முரசொலி தலையங்கம்

“எழுத்து ஆயுதத்தை எய்ததால் கிடைத்த விடுதலை.. வீர சுதந்திரம் வேண்டி நின்றார்கள் நம் தமிழர்கள்” - முரசொலி!

அன்றைய மேடைகள் அரசியல் உரிமையற்ற மனிதர்களை, அரசியல் உரிமை பெற்றவர்களாக மாற்றியது. அதனால் கிடைத்ததே இந்த நாட்டு விடுதலை ஆகும்!

“எழுத்து ஆயுதத்தை எய்ததால் கிடைத்த விடுதலை.. வீர சுதந்திரம் வேண்டி நின்றார்கள் நம் தமிழர்கள்” - முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வீர சுதந்திரம் வேண்டி நின்றோம்!

“ஆறடி உயரமடா என் கண்ணே பூலி அர்ச்சுனன் போல் வீரனடா” ... என்று புகழப்பட்ட பூலித்தேவனும் 'எட்டுத் திசையும் பதினாறு கோணமும் எழுகடலும் வெட்டிச்சயம் கொண்ட கட்டபொம் மேந்திரன் பேரு சொன்னால், காடை பதுங்கும் கருவாலி வட்டமிட்டாடி வரும் சிட்டில் பறக்கும் அய்யோ பாஞ்சால நாடு தெரு வெங்குமே”... என்று போற்றப்பட்ட கட்டபொம்மனும் “கருமலையிலே கல்லெடுத்துக் காளையார் கோவில் உண்டு பண்ணி மதுரைக் கோபூரம் தெரியக்கட்டின மருது வாரதைப்பாருங்கடி" .. என்று கொண்டாடப்பட்ட மருது சகோதரர்களும்

இப்படி கான்சாகிப் மருதநாயகமும். வேலுநாச்சியாரும், தீரன் சின்னமலையும், வீரன் சுந்தரலிங்கமும், அழகுமுத்துக்கோனும்... இன்னும் இன்னும் எண்ணற்ற தியாகிகள் தங்களது தேக்குமரத்தேகத்தை இந்திய விடுதலைப் போராட்டத் தீ குண்டத்துக்கு விறகாக ஆக்கியதால் கிடைத்ததே இன்று நாம் கொண்டாடும் நாட்டு விடுதலை ஆகும்!

“ஆங்கிலம் ஒன்றையே கற்றார் அதற்கு ஆவியோடு நாக்கினையும் விற்றார் தாங்களும் அந்நியரானார் இன்பத் தமிழின் தொடர்பற்றுப் போனார் ”... என்று மாயூரம் வேதநாயகரும் “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது சத்தியத்தின் நீத்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்!

குதிரையில்லை யானையில்லை கொல்லும் ஆசையில்லையே எதிரியென்று யாருமில்லை எற்றும் ஆசையில்லதாய்.. காந்தியென்ற சாந்தமூர்த்தி தேர்ந்து காட்டும் செந்நெறி மாந்தருக்குள் தீமைகூன்ற வாய்ந்த தெய்வமார்க்கமே!" .. என்று நாமக்கல் கவிஞரும் இப்படி தேசியக்கவி பாரதியும், பொருளாதார யுத்தம் செய்த வ.உ.சி.யும், “சிவம் பேசினால் சவம் எழும்' என்று போற்றப்பட்ட சுப்பிரமணிய சிவாவும் பிரிட்டிஷ் எதிர்ப்போடு சேர்த்து தமிழ் எழுச்சியையும் மூட்டிக் கொண்டே இருந்ததால் கிடைத்ததே இன்று நாம் கொண்டாடும் நாட்டு விடுதலை ஆகும்!

நாடக மேடையில் நடித்துக் கொண்டே இருப்பார் விசுவநாத தாஸ் அவர் கள். திடீரென பாடத் தொடங்குவார். “கொக்கு பறக்குடிதடி பாப்பா வெள்ளைக் கொக்கு பறக்குதடி பாப்பா" என்று பாடுவார். "வெள்ளைக் கொக்கு' என்றதும் மக்கள் கைதட்டுவார்கள். "மக்களை ஏமாற்றும் கொக்கு.. அதன் மமதை அழியவேண்டும் பாப்பா' என்பார். நாடக மேடைகள் இப்படி அதிர்ந்ததால் கிடைத்த நாட்டு விடுதலை ஆகும் இது!

'வள்ளி திருமணம்' என்றொரு திரைப்படம். வள்ளியை மயக்குவதற்காக வளையல்காரராக வலம் வருவார் முருகன். 'வளையல் வாங்கலையோ வளையல் அம்மம்மா வளையல் வாங்கலையோ வளையல் ஒரு மாசில்லாத சுதேசி வளையல் வாங்கலையோ வளையல்' என்பார் முருகன்.

