முரசொலி தலையங்கம்

பெண் சமூகத்தில் புரட்சிகளை உருவாக்க போகும் புதுமைப் பெண் திட்டம்.. பட்டொளி வீசிப் பறக்கும் திராவிட மாடல்

'புதுமைப் பெண்' திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறார் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள். இது பெண் சமூகத்தில் பல்வேறு புரட்சிகளை உருவாக்கப் போகும் திட்டம் ஆகும்.

பெண் சமூகத்தில் புரட்சிகளை உருவாக்க போகும் புதுமைப் பெண் திட்டம்.. பட்டொளி வீசிப் பறக்கும் திராவிட மாடல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (செப்.07, 2022) தலையங்கம் வருமாறு:

வறுமை காரணமாக தனது குழந்தை இராமாமிர்தத்தை வளர்க்க முடியாமல் - ஐந்து வயதில் - பத்து ரூபாய் பணத்துக்கு தனது சொந்தத் தாயால் இன்னொரு பெண்ணுக்கு விற்கப்பட்டவர் தான் மூவலூர் இராமாமிர்தம் அவர்கள். இன்று அவர் பெயரால் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கி இருக்கிறார் திராவிட மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!

'புதுமைப் பெண்' திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறார் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள். இது பெண் சமூகத்தில் பல்வேறு புரட்சிகளை உருவாக்கப் போகும் திட்டம் ஆகும். அதனால் தான், ''எனது வாழ்வில் மகிழ்ச்சிக்குரிய மகத்தான நாள் என்று நான் நினைக்கத் தக்க வகையில் மிக முக்கியமான நாளாக இது அமைந்துள்ளது." என்றும் முதலமைச்சர் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

''கல்வி எனும் நீரோடை ஏழை, பணக்காரர் - உயர்ந்தவர், தாழ்ந்தவர் - உயர்ந்த ஜாதி - தாழ்ந்தஜாதி - கிராமம் ,நகரம் - என்ற வேறுபாடும் மாறுபாடும் இல்லாமல் அனைவர்க்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகத் தான் 100 ஆண்டுகளுக்கு முன்னால் நீதிக்கட்சி உருவானது. திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை என்பது இதுதான்.

உயர்ஜாதியைச் சேர்ந்த பணக்காரர்கள் மட்டுமே படிக்க முடியும். அதுவும் ஆண்கள் மட்டும் தான் படிக்க முடியும் என்று இருந்தது. அத்தகைய காலத்தில் இடஒதுக்கீட்டை உருவாக்கி - பள்ளிகளையும் உருவாக்கியது நீதிக்கட்சி.

பெண் சமூகத்தில் புரட்சிகளை உருவாக்க போகும் புதுமைப் பெண் திட்டம்.. பட்டொளி வீசிப் பறக்கும் திராவிட மாடல்

ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் படிக்கலாம் என்ற நிலையை திராவிட இயக்கம் உருவாக்கியது. அந்த சமூகநீதியை அரசியல் ரீதியாகக் காப்பாற்றியவர் தந்தை பெரியார் அவர்கள். ஆட்சி ரீதியாகக் காத்தவர் பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் ஆவார்கள். அவர்களது வழித்தடத்தில் நமது திராவிட மாடல் அரசு அமைந்துள்ளது. இன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான பெண்கள் - இக்கல்லூரியில் படிக்கிறீர்கள் என்றால் அது திராவிட இயக்கத்தின் பெண்ணுரிமைப் போராட்டங்களால் கிடைத்தது ஆகும்.

அந்த வரிசையில் கல்வி - சமூகநீதி - பெண்ணுரிமைத் திட்டங்களை அதிகளவில் செயல்படுத்தி வருகிறோம்.

உயர்கல்வியிலும் - பள்ளிக் கல்வியிலும் - சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையிலும் தமிழக அரசு செயல்படுத்தி வரும் முன்னுரிமைத் திட்டங்களின் மூலமாக தமிழ்ச்சமுதாயத்தின் மேம்பாடு என்பது பெரும் பாய்ச்சலை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறது" என்று சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிந்தனையின் உதித்த புதுமையான திட்டம் தான் 'புதுமைப் பெண்' திட்டமாகும்.

