் நடந்ததாகப் புகார் வந்த நிலையில் அதன் உண்மைத் தன்மையை கண்டறிந்த பிறகுதான் சிதம்பரம் நகர காவல் நிலையத்திலும் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் நான்கு வழக்குகள் பதியப்பட்டன. இதில் தொடர்புடைய 8 ஆண்கள், 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளில் இரண்டு சிறுமிகள் மட்டுமே மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை. அந்த சிறுமியர் தற்கொலை செய்ய முயன்றனர் என்பது பொய்யான தகவல். அதுபோன்ற நிகழ்வு நடந்ததாக தகவல் இல்லை. நான்கு குழந்தைத் திருமணங்கள் நடந்தது உண்மை என்பதற்கும் ஆதாரங்கள் இருந்தன என்பதால் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று காவல் துறை தலைமை இயக்குநர் அறிக்கை கொடுத்துள்ளார். இந்த உண்மை எதுவும் தெரிந்து கொள்ளாமல், தமிழ்நாடு அரசை குறை சொல்லும் போக்கில் குழந்தைத் திருமண சனாதன காலத்தை நியாயப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் சிலர்.

“குழந்தைத் திருமணம் நடைபெற்றதாக வந்த புகாரை அடுத்து இந்த வழக்கில் திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமியைப் பார்க்கச் சென்றோம். அப்போது, சிறுமியை மறைத்து வைத்து தீட்சிதர் தரப்பில் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. இதையடுத்து திருமணம் நடைபெற்றதாகக் கூறப்படும் திருமண மண்டபத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டபோது அங்கு திருமணம் நடந்ததற்கான பதிவுகள் இருந்தன. அதன் மூலமாக கடந்த 2021 ஜனவரி 25ஆம் நாளன்று அதிகாலை 4.30 முதல் 6 மணிக்கு இந்தத் திருமணத்தைச் செய்தது தெரியவந்தது.” என்று அப்போதே காவல் துறை அதிகாரி சொன்னார்.

குழந்தைத் திருமண சனாதன காலத்தை நியாயப்படுத்தும் கூட்டம்.. வரலாற்று பாடம் எடுத்த முரசொலி தலையங்கம்!

“சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் அவர்களது குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்த புகைப்பட ஆதாரம் எங்களுக்குக் கிடைத்தது. அதன்பின் சமூக நலத்துறை சார்பில் காவல் துறையிடம் புகார் அளித்தோம்,” என்று புகார் அளித்த பரங்கிப்பேட்டை சமூக நலத்துறை அதிகாரி அப்போதே சொன்னார்.

இது ஏதோ தீட்சிதர்களை குறிவைத்து நடத்தப்படவில்லை. ஏனென்றால் கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் 22 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. அதில் 4 மட்டுமே தீட்சிதர்கள் தொடர்புடையது. எனவே எந்த தனிப்பட்ட உள்நோக்கத்துடனும் இந்தச் சட்டம் அமல்படுத்தப் படவில்லை.

திருமணம் ஆன ஒரு மாதத்திலேயே இடுப்பு எலும்பு ஒடிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பெண்களின் நிலைமையை பிரிட்டிஷ் ஆட்சி ஆய்வு செய்தது. 7 வயது, 8 வயது பிள்ளைகளுக்கு திருமணம் செய்வதால் அவர்கள் இதுபோன்ற பாதிப்புகளுக்கு உள்ளாவது அறிய வந்தது. அப்போதுதான் உடலுறவுக்கு தகுதியான வயதைக் கணிப்பதற்கான ஆய்வுகள் செய்யப்பட்டன. சிறுவயதில் திருமணம் செய்து வைப்பதை புனிதமாகக் கருதிய காலமாக அது இருந்தது.

இதற்கு எதிராக 1891 ஆம் ஆண்டு சட்டமுன் வடிவு வைக்கப்பட்டு, 1929 செப்டம்பர் 28 அன்று நிறைவேற்றப்பட்டது. இதனால் மதத்தில் தலையிடுகிறது பிரிட்டிஷ் ஆட்சி என்று சில தேசிய தலைவர்களே சனாதனம் காக்கும் குரலை கொடுத்தார்கள். ‘பூப்பெய்வதற்கு முன்னால் திருமணம் செய்ய வேண்டும் என்கிறது எங்கள் மதம்’ என்று சொன்னார்கள்.

ஆனால் உண்மையான சமூக சீர்திருத்தவாதிகளான டாக்டர் முத்துலட்சுமி போன்றவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் இந்தச் சட்டத்தை ஆதரித்தார்கள். அச்சட்ட முன்வடிவை ‘ராய் சாஹிப் ஹாபிலாஸ் சார்தா’ என்னும் ராஜஸ்தான் பகுதியை சேர்ந்தவர் முன் மொழிந்தார். அதனால்தான் அச்சட்டம் ‘சார்தா சட்டம்’ என்று அறியப்பட்டு, காலப்போக்கில் சாரதாச் சட்டம் ஆகிவிட்டது.

அதன்பிறகுதான் குழந்தைத் திருமணங்கள் குறைந்தது. திருமணத்துக்குப் பிறகான பெண்கள் இறப்பும் குறைந்தது. இந்த வரலாறுகளை அறியாமல், குழந்தைத் திருமணங்களை ஆதரித்து குரல் கொடுப்பவர்களை என்ன சொல்வது?

banner

Related Stories

Related Stories