திரை வள்ளிக்கு மட்டுமல்ல, திரைக்கு வெளியே இருக்கும் மக்கள் அனைவருக்கும் புரிந்து விசிலடிப்பார்கள். இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் 'தியாக பூமி' திரைப்படமே தடை செய்யப்பட்டது. "பக்த சேதா' என்ற படமும் தடை செய்யப்பட்டது. இப்படி திரைப்படங்களின் மூலமாக தேசியப் பற்றை விதைத்ததால் கிடைத்தது இந்த நாட்டு விடுதலை ஆகும்!

எத்தனை கூட்டங்கள், எத்தனை மேடைகள், எத்தனை சொற்பொழிவு கள் அதனைத் தொடர்ச்சியாக, சலிக்காமல் நடத்தியதால் கிடைத்ததே இந்த சுதந்திரம். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.க்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய நீதிபதி பின்ஹே என்ன சொன்னார் தெரியுமா? 'அரசியல் உரிமை இல்லாத மக்களைக் கூட்டி வைத்து அவர்கள் காதில் அரசியலைச் சொல்வதே தவறு' என்று சொன்னார்.

வ.உ.சிதம்பரனார், அரச நிந்தனைக் குற்றத்திற்காக ஒரு ஆயுள் தண்டனையும், அப்படிப் பேசிய சுப்பிரமணியசிவாவுக்குத் தன் இல்லத்தில் தங்க இடமும் உண்ண உணவும் அளித்ததற்காக இன்னொரு ஆயுள் தண்டனையுமாக இரண்டு ஆயுள் காலச் சிறைத் தண்டனை பெற்றார்.

"இங்கிலாந்தில் அரசியல் விஷயமாகப் பேசுகிறவன் தன்னுடைய வாக்காளர்களைப் பார்த்துப் பேசுகிறான். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருக் கிறது. அந்த வாக்கை அடுத்த தேர்தல் சமயம் வரும்போது தன் பக்கமாய்க் கொடுக்கத் தூண்டும் நோக்கத்துடன் பேசுகிறான். இந்நாட்டிலோ அம்மாதிரிச் செய்ய வாய்ப்பு இருப்பதாகக் கூறமுடியாது.

திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் உள்ள சாதாரண மக்களுக்கு வாக் குரிமை இல்லை. ஆகையால் ஒருவன் மக்களைக் கூட்டிவைத்துப் பேசக் கனவிலும் நினைக்க மாட்டான். ஏனெனில் தங்களுடைய விருப்பத்தை நிறைவேற்ற அவர்களுக்குச் சக்தியில்லை.

இந்நாட்டில் அரசியல் விஷயத்தைப் பற்றிப் பேசும் ஒருவன் யாரைப் பார்த்துப் பேசுகிறானோ அவர்களுக்குச் சட்டப்படி அமைந்திருக்கும் சக்தி எதையும் உபயோகிப்பதற்கில்லை. பின் எந்த எண்ணத்தோடு பேசுகிறான் ?

ஜனக்கூட்டத்திற்கு உள்ள ஒரே சக்தியைப் பிரயோசிக்கத் தூண்டுவதற்குத்தான் பேச வேண்டும். அதாவது ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள உடற்பலத்தை உபயோகிக்கும்படித் தூண்டித்தான் பேசு கிறான். இது அபாயகரமானதாகும் - என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

அன்றைய மேடைகள் அரசியல் உரிமையற்ற மனிதர்களை, அரசியல் உரிமை பெற்றவர்களாக மாற்றியது. அதனால் கிடைத்ததே இந்த நாட்டு விடுதலை ஆகும்!

சுதேசமித்திரன், இந்து, இந்தியா, தேசபக்தன், நவசக்தி. ஞானபானு, பிரபஞ்சமித்திரன், தமிழ்நாடு, குடிஅரசு, சுயராஜ்யம், சுதந்திரசங்கு, தென் னாடு, ஆனந்தவிகடன், கல்கி, லோபகாரி, ஊழியன், குமரன், ஜனசக்தி, சக்தி, பிரசண்ட விகடன், குமரிமலர், பாரதி, ஜோதி, இந்துஸ்தான், இளந்தமிழன், மதுரமிதிரன், அனுமன், மணிக்கொடி, தமிழ்மணி இப்படி எத்தனை எத்தனையோ பத்திரிக்கைகள், பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், புத்தகங்கள், பதிப்பகங்கள் தங்களது எழுத்து ஆயுதத்தை எய்ததால் கிடைத்தது இந்த நாட்டு விடுதலை ஆகும்!

வீர சுதந்திரம் வேண்டி நின்றார்கள் நம் முன்னோர்கள். பெற்ற சுதந்திரத்தைக் கண்ணெனக் காப்போம் நாம்! அனைவருக்கும் விடுதலைநாள் நல்வாழ்த்துகள்!

banner

Related Stories

Related Stories