
ஈரோடு கிழக்கு தேர்தல் களத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. அடுத்து வந்த அ.தி.மு.க. வேட்பாளரைவிட 66 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார் காங்கிரசு வேட்பாளர் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
"ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று இளைஞரணிச் செயலாளர் உதயநிதி சொல்லி இருக்கிறார். அது போதாது. அறுபதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்" என்று கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னார்கள். அதுதான் நடந்துள்ளது.

'இது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் கிடைத்த வெற்றி' என்று இளங்கோவன் சொல்லி இருக்கிறார். ஒரு விதத்தில் பார்த்தால், 'தி.மு.க.வின் இமேஜை வீழ்த்துவதற்கு' ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தப் பார்த்தார். ஆனால் அவரை ஓடஓட விரட்டி இருக்கிறார்கள் அந்த தொகுதி மக்கள்.

'மேற்கு மண்டலம் எங்கள் கோட்டை' என்று சொல்லிக் கொண்டு இருந்தார் பழனிசாமி. அங்கே ஜாதி அரசியலையும் முன்னெடுக்க முனைந்தார். தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை தவறாகப் பரப்பி - தனக்கு எல்லாம் கிடைத்துவிட்டது என்ற பிம்பத்தைக் கட்டமைத்தார். அவரை ஏதோ ஆளுமைத் திறன் கொண்டவராக ஊடகங்கள் உருவகப்படுத்தும் வண்ணம் பார்த்துக் கொண்டார். ஆனால் அவை அனைத்திலும் மண் விழுந்துவிட்டது. வோட்டுதான் விழவில்லை.

முதலமைச்சரை மிகமிகத் தரக்குறைவாக தன்னிலை இழந்து விமர்சித்தார். கூட்டத்தைப் பார்த்துக் கத்தினார்; கனைத்தார். இவரது கூச்சல் எதுவும் மக்கள் காதில் விழவில்லை. ஏனென்றால், அவர் மக்களுக்காக - மக்கள் பிரச்சினையைப் பேசவில்லை. தனக்காக மட்டுமே பேசினார். தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் பேசினார். தனது பிரச்சினையை ஊர்ப் பிரச்சினையாக மாற்றப் பார்த்தார். இதனை மக்கள் உணர்ந்தே இருந்தார்கள். தெளிவாக இருந்தார்கள்.
அ.தி.மு.க.வுக்கு இருந்த இரட்டை இலை வாக்குகளைக் கூட அவரால் வாங்க முடியவில்லை. என்ன காரணம்? அவரது ஆளுமைத் திறன் கிழிந்து தொங்குவதுதான் காரணம்! அவர் தலைவராக வந்தது முதல் சந்தித்த அனைத்துத் தேர்தலிலும் தோற்றுப் போயிருக்கிறார் என்பதை ஊடகவியலாளர் பரக்கத் அலி பட்டியலிட்டுள்ளார்.

=> ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்!
2017 டிசம்பர் 21-ஆம் தேதி நடந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் டி.டி.வி. தினகரன் போட்டியிட்டார். ஆளும் அ.தி.மு.க-வின் வேட்பாளராக இரட்டை இலைச் சின்னத்தில் மதுசூதனன் நிறுத்தப்பட்டார். 40.707 வாக்குகள் வித்தியாசத்தில் மதுசூதனனை தினகரன் வீழ்த்தினார். பழனிசாமியின் முதல் அரசியல் தோல்வி இது.

=> 2019 நாடாளுமன்றத் தேர்தல்!
2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 39 தொகுதிகளை தி.மு.க கூட்டணி கைப்பற்றியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி - துணை முதல்வர் பன்னீர் தலைமையிலான அ.தி.மு.க. கூட்டணி ஒரு இடத்தில்தான் வென்றது. பா.ம.க., தே.மு.தி.க., பி.ஜே.பி., த.மா.கா. கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தும், முன்பைவிட கூடுதல் வாக்குகளை வாங்க முடியவில்லை. மாறாகத் தோல்வி அடைந்தனர்.
=> 22 தொகுதிகள் இடைத் தேர்தல் !
2019 நாடாளுமன்றத் தேர்தலோடு 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் 21 தொகுதிகள் அ.தி.மு.க. வசம் இருந்தவை ஆகும். தேர்தலில் தி.மு.க. 13 தொகுதிகளைக் கைப்பற்றியது. அ.தி.மு.க. 9 தொகுதிகளில் தான் வெற்றி பெற முடிந்தது. 11 தொகுதிகளை பழனிசாமி பறிகொடுத்தார்.

=> ஊரக உள்ளாட்சித் தேர்தல்!
2019 டிசம்பர் மாதம் 9 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. மொத்தமுள்ள 513 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களில் தி.மு.க. 243 இடங்களையும் அ.தி.மு.க. 214 இடங்களையும் பிடித்தது. மொத்தமுள்ள 5,087 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களில் தி.மு.க. 2,100 இடங்களைப் பிடித்தது. அ.தி.மு.க.வுக்கு 1,781 இடங்கள் கிடைத்தது. தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் பிடித்த இடங்களையும் கணக்கிட்டால் இந்த எண்ணிக்கை இன்னும் கூடும்.
=> 2021 சட்டமன்ற தேர்தல்!
2021ல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. தி.மு.க. கூட்டணி 159 இடங்களையும் அ.தி.மு.க. கூட்டணி 75 தொகுதிகளையும் கைப்பற்றியது.

=> ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் !
9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2021 அக்டோபரில் தேர்தல் நடைபெற்றது. மாவட்ட கவுன்சில் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சில்களில் பெரும்பான்மை இடங்களை தி.மு.க. கைப்பற்றியது.
=> நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்!
2022 பிப்ரவரியில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என அனைத்து இடங்களையும் வாரிச் சுருட்டியது தி.மு.க. கூட்டணி.

=> ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் !
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்களால் தென்னரசு தேர்வு செய்யப்பட்டார். இதனால், பன்னீர்செல்வத்தின் வேட்பாளர் வாபஸ் பெற்றார்.
ஈரோடு கிழக்கில் தோற்றதன்மூலம் எட்டாவது தோல்வியைச் சந்தித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பொன்விழாவைக் கொண்டாடும் அ.தி.மு.க.வுக்கு தொடர்ச்சியாக எட்டு தோல்விகளைப் பெற்றுக் கொடுத்த பெருமை பழனிசாமியையே சேரும்.
அனைத்தையும் இழந்தவராக - இழந்து வருபவராக பழனிசாமி இருக்கிறார். அவரைப் போல 'அது இருக்கா,இது இருக்கா' என்று கேட்கமாட்டோம். இனியாவது பழனிசாமி, நா காக்க!








