முரசொலி தலையங்கம்

தமிழ்மொழிக்கு செய்த பாவத்தை கழுவ காசியில் கூடியுள்ள கூட்டம்.. வெட்கம்! மகாவெட்கம்!!: முரசொலி கடும் தாக்கு

இன்னமும் 'பாரத் மாதாகீ ஜே' என்பதை மாற்றத் தயாராக இல்லாதவர்கள் தமிழுக்குச் சங்கமம் நடத்துகிறார்களாம்!

தமிழ்மொழிக்கு செய்த பாவத்தை கழுவ காசியில் கூடியுள்ள கூட்டம்.. வெட்கம்! மகாவெட்கம்!!: முரசொலி கடும் தாக்கு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (21-11-2022)

காசிக்குப் போனவரே! கவனியும்!

காசிக்குப் போயிருக்கிறார்கள் சிலர்! எதற்காகவாம்? பாவத்தைக் கழுவவா? ஆமாம்! தமிழுக்கு இதுவரைச் செய்த பாவத்தைக் கழுவ வேண்டாமா? அதற்காகவாக இருக்கலாம்!பல நூறு ஆண்டு காலத் துரோகங்களை ஒரு மாத காலத்தில் கழுவ முடியுமா என்ன? காசியில் எத்தனை ஆண்டுகள் தமிழ்ச் சங்கமம் நடத்தினாலும் கழுவ முடியாத பாவங்கள் செய்த கூட்டமல்லவா அது!

நடுநாயகமாக இந்தியாவின் தலைமை அமைச்சர் நரேந்திரமோடி அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். ''தமிழ்நாட்டின் பாரம்பர்ய வழக்கப்படி பிரதமர் அவர்களுக்கு அங்கவஸ்திரம் அணிவிக்கப்படுகிறது'' என்று அறிவிக்கிறார் தமிழகத்தின் புகழ்பெற்ற பேச்சாளர். தமிழ்ப் பாடல்களை எல்லாம் மனப்பாடமாகச் சொல்லிச் சொல்லிக் கைதட்டல் வாங்கி - எத்தனையோ பொன்னாடைகளை - எத்தனையோ மேடைகளில் பெற்றுக் கொண்ட அந்தப் பேச்சாளர் வாயில் 'அங்கவஸ்திரம்' தான் நுழைகிறது. இதுதான் அவர்களது தமிழ்ப்பற்று! இவர்கள் தான் தமிழ்ச் சங்கமம் கூட்டுகிறார்கள்!

நாடாளுமன்ற அலுவல் மொழி குறித்து ஆராய அமித்ஷா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் என்ன சொல்லப்பட்டுள்ளது. அனைத்தும் இந்தி, இந்தியைத் தவிர வேறில்லை என்று! இவர்கள் தான் காசியில் தமிழ்ச் சங்கமம் கூட்டுகிறார்கள்!

தமிழ்மொழிக்கு செய்த பாவத்தை கழுவ காசியில் கூடியுள்ள கூட்டம்.. வெட்கம்! மகாவெட்கம்!!: முரசொலி கடும் தாக்கு

புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதம் குறித்து வீசப்பட்டுள்ள சாமரத்தை படித்துப் பாருங்கள்...

''இந்தியச் செவ்வியல் / செம்மொழிகளின் முக்கியத்துவம், தொடர்பு மற்றும் அழகியல் போன்ற காரணிகள் புறந்தள்ளப் பட்டுவிடக் கூடாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது வரைவில் குறிப்பிடப் பட்டுள்ளதும் மற்றுமொரு முக்கியமான நவீன மொழியுமான சமஸ்கிருதம் - ஒன்றுகூட்டப்பட்ட கிரேக்க மற்றும் லத்தீன் மொழிகளின் இலக்கியங்களைக் காட்டிலும் செறிவு மிக்கதாகவும், கணிதம், தத்துவம், இலக்கணம், இசை, அரசியல், மருத்துவம், கட்டிடக் கலை, உலோகவியல், நாடகம், கவிதை, கதை சொல்லல் மற்றும் பிற ( சமஸ்கிருத ஞான மரபு என்றறியப்பட்ட) ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகபல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களாலும், மதச்சார்புடையவர்களாலும் வாழ்வின் பலதரப்பட்ட சமூகப் பொருளாதார மற்றும் வாழ்வியல் முறைகளைச் சார்ந்த எழுத்தாளர்களால் எழுதப்பட்ட ஏராளமான செல்வங்களையும் உள்ளடக்கி உள்ளது.

எனவே சமஸ்கிருதம், மும்மொழிப் பாடத்திட்டத்தின் ஒரு மொழியாகப் பள்ளிக் கல்வித் திட்டத்தின் எல்லா நிலைகளிலும், கல்லூரிகளிலும் ஒரு முக்கியமான வளமூட்டக் கூடிய விருப்பப் பாடமாக வழங்கப்படும்.

தமிழ்மொழிக்கு செய்த பாவத்தை கழுவ காசியில் கூடியுள்ள கூட்டம்.. வெட்கம்! மகாவெட்கம்!!: முரசொலி கடும் தாக்கு

இந்த மொழிச் சுவையுடனும், அனுபவப் பூர்வமாகவும் மட்டுமல்லாமல் தற்காலத்திற்குப் பொருந்தும் வகையில் சமஸ்கிருத ஞான மரபுகளின் வழியில் முக்கியமாக ஒலிப்பு மற்றும் உச்சரிப்பு முறைகளின் மூலமாகக்கற்பிக்கப்படும். ஆரம்ப மற்றும் இடைநிலை சமஸ்கிருதப் பாடப் புத்தகங்கள் எளிய தரமான சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டு, மாணவர்கள் உண்மையிலேயே அனுபவித்துக் கற்கும் வண்ணம் சமஸ்க்ரிதமொழியின் மூலமே கற்பிக்கப்படும்" என்று புதிய கல்விக் கொள்கையில் இருக்கிறது. இவர்கள் தான் காசியில் தமிழுக்கு சங்கமம் கூட்டுகிறார்கள்!