டெல்லி முதலமைச்சரும் போராளியுமான மாண்புமிகு அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை அழைத்து வந்து இந்த திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள். 'இது இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டிய திட்டம் என்று டெல்லி முதலமைச்சர் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

6 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் அரசு பள்ளியில் பயின்று உயர் கல்லூரிக் கல்லூரிக் கல்விக்கு வரும் மகளிருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகத்தான திட்டம் இது. பொதுவாகவே பெண் கல்விக்குத் தடையாக, பணம் தான் இருக்கிறது. 'உனக்கு படிக்க செலவு பண்ற காசை வைத்து கல்யாணத்தை பண்ணி அனுப்பிடுவோம்' என்று ஏழைக்குடும்பங்களில் குரல்கள் எழும். 'உன்னை படிக்க வெச்சு எங்களுக்கு என்ன பயன்?' என்ற சலிப்பும் எழும். இந்தக் குரல்களை ஒடுக்கும் திட்டம் தான் இது.

தொடக்கத்தில் கட்டும் கல்லூரி கட்டணத்தை குடும்பங்கள் எப்படியாவது கட்டி விடுவார்கள். ஆனால் மாதா மாதம் செலவு செய்வது தான் சிரமம் தருவதாக அமையும். இந்த சிரமங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது இந்த திட்டம்.

பெண் சமூகத்தில் புரட்சிகளை உருவாக்க போகும் புதுமைப் பெண் திட்டம்.. பட்டொளி வீசிப் பறக்கும் திராவிட மாடல்

புத்தகம் வாங்குவது, விடுதியில் தங்குவது ஆகியவை மாதம் தோறும் பெற்றோர் எதிர்கொள்ளும் நிதிச்சுமைகளாக உள்ளன. அந்த நிதிச்சுமையை அரசு தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு விட்டது.

பேருந்துகளில் மகளிர் பயணம் செய்வதற்கு கட்டணமில்லை என்று ஏற்கனவே பெரிய பாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இறக்கி வைத்து விட்டார்கள். அடுத்ததாக மாதம் தோறும் ஏற்படும் செலவுகளுக்கும் பணம் கொடுத்துவிட்டார்கள். இனி, பெண் கல்வி என்பது தடையற்ற நீரோடையாக ஆகும்.

சிறுமியர் திருமணம் என்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். பெண் கல்வி என்பது உயரத்தைத் தொடும். இதன் மூலமாக பெண்கள் வேலைக்குச் செல்வது, சொந்தக் காலில் நிற்பதும் அதிகமாகும். இதன் மூலமாக பெண்களின் சமூகப் பங்களிப்பும் அதிகமாகும்.

சுயமரியாதைத் திருமணம், விதவை மறுமணம், பால்ய விவாகம் எதிர்ப்பு, சாதி மறுப்புத் திருமணங்கள், தேவதாசி முறை ஒழிப்பு, இந்தித் திணிப்பு எதிர்ப்பு, தமிழ்ப் பாதுகாப்பு, பெண்ணுரிமை - ஆகிய பல்வேறு தளங்களில் இயங்கியவர் மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அவர்கள். 1925 ஆம் ஆண்டு மாயவரத்தில் இத்தகைய கொள்கைக்காக தனி மாநாடு நடத்தியவர் அவர். அப்போது காங்கிரசு கட்சியில் இருந்த பெரியாரையும் திரு.வி.க.வையும் அழைத்து வந்து பேச வைத்தவர். திராவிடர் கழகம் தொடங்கிய போதும், திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய போதும் உடனிருந்தவர்.

1956 கழக மாநாட்டில் மூவலூர் மூதாட்டிக்கு விருது வழங்கினார் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். அந்த மூதாட்டில் இறந்த போது கண்ணீர் கட்டுரை எழுதியவர் கலைஞர் அவர்கள். 1989 ஆம் ஆண்டு திருமண உதவித் திட்டத்துக்கு மூவலூர் ராமாமிர்தம் பெயரைச் சூட்டியவர் முத்தமிழறிஞர் அவர்கள். இப்போது 'புதுமைப் பெண்' திட்டத்துக்கு மூவலூரார் பெயரைச் சூட்டி இருக்கிறார் திராவிட மாடல் முதலமைச்சர் அவர்கள்.

மூவலூர் மூதாட்டி விலைக்கு தனது தாயால் வளர்க்க முடியாமல் விற்கப்பட்டவர். வறுமையும், பெண்ணடிமைத்தனமும் எந்தளவுக்கு இந்த சமூகத்தில் இருந்துள்ளது என்பதற்கு உதாரணம் இது. இதனை மாற்றி அனைத்துப் பெண்களுக்கும் கல்லூரி வாசலை திறந்து வைத்தது திராவிட இயக்கம். அதுவும் பொருளாதாரத் தன்னிறைவு கொண்டவர்களாக மாற்ற நினைக்கிறார் முதலமைச்சர்.

தினந்தோறும் திராவிட மாடல் திக்கெட்டும் பட்டொளி வீசிப் பறக்கிறது!

banner

Related Stories

Related Stories