முரசொலி தலையங்கம்

“பா.ஜ.க ஆட்சியார்களுக்கு எரிச்சலைத் தருகிறதா அரசியலமைப்புச் சட்டம் ?” : சனாதன கும்பலுக்கு முரசொலி பதிலடி!

இந்தி பேசாத மாநிலங்களுக்கு கடிதம் அனுப்பும் போது ஆங்கில மொழிபெயர்ப்பும் அனுப்பவேண்டும் என்றும் சொல்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். இதனை இவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“பா.ஜ.க ஆட்சியார்களுக்கு எரிச்சலைத் தருகிறதா அரசியலமைப்புச் சட்டம் ?” : சனாதன கும்பலுக்கு முரசொலி பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அரசியலமைப்புச் சட்ட நாள் அன்றும் இன்றும் - 2

இன்றைய பா.ஜ.க ஆட்சியார்களுக்கும் - சனாதன சிந்தனையாளர்களுக்கும் பெரிய இடைஞ்சலாக இருப்பது இந்திய அரசியலைப்புச் சட்டம் தான்.

''We, the people of India, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its Citizens" என்ற சொல் தான் இவர்களுக்கு உறுத்துகிறது.

சட்டம் 14-18 : சமத்துவ உரிமைகள்

சட்டம் 19-22 : சுதந்திரத்துக்கான உரிமைகள்

சட்டம் 23-24 : சுரண்டலுக்கு எதிரான உரிமை

சட்டம் 25-28: சமய சுதந்திரம்

சட்டம் 29-30: கல்வி,பண்பாட்டு உரிமைகள்

சட்டம் 32-35: அரசியலமைப்பு சட்டவழி உரிமைகள் - இவை தான் பலருக்கும் எரிச்சலைத் தருகிறது.

“பா.ஜ.க ஆட்சியார்களுக்கு எரிச்சலைத் தருகிறதா அரசியலமைப்புச் சட்டம் ?” : சனாதன கும்பலுக்கு முரசொலி பதிலடி!

எந்தவொரு குடிமகனையும் சாதி, சமயம், இனம், பால், பிறப்பிட வேறுபாடுகளைம் காரணம் காட்டி வேறுபாடாக நடத்தக் கூடாது என்றும், அனைவர்க்கும் அரசுப் பணியிடங்களில் சம வாய்ப்பு தரப்பட வேண்டும் என்றும், வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும், தீண்டாமையைக் கடைப்பிடிப்பவர் தண்டனைக்குரியவர் என்றும், பேச்சுச் சுதந்திரம் உண்டு என்றும், ஆயுதங்கள் இல்லாமல் அமைதியாகக் கூடும் உரிமை உண்டு என்றும், தனிமனிதனின் சுதந்திரத்தைப் பறிக்க முடியாது என்றும், அவரவர் விரும்பிய மதத்தை பின்பற்றலாம் என்றும், சிறுபான்மையினர் அவர்களுக்கான கல்வி நிலையங்களை உருவாக்கிக் கொள்ளலாம் என்றும், இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்றும், இந்தியா என்பது ஒரு யூனியன் என்றும், இந்தியுடன் ஆங்கிலமும் அலுவல் மொழி, இந்தி பேசாத மாநிலங்களுக்கு கடிதம் அனுப்பும் போது ஆங்கில மொழிபெயர்ப்பும் அனுப்பவேண்டும் என்றும் சொல்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். இதனை இவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“பா.ஜ.க ஆட்சியார்களுக்கு எரிச்சலைத் தருகிறதா அரசியலமைப்புச் சட்டம் ?” : சனாதன கும்பலுக்கு முரசொலி பதிலடி!

மாநில உரிமைகள் மீறப்படும் போதும், சமூகநீதிக்கு ஆபத்து வரும் போதும், மதச்சார்பின்மைக்கு குந்தகம் ஏற்படும் போதும், 'இதனை அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது' என்று நாம் சொல்கிறோம். எனவே, இந்த அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்றினால் என்ன என்று இவர்கள் சிந்திக்கிறார்கள்.

அதனால் தான், அரசியல் சட்ட நாளில், ரிக் வேதமும் பாரத லோகதந்திரிக பாரம்பரியமும்- சபாவும் சமிதியும்: பாரத லோகதந்திரிய பாரம்பரியத்தை ஆராய்தல் - கௌடில்யரின் அர்த்த சாஸ்திரமும் பாரத லோகதந்திரமும் - கல்வெட்டு ஆதாரங்களும் லோகந்திரிக பாரம்பரியமும் - காப்பஞ்சாயத்துகளும் லோகதந்திரிக பாரம்பரியமும் - என்று பேசுவது இந்திய அரசியல் சட்ட நெறிமுறைகளைச் சிதைக்கும் தந்திரம் ஆகும்.

“பா.ஜ.க ஆட்சியார்களுக்கு எரிச்சலைத் தருகிறதா அரசியலமைப்புச் சட்டம் ?” : சனாதன கும்பலுக்கு முரசொலி பதிலடி!