2017- 2020 ஆகிய மூன்று ஆண்டுகளில் சமஸ்கிருதத்தை வளர்க்க 643 கோடி ரூபாயைச் செலவு செய்திருக்கிறது பாஜக அரசு. இது தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஒரியா ஆகிய மொழிகளுக்கு பாஜக அரசு செலவு செய்ததை விட 29 மடங்கு அதிகம் என்பதை விளக்கும் புள்ளிவிபரங்கள் 2020 ஆம் ஆண்டு ஒன்றிய பண்பாட்டு அமைச்சரக அறிக்கை மூலமாகத் தெரிய வந்ததே!

சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கப்பட்ட தொலை 643 கோடி. தமிழுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 23 கோடி ரூபாய்க்கு 6 லட்சம் குறைவு! இவர்கள் தான் தமிழ்ச் சங்கமம் நடத்துகிறார்கள்!

'தமிழ்நாட்டில் இருந்து ஐந்து பேர் வெற்றி பெற்று வந்தால் போதும்' என்று அமித்ஷா கட்டளையிட்டிருக்கிறாராம். அதற்குத் தான் இந்தப் பாடும்,பாட்டும்!

அதற்காக இங்கிருந்து ஆட்களை - உத்தரப்பிரதேசம் அழைத்துப் போகத் தேவையில்லை. எதற்காக காதைச் சுற்றி மூக்கைத் தொடுகிறீர்கள்?

* உலகப் பொதுமறையான திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படுகிறது.

* தமிழ் உள்ளிட்ட மாநில ஆட்சி மொழிகள் அனைத்தும் ஒன்றிய அரசின் ஆட்சி மொழிகள் ஆக்கப்படுகிறது.

* ஒன்றியப் பணிகளுக்கான எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகள் அனைத்தும் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்படும்.

* ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சி ஆக்கப்படும்.

* சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் ஏற்கப்படும்.

* கேந்திரிய வித்தியாலயா முதல் ஐஐடி வரையிலான நிறுவனங்களில் தமிழும் பயிற்று மொழி ஆக்கப்படும்.

- ஆகிய ஆறு அரசாணகளில் கையெழுத்துப் போட்டாலே போதும் - தனித்து நின்றால் பிணைத்தொகையாவது தப்பும்.

தமிழ்மொழிக்கு செய்த பாவத்தை கழுவ காசியில் கூடியுள்ள கூட்டம்.. வெட்கம்! மகாவெட்கம்!!: முரசொலி கடும் தாக்கு

காசிக்கு 'இராமசாமி'யாகப் போனவர் தான் - எங்களுக்குப் 'பெரியாராக'த் திரும்பி வந்தார் என்பதையெல்லாம் இவர்கள் அறியமாட்டார்கள்!

இவர்கள் சொல்லும் பாரதி கூட, காசிக்குப் போனபிறகு தான் சீர்திருத்தம் பேசத் தொடங்கினார் என்று அவர்தம் மனைவி செல்லம்மாள் பாரதி எழுதி இருக்கிறார். 'பாரதியார் சரித்திரம்' என்ற நூலில், ''... காசியில் அந்தணருக்கேற்ற ஆச்சாரமின்றி எல்லா ஜாதியாருடனும் கைகோர்த்துக் கொண்டு உலாவுவதும், நியம நிஷ்டையில்லாது எப்போதும் கோட்டும் சட்டையும் தலையில் முண்டாசும், காலில் பூட்ஸும் அணிந்திருந்தும் அலைந்தார்... இத்தனை அநாசாரத்தோடு அந்தணருக்கு அத்யாவசியமான குடுமியை -சிகையை - எடுத்துவிட்டு வங்காளி போல கிராப் செய்து கொண்டு வகிடு எடுத்து வாரி விட்டு, மீசையையும் வைத்துக் கொண்டு காட்சி அளித்தார்'' என்று செல்லம்மாள் பாரதி எழுதி இருக்கிறார். 'இதனால் வீட்டில் சில காலம் தனியாக உட்கார வைத்து சாப்பாடு போட்டு வந்தார்கள்' என்றும் எழுதி இருக்கிறார். இதை எல்லாம் அறிந்து பயந்து போய், பாரதிக்கு செல்லம்மாள் கடிதம் எழுதினார். அதற்கு பதில் கடிதம் எழுதிய பாரதி, 'நீ இந்த மாதிரிக் கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றாகப் படித்து வா' என்று எழுதினார்.

120 ஆண்டுகள் கழிந்த பிறகும் இவர்கள் மாறவில்லை. 'அங்கவஸ்திரம்' தான் போடுகிறார்கள். இன்னமும் 'பாரத் மாதாகீ ஜே' என்பதை மாற்றத் தயாராக இல்லாதவர்கள் தமிழுக்குச் சங்கமம் நடத்துகிறார்களாம்! இதைத்தான் 'வெட்கம்! வெட்கம்!! மகாவெட்கம்!!!' என்கிறான் பாரதி!

banner

Related Stories

Related Stories