அனைவரும் சமம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம். அனைவரும் சமமில்லை என்பது தான் ரிக்வேதம், மனு, அர்த்தசாஸ்திரம், சபா, சமிதி ஆகியவை ஆகும்.

இந்திய வரலாற்றின் தலைசிறந்த ஆசிரியர்களில் ஒருவரான ஆர்.எஸ்.சர்மா இது குறித்து விரிவாக எழுது இருக்கிறார். கி.மு.5 ஆம் நூற்றாண்டு முதல் அரசாங்க அதிகாரத்தின் வளர்ச்சியில் சாதி பெரிதாக இடம்பெற்றிருக்கிறது என்று எழுதி இருக்கிறார். வருணங்கள் உருவாகவும், அரசாங்கங்கள் என்ற அமைப்பு உருவாகவும் சாதிக்கு மேற்போக்கான தொடர்பு இருப்பதாகச் சொல்கிறார்.

''தர்மசூத்திரங்கள், அர்த்தசாஸ்திரம் தொடங்கி முக்கிய நூல்கள் எல்லாவற்றிலும் வருணங்களை அடிப்படையாகக் கொண்ட சமுதாயக் கட்டுக்கோப்பை நிலைநாட்டுவதே அரசாங்கத் தலைவனின் தலையாய கடமை என வரையறுக்கப்பட்டுள்ளது'' என்றும், '' தர்மத்தை நிலை நாட்டுபவர் என்ற காரணத்தால் அரசன், நான்கு வர்ணங்கள் கொண்ட சாதி அமைப்பைப் பாதுகாக்கக் கடமைப்பட்டவன் என்று கெளடில்யம் கூறும்" என்றும் ஆர்.எஸ்.சர்மா எழுதுகிறார்.

“பா.ஜ.க ஆட்சியார்களுக்கு எரிச்சலைத் தருகிறதா அரசியலமைப்புச் சட்டம் ?” : சனாதன கும்பலுக்கு முரசொலி பதிலடி!

''ஒருவனுடைய சாதி அல்லது சமூக வகுப்புத் தொடர்பான கடமைகள் ( சாதி தர்மம், வர்ண தர்மம்) அரசாங்க அதிகாரத்தை ( கஷாத்திர தர்மத்தை) பொறுத்தது" என்று சாந்தி பருவத்தில் சொல்லப்பட்டதை ஆர்.எஸ்.சர்மா எடுத்துக் காட்டுகிறார். சாதிகள் ஒன்றோடொன்று கலந்து விடாமல், தனித்தனியாக அவற்றின் தூய்மை கெடாது இருந்தால் தான் முடியாட்சி செழிக்கும், கொழிக்கும், திளைக்கும் என்று மனு அளித்துள்ள உறுதிமொழியைச் சுட்டிக் காட்டுகிறார். ஏதாவது ஒரு வழியில் வருணாசிரம முறையோடு அரசனுடைய கடமைகள் எல்லாம் இணைந்தது என்பது மனுவின் கருத்து.

'பாதை தவறிவிட்ட ஒரு சாதியை அரசன் தண்டிக்காவிட்டால், உலகில் உண்டாக்கப்பட்ட உயிரினங்கள் அழிந்து போகும்' என்று நாரதர் ஸ்மிருதி சொல்வதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார். முடியாட்சியும் வர்ணாசிரம முறையும் இரண்டறக் கலந்தது என்பதும், நான்கு வருணம் இல்லை என்றால் முடியாட்சியும் இல்லை என்றும் சாந்தி பருவம் சொல்வதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

வர்ணம் அல்லது சாதி முறை நிலவச் செய்வது அரசனின் பொறுப்பு என்று தர்ம சாஸ்திரம் வற்புறுத்துவதற்கு கல்வெட்டிலும் ஆதாரம் இருப்பதாகச் சொல்கிறார். சட்டத் தொகுப்புகள் சட்ட நீதி பேசாமல் சாதி நீதி பேசியதையும் அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார். ( பழங்கால இந்தியாவில் அரசியல் கொள்கைகள் நிலையங்கள் - சில தோற்றங்கள் என்ற நூல்)

“பா.ஜ.க ஆட்சியார்களுக்கு எரிச்சலைத் தருகிறதா அரசியலமைப்புச் சட்டம் ?” : சனாதன கும்பலுக்கு முரசொலி பதிலடி!

அரசு, சட்டம், அரசியல், வர்ணம், மதம் ஆகியவை அனைத்தும் ஒன்றாக இருந்த காலம் அது. அதனை மாற்றி அமைத்தது தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆகும். மீண்டும் பழைய காலத்தை - இந்தியப் பண்பாடு, வேதகாலப் புனிதம் என்று கட்டமைக்கத் துடிக்கிறார்கள்.

இந்தியாவைக் காப்பாற்றுவதற்கான இரும்புச் சங்கிலியாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் அண்ணல் அம்பேத்கர் அவர்களால் பிணைக்கப்பட்டது. இந்த சங்கிலியை பலவீனப்படுத்தும் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

முரசொலி தலையங்கம். 29.11.2022

    Related Stories

    Related Stories